கம்பருக்கே கர்வம் இல்லை

author
0 minutes, 0 seconds Read
This entry is part 4 of 14 in the series 3 ஜூலை 2022

 


 

கோ. மன்றவாணன்

 

ஒரு பூனை பால்கடல் முழுவதையும் நக்கி நக்கிக் குடித்துவிட வேண்டும் என ஆசைப்படுவது போல், இராமாயணத்தை முழுவதுமாகச் சொல்லிவிட. ஆசை கொண்டேன் என்று கம்பர் சொல்கிறார். தன்னால் இராமாயணத்தை நிறைவாகச் சொல்லிவிட முடியாது என்பதுதான் அதன் பொருள். ஆனால், இராமாயணத்தைத் தமிழ்ச்சூழலுக்கு ஏற்பவும் காவியச் சுவை ததும்பி வழியவும் சிறப்பாகவே எழுதி இருக்கிறார்.

இளம்பெண்களின் ஆடல் நிகழ்வால் அரங்கின் தரையில் கீறல் விழுந்துவிட்டதற்காகத் தச்சர் யாரும் அந்தப் பெண்களைத் திட்ட மாட்டார்கள். அதுபோல் தெளிவும் ஞானமும் இல்லாத தன்னுடைய புன்கவியைக் கேட்டு, நூல்பல கற்ற புலவர் பெருமக்கள் யாரும் சினம் கொள்ள மாட்டார்கள் என்றும் கம்பர் சொல்கிறார்.

கம்பர் கவியைப் பொன்கவி என்று தமிழ் உலகமே போற்றுகிறது. ஆனால் கம்பரோ தன்கவியைப் புன்கவி என்று தாழ்த்திக் கொள்கிறார். இவற்றை எல்லாம் அவையடக்கம் என்ற பகுதியில்தான் சொல்கிறார்.

இப்படிக் கம்பர் ஏன் தன்னைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்? ஒருவேளை அவருக்குத் தாழ்வு மனப்பான்மை இருந்திருக்குமோ என்றும் ஐயம் கொள்ளலாம். தாழ்வு மனப்பான்மை என்பது உளவியல் சிக்கல். அவையடக்கம் என்பது பண்பியல் சிறப்பு.

புலமையும் திறமையும் நற்பண்புகளும் கொண்டவர்கள்தாம் அவையினராக இருந்திருக்கிறார்கள். அதனால் அவையில் தன்னைத் தாழ்த்திக் கொள்வதும் அவையினரை உயர்த்திச் சொல்வதும் அந்தக் காலத்து மரபாக இருந்திருக்கிறது. தன்னைத் தாழ்த்திக் கொள்பவர் உயர்த்தப் படுவார் என்றொரு திருவாசகம், திருவிவிலியத்தில் வருகிறது.

அன்றைய சூழ்நிலையில் பல்வேறு விமர்சனங்களுக்கு இடம்தரும் ஒரு பெரும்படைப்பை… அரும்படைப்பை அறிஞர் அவை ஏற்றுக் கொள்ளுமோ அல்லது ஒதுக்கித் தள்ளுமோ என்ற அச்சம் கம்பருக்கு ஏற்பட்டிருக்கலாம். நன்றாகத் தேர்வு எழுதி, முடிவுக்காகக் காத்திருக்கும் மாணவரின் மனநிலைதான் அது.

அன்றைய அரங்கேற்றம் என்பது நூலாசிரியர்களுக்கு வைக்கப்படும் தேர்வு. இன்றைய வெளியீட்டு விழா என்பது, நூலாசிரியர்கள் தாங்களே செய்துகொள்ளும் புகழ் விளம்பரம்.

ஆனால் இந்தக் காலத்தில் சில படைப்பாளர்கள் தங்களைத் தாங்களே உயர்த்தித் தற்பெருமை பேசுகிறார்கள்.. படைப்பாளருக்கு வித்யா கர்வம் இருக்க வேண்டும் என்றும் கொடி உயர்த்துகிறார்கள். தற்பெருமை பேசுவதைக்கூட ஒரு வகையில் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் தங்களை உயர்த்திக்கொள்ள அடுத்தவர் பெருமையைத் தாழ்த்திப் பேசுவதை ஏற்க இயலாது.

நம் பெருமையை நாமே பேசுவது நாகரிகம் இல்லை.

நம் பெருமையைப் பிறர் பேசுவதில்தான் உலக அங்கீகாரம் கிடைக்கிறது.

எழுத்தாளனுக்கு அவையடக்கம் இருக்க வேண்டுமா? அல்லது, அவைக்கு அடங்காத கல்விச் செருக்கு (வித்யா கர்வம்) இருக்க வேண்டுமா? இப்படியான விவாதம் இலக்கிய அரங்கில் இன்னமும் நடந்து வருகிறது.

வித்யா கர்வம் இருக்க வேண்டும் என்போர், பாரதியை உதாரணம் காட்டுகிறார்கள்.

“சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் என்னை” என்று பாரதி தன்னை உயர்த்திப் பாடிக்கொண்டார் என்கிறார்கள்.

“சுவை புதிது; பொருள் புதிது;  வளம் புதிது; சொல் புதிது; சோதி மிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மகாகவிதை” என்று தன் கவிதையைத் தானே புகழ்ந்துகொண்டார் என ஆதாரம் காட்டுகிறார்கள்.

“புவியனைத்தும் போற்றிட வான்புகழ் படைத்த தமிழ்மொழியைப் புகழில் ஏற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக்கு இல்லையெனும் வசை என்னால் கழிந்தது அன்றோ!” என்று கர்வம் கொள்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

அதற்காக எல்லாரும் பாரதியாகி விட முடியாது.

இவை எல்லாம் பாரதியாரின் “ஒரு காலக் கட்டக்“ கவிதைகளாகவே இருக்கும். பாரதியே மகாசக்தியிடம் பணிந்து நிற்கிறார். உள்ளம் தெளியாதோ… பொய்ஆணவ ஊனம் ஒழியாதோ என்று விண்ணப்பம் வைக்கிறார்.

தன் கவிதையை மகாகவிதை என்று சொன்ன பாரதி, கர்ணனோடு கொடை போயிற்று; கம்பனொடு கவிதை போயிற்று என்று வேறோர் இடத்தில் சொல்கிறார். பிற்காலத்தில் பாரதியாரிடம் கர்வம் இருந்திருக்காது என்றே கருதுகிறேன். ஆனாலும் சிலர், பாரதியாரிடம் இருந்தது கர்வம் இல்லை; அது பெருமை கொள்ளும் மனோபாவம் என வலிந்து பொருள்திணிப்புச் செய்யலாம்.

கண்ணதாசன் தன் வரலாற்றை எழுதும் போது, நான் என்பதற்குப் பதிலாக அவன் என்றே எழுதினார். நான் என்று சொன்னால்கூட அதுவும் கர்வமாகக் கருதப்படும்; ஆணவமாக அறியப்படும் என்று அஞ்சியே அப்படி அவர் எழுதினார்.

இரத்த ஓட்டம்போல் கற்றல் என்பது தொடர்ந்து நடைபெற வேண்டிய நிகழ்வு. கற்றல் என்பது படைப்புக்கு மூலதனம். எப்போது படைப்பாளர் கர்வத்துக்கு ஆளாகிறாரோ… அதுமுதல் கற்பதிலிருந்து அவர் விலகுகிறார்.

தனக்கு நிகராகவோ உயர்வாகவோ யாரும் இல்லை என்ற மூடத்தனத்தை வளர்க்கிறது கர்வம். கர்வம் உள்ள மனிதர் யாரையும் மதிப்பதும் இல்லை. யார் சொல்லையும் கேட்பதும் இல்லை. 

கர்வத்தோடு நடப்பவரை உலகம் வெறுக்கும். பணிவோடு நடப்பவரை உலகம் வணங்கும். “நிலை உயரும்போது பணிவு கொண்டால் உலகம் உன்னை வணங்கும்” என்ற கண்ணதாசனின் பாடல் வரியை இங்கே நினைத்துக்கொள்ளலாம்.

அவையடக்கம் என்பது ஆணவப் போக்கை அண்டவிடாமல் தடுக்கிற ஓர் உளவியல் சிகிச்சை முறை.

பணிவு என்பது பூவனத்துக்குச் செல்லும் பாதை. கர்வம் என்பது புதைகுழிக்குப் போகும் பாதை. இதைப் பல பெரிய மனிதர்களின் வரலாற்றுப் பக்கங்களில் பார்க்கலாம்.

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து என்பது திருக்குறள் வழங்கும் தீர்ப்பு.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் என்பது வள்ளுவர் நீதி.

நாம் பணிவாக இருக்கும் போது பிறரை உயர்த்துகிறோம். பிறரின் பார்வையில் நாம் உயர்கிறோம்.

கம்பருக்கே கர்வம் இல்லை என்னும் போது…. நாம் ஏன் கர்வப்பட வேண்டும்.

Series Navigationவாக்குகடன்இணையத் தமிழ் எழுத்தாளர்க்கு விருதுகள் – அறிவிப்பு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *