அன்னையர் தினக் கவிதை
கனவு வண்ணங்களை
கண்ணீரில் குலைத்து
கருப்பையில் என்னை
எழுதினாய்
என் சுருதிக்கு
நரம்புகளை மீட்டி
இசை கூட்டினாய்
உன் சொற்களால்
என்னைப் பேசவைத்தாய்
துளி எனைத் தந்த நதியே
‘என்னப்பெத்த ராசா’ என்று
என்னை நதியாக்கி
நீ துளியானதில்
தியாகம் அர்த்தம் பெற்றது
தூளியின் தூக்கத்தில்
கைபிசைந்த அமுதில்
பொய்யாகிப் போயின
என் எல்லா சுகங்களும்
என் தாகங்கள்
என் பசிகள்
உன்னைச் சுற்றியே
உலக அறிமுகமே
உன்னால்தான்
சிறகு தந்தாய் பின்
சென்றுவிட்டாய்
காற்று வெளிகளில்
உன்னைத் தேடுகிறேன்
என் காட்சிகளில்
கனவுகளில்
உறவுகளில்
உணர்வுகளில்
மதியில்
மாயைகளில்
எங்கோ நீ இருக்கிறாய்
என் கண்ணீரில்
ஏதோ ஒரு துளி
உன்னுடையது
என் சுமைகளில்
ஓதோ ஒன்றை
நீ நீக்குகிறாய்
என் உலகம் விரிந்தது
விதை தந்த விருட்சமே
இன்று நானும் விருட்சம்
உன்னைப் போலவே
இன்று என் மகள்
பால்நிலா பார்வை
தெற்றுப் பல்
பொத்திய புன்னகை
எல்லாமும் நீயேதான்
உண்மையில் என்மகளாக
நீதான் அம்மா
‘என்னப் பெத்த ராசா’
அட! இதுதானா?
நான் உன்னைப்
பெற்றுவிட்டேனம்மா
மற்றவையெல்லாம்
இருந்தென்ன?
தொலைந்தென்ன?
அமீதாம்மாள்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- அவன் வாங்கி வந்த சாபம் !
- முதன்முதல் பொது விண்வெளி ஆய்வலர் நால்வரை அகில நாட்டு விண்வெளி நிலையத்தில் இறக்கிய ஸ்பேஸ்X மீட்சி ராக்கெட் விண்சிமிழ்.
- கூட்டுக்குள் கல்லெறிந்தவள்
- என்னெப் பெத்த ராசா
- ’மனுசங்க’
- வடகிழக்கு இந்தியப் பயணம் : 7
- இந்திய இலக்கிய சிற்பிகள் – மா.அரங்கநாதன்
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்