ப.சகதேவன்
ஒரு பெண்ணியவாதப் படைப்பாளி என்ற முறையில் தனது குறுகிய பார்வையையும், அறியாமையையும் வெளிப்படுத்துகிற முறையில் அம்பை எழுதிய ஒரு தொடர், ஒரு பெண் தன் வாழ்நாளில் தனது சமையல் கட்டுக்குள்ளிருந்து எத்தனை ஆயிரம் தோசைகளைச் சுட்டிருப்பாள் என்று கணக்குச் சொன்னது தான்..இதையே அவர் மேலும் நீட்டித்து ஒரு பெண் தனது வாழ்நாளில் மகள், மனைவி, தாய் என பல நிலைகளிலும் செய்யும் பல வேலைகளைப் பட்டியல் போட்டுப் பார்த்தால் அது இப்போது எழுதப்படும் மெகா நாவல் அளவுக்கு விரியும். அம்பை சொல்ல விரும்புவது பெண் எப்போதும் நிர்ப்பந்தம் காரணமாக எந்திரத்தனமான பல செயல்பாடுகளைச் செய்கிறாள்.. இதனால் அவளது படைப்புச்சக்தியும், சுதந்திரமும் காவு வாங்கப்படுகின்றன என்பது தான்.. எந்திரத்தனம் என்பது வாழ்வின் தவிர்க்க முடியாத அம்சம் என்பதை மனிதன் ஆரம்ப காலத்திலிருந்தே அறிந்து வந்திருக்கிறான். அறிவு சார் வாழ்வியும், போராளியுமான அம்பைக்கு சிசிஃபஸ் தொன்மம் பற்றி அறியாமலிருக்க வாய்ப்பில்லை..
ஒரு பெண் முதலில் பெண்மை உடையவளாக இருக்க வேண்டும். அன்பு, கனிவு, இரக்கம் முதலிய மானசீகமான பண்புகளும், உடல் ரீதியாக இயற்கை கொடுத்திருக்கிற சில தனித்த குணங்களும் தான் பெண்மை…பெண் ஆற்றல் என்பது ஆண் ஆற்றலைப் போலவே சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ஆண் ஆற்றலோடு சேர்ந்தும், அது கிடைக்காதபோது தனியாகவே நின்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பதும் ஆகும்…நமது அம்மாக்கள், அக்காக்கள், அண்ணிகள், சித்திகள், அத்தைகள் என்பவர்கள் எப்படி இந்நிலைகளில் செயல்பட்டார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.. பெண்ணியம் என்பது ஒரு பெண்ணின் கடைசி ஆயுதம்.. அந்த ஆயுதம் சேதாரம் ஏற்படுத்தாமல் வெற்றியைச் சாதிப்பதில்லை.. அது சாதிப்பது வெற்றி தானா என்பது இன்னுமொரு விஷயம்.
பெண்மை-பெண்ணியம்-பெண் ஆற்றல் என்பவற்றைப் போலவே ஆண்மை-ஆணியம்-ஆண் ஆற்றல் என்பவையும் முக்கியமானவை தான்..ஒரே வேறுபாடு ஆண்மை என்பதில் பெண்மை கலந்திருக்க வேண்டும்.. ஆணியம் என்பது பெண்ணியத்தை உட்கொண்டதாக இருக்க வேண்டும்..ஆண் ஆற்றல் என்பது பெண் ஆற்றலுடன் இணைந்து செயல்படுவதாக இருக்க வேண்டும்.. சுருக்கமாகச் சொன்னால் பெண் தனக்கென்று சில தனித்த பண்புகளைக் கொண்டவளாக இருக்கிறாள். அவற்றைக்கொண்டு அவளால் தனித்து நிற்கவும் முடியும்..ஆனால் பெண்ணில்லாமல் ஆண் இயங்க முடியாது. எனவே தான் பெண்ணியம் பேசப்படுகிற அளவுக்கு ‘ஆணியம்’ பேசப்படுவதில்லை.. உண்மையில் இந்தப்பாகுபாடு கொஞ்சம் வேடிக்கையானது தான்.. வலிந்து பார்க்கப்படும் பாகுபாடு.. சமீபத்தில் ஒரு தமிழ்ப்பெண்ணியவாதி ’ஆணின் துணையில்லாமலே நான் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்..அதற்கான விந்து வங்கிகள் இருக்கின்றன’ என்று சொன்னார். விந்து வங்கி ஆகாசத்திலிருந்தா வருகிறது?
இப்படியெல்லாம் பேசுவதால் பெண்களுக்கென்று தனித்த பிரச்சினைகள் இல்லவே இல்லை என்று அர்த்தமில்லை…விடுதலை என்பதன் ஒரு பாகமாகத்தான் பெண்ணியமும் வருகிறது.. ’நீலக்கண்கள்’ என்பது ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண் எழுத்தாளர் டோனி மோரிசனின் ஒரு நாவல். கறுப்பாகவும், அழகில்லாமலும் பிறந்து விட்டோமே. எல்லோரும் தன்னைக் கேலி செய்கிறார்களே என்று எப்போதும் வருத்தப்படும் சிறுமி பெகோலா தனது தந்தையாலேயே வன்புணர்வுக்கு உட்படுத்தப் படுகிறாள்.. தனது சமூகத்தினராலேயே அவள் படும் கஷடம் கொஞ்ச நஞ்சமல்ல… ஆனால் அந்த நாவல் ஒரு பெண்ணிய நாவலாக மட்டும் பார்க்கப்படுவதில்லை… வரலாற்றுப்போக்கில் ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கு அடிமைகளாகப் புலம் பெயரும் ஓர் இனம் தனது அடையாள உருவாக்கத்தில் எத்தகைய கட்டங்களைக் கடந்து செல்கிறது என்பது தான் நாவலின் முக்கியச் செய்தி.. அவ்வினப் பெண்கள் இயற்கையும் சமூகமும் தங்களுக்கிழைக்கும் கொடுமைகளை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதுவே அதன் முக்கியச் சொல்லாடல்….பொதுச்சமூகத்தால் புறக்கணிக்கப்படும் ஆண்கள் குரூரமானவர்களாக மாறுவதும், அந்தக் குரூரத்தைப் பெண்கள் மீது காண்பிப்பதும் அச்சூழல் ஏற்படுத்தியிருக்கும் கட்டாயம்.. எந்த வகையிலும் அவர்களது குரூரத்தை நியாயப் படுத்த முடியாது தான்.. விடுதலையை நோக்கிய ஒரு பயணத்தில் இவை கடந்து செல்ல வேண்டிய கட்டங்கள். இதில் தனக்குப் பிடித்த நிறங்களை அந்த எழுத்தாளர்கள் ஒரு போதும் பிற மனிதர்கள் மீது குறிப்பாக ஆண்கள் மீது சுமத்துவதில்லை..
இன்னொரு ஆப்பிரிக்க-அமெரிக்க எழுத்தாளர் ஏலிஸ் வாக்கர் இதில் தெளிவாக இருக்கிறார்..அவருக்கும் வாழ்வில் கசப்பான அனுபவங்கள் இருந்தன. ஒரு வெள்ளையரைத் திருமணம் செய்தது, மண விலக்கானது, கருச்சிதைவு எனப் பல சம்பவங்கள் நடந்தபோதும் தான் விரும்பியபடியான வாழ்க்கையையே தான் வாழ்வதாக அவர் சொன்னார். தனது இனத்தின் மீதும், தனது மூதாதையர் மீதும் நேசம் கொண்டவர்.. இயற்கையை தெய்வமாகக் காண்பவர்.. நொம்பலப்படுதல் என்பது வாழ்க்கைப் பயணத்தின் தவிர்க்க முடியாத அம்சம் என்னும் அபிப்ராயம் கொண்டவர்.. சிறுமை, வன்முறை, குரோதம் என்னும் கூரம்புகள் மனித நெஞ்சத்தை எப்போதும் குத்திக்கிழிப்பதற்குத் தயாராக இருக்கின்றன என்றாலும் அன்பு என்னும் ஊற்றுக்கண் நாம் விரும்புகிற மாற்றத்தைக் கொண்டுவரும் வல்லமை கொண்டது என்றும் நம்புகிறவர். அவரது ‘ஊதாப்பூ நிறம்’ என்னும் நாவல் பொறுப்பில்லாத, தீநடத்தை கொண்ட தகப்பனுக்கு மக்களாகப் பிறந்த சீலி, நெட்டீ என்னும் இரு சகோதரிகளுக்கிடையில் பல சோதனைகளுக்கிடையிலும் பாசம் எவ்வாறு மாறாமலிருக்கிறது என்பதைச் சொல்லுகிறது. சீலியும் அவளது தந்தையால் வன்புணர்வு செய்யப்பட்டு இரு முறை தாயானவள் தான்..இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கறுப்பர் சமூகம் இவ்வளவு கேவலமாகவா இருந்தது என்று எண்ண வைக்கிறது… இந்த இரண்டு பெண் எழுத்தாளர்களும் அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறவர்கள்.
‘நீ இப்படித்தான் எழுத வேண்டும்’ என்று ஒரு படைப்பாளிக்கு யாரும் கட்டளை போட முடியாது. அப்படியே எழுதப்பட்டாலும் அது இலக்கியமாகுமா என்பதும் சந்தேகம் தான். உலகின் பல பாகங்களில் என்னென்ன அனுபவங்கள் ஒரு எழுத்தாளனை எழுத வைக்கின்றன என்பதற்காகத்தான் இங்கே இதைக் குறிப்பிட்டோம்.. இதில் இன்னொரு முக்கியமான அம்சம் அது எந்தக் கால கட்டத்தில் எழுதப்படுகிறது என்பதுவும் தான்.. ’அந்திமாலை’ என்கிற குறிப்பிட்டுச் சொல்ல முடியாத ஒரு நாவலை அம்பை ஏற்கனவே வெளியிட்டிருந்தாலும் ‘சிறகுகள் முறியும்’ என்கிற அவரது சிறுகதைத் தொகுதி தான் அவரைக் கவனப்படுத்தியது. எழுபதுகளில் இளைஞர்களாக இருந்த நாங்கள் உடனடியாக அம்பையின் எழுத்துக்களை நோக்கி ஈர்க்கப்பட்டோம்.. குமாரசாமி, தஞ்சை பிரகாஷ் ஆகியோரது முயற்சியால் மதுரையிலிருந்து தொடங்கப்பட்ட பி.கே.புக்ஸ் என்னும் பதிப்பகம் கி.ராஜநாராயணன், ஆ.மாதவன் ஆகியோரது கதைத் தொகுப்புகளையும் சேர்த்து மூன்று புத்தகங்களை வெளியிட்டது..மூன்றுமே அப்போதிருந்த வெகுசன ரசனையிலிருந்து வேறு பட்ட ரசனையை அறிமுகப்படுத்தின. அதுவரை அதிகம் வெளிப்படாதிருந்த மனிதம் என்பதன் நுட்பமான கூறுகளை காத்திரமான அதேசமயம் மிக நளினமான முறையில் வெளிப்படுத்தின…மூன்றுமே தத்தமக்கென தனித்த மொழி நடையையும், வெளிப்பாட்டு முறையையும் கொண்டிருந்தன.. அந்த மூன்று பேரில் இளையவர் அம்பை தான்..
நாங்கள் என்பது இங்கே முதல் தலைமுறை கல்வி கற்ற இடைநிலைச் சாதியைச் சேர்ந்தவர்கள் என்று கொள்ள வேண்டும்..உயர்கல்வி என்பது கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு சிறு நகரக்கல்லூரியில் கிடைப்பது என்று தான் நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோமே தவிர நவீன பாரதத்தின் தந்தை ஜவஹர்லால் நேரு கனவு கண்ட விடுதலைக்கான ஒரு மார்க்கம் என்பதை அறிந்திருக்கவில்லை.. அவரது முயற்சியால், அவரது பெயரால் அமைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும், ஆய்வு செய்ய வேண்டும் என்கிற பெரும் கனவுகளும் எங்களுக்கு இருந்திருக்கவில்லை… அம்பைக்கு அந்த பாக்கியம் வாய்த்திருந்தது.. அங்கு போவதற்கு முன்னால் அம்பையும் கூட ‘ஒரு ஹிந்துப்பெண்ணுக்கு எவ்வளவெல்லாம் கற்பனை செய்ய அனுமதிக்கப் பட்டிருக்கிறதோ அவ்வளவு மட்டுமே கற்பனை’ (’சிறகுகள் முறியும்’, 97:1976) செய்பவராக இருந்திருக்கக் கூடும்..ஆனால் பல்கலைக்கழக வளாகத்தில் சில வருடங்கள் இருந்த பிறகு தான் ‘ ஒரு ஹிந்துப் பெண்ணுக்குத் தோன்றக்கூடாது என்று காலம் காலமாய் எல்லோரும் சொல்லும் ஒரு எண்ணம் அவளுக்குத் தோன்றியது..அவனை விட்டுப் போய்விடவேண்டும் என்று அவள் நினைத்தாள்’ (’சிறகுகள் முறியும்’, 111:1976) என்று எழுத முடிந்தது.. ‘தனிப்பட்ட முறையில் ஒவ்வோருவருக்கும் சுதந்திரம் உண்டு.. அந்த சுதந்திரத்தை இருவருமே பழிக்கலாகாது’ என்பது இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கலாம். ஆனால் இதை அம்பை நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் சொல்லியிருந்தார்..(114:1976)
அறிவுபூர்வமான வாழ்க்கை நோக்கை அறிமுகப்படுத்துகிறபோது ’இல்லாத தெய்வீகப் பெருமைகள்’ செல்வாக்கு இழப்பது எதிர்பார்க்கிற ஒன்று தான். ‘சிறகுகள் முறியும்’ தொகுப்பிலிருந்த கிட்டத்தட்ட எல்லாக்கதைகளும் இதையே தான் எதிரொலித்தன.. இத்தகைய சிந்தனை மேற்கில் 1925-களிலேயே வந்து விட்டது..வெர்ஜீனியா வுல்ஃபின் ‘திருமதி. டாலவே’ யில் வரும் க்ளேரிசாவுக்கு பீட்டர் வால்ஷ் மீது உண்மையான அன்பு இருக்கிறது.. ஆனால் திருமண உறவுக்கு அவன் போடும் நிபந்தனைகளை அவளால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தன்னைத் தானாக இருக்க விடுகிற சாதாரண அரசியல்வாதியான டாலவேயையே அவள் கணவனாக வரித்துக் கொள்கிறாள்..
எழுபதுகளின் அரசியல் பின்னணியும் அம்பையின் கதையாக்கத்திற்கு உந்து சக்தியாக இருந்தது.. காங்கிரசின் மீதிருந்த மோகம் குறைந்திருந்தது.. ’உடம்பு’ கதையில் வரும் நடனக்கலைஞன் பாலா ரெட்டி அசலான கலை ஆர்வம் மிக்கவன்.. ஒரு கலைக்குழுவில் சேர்ந்து டெல்லி போகிறான்.. ஆனால் அங்கே பணமும், செல்வாக்கும் மட்டுமே மதிக்கப்படுவதைக் கண்டு மனம் நொந்து போகிறான்.. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் தனது மேடைப் பேச்சுக் கவர்ச்சியைத் தாண்டிப் போக முடியாமல் நிர்வாக அளவில் திணறிக் கொண்டிருந்தது.. (அதன் மொழிவழித்தேசீயம், இனவழித்தேசீயம் என்பவை இப்போது புரிந்துகொள்ளப்படுகிற மாதிரி அப்போது புரிந்து கொள்ளப்படவில்லை..) இவையெல்லாம் மத்தியதர வர்க்கத்தினர் மத்தியில் ஒரு பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்தி விட்டிருந்தது..‘மிருத்யு’ கதையில் வரும் லீலா தனது தகப்பனாரின் தேவையில்லாத மரணபயத்தைப் பரிகசிக்கிறாள். லீலா வடிவில் ஒரு புதிய தலைமுறை உருவாவதை அவரது கதைகள் அழகியல் பூர்வமாகச் சொல்லின. சில சமயங்களில் அது கட்டுப்பாடற்ற கற்பனைகளுக்கும் கொண்டு போய் விட்டது. ‘ஸஞ்சாரி’ கதையில் வரும் ரங்கா ஒரு வித்தியாசமான பிராமணப்பையனாக இருந்தாலும் அவனுக்கும் விகல்பங்கள் உண்டு என்று கூறும் அவனது தோழி, ‘நீல ஆகாசத்தின் அடியே, சூரியனின் இதமான வெளிச்சத்தில் பசிய மரங்களின் கீழே அல்லது அலைகள் மோதும் மணலில் உடலின் மற்றும் மனதின் அழகுகள் எல்லாம் பீரிட உன்னால் ஒருத்தியைப் புணர முடியுமா?’ (‘ஸஞ்சாரி’, 68:1976) என்று கேட்கிறாள். அந்தரங்கங்களை பகிரங்கப்படுத்தும் புரட்சிகள் நிலைத்து நிற்பதில்லை என்பதை அம்பை இப்போது கூட ஒத்துக்கொள்வாரா எனத்தெரியவில்லை..
‘சிறகுகள் முறியும்’ தொகுப்பின் மூலம் அம்பை நவீனத்துவத்தை தனது தலைமுறை எவ்வாறு எதிர்கொண்டது எனப்பார்த்தார். இங்கு அவர் ஒரு படைப்பாளி என்னும் நிலையைத் தாண்டி ஒரு புரட்சிவாதி என்னும் தளத்திற்குப் போனதனால் ஒரு அறிவார்த்த மேட்டிமைத்தனம் அவரிடம் வெளிப்பட்டது.. ‘நீ புரிந்து கொள்வாயா ரங்கா..? உனக்கு சுதந்திரம் என்பது ஒரு விளக்கம்.. நீ அடைய வேண்டிய ஒரு எல்லை.. அந்த எல்லையே உன் விலங்கு… உனக்கு அறிவு ஜீவியான, ஆனால் ஒரு எல்லைக்குட்பட்ட, சுதந்திரமான ஆனால் உனக்குக் கட்டுப்பட்ட மனைவி வாய்ப்பாள்..’ (‘ஸஞ்சாரி’, 82:1976) இது ரங்காவின் சுதந்திரத்திற்கும், விருப்பத்திற்கும் எதிரானது.. எல்லா வரம்புகளும் உடைக்கப்பட்டு புதிதாக ஒரு சமுதாயம், அம்பை எதிர்பார்த்தபடி உடனே உருவாகவில்லை.. இப்போது அவர் குறிப்பிட்ட சமுதாயத்தையும் தாண்டி பெரும்பாலான சமுதாயங்களில் அப்படி ஒரு மாற்றம் வந்து விட்டது..ஆனால் அவர்களுக்கு மிகவும் அவசியமான நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைத்து விட்டதா எனத் தெரியவில்லை..
அம்பை உருவாக்க நினைத்த புதிய விழுமியங்கள் ஏலிஸ் வாக்கர் உருவாக்க நினைத்த, விழுமியங்களைப் போன்றே அப்போதைய மரபுகளுக்கு மாறானாவைகளாகத் தெரிந்தாலும் அவை அராஜகக் குணம் கொண்டவையல்ல.. இதை அவர் தனது ‘பயங்கள்’ நாடகம் மூலம் துல்லியமாகக் காண்பித்தார்.. இது மேடை நாடகமாகவும் டெல்லி முதல் பல இடங்களில் நடத்தப்பட்டது… சேகருடன் இரண்டு வருடங்கள் வாழ்ந்திருந்தாலும் ‘ஆண்மையற்றவனான’ மனோகரனையே திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்துகிறாள் அஞ்சலி.. இது அவள் சுயமாக, மனப்பூர்வமாக எடுத்த முடிவு.. சேகருக்கும், அஞ்சலிக்குமான உரையாடலாக நாடகம் இருந்தது… நாடகத்தின் கட்டுமானத்தில் கீழ்க்கண்ட செய்திகள் வெளிப்பட்டன
- பெண் சிந்திக்கக் கூடியவள்
- பெண் சிந்திக்க வேண்டும்
- பெண் பற்றிய தற்போதைய பிம்பங்கள் ஆரோக்கியமற்றவை
- பெண் பற்றிய பிம்பத்தை பெண்ணே தான் உருவாக்க வேண்டும்
- பெண் அன்பு மிக்கவள். மனிதத் தன்மை கொண்டவள்
- தனது சுயத்துவத்துக்கு ஊறு நேராத பட்சத்தில் பெண் அனுசரித்துப் போவாள்
ஏற்கனவே இரண்டு கதைகள் மூலமாக அம்பை இதைச் சொல்லியிருந்தார். இரண்டும் ‘அம்மா’ க்களை மையமாகக் கொண்ட கதைகள். ஒரு ’அம்மா’ தந்தைவழிச்சமூகம் உருவாக்கி வைத்திருந்த மதிப்பீடுகளை (வேறு வழியின்றி) பின்பற்றுபவள். கறுப்பு நிறப் பெண்களுக்கு அச்சமூகத்தில் இடமில்லை.. அதுவும் பிராமண சமூகத்தில் ஒரு பெண் எப்படி கறுப்பாகப் பிறக்க முடியும்? அப்படியே பிறந்திருந்தாலும் அவள் சீக்கிரமாக ஏன் பூப்படைய வேண்டும்? பூப்படைதல் என்கிற இயற்கை தந்த அற்புதமான கொடையைப் புரிந்து கொள்ளாமல் அந்தச் சிறு பெண்ணைச் சபிக்கிற, அவள் மனதைக் குத்திக் கிழிக்கிற அம்மா அவளைக் கொலை செய்வதாகத் தானே அர்த்தம்? அம்பையின் இந்தக் கதைத் தலைப்பும், கதை ஏற்படுத்திய அதிர்வலைகளும் அது வரை தமிழ் சமூகம் கண்டிராதவையாக இருந்தன. ஆனால் இதே அம்பை இன்னொரு அம்மாவையும் காண்பித்தார். அந்த அம்மா டெல்லிக்குப் பக்கத்திலிருக்கிற ஊரைச்சேர்ந்த அம்மாவாக இருந்தாலும் அவள் சென்னைக்குப் பக்கத்திலோ, மதுரைக்குப் பக்கத்திலோ இருக்கிற கிராமத்தைச் சேர்ந்த அம்மாவாகவும் தெரிந்தாள். இந்த ‘அம்மா பிடிவாதக்காரி… அப்பாவின் ஆண்மையையும், கணவன் என்கிற பெருமிதத்தையும் வெறும் மௌனத்தாலேயே கொன்றாள்..’ (’வல்லூறுகள்’, 86:1976) ஆணாதிக்கம் என்பது பெண்களால் வெல்லவே முடியாத ஒன்று என்று சொல்லிவிட முடியாது.. இக்கதையில் வரும் அம்மா தன் கணவன் பதுக்கி வைத்திருந்த தானியத்தை எடுத்து ஊராருக்குக் கொடுக்கிறாள்.. இது பெண் ஆற்றலின் அம்சம்… கருணை என்னும் பெண்மையை உட்கொண்ட பெண் ஆற்றல்.. இரண்டும் சேர்ந்தே பெண்ணியமாக வெளிப்படுகிறது.. ஆரவாரமில்லாத, சாதகமான முடிவுகளை நோக்கிய பெண்ணியம்
’பயங்கள்’ நாடகம் ஒரு பார்வையில் லட்சியத்தன்மை கொண்டதாக இருந்தாலும் அதன் வாதக்கட்டுமானம் ஒவ்வொரு படிநிலையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருந்தது. அம்பை தொடர்ந்து நாடகங்கள் எழுதியிருந்தால் ஆர்தர் மில்லர், டென்னசி வில்லியம்ஸ் போல சூழ்நிலைகளில் சிக்கித்தவிக்கும் மனிதர்களைக் கொண்ட ‘பதட்ட நாடகங்கள்’ பலவற்றை உருவாக்கியிருந்திருப்பார்..
’சிறகுகள் முறியும்’ காலத்திற்குப் பிறகான அம்பையின் படைப்புக்காலத்தை வேறு அலகுகளால் வகைப்படுத்த வேண்டும். அந்த அலகுகள் அரசியல் சாயம் கொண்டவை. தமிழ் இலக்கியம்- தமிழர் இலக்கியம் என்ற இரண்டு வகைப்பாடுகளால் அடையாளம் காணப்படுபவை.. இலக்கியத்துக்குரிய அழகியல் அம்சங்கள் அமைந்து கிடக்கிறபோது அவை எம்மொழியில் எழுதப்பட்டாலும் இலக்கியத்துக்குரிய தகுதியைப் பெறும்..ஆனால் நாடு, மொழி, இனம், சாதி, மதம் என்ற ஐம்பற்றுதல்களை அடிப்படையாக வைத்து எழுதப்படுகிற கதைகள் வெறு வகையான அடையாளத்தைப் பெறுகின்றன.. ஐம்பற்றுதல்களைக் கொண்டு எழுதப்பட்டிருப்பது என்பதனால் ஓர் எழுத்து அவை எல்லாவற்றையும் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. ‘தூக்கிப்பிடிப்பது’ என்பது இலக்கியத்துக்கு முரணானது இல்லையா? படைப்பாளி ஐம்பற்றுதல் அம்சங்களை எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பது தான் படைப்பாக்கத்தின் இருப்பைத் தீர்மானிக்கிறது…
ஐம்பற்றுதல் என்பது கூட ஒரு வசதிக்காகத் தான் சொல்லப்படுகிறது.. அதிதீவிரப்பற்றுதல் என்பது தான் சரியாக இருக்கும். இந்த அதிதீவிரப்பற்றுதலில் ‘பாலினப்பற்றுதல்’ என்பதுவும் ஒன்று… ஆணியம், பெண்ணியம் என்கிற பாலினப்பற்றுதல்..இயற்கை ஆணுக்கு இதை இயல்பாகவே தந்து விட்டிருக்கிறது…வேறு வழியில்லாததால் பெண் இதை ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறாள்.. தனது புத்தி சாதுரியத்தாலும், தியாகம், விட்டுக்கொடுத்தல் என்கிற மேன்மையான பண்புகளாலும், குடும்பம் என்கிற அமைப்பு நிலைத்து நிற்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருந்ததாலும் பெண் இதைச் சாதித்து வந்திருக்கிறாள். ’எச்சமூகத்தில் ஆடவர்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ அச்சமூகம் உயர்ந்து நிற்கும்’ என்று ஔவையார் கூறும்போது பெண்கள் கெட்டவர்களாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்ற ஒரு பொருளையும் கொள்ளலாம். வீட்டிலிருந்து வெளியே போனால் தானே கெடுவதற்கு வாய்ப்பு இருக்கும்? அவளது சிந்தனை, செயல்பாடு எல்லாம் குடும்பம், சமூகம் என்று அமைப்புகளைச் சுற்றித்தானே இருந்தது? ‘பீடு அன்று’ என்று இரண்டு சொற்கள் மூலமாகத்தானே கோவலனை கண்ணகி வழிக்குக் கொண்டு வந்தாள்?
தொழிற்புரட்சிக்குப் பிறகு தான் பாலினப்பற்றுதல் அதாவது பெண்ணியம் விவாதத்திற்குரிய பொருளாகியது..அதை மையமாகக் கொண்ட இலக்கியங்களும் எழுதப்பட்டன.. பெண்கள் அளவுக்கே, ஏன் அதைவிடக் காத்திரமாக, தீவிரமாக ஆண்கள் எழுதியிருந்தாலும் பெண்கள் எழுதிய இலக்கியங்களே முன்னிலைப் படுத்தப்பட்டன.. பெண்ணியம் என்பது கோட்பாடாக முன்னிறுத்தப்பட்டு பல கோணங்களிலிருந்து அதற்கு விளக்கம் தரப்பட்டது.. சிமோன் தே பேவூர் எழுதிய ’இரண்டாம் பாலினம்’ போன்ற நூல்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன. ஏதோ ஒரு வேகத்தில் எழுதிய தம் கருத்துக்களை பிற்காலத்தில் மறுத்துச் சொன்ன பெண்ணியல் வாத எழுத்தாளர்களும் இருந்தார்கள். இது இயல்பு தான்.
நமது பிரச்சினை கோட்பாட்டுக்கும், இலக்கியத்திற்கும் என்ன சம்பந்தம் என்று பார்ப்பது தான். வாழ்க்கைக்கு கோட்பாடுகளும் தேவை தான். ஆனால் எவ்வளவு சிறந்தவையாக இருந்தாலும் கோட்பாடுகளே வாழ்க்கையாகி விடாது.. அம்பையின் ’தோசை எண்ணிக்கை வழிப் பெண்ணியவாதம்’ ஒரு நகைச்சுவை என்று ஒதுக்கி வைத்துவிட்டுப் போய்விடலாம். ஆனால் பரவலாக அறியப்படும் ஒரு தமிழ் எழுத்தாளரின் மனைவி காலமான போது அதற்கும் ஆணாதிக்கமே காரணம் என்று அம்பை தெரிவித்த கருத்துத்தான் மிகுந்த மன வருத்தத்தைத் தந்தது.. கோட்பாடு என்னும் குரங்கை வீட்டுக்குள் கொண்டுவந்து விட்டால் என்ன மாதிரியான விபரீதங்கள் நடக்கும் என்று புரிந்தது..
அம்பை எழுதியவற்றில் ‘சிறகுகள் முறியும்’ என்கிற முதல் தொகுப்பா அல்லது அதற்குப் பிறகு அவர் எழுதிய கதைகளா எவை நிலைத்து நிற்கும் என்பதைக் காலம் தான் சொல்ல வேண்டும்.. ஆனால் கோட்பாட்டைப் பற்றிக்கவலைப் படாமல் வாழ்க்கை அனுபவங்களைப் பற்றி மட்டுமே மையமாக வைத்து எழுதப்படும் கதைகள் நிச்சயமாக காலத்தை வென்று நிற்கின்றன. இரண்டு ஆளுமைகளை இதற்குச் சரியான உதாரணமாகச் சொல்லலாம்.. ஒருவர் சதத் ஹசன் மண்டோ இரண்டாமவர் இஸ்மத் சுக்தாய்… இருவருமே மனித விடுதலையைப் பற்றியும், அதற்குத் தடையாக நிற்கும் சக்திகளைப்பற்றியும் மிக அபூர்வமான கலையாற்றலோடு பேசியிருக்கிறார்கள்.. செயல்பட்டிருக்கிறார்கள்.. வாழ்க்கை-இலக்கியம் என்ற இரண்டுக்குமிடையில் எந்த வேறுபாட்டையும் ஏற்படுத்திக்கொள்ளாமல் வாழ்ந்து காட்டியவர்கள் அவர்கள்.. அது வரை சந்தித்திருந்திராத பெரும் மானுடச்சிக்கல்களினூடாக வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டவர்கள் அவர்கள்.. அதில் ஒரு சூழலை சுக்தாய் கதையாகவே எழுதியிருக்கிறார்.
தங்களது எழுத்துக்கள் ஆபாசமாக இருக்கின்றன என்று காலனி அரசாங்கம் கோர்ட்டுக்கு இழுத்த போது இருவருமே லாகூருக்குச் சென்று விசாரணையில் கலந்து கொள்கிறார்கள்
“இந்தக் கதை ஆபாசமாக உள்ளதா?” என்று மண்ட்டோவின் வழக்கறிஞர் கேட்டார்.
“ஆமாம்” என்று சாட்சி பதிலளித்தார்.
“எந்த வார்த்தை ஆபாசமாக இருக்கிறது என்று நீங்கள் உங்கள் விரலை வைத்து சுட்டிக் காட்ட முடியுமா?”
சாட்சி: “மார்பு” என்ற வார்த்தை”
வழக்கறிஞர்: “கனம் நீதிபதி அவர்களே, ‘மார்பு’ என்பது ஆபாசமான வார்த்தை கிடையாது”
சாட்சி: இல்லை. இந்த இடத்தில் எழுத்தாளர் சுட்டிக் காட்டுவது ஒரு பெண்ணின் மார்பகத்தை”
மாண்ட்டோ அனிச்சையாக எழுந்து நின்று உரக்கக் கத்தினார், “ஒரு பெண்ணின் மார்பை ‘மார்பகம்’ என்றுதான் சொல்லவேண்டும். நிலக்கடலை என்று சொல்ல முடியாது”
கோர்ட்டில் இருந்த அனைவரும் குபீரென்று சிரித்து விட்டார்கள். மண்ட்டோவும் உரக்கச் சிரிக்கத் துவங்கினார்.
(மணமான அந்தப் பெண்களின் பெயரில்…இஸ்மத் சுக்தாய் சிறுகதை, மொழிபெயர்ப்பு ராகவன் தம்பி, திண்ணை இணைய இதழ், ஜூலை 02, 2012)
தாங்கள் எழுதியது தவறு என்று ஒப்புக்கொண்டு மன்னிப்புக்கேட்டால் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம் என்று சொல்லப்பட்ட போது இருவருமே மறுத்து விட்டார்கள்.. தாங்கள் எழுதுவது என்ன என்பதைப் பற்றிய பூரணமான அறிவு அவர்களுக்கு இருந்தது. அவற்றை வெளிப்படுத்தக்கூடிய துணிவும், தன்னம்பிக்கையும் அவர்களுக்கு இருந்தது.
‘பாறையிலும் நம்மால் பூக்களை மலர வைக்க முடியும். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால், நம்முடைய இதயத்தில் வடியும் குருதியை அந்தச் செடிக்கு நீராக ஊற்றி வளர்க்க வேண்டும்.’
என்பது சுக்தாயின் நம்பிக்கையாக இருந்தது
இந்தியப்பிரிவினையின் போது உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா நகரத்தில் பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இஸ்லாமியர் பாகிஸ்தானுக்குப் போக வேண்டாம். இந்தியாவிலேயே இருந்து விடலாம் என்று முடிவு செய்கிறபோது அவருக்கு ஏற்பட்ட சோதனைகளைக் கூறும் ‘கரம் ஹவா’ (அனல் காற்று) சுக்தாயின் புகழ் பெற்ற கதை ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவரின் பார்வையிலிருந்து சொல்லப்படும் கதை. இதைப் படமாக எடுத்த போது சில மாற்றங்களைச் செய்திருந்தார்கள்.. ஸ்டேஷன் மாஸ்டர் காலணிகள் வாணிகம் செய்பவராகியிருந்தார்.. ஆனால் சுயநலம் மிகுந்த பெண்கள் அப்படியே தான் இருந்தார்கள். இந்தியத்திரைப்பட வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது ‘கரம் ஹவா’.
இவ்வளவு உன்னிப்பாகக் கவனித்து இந்த மனித அவலத்தை எழுதியிருப்பவர் ஒரு பெண் என்பது தற்செயலான நிகழ்வு தான்.. மனித அவலத்தையும், மனித நாடகத்தையும் யார் எழுதினால் என்ன? அது அவலமாகவும், நாடகமாகவும் இருக்கிற பட்சத்தில்!
**************************************
’சிறகுகள் முறியும்’ தொகுப்பு மட்டுமல்லாமல் அம்பையின் பெரும்பாலான எழுத்துக்கள் தமிழ் நாட்டுக்கு வெளியே இருக்கிற இடங்களைப் பின்னணியாகக் கொண்டவை.. தொடர்ச்சியாகத் தமிழ் பேசுவதற்குக் கூட அவருக்கிருக்கும் வாய்ப்புகள் குறைவு…அம்பை மாதிரி தமிழ்நாட்டிற்கு வெளியே இருந்துகொண்டு தமிழில் எழுதிய பல எழுத்தாளர்கள் உண்டு..லக்ஷிமி, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, நீல.பத்மனாபன், நகுலன் ஆகியோர் தமிழகத்திற்கு வெளியிலிருந்து தான் எழுதினார்கள். அவர்களது எழுத்துக்கள் ஐம்பற்றுதல்கள் சார்ந்தும், சாராமலும் இருந்தன..
அம்பையின் பிற்காலக்கதைகளில் அவரது உருசிதை வளர்ச்சி தெரிவதாகச் சொல்ல முடியாது. தற்காலத் தமிழிலக்கியத்தில் வண்ணதாசனின் படைப்பாக்கப் பயணத்தை உருசிதை வளர்ச்சி கொண்டதாகச் சொல்ல முடியும்.. அம்பையின் ‘சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை’ (2019) தொகுப்பிலிருக்கும் கதைகள் பெண்மை-பெண்ணியம்-பெண்ணாற்றல் என்னும் சட்டகங்களைத் தாண்டிச் சென்றாலும் அவற்றை முழுமையாக விட்டு விடவில்லை.. அவை இன்னும் புதிய பரிமாணங்களை அடைகின்றன.. காகத்தின் வடிவில் பித்ருக்களைப் பார்க்கும் நமது மரபு, ஒரு காகம் இறந்து கிடந்தால் அதைச்சுற்றி பல காகங்கள் கரையும் காட்சியின் புதிர்த்தன்மை (’தொண்டை புடைத்த காகம் ஒன்று’: 2019) பம்பாய் போன்ற ஒரு பெருநகரம் எப்படி ஒரு புல்டோசரைப் போல பல உணர்வுகளையும், நினைவுகளையும் அழித்துக்கொண்டே செல்கிறது (’சாம்பல் மேல் எழும் நகரம்’: 2019) என்பதைச் சொல்கிறபோது வாழ்வின் குரூரமும், நிலையாமையும் புரிகின்றன..இதனால் ஏற்படுகிற அழுத்தம் தற்கொலைக்கும், துறவுக்கும் இட்டுச் செல்கிறது..பம்பாயில் மூன்றாம் தலைமுறையாக வாழும் தமிழ்க்குடும்பங்களும் இவற்றுக்கு இலக்காகின்றன.. தாங்கள் தத்தெடுத்த குழந்தை ஒரு மாற்றுத்திறனாளி என்பதை அறிந்த தம்பதியர் மைதிலியும், வசந்தனும் அந்த உண்மையை எதிர்கொண்டு வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்க முயன்றாலும் வசந்தன் ஒரு கட்டத்தில் மனச்சோர்வு கொண்டு வாழ்வை விட்டு விலகுகிறான்.(’சிவப்புக்கழுத்துடன்…..’: 2019) இத்தனைக்கும் அந்தக்குழந்தை தேன்மொழி தனது குறைபாட்டை வெற்றிகொண்டு ஒரு திறமையுள்ள மனுஷியாக வளர்ந்திருக்கிறாள்.. மனநிறைவு மட்டும் வாழ்க்கையை அர்த்தப் படுத்தி விடுமா என்ன? இது ஒரு தனிமனிதன் என்ற நிலையில் மட்டுமல்லாமல் ஒரு இனக்குழுவிற்கான பிரச்சினையாகவே மாறுகிறது.. பாரீசில் வாழ நேர்ந்த தமிழ்ச்சமூகம் தமிழ் மரபின் எந்த அம்சத்தை எடுத்துகொள்வது எதை விட்டுவிடுவது என்பது அவர்களுக்கு மட்டுமல்லாமல் அம்பைக்கும் கூட ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது.. பிறகு சுதாரித்துக்கொண்டு அவர்களுடனான சமரசத்தை ஒதுக்கித் தள்ளுகிறாள்.(’ராவணன் கோட்டை’: ‘ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு;: 2013)
முதுமை பல குற்ற உணர்வுகளையும் திரும்பக் கொண்டு வருகிறது.. நமது கண்ணுக்கு முன்னால் நடந்த பல மனிதக்குரூரங்களை நாம் கண்டும் காணாமலும் தான் கடந்து வந்திருக்கிறோம்.. பல்கலைக்கழகத்தில் தன்னுடன் படித்த சீக்கியப்பெண் 1984-ல் நடந்த தாக்குதலின்போது தன்னுடன் நெருங்கிப் பழகியிருந்தும் தனக்கு உதவாமல் போனதை மனதில் வைத்துக்கொண்டு இப்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தபோதும் பேசாமல் போனது நியாயம் தானே! (கதை 1984: 2019) ஆனால் அம்பையின் முந்தைய காலக்கதைகளில் இருந்த காத்திரம் தொடர்ந்து வந்த தொகுப்புகளில் காணாமல் போகிறது. அத்தோடு அவரது மொழிநடையும் அவருக்குக் கை கொடுப்பதில்லை… கதைகளிலுள்ள பல சொற்களும், தொடர்களும் செயற்கையாக இருக்கின்றன.. சில சொற்கள் அகராதியைப் பார்த்தோ அல்லது நண்பர்களைக் கேட்டோ எழுதப்பட்டவை என்று அப்பட்டமாகத் தெரிகின்றன.. நுண்ணலை அடுப்பு (மைக்ரோ வேவ் அவன்), பழக்கூழ் (ஜாம்) என்கிற மாதிரியான சொற்களை (’சிங்கத்தின் வால்’, 2019) தமிழகத்திலோ தமிழகத்திற்கு வெளியிலோ வாழும் எந்தத் தமிழனும் பயன்படுத்துவதில்லை என்று பம்பாய் சித்தி விநாயகர் சத்தியமாகச் சொல்லலாம்.. அம்பைக்குப் பிறகு பாமா, சல்மா, தமிழ்ச்செல்வி, உமா மகேஸ்வரி போன்ற பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் அம்பையின் பாதிப்பு இருந்தாலும் அவர்கள் தங்களுக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். இதில் உமா மகேஸ்வரியைத் தவிர மற்றவர்கள் ஐம்பற்றுதல் வழி தங்கள் படைப்பைக் காண்பவர்கள்.. ஐம்பற்றுதல் வழியல்லாத எழுத்தைக் கொண்டு தனது படைப்பாக்கத்தைத் தொடர்ந்து கொண்டு செல்வது எத்தனை கடினம் என்பதை அம்பையின் பிற்காலக்கதைகள் வெளிக்காட்டுகின்றன..
*********************************
தனது பிற்கால வாழ்க்கையில் பயணம் என்பதை ஒரு செயல்பாடாக மட்டுமல்லாமல் ஒரு குறியீடாகவும் அமைத்திருக்கிறார் அம்பை.. உலகம் முழுவதும் மேற்கொண்ட இருபதுக்கும் மேற்பட்ட பயணங்களின் போது சந்தித்த மனிதர்கள் அம்பையின் அக உலகத்தின் பாகமாகியிருக்கிறார்கள்.. பயணங்கள் வழியாக அவரது கருதுகோள்கள் மீண்டும் பரிசீலனக்கு வருகின்றன.. தான் சந்திக்கும் மனிதர்கள் வழியாக மீண்டும் மீண்டும் அம்பை வலியுறுத்த விரும்புவது சுயத்துவம் என்பதன் புனிதம் தான்.. இந்த சுயத்துவம் காலப்போக்கில் பல மாறுதல்களைத் தனக்குள் உள்வாங்கி அவற்றைச் செரித்துத் தன் பயணத்தைத் தொடர்கிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் எழுதுபலகையில் ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும் சூத்திரங்களையும், வாய்ப்பாடுகளையும் இது புறக்கணிக்கிறது. புதிய சூத்திரங்களையும், வாய்ப்பாடுகளையும் உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.. சொல்லப்போனால் சூத்திரங்களும், வாய்ப்பாடுகளும் இல்லாத ஒரு ஆட்டத்தையே இது வேண்டுகிறது.. பம்பாயில் வாழும் காமுப்பாட்டி ஒரு நடனக்காரி.. தன்னை விட ஐந்து வயது சிறியவனான மிருதங்க வித்வான் ராசப்பாவுடன் பலகாலம் வாழ்ந்தவள்..இப்போது 85 வயது முதுமையில் இருப்பவள்.. அவளது ஆளுமை நுட்பமானதாக இருந்தாலும் தெளிவானது.. அவள் ஒரு மது அருந்தும் காந்தீயவாதி.. பக்தி அம்சத்தைத் தவிர்த்துவிட்டு புரந்தரதாசரையும், தியாகராஜரையும் ரசிக்கக் கூடியவள்.. (’பயணம் 21’ : 2019) யாருடைய அனுதாபமும் தேவைப்படாத மனநிலை கொண்டவளான இந்தப் பெண் தான் அம்பை தனது எழுத்துக்கள் மூலம் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம்.. இதைக் கொள்ளுவதும், தள்ளுவதும் தமிழ்ச்சமுதாயத்தின் விருப்பம்..
********************************
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 264 ஆம் இதழ்
- அன்பைப் பரிமாறும் தினம் காதலர்களுக்கு மட்டும்தானா?
- VINOTHINI HISTORICAL NOVEL – VANATHI PUBLICATIONS – AVAILABLE IN BOOK FAIR 2022
- தற்காலத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் பற்றியதான ஒரு பகிர்வு
- கனடியபத்திரிகைகளில் வெளிவந்து நூல்வடிவம் பெற்ற சில ஆக்கங்கள்
- இந்திரன் சிறப்புரை: திராவிட சிற்பங்களும் அதன் அழகியலும்
- இது காதல் கதை அல்ல!
- சுயம் தொலைத்தலே சுகம்
- அணு ஆயுத யுகத்துக்கு அடிகோலிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் -5
- எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் 21 -22
- ஓர் இழப்பில் ஓர் பிழைப்பு
- ஆண்மை-ஆணியம்-ஆண் ஆற்றல்: அம்பை கதைகள் இட்டுச்செல்லும் தூரம்