Dr. L. KAILASAM, M.Sc., ML, MCA, AICWA, ACS, FIV, PhD, IA&AS (Retd)
Advocate, Supreme Court, New Delhi
முன்னுரை
என்னுடைய மதிப்புக்குரிய நண்பரும், விகடன் குழுமத்தினைச் சார்ந்த நாணய விகடனின் நிர்வாக ஆசிரியர் திரு. சி. சரவணன் அவர்களிடம், பல்லவ சக்கரவர்த்தியான மகேந்திரர் காலத்தில் நடப்பதாக கற்பனை சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு ‘விநோதினி’ என்ற சிறுகதையை ஒன்றை எழுதிக் கொடுத்து அது சரியாக இருக்கிறதா என்று பார்த்துத் தரும்படிக் கேட்டிருந்தேன். ‘பணச் சலவை’ என்றும் ‘பண மோசடி’ இன்று அழைக்கப்படும் கொடிய குற்றத்தினால் பல்லவ நாட்டுக்கு ஏற்பட்ட இழப்புகளையும் அதைச் சீர்படுத்த செய்ய வேண்டியவைகளைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லப்பட்ட விநோதினியின் தாக்கத்தை உணர்ந்த சரவணன் அவர்கள், “இதை ஒரு சரித்திரப் புதினமாக மாற்றுங்களேன். இது போன்ற குற்றங்கள்தான் இன்றும் நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கிறது. நமக்குப் படிப்பினையாக நல்வழி காட்டும். உங்கள் புதினத்தில் நிறையத் துணிகரமான சாகசச் செயல்கள் இருக்கட்டும்” என்றார். அவரின் வழிகாட்டுதலின் படி, சிறுமியாக இருந்த விநோதினி இன்று கன்னியாக வளர்ந்து, பல்லவ நாட்டுக்கு சேவை செய்து, இன்று நமக்கும் வழிகாட்டுகிறாள்.
பல்லவ நாட்டின் வாழ்க்கையின் ஆதாரங்களை அழித்து, அதன் பிறகு தாக்குதலை நடத்தினால் வெற்றி பெறலாம் என்று சாளுக்கிய மன்னர் புலிகேசி திட்டமிடுகிறார். புலிகேசி காஞ்சியின் மேல் படை எடுக்க நினைத்திருக்கையில், கங்கமன்னர்
பல்லவ நாட்டில் கல்வி அறிவு மிக வேண்டும் என்று எண்ணம் கொண்ட சிம்மவிஷ்ணுவின் ஆர்வத்தைத் தவறாகப் பயன்படுத்தி சிமுகன் என்ற சாளுக்கியன், பரமேசுவரன் என்ற பெயரில் வேகவதி நதிக்கரையில் ‘விஷ்ணு கடிகை’ எனும் கல்வி நிறுவனத்தை நடத்த அனுமதி வாங்குகிறான். விஷ்ணு கடிகையில் பல கலைகளுடன் கூடு விட்டுக் கூடு பாயும் கலையின் மூலம் பல்லவ நாட்டு வீரர்களை மனச்சலவை செய்து சாளுக்கியத்துக்கு அனுப்புகிறான். இதற்காக சாளுக்கிய நாட்டிலிருந்து வரும் தங்கத்தை, மாணவர்கள் கொடுத்த காணிக்கையாகக் கணக்கெழுதி ஏமாற்றுகிறான். பல்லவத்தை அழிக்கப் புலிகேசி போட்ட திட்டம், பல்லவ நாட்டில் வாழும் மக்களின் வாழ்வில் பாதிப்பினை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், நாட்டின் இறையாண்மைக்கும் ஆபத்தை உண்டாகிறது.
கடிகையைத் தணிக்கை செய்ய வந்த விநோதினி எனும் அரசகுல இளம்பெண்ணைக் கொலை செய்து வேகவதியில் எறிந்துவிட ஆணையிடுகிறான் பரமேசுவரன். இந்தசதியை எவ்விதம் மகேந்திரரும், பல்லவ நாட்டின் அதிகரணப்போசகரான2 விக்கிரமனும், முறியடித்துப் பல்லவ நாட்டை வளப்படுத்துகிறார்கள் என்பதைச் சொல்வதுதான் ‘விநோதினி’ எனும் இந்த சரித்திரப் புதினம்.
புலிகள் நிறைந்திருக்கும் அகழியிலும், விஷக் குளத்திலும், இனிப்பாகப் பேசும் கொலைகாரனிடமும், தெய்வீகத்தையும், நாட்டுப் பற்றையும் சொல்லிப் பல்லவ நாட்டின் வடக்குத்தூண் என்று ஏமாற்றுபவனிடமும், சிக்கிக் கொண்ட விநோதினியும், விக்கிரமனும், இமைப்பொழுது தவறினாலும் உயிர்போகும் என்ற அபாயகரமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடமையினை எவ்விதம் திறமையாகச் செய்கிறார்கள் என்பதை விவரமாகச் சொல்கிறது இந்தப் புதினம். விக்கிரமன் மற்றும் விநோதினியின் சாகசங்கள், இந்தப் புதினத்தைப் படிப்பவர்களின் வாழ்வில் எதிர்கொள்ளும் அபாயங்களைச் சமாளிக்க உதவும்.
இந்தப் புதினத்தில் வர்ணனைகளுக்கு எந்தக் குறையும் இல்லை. விநோதினியும், விக்கிரமனும் செல்லும் வழியில் இருக்கும் பெரு மலைகளின் வர்ணனைகளும், கடலின் அபூர்வ அழகும் படிப்பவர்களை மயக்கும்.
சென்ற வருடம் நான் எழுதி புகழ் பெற்ற விசித்திரன் புதினத்தின் தொடர்ச்சி என்று இந்தப் புதினத்தைச் சொல்லலாம். விசித்திரன் மட்டும் இல்லாமல் சாகும் வரை அரிசி ஆராய்ச்சியின் இரகசியத்தைச் சொல்லாமலே இறக்கும் கந்தவர்மன் வரை ‘விசித்திரன்’ புதினத்தில் வரும் பல முக்கிய பாத்திரங்கள் இந்தப் புதினத்திலும் உலா வருகிறார்கள்.
நமது மதிப்புக்குரிய கல்கி அவர்கள் தனது சிவகாமியின் சபதத்தில் காஞ்சிக் கோட்டையைப் பலப்படுத்தி, சாளுக்கிய மன்னர் புலிகேசியின் முற்றுகையை எப்படி மகேந்திரவர்மர் எதிர்கொள்கிறார் என்பதை மிகவும் விளக்கமாகச் சொல்லியிருப்பார். புலிகேசி காஞ்சி சுந்தரியின் மீது கொண்ட காதலையும், காஞ்சியைக் கைக்கொள்ள அவர் துர்விநீதனுடனும், கதம்பர்களுடன் சேர்ந்து காஞ்சியைக் கைப்பற்ற போட்ட திட்டத்தை அறிந்த விக்கிரமனும், விநோதினியும், பல அபாயங்களை எதிர்கொண்டு அதையெல்லாம் சமாளித்துப் பல்லவ மன்னர் மகேந்திரரிடம் சொல்கிறார்கள்.
எனவே, இந்தப் புதினம் கல்கியின் சிவகாமியின் சபதத்துக்கு முன்னதாகவும், எனது விசித்திரனுக்குப் பின்னதாகவும் நடந்த சரித்திரத்தை ஆதாரமாகக் கொண்டது என்று சொல்லலாம்.
இந்தப் புதினத்தில் சொல்லப்பட்ட சம்பவங்கள், மற்றும் சரித்திரப் பாத்திரங்களைத் தவிர மற்ற கதாபாத்திரங்கள் எல்லாம் கற்பனையாகச் சொல்லப்பட்டவை. யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டவை அல்ல. இந்த சரித்திரக் கதையை நான் எழுதியதன் முக்கிய நோக்கம் ‘பணச்சலவை’ என்று இன்று அழைக்கப்படும் நாட்டு நலனுக்கு எதிரான குற்றம் ஆரம்ப நிலையிலே கண்டுபிடிக்கப்பட்டு, குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை தரப்பட வேண்டும் என்பது தான்.
சரித்திரப் புதினத்தைத் தனியாக யாராலும் எழுதிட முடியாது. வாசகர்களுக்கு என்ன வேண்டும் என்பதிலிருந்து, சரித்திரத் தவறுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது வரை புதினத்தைத் தவறில்லாமல் படைக்கப் பலரின் உதவி வேண்டும். எனது வாசகி சாரதா இராமசாமி அவர்களும், அலுவலகத்தில் என்னுடன் முதுநிலை தணிக்கை அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்ற திரு. ஜி. ராமசந்திரன் மற்றும் இயக்குனராக ஓய்வு பெற்ற திரு ஆர். சுந்தரம் அவர்களும், புதினத்தை நான் எழுத எழுத, படித்துத் தங்களது கருத்துகளைக் கூறிச் சரிசெய்ய உதவினார்கள்.
எப்பொழுதும் போல சுந்தர் கிருஷ்ணன் அவர்கள் புதினத்தைத் திருத்திக் கொடுத்தார்கள். அவர்களுக்கும், என்னை ஊக்குவித்த நாணய விகடனின் நிர்வாக ஆசிரியர் சரவணன் அவர்களுக்கும், கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. இந்தப் புத்தகத்தை நல்ல முறையில் பதிப்பித்துக் கொடுத்த வானதி பதிப்பக திரு ராமநாதன் அவர்களுக்கு எனது நன்றி.
கருப்பண்ணரின் ஆசியால் எப்பொழுதும் போல இந்தப் புதினத்துக்கு எனது வாசகத்தெய்வங்கள் ஆதரவும் ஆசியும் தருவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும்.
உங்கள் அன்புச் சகோதரன்
எழுத்தரசன்
டாக்டர் எல். கைலாசம்
- கனடிய மக்களை ஆச்சரியப்படுத்திய பல வடிவப் பனிக்கட்டிகள்.
- ’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- மீள்வதா ? மாள்வதா ?
- பாரதிமணியை மறக்க முடியாது
- ஜெயந்தி ஜெகதீஷ்ஷின் ‘ரெஜித்தர் ஆபிஸ் மசிக் குண்டு’
- காலவெளி ஒரு நூலகம்
- மாம்சம் – தரை –மார்புத்துணி
- கொடி மரம்…
- இலங்கை அரச இலக்கிய விருது விழாவில் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீபின் இரண்டு நூல்களுக்கு இரண்டு சாகித்ய விருதுகள்
- பாரதி தரிசனம் : பாரதியின் கவிதையில் பொருள் மயக்கம்
- அன்பால் அணை…
- விநோதினி புதிய சரித்திர புதினம் – முன்னுரை
- பால்வெளிப் பாதையில்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 259 ஆம் இதழ்