ஜன்னலுக்கு வெளியே வெண்ணிலா

author
1
0 minutes, 1 second Read
This entry is part 4 of 8 in the series 19 ஜூன் 2022

 

 

தெலுங்கு மூலம்: வாட்ரேவு வீரலட்சுமிதேவி

தமிழ் மொழியாக்கம்: பொருநை க.மாரியப்பன்

மூல ஆசிரியர் குறிப்பு

                    வாட்ரேவு வீரலட்சுமிதேவி, விசாகபட்டினம் மாவட்டம் கிருஷ்ணதேவி பேட்டையில் ஜூலை 19, 1954இல் பிறந்தார். கிழக்கு கோதாவரி மாவட்டம் சங்கவரமில் வளர்ந்தார். காக்கிநாடா சமஸ்கிருத கலாசாலையில் 16 ஆண்டுகளும், டிகிரி கலாசாலையில் 22 ஆண்டுகளும்  ஆசிரியராகப் பணிபுரிந்தார். கதைத் தொகுப்புகள், உத்சவ சௌரபம், கொண்டபலம், கிடிக்கிக்கு பயட்ட வெண்ணலா போன்றவைகளோடு மற்றும் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். பி.எஸ்.தெலுகு பல்கலைக்கழக கீர்த்தி விருது, ஆந்திரப்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தில் தங்கப் பதக்கம், சுசீலா நாராயண ரெட்டி விருது, ஆவத்ஸ்வ சோமசுந்தர விமர்ச விருது போன்றவகளும் இன்னும் பிறவும்.

மொழிபெயர்ப்பாளர்: க.மாரியப்பன்

                    பொருநை க.மாரியப்பன், திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் ஏப்ரல் 4, 1976இல் பிறந்தவர். ஆந்திரமாநிலம், திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், இலக்கிய விமர்சகர். சமீபத்தில் ஏப்ரல் 23, 2022இல் இவரின் தெலுங்கு சிறுகதைத் தொகுப்பு மொழிபெயர்ப்பு நூல் ‘மஹாவித்துவான்’ வெளிவந்தது.

 

ஜன்னலுக்கு வெளியே வெண்ணிலா

                    வழக்கமாக ஜன்னல் பக்கம் சென்று நீலநிற திரையைப் பக்கவாட்டாக இழுத்தேன். ஜன்னலின் மூன்று பகுதியில் உள்ள நடுப்பகுதிக் கதவு திறந்தே இருக்கும். அதிலிருந்து தெரியும் சின்ன பிரபஞ்சமே என் கற்பனைக்கு இழுத்துச்சென்று பெரிய பிரபஞ்சமாக வண்ணவண்ணமாகப் பார்ப்பது என் தினசரியின் மகிழ்ச்சிகரமான பக்கம்.

                    என் படுக்கையறை ஜன்னலில் இருந்து மேற்குப் பக்கத்துக்கு அப்பால் இருக்கிற அப்பார்ட்மென்ட்டில் ஒரு வீடு – ப்ளாட்டு என்று சொல்லலாமோ என்னமோ – நேராகத் தெரியும். அவர்களின் வீட்டு அறை, சமையலறை இந்தப் பக்கம் இருந்தன. அநேகமாகப் படுக்கையறைகள் இரண்டோ, மூன்றோ அவை அதற்கு அப்பால் அதாவது மேற்கு பக்கம் இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.

                    என் ஜன்னலின் திரையை அகற்றினாலே அந்த வீட்டின் வாழ்க்கை, படம் போல் தெரியும். இந்த வீட்டிற்கு வந்ததில் இருந்து இந்தப் படுக்கையறை ஜன்னல், மனிதர்கள், கிழக்கு வடக்குப் பக்க ஜன்னல்கள், பால்கனி வழியாக ஆகாயங்களைக் காட்டுகிற நாட்கள் ஹாயாகக் கழிந்து போகின்றன.

