எங்க வானத்தில் மீண்டும் ஒரு வால்நட்சத்திரம்

author
0 minutes, 12 seconds Read
This entry is part 7 of 17 in the series 12 டிசம்பர் 2021
குரு அரவிந்தன்
 
வானத்தில் மீண்டும் ஒரு வால்நட்சத்திரம் தோன்றி இருக்கின்றது. ஆனால் இந்த மாதம் 12 ஆம் திகதி (12-12-21) ஞாயிற்றுக்கிழமை வானத்தில் காட்சி தர இருக்கும் வால்நட்சத்திரத்தை, மீண்டும் ஒரு முறை பார்க்க உங்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்காது. காரணம் பல ஆண்டுகளின் பின் தான் இது மீண்டும் தோன்றலாம். இந்த வால் நட்சத்திரம் சூரியனை நீண்ட பாதையில் சுற்றி வருவதால் திரும்பி வருவதற்கு சுமார் 3,500 வருடங்கள் எடுக்கலாம் என்று நம்புகிறார்கள். 10-50 தொலைநோக்கும் கருவி (Binocular) உங்களிடம் இருந்தால் இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள். இந்த வால்நட்சத்திரத்திற்கு கொமெட் சி 2021 ஏ1 – லியோநாட் என்ற பெயர் சூட்டியிருக்கிறார்கள். உலகின் வடபகுதியில் இருப்பவர்களால் இப்போது இதைப் பார்க்க முடியும். தென்பகுதியில் இருப்பவர்களுக்கு டிசெம்பர், ஜனவரியில் தெரியும். டிசெம்பர் மாதம் 12 ஆம் திகதி பூமிக்கு அருகே 21 மில்லியன் மைல்களுக்கு அப்பால் கடந்து செல்கின்றது. 158,084 மைல் வேகத்தில் செல்லும் இந்த வால்நட்சத்திரம் 6 நாட்களின் பின் அதாவது டிசெம்பர் 18 ஆம் திகதி வீனஸ் கிரகத்திற்கு அருகே 2.6 மில்லியன் மைல்களுக்கு அருகே செல்கின்றது. விண்வெளியில் பார்க்கும் போது, மிக மெதுவாக நகர்வது போல தெரிந்தாலும், ஜனவரி 3 ஆம் திகதி 2022 சூரியனுக்கு அருகே 56 மில்லியன் மைல்களுக்கு அப்பால் சூரியனைக் கடக்க இருக்கின்றது. Comet Leonard: Once in a lifetime   இதைக் கணனியிலும் ஒன்லைன் மூலம் பார்க்க வசதிகள் செய்திருக்கிறார்கள்.
 
 
சூரியனும் ஒரு நட்சத்திரம்தான். சிலர் ஏற்கனவே வால்நட்சத்திரத்தை ஒரு தடவையாவது பார்த்திருப்பீர்கள். 1976 ஆம் ஆண்டாக இருக்கலாம் என நினைக்கின்றேன், அதிகாலை 5 மணியளவில் பெரியதொரு வால்நட்சத்திரத்தை  மிக அருகே பார்க்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. மிகத் தெளிவான நீண்ட வால்நட்சத்திரம் கிழக்குவானத்தில் தெரிந்தது. கொழும்பு செல்வதற்காக உத்தரதேவி கடுகதி வண்டி எடுப்பதற்காக காங்கேசந்துறை தொடர்வண்டி நிலையத்திற்கு அதிகாலை எழுந்து சென்ற போது கிழக்கு வானத்தில் தெரிந்த அந்த வால்வெள்ளி என்னை ஆச்சரியப்படுத்தியது இன்றும் நினைவில் நிற்கின்றது. அந்த வால்நட்சத்திரம் தெற்கு ஐரோப்பிய அவதான நிலையத்தைச் சேர்ந்த றிச்சாட் வெஸ்ற் என்பவரால் 1975 ஆம் ஆண்டு முதன் முதலாக் கண்டு பிடிக்கப்பட்டதால் ‘கொமெற் வெஸ்ற்’ என்று அவரது பெயர் சூட்டப்பட்டது. சூரியனில் இருந்து சுமார் 30 மில்லியன் கிலோ மீட்டருக்கு அப்பால் இது நகர்ந்து சென்றது.
 
