அழகியசிங்கர்
நான் புத்தகங்களைச் சேகரிப்பவன். புத்தகங்களைப் படிப்பதை விடச் சேகரிப்பதே விரும்புவேன். 20 புத்தகங்களை நான் வாங்கி சேகரிக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள், அதில் ஒரு புத்தகம் எடுத்துப் படிப்பது என்பது பெரிய விஷயமாக இருக்கும்.
இதில் அட்டையில்லாத புத்தகங்களைச் சேகரிப்பது எனக்கு விருப்பமாக இருக்கும். பெரும்பாலும் பிளாட்பாரத்தில் வாங்குகிற புத்தகங்களை சேகரிப்பவன்.
என்னைப்போல் பிளாட்பாரங்களிருந்து புத்தகங்களை வாங்கிச் சேகரிப்பவர்களில் இரண்டு முக்கிய எழுத்தாளர்களை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஒருவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். இன்னொருவர் எழுத்தாளர் செந்தூரம் ஜெகதீஷ்.
மறைந்த எழுத்தாளர் ஐராவதம் பெரும்பாலான புத்தகங்களை பிளாட்பாரத்தில்தான் வாங்குவார். புதிய புத்தகங்களை விலை கொடுத்து வாங்குவதற்கு விருப்பமில்லாதவர்.
பிளாட்பாரங்களிருந்து அட்டையில்லாப் புத்தகங்களை அதிகமாக சேகரித்து வைத்திருக்கிறேன். போன கட்டுரையில் நான் குறிப்பிட்ட இந்துமதியின் ‘முத்துக்கள் புத்தகம்’ ஒரு அட்டையில்லாத புத்தகம்.
இப்படி அட்டையில்லாமல் பிளாட்பாரங்களில் தஞ்சமடையும் புத்தகங்கள் ஏராளம். அட்டை மட்டும் இல்லையே தவிர, முழுதாக இருக்கக்கூடிய புத்தகங்கள்.
அப்படி அட்டையில்லாத புத்தகம் பற்றித்தான் இப்போது பேசுவதாக உள்ளேன்.
அது ஒரு பாக்கேட் நாவல் புத்தகம். எழுதியவர் பால குமாரன்.
பல்சுவை நாவல் என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. என் நண்பர் ஒருவர், பாக்கெட் நாவல் எழுதித் தருகிற எழுத்தாளர் பாலகுமாரன் ஒரு நாவல் எழுதித்தர ஒரு லட்ச ரூபாய் வாங்குவார் என்று குறிப்பிட்டதை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு லட்சம் எழுத்தாளருக்கே கொடுத்து விட்டால், எப்படி வியாபாரம் செய்வார்கள். அவர்களுக்கு என்ன கிடைக்கும்?
அப்படியென்றால் அந்தப் பாக்கெட் நாவல் ஒரு லட்சத்திற்கு விற்க வேண்டும். அது முடியுமா என்பது பெரிய கேள்விக்குறி.
ஒரு புத்தகம் அதிகப் பக்கங்கள் இருக்கக் கூடாது. இப்போதெலல்லாம் எழுதுபவர்கள் அதிகப் பக்கங்கள் கொண்ட புத்தகமாக எழுதித் தள்ளுகிறார்கள். ஆனால் பெரும்பாலும் படிப்பவர்களுக்கு அந்த லட்சியம் இருப்பதில்லை.
நான் நிறையவும் மதிக்கக்கூடிய எழுத்தாளர்களாகிய நகுலன், க.நா.சு, அசோகமித்திரன் மிகக் குறைந்த பக்கங்களில் ஒரு நாவலை எழுதி முடித்து விடுவார். இப்போது பிரபலமாகி இருக்கிற சரவணன் சந்திரன் கூட மிகக் குறைந்த பக்கங்களில் இரண்டு மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். நானும் குறைந்த பக்கங்களைக் கொண்ட இரண்டு நாவல்களை எழுதியிருக்கிறேன்.
இன்னொரு விஷயமும் இங்கே சொல்ல வேண்டும். நாவலில் மிகக் குறைந்த கதாபாத்திரங்கள் வைத்து எழுதியிருந்தால் நல்லது. என்னால் துரிதமாக எடுத்துப் படித்து விட முடியும். அதிகக் கதாபாத்திரங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்வது கடினம்.
பாலகுமாரனின் பல்சுவை நாவலை முழுவதும் படித்து முடித்தேன்.
பாலகுமாரனின் எழுத்தில் இரண்டு விதப் போக்குகள் உள்ளன. யோகி ராம் சுரத குமாரைச் சந்திப்பதற்கு முன், சந்தித்த பின். இந்தப் பல்சுவை நாவல் சந்தித்த பின் எழுதியதை. அவர் குருநாதரைப் பற்றித்தான் எழுதியிருக்கிறார்.
யோகி ராம்சுரத்குமார், ‘பாலகுமாரன் நான் எழுதும் பேனா’ என்று சொன்னதாக யோகியின் அன்பர்கள் சமீபத்தில் கூறினார்கள்.
ஒன்று மட்டும் நிச்சயம். பாலகுமாரன் மூலமாகத்தான் யோகியார் பெரும் புகழ் அடைந்ததாகவும் சொல்வார்கள்.
இந்த அட்டையில்லாத பல்சுவை நாவல் அவருடைய குருவைப்பற்றி முழுக்க முழுக்க எழுதியிருக்கிறார். இதைப் படிக்க ஆரம்பித்த பிறகு கீழே வைக்க முடியவில்லை. ஏனென்றால் அவ்வளவு சிறப்பாக எழுதியிருக்கிறார். தன்னைப் பற்றி ஒளிவு மறைவில்லாமல் பாலகுமாரன் எழுதியிருப்பது எனக்குப் பிடித்திருக்கிறது.
பொன்.சந்திரசேகர்தான் இந்தப் பல்சுவை நாவலைக் கொண்டு வந்திருக்கிறார். பால குமாரனின் மீது அபார மரியாதை.
ஆரம்பமே அவர் பாலகுமாரன் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
‘பாலகுமாரன் பேசுகிறேன்’ என்ற தலைப்பில் பால குமாரன் எழுதிய கட்டுரை. ஒன்று வந்திருக்கிறது
பாலகுமாரன் ஒரு இடத்தில் இப்படி எழுதியிருக்கிறார்.
‘… புத்தகத்தில் உள்ள வாக்கியங்களைக் கண்கள் தடவ, உள்ளுக்குள் போகாது. அடுத்த வாக்கியத்திற்கு நகராதீர்கள். படித்ததை நினைவில் கொண்டு வந்து இதை மறுபடியும் விசாரியுங்கள். விசாரிப்பது என்றால், இது சரியா அல்லது இதற்கு வேறு அர்த்தம் இருக்கிறதா என்று யோசனை செய்வது. ஆனால் தயவுசெய்து மற்றவர்களோடு உட்கார்ந்து இந்தக் கட்டுரைத் தொடர் பற்றி விவாதம் செய்யாதீர்கள்….’
அடுத்ததாக எடைமேடை என்ற ஒரு பகுதி. இதில் பாலகுமாரனுக்கு அவருடைய வாசகர்கள் எழுதிய கடிதங்கள். சுரேஷ்குமார் என்பவர் திருவந்தபுரத்திலிருந்து நீண்ட கடிதம் எழுதி இருக்கிறார்.
ஒரு இடத்தில் சுரேஷ்குமார் இப்படிக் குறிப்பிடுகிறார்.
‘உங்கள் எழுத்துக்களை நான் வாசிக்கவில்லை. சுவாசித்தேன்’ என்று.
பாலகுமாரன் பதில்கள் என்ற இன்னொரு பகுதி.
ஒரு கேள்விக்குப் பாலகுமாரன் இப்படி பதில் எழுதுகிறார்.
இவ்வளவு ஆன்மீகம் எழுதுகிறீர்களே, நீங்கள் துறவியாகி விடுவீர்களா
பாலகுமாரன் பதில் : ‘அது நேருமாயின் நேரட்டும். துறவியாக வேண்டும் என்கிற ஆசை எதுவுமில்லை. ஆகக்கூடாது என்கிற பிடிவாதமும் இல்லை. என் அபிப்பிராயத்தில் அகந்தையைத் துறப்பதே துறவு. மற்றதெல்லாம் எல்லாம் வெளி வேஷம்.
ஒரு நல்ல குரு கிடைக்க மிகவும் பிரயத்தனப்பட வேண்டும். இடைவிடாது தேட வேண்டும். அந்தத் தேடல் உன்னை உயர்த்தும். அப்படி ஒரு உயர் நிலைக்கு வரும்போது குருவே உன்னைத் தேடி வருவார்’ என்றும் எழுதியிருக்கிறார்.
தொடர்ந்து இந்தப் புத்தகத்தைப் பற்றிப் பேசுகிறேன் (இன்னும் வரும்)