                    அதிகாலையிலேயே பால்கனியில் நின்று கிழக்குக் காற்றில் மகிழ்ச்சியுடன் காபி குடிப்பது எவ்வளவு ஆனாலும் போதாது. அரக்கப் பரக்க இருக்கும் அந்தப் பொழுது. ஆனால் அந்தப் பரபரப்பிலும் டென்சனிலும் அந்தப் பக்கத்தில் இருக்கிற வீட்டு முற்றத்தில் உள்ள எலுமிச்சைச் செடி என்னிடம்  பேசிக் கொண்டிருக்கும். பச்சைப் பசேல் இலைகள் மத்தியில் இருந்து மஞ்சள் நிற எலுமிச்சைப் பழங்கள் அங்கங்கே பளபளத்து, மீண்டும் மறைந்து, தெரிந்து, என்னை  கணக்கெடுத்துக்கொள் என்னும்படியாக அழைக்கின்றன. கணக்கெடுக்காவிட்டாலும் கணக்கெடுத்தாலும் புறக்கணிக்கப்படலாம்!?

                    காய்கறி வாங்கும் சந்தடியில் ஒரு பார்வையை அங்கே விசிறி உள்ளுக்குள் வந்தேன். சில வேலைகளுக்குப் பிறகு துணிகளைப் பீரோவில் எடுத்து, அவைகளைச் சரி செய்து, படுக்கையறையில் நடந்து ஒரு கண்ணை இந்த மேற்கு ஜன்னல் மீது வைத்தேன்.

                    அந்த வீட்டு அறையை ஒட்டியவாறு நீளமான பால்கனி இருந்தது. அறைக்குள் இருக்கிற ப்ரெஞ்சு ஜன்னலில் இருந்து உள்ளே இருக்கும் அனைத்தும் தெரிந்து கொண்டிருக்கும். கண்ணாடி ஜன்னல் அவ்வப்பொழுது கர்ட்டெய்னால்  மூடப்பட்டிருக்கும். பால்கனி முழுவதும் பல பல செடிகள் இருக்கின்றன. எலலாம் இலைத் தாவரங்களே. ஒன்றோ இரண்டோ மாத்திரம் பூச்செடிகள் – அவைகள் கூட சீசனுக்குத் தகுந்தாற்போல மாறிக் கொண்டிருக்கும்.

                    அந்தச் செடிகள் மீது என் பார்வை கொஞ்ச நேரம் இருக்கும். அங்கிருந்து அறை நோக்கிப் போகும். உள்ளே ‘அவள்’ நடுவயதுக்கு ஒரு பத்துவருடம் குறைந்தவளாய் இருந்தாள். சுருள் முடியை எப்படியோ மேலே மடித்து க்ளிப் மாட்டி வைத்திருந்தாள். ஜீன்ஸ் பேண்ட் மேல் நீண்ட சட்டைப் போன்ற ஒன்றை அணிந்து கொண்டு டைனிங் டேபிள் முன் அமர்ந்து, காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தாள். திருப்திகரமாக, அமைதியாக.

                    நான் என்னமோ என் வேலைகளையெல்லாம் அவசரமாக, டென்சனாக வேர்த்துவடிய செய்வது தப்பாது. அதனால் சிறிது நேரம் அந்த ஜன்னலில் இருந்து அவளைப் பார்த்து அந்த வேலையின் மேல் ஸ்திரத் தன்மையை அனுபவிக்கவும் மறுபடியும் என் வேலையில் விழுந்துவிடுவேன்.

                    என் வீட்டில் உள்ள இருவரும் டிபன், சாப்பாடு எல்லாம் டப்பாவில் அடைத்து வேக வேகமாக ஆளுக்கு ஒரு புறம் புறப்படுவோம். மத்தியானம் ஆபிஸில் மதிய உணவு என்று அழைக்கப்பட்ட போஜனம் செய்கின்றபொழுது அந்தப் பக்கத்துவீட்டு அறை நினைவுக்கு வந்தது.

                    சாய்ந்தரம் இரண்டாவது தளத்தில் இருக்கிற என் வீட்டை அடைந்ததும், வரண்டா கதவின் பூட்டைத் திறக்கும்பொழுது மீண்டும் கிழக்கு வீட்டு  முற்றத்தில்  குலையோடு இருக்கிற வாழைமரம் பேச்சுக்கொடுத்தது. அவைகள் சிறிதாக இருந்ததிலிருந்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன். பாவம் ஒரு குலையோடு அதன் வாழ்க்கை முடிந்துவிடுகிறது இல்லையா என்ற சோகத்துடன் பூட்டை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தேன்.

                    “டீ” நான் ஒருத்திதான் குடிக்கவேண்டும். அந்த நேரத்தில்  விருந்தினர் யாராவது வருவார்களோ என்று எதிர்பார்ப்பேன். பல சமயம் நடப்பதுண்டு. அவ்வப்பொழுது நடப்பதில்லை. அப்படிப்பட்ட நேரத்தில் டீ கப்போடு படுக்கையறை ஜன்னலுக்கு முன் வராமல் இருக்கமுடியாது.

                    அடிக்கடி அந்த நேரத்தில் அவர்கள் வீட்டில் யார் யாரோ இருப்பார்கள். தனித்துவமாக அழகாக இருக்கும் பொருட்கள் அவர்களின் அந்த அறையில் நிரம்பியிருக்கும். சோபாக்கள், ஊஞ்சல்கள் எல்லாம். அவரின் நண்பர்களோ, அவளின் நண்பர்களோ, உறவுக்காரர்களோ என்று தெரியாது ஆனால் அவர்கள் எல்லாரும் இருப்பார்கள். டீ.வி. பார்த்துகொண்டே வெட்டியாகப்  பேசிக்கொண்டு இருப்பார்கள். அவள் காபியோ, டீயோ அவர்கள் அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருப்பாள்.

                    பார்க்கின்றபொழுது எனக்கு அவர்கள் காட்டிய காட்சிகள் முழுவதுமாக அனைத்தும் தெரியும் ஆனால் நான் அவர்களுக்குத் தெரியமாட்டேன். முடிவாக அவர்களுக்கு இந்தப் பக்கம் பார்ப்பதற்கு நேரமும் ஆர்வமும் இல்லை என்று நினைக்கின்றேன்.

                    இன்னும் ஒரு மணி நேரத்தில் அவள், அவர் (அவளின் கணவர்), அவர்களெல்லாம் சேர்ந்து வெளியே போனார்கள். அவள் பளபளப்பான சுடிதார் அணிந்து பிறகு முடிக்கு க்ளிப் வைத்துக்கொண்டு தயார் ஆவது எனக்குத் தெரிந்துகொண்டு இருந்தது.

                    அவர்கள் வருவதற்குள் ஏழு தாண்டியது. நாங்கள் டீ.வியில் ஒன்று இரண்டு நிகழ்ச்சிகளைப் பார்த்து சாப்பாட்டை முடித்தோம். தொலைபேசியில் அழைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. பேச்சுகள் நீண்டு கொண்டிருந்தன. சிக்னல் விட்டுவிட்டு வந்தது.

                    அப்படிப்பட்ட சமயத்தில் வடக்கு நோக்கி நடந்துபோனேன். அப்படி சென்றபொழுது அந்தப் பக்கம் காலி இடத்தில் இருக்கிற பூருகு செடி (இலவ மரம்) எனக்கு சைகை செய்து கொண்டிருந்தது. நிமிர்ந்து வளர்ந்து, சுற்றி நீண்டு விரிந்து உள்ளங்கை அளவிற்கு உடைய இலைகளோடு மயக்கி அழைப்பது போலிருந்தது.

                    நான் செல்போனில்  பேசிக்கொண்டே அந்தச் செடியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் அழைப்பைக் காதில் போட்டுக்கொண்டு, அது ஹைதராபாத்திலிருந்தோ, சென்னையிலிருந்தோ, பிலடெல்பியாவிலிருந்தோ, தெனாலியிலிருந்தோ, விசாகப்பட்டினத்திலிருந்தோ பேசுபவர்களை நோக்கிப் போய்க் கொண்டிருப்பேன்.

                    பேச்சுகள் சலிப்பாகவோ, விருப்பமின்றியோ, சோர்வாகவோ முடித்து உள்ளே வருவதற்கு முன்பு ஒரு முறை அந்தச் செடியைப் பார்த்தால் பாவம் அது என் விசாரிப்புக்காக அங்கேயே அப்படியே நின்றுகொண்டிருக்கும். ஒரு பார்வை அதன் மேல் விசிறி, மீண்டும் பூட்டி உள்ளே நுழைந்தவுடன், திரைக்கு அப்பால் பொங்கி எழும் அனைத்தையும் மறந்துவிட்டு.

                    ராத்திரி படுப்பதற்கு முன்பு ஜன்னல் கர்ட்டெயின் போடும்பொழுது பார்த்தால், அவர் தட்டைக் கையில் வைத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்து டீ.வி ரிமோட்டோடு சாப்பாடு சாப்பிடும் வரைக்கும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவள் சமையல் அறையில் இருந்து தானும் ஒரு தட்டைப் பிடித்துக்கொண்டு வெளியே வருவதுமாக உள்ளே போவதுமாக இருந்தாள்.

                    இப்படி எனக்கு அங்கே அவர்கள், இங்கே எலுமிச்சைச் செடி, பூருகு செடி (இலவம் பஞ்சு மரம்) வானளவிற்கு பழகிவிட்டது. உண்மையில் இந்தப் பேசாத அசையாத மரங்களை விட நகரும் அந்த வீட்டு மனிதர்கள் மேல்தான் ஆர்வம் அதிகமானது.

                    அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டிருக்கலாம்! குழந்தைகள் இல்லையா? இருந்தால் இருக்கும்.  விடுதியில் சேர்த்திருப்பார்கள். அவள் உத்தியோகத்துக்கு ஓடுவது இல்லையென்று நினைக்கிறேன். வீட்டை அழகாகச் சரிசெய்தல், திருப்திகரமாகச் சமையல் செய்தல், நண்பர்களோடு செலவழித்தல் – எல்லாம் நிதானமாகவே.

                    நாளுக்கு நாள் அவர்களை சும்மா பார்த்துக் கொண்டே இருந்ததால் அவர்கள் எனக்குள் நெருக்கமாக நுழையத் தொடங்கினார்கள். இருந்தாலும் அவர்கள் எவரோ – என்னவோ எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்வதற்கான தேவையும் ஏற்படவில்லை. அவ்வளவு நேரமும் எனக்கு இல்லை.

                    ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையிலே அரிதாகக் கிடைக்கும் ஓய்வில் ரசித்துக்கொண்டே காபியைக் குடித்து டீ.வியைப் போட்டேன். நூறு சேனல்களை மாற்றினாலும் எல்லாமே கத்தலாகவே இருந்தது. இப்பொழுது அதைவிட வேறு இல்லை.

                    பால்கனி முற்றத்தில் ரமணம்மா துணிகளைக் காயப்போட்டுக் கொண்டிருந்தாள். சாதாரண நாட்களில் அவளிடம் பேசுவதற்கு நேரமே இருக்காது.  ஞாயிற்றுக்கிழமையே  நிதானமாக வேலைகளுக்கு இடையில் எங்களிடம் வந்து ஏதேதோ சொல்லிக் கொண்டிருப்பாள். கொஞ்சம் கேட்டுக்கொள்வேன், கொஞ்சம் கேட்கமாட்டேன்.

                    எங்கள் அப்பார்ட்மெண்ட்டில் இருக்குற இருபது குடும்பங்களின் சங்கதிகள் ரமணம்மாவுக்கே தெரியும். அவைகளில் ஏதோ கொஞ்சத்தை என் காதுகளில் போடவேண்டும் என்று பார்த்தாள். அவ்விதமாகவே இங்கே எல்லாரும் ஒருவருக்கொருவர் பரிச்சயம் ஆகிறோம், என்னென்னவோ உண்மைக்குப் புறம்பான பொய்ப்பகுதிகளோடு.

                    துரதிருஷ்டவசமாக ஒவ்வொருமுறை அதில் கொஞ்சமாவது நிஐம் தான் என்று நிரூபணம் செய்து காண்பிக்கப்படும். ஆனால் எல்லாரும் எதிர் எதிராகச் சந்திக்கிறபொழுது முகம் முழுக்க சிரிப்போடு பேசுவதை நிறுத்தமாட்டோம்.,

                    உள்ளே ஏதோ ஒரு பாகம் விட்டு விழுவதுபோல், உதிர்வதுபோலத் தோன்றும் எனக்கு அந்த சந்தர்ப்பங்களில்.

                    நான் ரிமோட்டை சுற்றிக்கொண்டு அமர்வதைக் கண்டு ரமணம்மா துணிகளைக் காயவைத்து வேலையை முடித்துக்கொண்டு நிம்மதியாக வாசலில் வந்து நின்றாள். ஏதோ சொல்லப்போகிறாள் என்று தோன்றியது.

                    நினைத்தவாறே சொல்லத் தொடங்கினாள். இரண்டாவது தளத்தில் ஐந்தாம் எண் வீட்டில் இருக்கிற அந்தப் பெண்ணைப் பற்றி. அவளோட அம்மாவும் அப்பாவும் ஊருக்குப் போய் நான்கைந்து நாளாகிவிட்டதாம். தனியா அவள் ஒருத்திதான் இருக்கிறாளாம். ராத்திரி பன்னிரண்டு மணிக்கு யாரோ ஒரு பையன் வந்து போறானாம், ரகசியமாகக் குரலைத் தாழ்த்திச் சொன்னாள்.

                    “அது அந்தப் பொண்ணோட விருப்பம். நமக்கெதுக்கு. சும்மாயிரு” என்றேன். கொஞ்சம் இகழ்ந்தாள். படபடவென்று காய்ந்த துணிகளைக் காயவைத்து வேலையை முடித்துக்கொண்டு வெளியே போய்விட்டாள். அவளை நான் உற்சாகப்படுத்தாமல் மனச்சோர்வுடன் டீ.வியை அணைத்துவிட்டு ஆலோசனையில் மூழ்கிவிட்டேன்.

                    ரமணம்மா சொன்ன பெண் எம்.எஸ்ஸி மைக்ரோபையாலஜி படித்தவள். அழகாக இருந்து அழகாகத் தயாராவாள். அவ்வப்பொழுது எனக்கு வாசல் அருகில் எதிர்படுவாள். அவ்வேளை  சிரித்த முகத்தோடு பேசி என்னை மதிப்பாள். இதற்கு இடையில் ஒரு கார்ப்பரேட் கல்லூரியில் டிகிரி பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறாள்.

                    அந்தப் பெண்ணைப் பற்றி ரமணம்மா சொன்ன இந்த வார்த்தைகளைக் கேளாமல் இருந்திருந்தால் நன்றாகயிருக்குமே என்று தோன்றியது. அந்தப் பெண் எப்படி இருந்தாலும் அவளை எனக்குப் பிடிக்கும். இந்த ரகசிய தகவல் ரமணம்மா வாயில் வராமல் இருந்திருந்தால் நன்றாகயிருந்திருக்கும்.

                    இதுவரை நானும் கேட்டதில்லை. எதுவாக இருந்தாலும் அதன் பிறகும் என் மனதில் அவர்களைப் பற்றி கொஞ்சம் அப்படிஇப்படி தோன்றியது.

                    மனிதர்கள் ஏன் ஒருவரையொருவர் பற்றி அதிகம் அறிந்திருக்கிறார்கள்? தெரிந்து கொள்ளும் வரை காத்திருக்கமுடியாது, தெரிந்தபிறகு, ‘ஓ இவ்வளவுதானா!’ இல்லையென்றால், ச்சீ! இவ்வளவு மோசமானதா? என்று நினைப்பது எதற்கு? அதில் பொறாமை போன்றவையிலிருந்து ஏதாவது ஆறுதல் உள்ளதா?!

                    நினைத்துக்கொண்டு எதிரில் பார்த்தால், எப்பொழுதும் தெரியும் காட்சியே என் யோசனையை நிறுத்தியது. வடக்குப் பக்கத்தில் இருக்கிற முற்றத்தின் பக்கம் உயரமான இரண்டு கட்டடங்கள் உள்ளன. சாலைக்கு அப்பால் இருக்கிற தூரத்தில் உள்ள வேப்பமரத்தின் கொஞ்ச பாகம் இவைகளின் மத்தியில் இருந்து தெரிந்து கொண்டிருந்தது. இந்த இரண்டு மாளிகைகளைத் தாண்டி ஒரு  பசுமையான நீரோடைப்போல அந்த மரம் தெரியும். அதன் இலைகளின் மத்தியில் இருந்து ஆகாயம் சின்ன சின்ன துண்டுகளாய் மறுபடியும் அந்த துண்டுகள் எல்லாம் பசுமையுடன் ஒட்டிக்கொண்டது போலிருக்கும்.

                    காற்று வீசுகின்றபொழுதெல்லாம் நீல வானம் இலை ஊஞ்சலில் ஊஞ்சல் ஆடுவதுபோல் தெரிகிறது.

                    எப்பொழுதும் பார்க்கக் கூடியதேதான் ஆனாலும் முன்னெப்போதையும்விட இப்பொழுது மனம் முழுக்க அதன் மீதே போனது. அந்தக் காற்று ஊஞ்சலுக்கு மெதுவாக நானும் சேர்ந்தேன். “இனிய கற்பனை ஊஞ்சலில் ஆடியது போல்” உணர்வு கொஞ்சம் புரிந்தது.

                    இந்தப் பசுமை அனுபவம் இந்த உணர்வு எப்பொழுதும் என்னை ஆக்கிரமிக்கவில்லை; மரத்தை வெட்டினால் தவிர.  வாசல் நகர்ந்ததும் வெறுமனே கிடைத்த இந்த வரத்தை இதயத்தில் பத்திரமாக ஒளித்து வைத்து எழுந்தேன். வேலைகள் நினைவுக்கு வந்து.

                    வேலைகள் வழக்கம்போல். ஆனால் சுற்றி இருக்கிற பிரபஞ்சத்தைக் கவனித்து நம்மோடு சேர்த்துக்கொண்டால் நம் வேலைகள் நமக்குப் புதிதாக உற்சாகமாகத் தோன்றும்.

                    பக்கத்து ப்ளாட்டுக்காரர் வராண்டாவிற்கு புதிய செடியைக் கொண்டு வைத்தார்கள். உள்ளே இருக்கிற பர்னிச்சர்களையும் அங்கும் இங்கும் மாற்றி வைத்தார்கள். இரண்டு புதியவர்கள் தெரிந்தார்கள். வயதுக்கு வந்த பையன்கள். அவை அனைத்தையும் இணைத்துப் பார்த்து நடுநடுவே என் பணிகளைச் செய்து, செய்துகொண்டு நாள் கழிந்துபோனது.

                    மறுநாள் ராத்திரி கிழக்குப்பக்க பால்கனிக்கு வந்தேன். ஒரே வெண்ணிலா. ஆனால் சுற்றி இருக்குற தீபங்கள் வெண்ணிலாவையும் மங்கசெய்தன. எப்படியானாலும் சந்தமாமா நீலவானத்தில் நீந்தி மேகத்தைக் கடந்து பின்னுக்கு இரவை திருப்பி அனுப்புகிறது.

                    நானும் வெண்ணிலாவாய் நீந்துகிறேன்.

                    பக்கத்து வீட்டுக் காட்சி – ஜன்னல் மூலையிலிருந்து வந்தது – கதவு மிளிர்ந்தது – மத்தியில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி கின்னத்துக்கு வெளியே பஞ்சு போன்ற குஷன் விரித்த மூங்கில்  சோபாவில் படுத்துக்கொண்டு அவள் ஏதோ புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள். புதிதாக வந்த இளைஞர்கள் இருவர் சதுரங்கம் ஆடத் தொடங்கினர். அவள் கணவன் சமையலறையில் ஏதோ செய்துகொண்டிருந்தார். அநேகமாக டீ போடுகிறாரோ என்று நினைப்பதே எனக்கு இன்னும் நல்லது.

                    இன்றைக்கு என் அலுவலகத்தில் பெரிய  பிரச்சனை ஏற்பட்டது.  பொதுமக்களோடு தொடர்புடைய அலுவலகத்தில் சிறு தவறு நடந்தாலும் பெரும் பிரச்சனை ஏற்படுவது தப்பாது.  ஐந்தாறு மணிக்கணக்கில் மல்லுக்கட்டி அத்தவறினை சரிசெய்து பிரச்சனையைச் சரிசெய்தோம்.

                    மனச்சோர்வடைந்து சாய்ந்திரம் வீட்டை அடைந்தேன். ஆனால் இந்த வெண்ணிலா, அசையா ஓவியம் போல் அந்த ஜன்னலுக்குப் பின்னால் உள்ள மனிதர்களின் வாழ்க்கையைப் படம் போல் காட்டி என்னை மயக்கமடைய வைத்தது.

                    நான் நினைப்பது போல் அவர்கள் அவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா? அவர்களுக்கு ஏமாற்றம் இல்லையா? கவலை இல்லையா? அவர்கள் அவ்வளவு நல்லவர்களா? என்னமோ? எனக்கு அப்படிப்பட்ட எதுவும் அவர்கள் பற்றித் தெரியாது. அவ்வளவு தூரத்தில் இருந்து பார்த்து ஏதோ ஊகத்தின் அடிப்படையில் கூறுவதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

                    காலையிலேயே ரமணம்மா வேலைக்கு வந்து அந்தப் பக்கத்துவீட்டுக்காரர்கள் சங்கதி ஏதோ சொல்ல முயன்றாள். பேசுவதற்கு அவகாசம் கொடுக்காமல்  விரட்டிவிட்டேன்.

                    அது மறுநாள் இரவென்று நினைக்கிறேன் அவர்கள் வீட்டுக்குப் பத்துப் பன்னிரண்டு பெண்கள் வந்தார்கள். வண்ணமயமான பளபளப்பான ஆடைகள், சுதந்திரமாக அழகாக பறக்கும் செழிப்பான கூந்தலுடன். அந்த அர்த்தராத்திரி பன்னிரண்டு மணிக்கு மெழுகுவர்த்திகள் ஏற்றி அடாவடி செய்தார்கள். யார் பிறந்த நாள் விழாவோ! வேறு என்னவோ!

                    நான் தூங்கவில்லை. ‘சந்திரகிரி சிகரம்’ புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன். படுக்கையறையில் தேக்கால் செய்யப்பட்ட சுழலும் நாற்காலி என்னை மெதுவாக அசைக்கிறது. விபூதி பூஷன் என்னை ஆப்பரிக்க காடுகளின் பயங்கர அழகில் என்னை மயக்கிக் கொண்டிருந்தார். இருந்தாலும் அந்தப் பக்கத்தில் இருந்து வந்த முன்முயற்சிகள் அவை என் ஜன்னைலைத் தாக்கியது.

                    எழுந்து ஜன்னலை நெருங்கினேன். அவர் திவான் மீது அமர்ந்து ஏதோ ஒரு கருவியைக் கவ்விக்கொண்டு வாசித்துக் கொண்டிருந்தார். மிகவும் இனிமையான கொண்டாட்டம். நாம் தூரமாக இருந்தாலும் கூட அதில் ஒரு பாகமாக இருக்கவேண்டும் அல்லவா! என்று தோன்றிது.

                    அதற்கு மறுநாள் காலையில் எதற்கோ அவர்கள் இருவரும் கத்திக்கொண்டு இருப்பதாகத் தோன்றியது. இருவரின் முகங்கள் கோபமாகவும் பொறுமையின்றியும் இருந்தன. ஜன்னல் கதவைச் சாத்திக் கர்டெயின் போட்டு அறைக்குள் வந்தேன்.

                    நான் பால்கனி சுவரில் வைத்து இருக்கிற ஆரஞ்சு, ரோஜா செடிகளில் சின்ன சின்னப் பூக்கள் பூத்திருந்தன. உதிர்வதற்கு தயாராக இருந்தது ஒரு பூவின் இதழ்கள், புதிதாக ஐந்தாறு பூக்கள், இன்னும் மொட்டுக்களாக.