 
வால்நட்சத்திரம் என்றால் என்வென்று பார்ப்போம். இதை வானத்தில் பார்த்தால் ஒரு பிரகாசமான வெள்ளியும் அதற்குப் பின்னால் விளக்குமாறு போன்ற ஒரு வாலும் தெரியும். இந்த வால் சிறிதாகவும், பெரிதாகவும் இருக்கலாம். பிரகாசம் இல்லாத மங்கிய பல வால் வெள்ளிகள் சாதாரண கண்ணுக்குத் தெரிவதில்லை. இந்த வால்நட்சத்திரங்களின் வால்கள்; சிறிய பாறைத் துகள்கள், தூசிகள், கார்பன்டை ஆக்சைடு, கார்பன் மோனோக்சைடு, நீர்ப்பனி, மீத்தேன், அம்மோனியா போன்ற கரிமச் சேர்மங்கள் கலந்து உருவானவையாக இருக்கலாம். நாசா நிறுவனத்தின் விண்கலம் ஒன்று 2009 ஆம் ஆண்டு சேகரித்துக் கொண்டு வந்த வால்நட்சத்திரத் தூசியில் இருந்து கிளைசைன் என்னும் அமினோ அமிலம் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சூரிய மண்டலத்தில் இருக்கும் இந்த பனிப் பந்துகள் போன்ற வால் நட்சத்திரங்கள் தமக்கென ஒரு சுற்றுபாதையை அமைத்துக் கொண்டு சூரிய மண்டலத்தை சுற்றி வருகின்றன. வால்வெள்ளி சூரியனுக்கு அருகே செல்லும் போது வால்வெள்ளியிலுள்ள உருகக்கூடிய பொருள்கள் ஆவியாகின்றன. சூரியனிலிருந்து வீசுகிற சூரியக் காற்று அந்த ஆவிகளைச் சூரியனுக்கு எதிர்ப்புறமாகத் தள்ளுகின்றது. ஆதனால்தான் வால்வெள்ளிகளின் வால்கள் எப்போதும் சூ+ரியனுக்கு எதிர்த் திசையிலேயே காணப்படுகின்றன.
 
 
இதை தூசுப் பனிப்பந்துகள் என்றும் அழைப்பர். இவை சூரியனுக்கு அருகே செல்லும் போது, வெப்பமடைந்து வாயுக்களை வெளியிடத் தொடங்குகிறன. எஞ்சியிருக்கும் பாறைத் துண்டுகள்தான் விண் கற்களாக மாறுகின்றன. இவைதான் பூமியிலும் வந்து விழுகின்றன. வால்நட்சத்திரம் அதிக பிரகாசமாக இருந்தால், தொலைநோக்கியின் உதவி இன்றி இங்கிருந்தே பார்க்க முடியும். வால் நட்சத்திரங்கள் பொதுவாக நீள்வட்ட சுற்றுப்பாதையில் சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. குறுகிய கால வால் நட்சத்திரங்கள் கைபர் பெல்ட் பகுதியில் உருவாகுகின்றன, அவை விண்வெளியில் நெப்டியூன் சுற்றுப்பாதைக்கு அப்பால் இருக்கின்றன. நீண்ட கால வால் நட்சத்திரங்கள் க்யூபர் பெல்ட்டுக்கு வெளியே இருக்கின்றன. இவை எல்லாமே ஈர்ப்பு விசைகளால் இயக்கப்படுகின்றன. சூரியனைப் பல தடவைகள் சுற்றி வரும் போது, பனிப்பந்துகள் ஆவியாகிப் போவதால், வால் நட்சத்திரங்கள் காலப் போக்கில் குறுகிப்போய் அழிந்து விடுகின்றன.
 
 
ஹேல் பொப் (Comet Hale-Bopp) என்ற வால்நட்சத்திரமும் மிகவும் பிரகாசமாக இருந்ததால், பிரபலமானது. எமது காலமான 1995 ஆம் ஆண்டு யூலை மாதம் இது கண்டு பிடிக்கப்பட்டது. சுமார் 18 மாதங்கள் வெறும் கண்களால் பார்க்கக்கூடியதாக இருந்தது. 1997 ஆம் ஆண்டு சூரியனுக்கு அருகே வந்தபோது, ‘பெருவெள்ளி’ என்று பலராலும் புகழப்பட்டது. நீண்ட வட்டத்தில் சுற்றி வருவதால் மீண்டும் சூரியனை நோக்கி 4380 ஆம் ஆண்டுதான் வரும் என எதிர்பார்க்கிறார்கள். அலன் ஹேல் மற்றும் தோமஸ் பொப் என்ற இருவரால் இது முதலில் கண்டு பிடிக்கப்பட்டது. ஹெலி வால்நட்சத்திரத்தைவிட ஆறு மடங்கு பெரிதாக இருந்தது. ஏனைய வால்நட்சத்திரங்களை விட இதன் வாலில் அதிக சோடியம் கலந்திருப்பது அவதானிக்கப்பட்டது.
 
ஹெலி (Halley’s Comet) என்ற பெயர் கொண்ட வால்நட்சத்திரம் 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றுவதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். வரலாற்றில் 1456, 1531, 1607, 1682 ஆகிய வருடங்களில் ஹெலி வால்நட்சத்திரம் தெரிந்ததாக குறிப்புகள் உண்டு. இதன் அடிப்படையில் ஆங்கிலேயரான சேர் எட்மன்ட் ஹெலி என்பவர் 75 அல்லது 76 வருடங்களுக்கு ஒரு முறை தோன்றும் என்பதைக் கணக்கிட்டார். மார்க் ருவெயின் பிறந்தபோது 1835 ஆம் ஆண்டு வால்வெள்ளி தோன்றியதாகப் பதிவுகள் இருக்கின்றன. 1910 ஆம் ஆண்டு அவர் மறைந்த போதும் வால்வெள்ளியைப் பார்த்தாகப் பதிவுகள் இருக்கின்றன. அதனால் இதன் ஞாபகமாக அமெரிக்காவில் 36 சதம் பெறுமதியான விமானத்தபால் அட்டை வெளியிட்டார்கள். எமது காலத்தில் இது 1986 ஆம் ஆண்டு தோன்றியது. மீண்டும் இது 2062 ஆம் ஆண்டு தோன்றும் என கணக்கிட்டிருக்கிறார்கள். இதனுடைய வால் சுமார் 22 மில்லியன் கிலோ மீட்டர் நீளமானது. ஹவாய் நாட்டு முதலாவது மன்னன் கமே ஹமேகா பிறந்தபோது இந்த வால் நட்சத்திரம் தோன்றியதாகப் பதிவுகள் இருக்கின்றன. சங்க இலக்கியங்களிலும் இதற்கான பதிவுகள் இருக்கின்றன. 2014 ஆண்டு நவெம்பர் மாதம் எடுக்கப்பட்ட கணக்கின்படி, 5,253 வால்நட்சத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 
 
கடந்த காலங்களில் மிகத் தெளிவாகப் பார்க்கக்கூடியதாக, பிரகாசமாக இருந்த வால் நட்சத்திரங்கள் சிலவற்றின் பெயர்களையும் இங்கே தருகின்றேன்.  Great Comet of 1680, Great Comet of 1744, Great Comet of 1843, Great September Comet of 1882, Great January Comet of 1910, Comet Skjellerup-Maristanny, 1927, Comet Ikeya-Seki, 1965, Comet West, 1976. Comet McNaught, 2007, 2021’s best comet- Leonard. ஹெலி வால்நட்சத்திரத்தைத் தவிர, நீண்ட பாதையில் சுற்றி வரும் ஏனைய வால்நட்சத்திரங்கள் மீண்டும் எப்போது தோன்றும் என்பது சரியாகத் தெரியவில்லை.
Series Navigation‘இவன் வேற மாதிரி அல்ல.’ – புத்தகத்தைத் தெரிந்து கொள்வோம்அழகிய சிங்கர் 3 கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *