ஜனநேசன்
அந்த கிராமத்து பள்ளியில் பத்து ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். கொரோனா முடக்கம் முற்றாகத் தளர்த்தப் படவில்லை. பள்ளி இயங்க மூன்றுநாள்களுக்கு ஐந்துஆசிரியர்கள் வீதம் முறையமைத்து பள்ளிக்கு வந்து கல்வித்துறை அவ்வப்போது இடும் கட்டளைகளை செயல்படுத்தி வருகிறார்கள்.
“ வாங்க, உக்காருங்க டீச்சர். நீங்க அஞ்சுபேரும் புலன [வாட்ஸ்அப்] வகுப்புகளில் உங்கள் வகுப்பு மாணவ ,மாணவியர் பங்கேற்பு , பாடங்களை வாசித்து ,கேட்கப்பட்டகேள்விகளுக்கு பதிலிட்டவர்கள் பட்டியல்,பங்கேற்பின் தரம் போன்ற விவரஅறிக்கைகளை தயாரிச்சு கொண்டுவரச் சொல்லியிருந்தேனே , தயாரா “.தலைமை ஆசிரியை வாணி கேட்டார். ஆசிரியைகள் ஐவரும் அவரவர் வகுப்பறிக்கையை தந்தனர்.
தலைமையாசிரியை அந்த அறிக்கைகளை பருந்து பார்வையில் சோதித்தார். எதையோ இழந்ததுபோல் முகம் வாடியது. குரலில் சுருதி குறைந்தது. “ என்னங்கப்பா நம்ம முயற்சியில் பத்துசத மாணவ மாணவிகள் பங்கேற்பும், பதிலளிப்பும்கூட இல்லையே; இப்படியிருந்தால் இந்த கிராமத்துப்பள்ளியில் வந்து கஷ்டப்படுறதில் அர்த்தம் இல்லை. இந்த நிலை தொடர்ந்தால் இடைநிற்றல் அதிகமாகி இந்தப் பள்ளி இயங்குறதை தக்கவைக்கவே பெரும்பாடாகிரும். நம் நிலைமையும் பெருந்திண்டாட்டமாயிரும். இதைத் தடுக்க உங்களுக்கு ஏதாவது யோசனை தோன்றினா சொல்லுங்க ,பிளிஸ். “
ஆசிரியைகளிடம் கனத்த மௌனம். தலைமை ஆசிரியை வாணியின் பார்வை ஒவ்வொரு ஆசிரியையின் முகத்தையும் ஊடுருவியது. இந்த கொரோனா முடக்கம் முழுவதும் நீங்காத நிலையில் நாம் என்ன முயற்சி செய்யமுடியும் என்ற எண்ணம் பனிப்பாறையாய் அவர்களது சிந்தனையை அழுத்தி இருந்தது. தலைமையாசிரியின் பார்வை மீண்டும் அவர்களது கண்களை வருடியது.
மூத்த ஆசிரியை ஜெயராணி “பொதுவாக நம் பள்ளிக்கு வரும் பிள்ளைகளின் பெற்றோர் பெரும்பாலோனோர் ஆன்றாய்டுபோன் வாங்க இயலாத அன்றாடக் கூலிகள் . சிலபிள்ளைகளே போன் வைத்திருக்கிறார்கள். என் வகுப்பில் நன்றாக படிக்கிற மாணவியரில் இதற்கு முந்தி பங்கேற்றவர் சிலர்கூட நேற்றைய புலனவழி பாடக்குறிப்புகளுக்கு பதில் அளிக்கவில்லை. எப்போதும் அக்கறையில்லாதவர்கள் ஒருபுறம் இருந்தாலும் , ஓரளவு அக்கறையுடன் படிக்கும் மாணவர்கள் கூட பங்கேற்பு குறைந்து வருகிறது. நம்ம பள்ளிக்கு சுற்றியுள்ள ஐந்து கிராமங்களில் இருந்து பிள்ளைகள் படிக்க வருகிறார்கள். ஒருநாளைக்கு ஒரு ஊர் தெரிவு செய்து அந்த பிள்ளைகளையும் , பெற்றோரையும் சந்தித்து அவர்களது சிரமங்கள், சிக்கல் என்னவென்று அறிந்து, கல்வி தொடர்பாக நாம் என்ன செய்ய முடியுமோ அதைச்செய்து அந்தப் பிள்ளைகளை மீண்டும் படிக்கத் தூண்டலாம் . என் வகுப்பில் பிரியா என்கிறவள் நல்லூரிலிருந்து வர்றா ; நல்லா படிக்கிறவ ;ஆர்வமா கேள்வி கேட்பா; சொல்றதை அப்படியே உள்வாங்கிக்குவா; ஆரம்பத்தில் புலன வகுப்பில் ஆர்வமா கலந்துகிட்டா . இப்போ அவகிட்ட எந்த பங்கேற்பும் ,எதிர்வினையும் இல்லை. முதல் கட்டமா அவளிடமிருந்து கூட தொடங்கலாம். இப்போ வந்திருக்கிற எங்க அஞ்சுபேர் வகுப்புகளில் நல்லூரில் இருந்து படிக்கிற பிள்ளைகள் பட்டியல் எடுத்துகிட்டு அந்தப் பிள்ளைகள் எல்லாரையும் சந்திச்சுப் பேசி தூண்டிவிடலாம்.”
“நன்றி டீச்சர். உங்க அனுபவமும் அக்கறையும் எனக்கு ரொம்ப சந்தோசமா, உந்துதலா இருக்கு. ஏப்பா, நம்ம ஜெயராணி டீச்சர் சொல்றதைப் பத்தி உங்க நாலுபேரு கருத்து என்னனு சொல்லுங்க. வேற யோசனை எதுவும் இருந்தாலும் சொல்லுங்கப்பா. “ தலைமையாசிரியை மற்றவர்கள் முகங்களைப் பார்த்தார். ஜெயராணி டீச்சர் சொல்றமாதிரி முதலில் முயற்சி பண்ணிப் பார்க்கலாம் என்று நால்வரும் சொன்னார்கள்.
“ரொம்ப சந்தோசம். இப்ப மணி பத்து தானே ஆகுது. இப்பவே கூட கிளம்பலாமே. இங்கிருந்து ரெண்டுகிலோ மீட்டர் தூரத்தில் தானே நல்லூரு இருக்கு. நம்மவாடகை வேனிலேயே போயிட்டு வாங்க.”
இளைய ஆசிரியை செல்வராணி, “மேடம் , நீங்களும் வந்தா பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்; பிள்ளைகளுக்கும் என்கரேஜிங்கா இருக்கும்.” மற்றவர்களும் ஆமோதித்தனர் .
“உங்களுக்கு என்கரேஜிங்கா இருக்குமுன்னு சொல்ல வறீங்க. அப்படித்தானே? . “ என்று சிரித்தவர் , பெருமூச்சுவிட்டவாறே , “ உங்களை மாதிரி உதவி ஆசிரியராக இருக்கும்போது இருந்த சுதந்திரம் எச்,எம் ஆனதும் பறிபோயிருச்சு. கல்வி அதிகாரிக கிட்ட இருந்து நித்தம் புது புது உத்தரவுகளா வருது. சொல்லித் தர்ற வேலையை நிர்வாக வேலை ஆக்கிரமிச்சுருச்சு .இந்த மாதிரி கிராமாந்திர பள்ளிகளிள்ள கிராமத்து உள்ளரசியலையும் சமாளிச்சு வேலைபார்க்கிறது கம்பிமேல நடக்கிறது மாதிரி. நீங்களே அன்றாடம் பார்க்கிறீங்கல்ல. உங்களோட வேனில் வரும்போதும், போகும் போதும் பேசி சிரிக்கிற சந்தோசம், எச்.எம். சீட்டைப் பார்த்ததும் பறந்துருது. எந்த நேரம் மேலதிகாரிக யாருகிட்ட இருந்து போன் வரும் , என்ன கேப்பாங்களோன்னு திக்கு திக்குன்னு இருக்க வேண்டியதிருக்கு. நீங்க போயிட்டு வாங்கப்பா.சீனியர்எ,எச்,எம் ஜெயராணி இருக்காங்க. அவுங்க எதையும் சாமர்த்தியமா பேசி சமாளிச்சுருவாங்க. போயிட்டு வாங்க.பெஸ்ட் ஆப் லக். போகும்போது சாப்பாடை எடுத்துட்டுப் போங்க. அங்கேயே நல்ல இடமா பார்த்து சாப்பிட்டுருங்க.”
நல்லூரில் ஆசிரியர்கள் பிரியாவின் வீட்டைத் தேடும்போது விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் பயபக்தியோடு வணக்கம் சொன்னார்கள் . பிரியாவிற்கு பேய் பிடித்ததாகச் சொன்னார்கள். அதிர்ச்சியாக இருந்தது. ஆசிரியர்களைக் கண்டதும் வாசலில் நைந்து முகம்வீங்கி மெலிந்த தேகத்தில் இருந்த பிரியாவின் அம்மா பெருங்குரல் எழுப்பி அழுதாள் . இவர்கள் ஆதரவாகத் தோளைத் தொட்டு ஆறுதலாக விசாரித்தனர். நிலைகுத்திய கண்ணோடு, எதுவும் தின்பதில்லை. யாரோடு பேசுவதுமில்லை. பேய் பிடிச்சவ மாதிரி இருக்கா.கந்துவட்டிக்கு எடுத்த பணத்தில் வாங்கிக் குடுத்த புது செல்போனைத் தூக்கி எறிஞ்சு உடைச்சுப் போட்டா; மந்திரிச்சுப் பார்த்தோம் , தெளியலை.பேய் ஓட்டற சாமியாடிகிட்ட கூட்டிப் போனோம். எப்படி கேட்டாலும் , அடிச்சாலும் பதிலில்லை . உண்ணாம உறங்காம வாடின செடியாட்டம் அரைஉசிரா படுத்துக் கிடக்கா;வந்து பாருங்க; எம்பிள்ளையை எப்படியாவது காப்பாத்துங்க டீச்சர்.” அழுதபடி மகளிடம் அழைத்துச் சென்றாள்.
“டேய் , பிரியா கண்ணைத் திறந்து பாருடா; ஜெயராணி டீச்சர் வந்துருக்கேன்டா “ என்றபடி உடலைத் தொட்டார். குப்புறப் படுத்திருந்தவள் சிலிர்த்து எழுந்து அழுதபடி , “டீச்சர், நான் பழையபடி ஸ்கூலுக்கு வருவனா ; பஸ்ட் மார்க் எடுப்பனா டீச்சர் ; இங்க பாருங்க டீச்சர் நீங்க என்னை அடிககமாட்டீங்க இல்ல. இவுங்க எனக்கு பேய் பிடுச்சிருச்சுன்னு அடிச்சு உடம்பெல்லாம் புண்ணாயிருச்சு டீச்சர். வாட்ஸ்அப் நெட் கிடைக்கலைன்னு செல்லை எறிஞ்சிட்டேன் டீச்சர். என்னை ஸ்கூலுக்கே கூட்டியிட்டுப் போய் சொல்லித் தாங்க டீச்சர். வாட்ஸ் அப் கிளாஸ் வேணாம் டீச்சர். “ என்று ஜெயராணி டீச்சரைக் கட்டிப்பிடித்து அழுதாள். ஆசிரியைகளின் கண்கள் கசிந்தன.
“ ஏம்மா, வாட்ஸ் அப் நெட் கிடைக்கிலைன்னு ஆத்தமாட்டாம செல்போனை எறிஞ்சவளை, பேய் பிடுச்சுருச்சுன்னு இப்படி அடிச்சு துவச்சுட்டீங்களே . நீ பெத்த தாயாம்மா ? முதுகெல்லாம் வார் வாரா ரத்தம் கசிஞ்சிருக்கு. தேங்காய் எண்ணையைத் தடவுங்கம்மா. நாங்க இந்தப் பிள்ளையைக் கூட்டிட்டுப்போய் பார்த்துக்குறோம்.“ ஜெயராணி பொங்கினார்.
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 262 ஆம் இதழ்
- காற்றுவெளி தை (2022) மின்னிதழ்
- இரண்டு பார்வைகள் !
- வந்தேறி
- பாடறிந்து ஒழுகு …
- தைப்பொங்கல் தமிழர்களின் திருநாள்
- சிறுவர் நாடகம்
- எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்
- அவஸ்தை
- ஆனாலும் காத்துக் கொண்டிருக்கிறேன்!
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- நாசா, ஈசா, சீசா முப்பெரும் விண்வெளி நிறுவகங்கள் மிகப்பெரும் விண்வெளித் தொலைநோக்கியை ஏவி உள்ளன
- விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி
- ஒரு கதை ஒரு கருத்து
- கவிதை