                    நந்து அதை என் பிறந்தநாளுக்குப் பரிசாகக் கொண்டு வந்தான். எப்படி இருக்கிறதம்மா! பூக்கள் மலர்கின்றனவா? என்று தினமும் தூரத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருப்பான். பலசமயம் நானும் அவனும் கத்திக்கொண்டு சண்டை போடுவோம்.

                    ரோஜா செடிப் பக்கத்தில் வந்தேன். ராத்திரி விழுந்த பனி இலைகளில் ஈரமாக இருந்து, பூக்களை மட்டும் புதிதாக வைத்திருக்கும்.

                    மறுநாள் ரமணம்மாவைக் கண்டேன். வந்து ஏதாவது சொல்ல வெறுப்படைந்தேன். “அப்பா! எதற்கு யாரோட பிரச்சனையையோ சொல்ற! வேணாம்னு சொன்னன்ல்ல!” என்றேன்

                    அப்போது அவள் கூறினாள். “வேறு யாரோட பிரச்சனையோ இல்லம்மா! உன்னைப் பற்றிதான். அந்தப் பக்கத்து வீட்டம்மாவோட வேலைக்காரி இருக்குறால்ல. அவ வந்து கீழ வீட்டு அம்மாகிட்ட சொன்னாள். “எங்க எதிர்வீட்டு ப்ளாட்டுல அவள் ஜன்னல் வழியாகத் திருட்டுத்தனமாக எங்க வீட்டையே தொங்கி பார்த்துட்டு இருக்குறாள். அவளுக்கு வேற வேலை இல்லையா? என்று கேட்டாளாம். பாருங்கம்மா! நீங்க யாரு பிரச்சனைக்கும் போக மாட்டீங்க. உங்களையே எப்படி சொல்றாங்க பாருங்க” என்று.

                    எனக்குத் தெரியாது. சாதாரணமாக இப்படி நடக்கலாம். அவள் அப்படி இருக்கலாம் அல்லது அவர்கள் அப்படி கற்பனை செய்து இருக்கலாம். எதுவும் சாத்தியமே.

                    இப்பொழுது ரமணம்மா மறுபடியும் அவளின் சங்கதியை சொல்ல ஆரம்பித்தாள். “வேணாம் ரமணம்மா!  சொல்லாதே. இந்த ஜன்னல மூடி வச்சுடுறன்” என்று அனுப்பி வைத்தேன்.

                    அவள் அல்லது அவர்களின் விவரங்களைக் கேட்பதில் எனக்கு விரும்பமில்லை இப்பொழுது. இந்தக் கிழக்குப் பக்க எலுமிச்சைச் செடி போலவே, வடக்குப் பக்கம் இருக்கிற வேப்ப மரத்தின் ஆரவாரத்திலிருந்து நகரும் ஆகாய மேகம் போலவே அவர்களும்.

                    இல்லையென்றால் மனித சச்சரவில் இருந்து விலகி, இலைகளின் வாசனைக்கு ஆகாயத்தின்  மௌனத்திற்கு மேலும் நெருங்கி வருகிறேன் அப்படி நடந்தால் வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கும், ஹாயாக இருக்குமே என்று தோனறியது,

                    ஆனால் படுக்கையறை ஜன்னலை மூடவில்லை; மூடப்போவதுமில்லை. இந்த மனிதர்களைப் பற்றி எனக்கு எவ்வளவு குறைவாகத் தெரிகிறதோ அவ்வளவு நல்லது. எதற்கென்றால் அவர்கள் எனக்கு  வேண்டும் என்பதால்.

 

 

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 272 ஆம் இதழ்தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
author

Similar Posts

Comments

  1. Avatar
    .V.SENTHILSIVAKUMAT says:

    வர்ணனை சிறப்பு. கதை தொய்வில்லாமல் தெளிவான நடையில் செல்வது மொழிபெயர்ப்பாளரின் அனுபவத்தை காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *