முல்லைஅமுதன்
அம்மா நகைகள் மீது ஆசைகொண்டவளல்ல.மாதகலிலிருந்து அப்பாவைத் திருமணம் திருமணம் முடித்திருந்தபோதும் சீதனம் நகை எனப் பிரச்சினைகள் வரவில்லை..அப்பாவும் எதிர்பார்க்கவில்லை.அம்மாவிற்கென வயல் காணி இருந்ததாம்.அதுவும் அம்மாவின் அண்ணர் பராமரித்துவந்தது தெரியும்..அப்பாவும் கேட்டதில்லை.நமக்கும் தெரியாது.
நானும் வளர்ந்த பிறகு சனி ஞாயிறு விடுமுறையில் மாமா அழைத்துச் செல்வார்.அப்போது பெரியப்பாவின் வீட்டில் இருந்து படித்து வந்ததினால் நான் தனியாள் என்று நினைத்து கூட்டிச்சென்று நிறைய சாப்பிடத்தருவார். மாமாவிற்கு அதீத பாசம் என் மீதிருந்தது.ஒவ்வொரு வாரமும் அழைத்துப்போவார்.திங்கள் அதிகாலையிலேயே எழுப்பி,அழைத்துவந்துவிடுவார்.அவர் அப்போது நெடுந்தீவில் படிப்பித்துகொண்டிருந்தார்.
.பாண்டி மாங்காய்,பனங்கிழங்கு,பனங்காய்ப்பணியாரம்…முரல் மீன்பொரியல்… மழைக்காலமெனில் வயல்க்கிணறுகள் நிரம்பிவழிய நீச்சல் பழக்குவார்.என் வயதொத்தவர்கள் நிறையப்பேர் இருந்ததினால் மகிழ்ச்சி தாண்டவமாடும்.மாமாவை ‘ஆச்சியின்ர மாமா’ என்றே அழைப்பேன்.அப்போது அம்மாவின் அம்மா இருந்ததினால் மாமாவை அப்படிக் கூப்பிடமுடிந்ததோ தெரியவில்லை. அங்கு பங்குக்கிணறு என்பதனால் ஆளுக்காள் வாளி ஒன்றில் கையிற்றைக் கட்டி அதனையே தண்ணீர் அள்ள பாவிப்பார்கள்.அதுவும் ஆழமான கிணற்றுள் எறிந்து தண்ணீரை அள்ள முயற்சிக்கையில் கற்பாறைகளில் மோதி சத்தம் எழுப்புவதுடன் வாளியையும் சேதப்படுத்தும்.அதனால் ஒவ்வொரு வாளியும் சேதமுற்றவையாகவே இருக்கும்.பொதுக்கிண்று என்பதால் கூச்சமாக இருக்கும்.பெரியய்யாவின் வீட்டில் கிணற்றைச் சுற்றி கிடுகுகளால் மறைக்கப்பட்டிருக்கும். பெரியய்யா வீடு சிறை மாதிரித்தான். யாருடனும் பேச முடியாது..யாரும் வருவதில்லை என்பதே உண்மை..என்னைப் பார்க்கையில் பலருக்கும் பரிதாபம்தான் வரும்.
ஒரு நாள் வீரபத்திரர்கோயில் மண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றுக்கொண்டிந்தது.மண்டபம் இருமருங்கும் ஊரவர்கள் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.விதம் விதமான மரக்கறியுடன் கூடிய ருசிமிக்க உணவை முன்பு உண்டதேயில்லை. இரண்டாவது பந்தியில் தான் இடம் கிடைத்தது. கோயில் மண்டபம் திறந்தவேளி போல கட்டப்பட்டிருக்கும்.காற்று உடலில் மோதி சுகானுபவத்தை ஏற்படுத்திவிடும்.பொதுவாக ஆண்கள் வேட்டியுடன்,மேலாடையின்றி இருப்பார்கள்.நான் சேர்ட்டைக் கழற்றி இடுப்பில் சுற்றியிருந்தேன். என் கதறல் யாவர்க்கும் கேட்டாலும் பெரியய்யாவிற்குக் கேட்டமாதிரித் தெரியவில்லை.அவருக்குக் கவுரவம் முக்கியம்.சரியான நப்பி..பொது இடத்தில் சாப்பிடுவது அவருக்குப் பிடிக்கவில்லை. சாப்பிடக் கைவைத்த தருணம் பார்த்து பெரியய்யா வந்து தலையில் குட்டிவிட்டு கையைப்பிடித்து தறதறவென இழுத்தபடி வீட்டிற்கு கந்தையா மாமாவின் காணிக்கூடாக இழுத்துப்போனார். ‘பாவம் பொடியன்.பசியில குந்தியிருக்கும்’ யாரோ பேசிக்கொண்டது கேட்டது.அந்த நாட்களில் அக் காணிகள் சொரியலாகத்தான் இருக்கும்.ஆட்கள் நடந்து நடந்து ஒறையடிப்பாதையாகிவிட்டிருந்தது.பலருடன் உட்கார்ந்து சாப்பிடுவதே அலாதியானதுதான்.அது இல்லாமல் போனது ஏதோ மனசைக் குடைந்தது.எல்லாரும் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என நினைக்கையில் கூனிக்குறுகிப்போகும்படியாயிற்று.
‘அக்காவிடம் சொல்லித்தானே வந்தேன்’
அவரின் கோபம் அதிகமாகியது.. நாக்கை மடித்து பற்களால் கடித்தபடி தன் கோபத்தைக் காட்டினார்.
‘வீட்டில் சாப்பிட சாப்பாடு இருக்கு.சாப்பாட்டுக்கு கஷ்டம் உள்ளவை சாப்பிடுறதில தப்பில்லை.மூக்கு முட்ட சாப்பிடுறவைக்கு அன்னதானம் கொடுக்கிறதில்லை..தங்கட பாவத்தைக் கழுவத்தான் அன்னதானம் கொடுக்கிறவை..’
அவரின் சொல்லை ஏற்றுக்கொள்கிற பக்குவம் அன்றில்லை.பெரியய்யாவின் பிம்பம் இப்படியில்லையே.கஞ்சப்பயல் என்றே பலரும் சொல்லுவார்கள்.
‘சின்னப்பெடியனிட்ட தன் கோபத்தைக்காட்டுது மனுசன்..சாப்பிடக்கூட அவனுக்கு சுதந்திரம் இல்லையாக்கும்’
பெரியப்பா இப்படி இழுத்துச் சென்றது பெருத்த அவமானமாக இருந்தது.பள்ளிக்கூடத்துக்கு இந்த ஒற்றையடிப்பாதையைத்தான் அதிக நாட்கள் பாவித்தது.அந்த நேரத்தில் பல வீட்டுப் படலைகளும் பிள்ளைகளை வழியனுப்ப திருந்திருக்கும்..எனி வேற பாதையாலதான் போகவேண்டியிருக்கும்…
அக்கா தன்னிடம் சொல்லவில்லை என்றும் பெரியய்யாவிற்கு முன்னால் சொல்லிவிட்டாள்.அக்காவை கொன்றிருக்கலாம்.
சீமைக்கிழுவைத் தடியால் விழுந்த அடியில் வந்த தழும்பு மாற கனநாளாயிற்று.
‘ஐயோ..அம்மா’அன்று முழுவதும் வலியால் துடிக்கவே முடிந்தது.தழும்பும் இலகுவில் மாறிவிடவில்லை.நாட்கள் எடுத்தன.
என் நிறத்திற்கு காயத்தின் சிவப்பு பளிச்செனத் தெரிந்தது.
சில நாட்களில் அடிவிழப்போகுது எனத்தெரிய முன்னரே கத்திக்குழறி ஆர்ப்பாட்டம் செய்துவிடுவதுமுண்டு.அப்போதும் அடிவிழுவது நின்றுவிடாது.அடி விழும்போதெல்லாம் அக்கா ரசித்துச் சிரிப்பது போலிருக்கும்.திருவிழாவிற்குப்போகவென்று வந்திருந்தவர்கள் முன்னால் அம்புலிமாமாவில் வந்த சிறுவர் கதையை வாசித்துச் சொல்லவில்லை என்று சாத்து சாத்தென்று சாத்திவிட்டார் பெரியய்யா.வெட்கமாகப்போயிற்று.வெயில் வெளிச்சத்தில் உடற்காயங்கள் பளிச்சென்றிருந்தது.அன்று கோயிலிக்குப் போகும் எண்ணம் இல்லாது போனது.
வானம் வெளுத்திருந்தாலும் இங்கு வாழ்கின்ற ஒவ்வொரு கணமும் நரகமாகவே இருந்தது.
அப்பாவின் கணிப்பு வேறுமாதிரி இருக்கும்.அன்று சூழல் இருள்மயமாகவே இருந்தது..
அப்பா வேலைநிமித்தம் திருகோணமலையில் இருந்தமையால் என்னை பெரியய்யா வீட்டில் தங்கி படிக்கவைத்தார்.தனிமை,பெரியய்யாவின் கண்டிப்பு,தனிமை பெரிதாக வாட்ட சோர்வுவந்துவிடும்.படிப்பும் ஏறவில்லை..அடிக்கடி சொல்லாமல் பஸ் ஏறிவிடுவேன்.பிறகு அப்பா மீண்டும் கொண்டுவந்துவிட்டிட்டு போவார்..தங்கைகளுடன் அரட்டை அடிக்க..சண்டை பிடிக்க…நண்பர்களுடன் மத,இன வேறுபாடின்றி பந்துவிளையாடுவது,வெள்ளிக்கிழமைகளில் பிள்ளையார் கோவிலுக்குபோய் பொங்குவதும்,வழிபடுவதும்…எல்லாம் இழந்து போனதாய்…பெரியய்யா தேவையில்லாதற்கெல்லாம் சீறிவிழுவார்.குழப்படி செய்தாலோ கைகளைக் கட்டிவைத்து சீமைக்கிழுவைத்தடி கிழியும் வரை அடிவிழும்…உடை அவிழ்ந்தாலும் எடுத்துப் போட அவகாசம் இருக்காது.தனது இயலாமையை கோபமாக என்னைத் தண்டிக்கிறாரோ..அப்பாவின் மீதான கோபமும் காரணமோ?.சனிக்கிழமை என்றாலென்ன..?திங்களென்றாலென்ன..?சிடு சிடுவென்று பாயும் பெரியய்யாவைக் கொன்றுவிடலாமோ எனக் கோபம் வரும்.
ஒருநாள் இரவு முழுவதும் அண்ணனின் மருத்துவப்பையில் இருந்த ஊசியைக் களவெடுத்து பெரியய்யாவைக் குத்திவிடவேண்டுமென்று காத்திருந்தேன்.முடியவில்லை.பெரியய்யா ஊசியை வைத்த இடத்திலிருந்து எடுத்துவிட்டார்.
இன்னொரு நாளும் அந்த ஊசியை எடுத்து பாதுகாப்பாகவைத்திருந்தேன்.சரியான தருணம் வாய்க்கவில்லை.மீண்டும் பெரியய்யா அதனை எடுத்திவிடுவார் என்கிற பயத்தில் கவனமாக பாதுகாத்தும் பயனில்லாமல் போவிட்டது.பள்ளிக்கூடம் போகையில் காற்சட்டைப்பையில் வைத்துச் செல்கையில் ஊசி முனையின் மூடி இல்லாததினால் தொடையில் குத்தி இரத்தம் வந்துவிட்ட பயமும் தொற்றிக்கொண்டது.அப்படியே ஊசியை மெதுவாக எடுத்து கடைமாமாவின் வாய்க்கால் கரையில் எறிந்துவிட்டு நடந்தேன்.வலியும் குறைய கனநாளாய் போனது.
மாமா வந்து கூட்டிக்கொண்டு போவதனால் அவ்வப்போது கைதியாக பறோலில் வெளியே வருவது போலிருக்கும்.
அழுவேன்..
தனிமை வாட்டவே செய்தது.
பள்ளிக்கூடத்திலும் மகிழ்ச்சியாய் உட்காரமுடிவதில்லை..பூங்கோதை வாத்தியாருக்கும் இது விளங்கும்..ஆறுதல்படுத்துவார்.
யாரும் ஆறுதல் சொல்லவும் இருக்காது.அப்பாச்சி பாவம்..அவருக்கும் பயம்..கரிசனையுடன் பார்ப்பார்..
‘ சாப்பிடு.. ‘அரைச்ச புளிச்சாறென தருவாள்.அப்பாச்சியும் அம்மாவைப்போல நன்றாகச் சமைப்பாள்.மீன் காய்ச்சினால் வீடே மணக்கும்.அம்மியில் வைத்து அரைத்த மசாலாவைப் போட்டு விட்டால் கறி சுவையாக இருக்கும்தேங்காய்ச் சொட்டுக்களை அப்படியே அம்மியில் வைத்து அழுத்திய சாற்றுடன் கறியில் சேர்ப்பாள். சுடச்சுட புட்டிற்கு தலைமீனில் வைத்த சொதியையும் ஊற்றித்தருவாள்.வாயூறும்.அவளின் மனது போல கைப்பக்குவமும் சுவை சேர்க்க நாவூறும்..யாருக்கும் தெரியாமல் காசு தருவாள்.அம்மாவும் இப்படித்தான்..பக்கத்துவீட்டு புஞ்சி பண்டாவின் மனைவியிடம் கற்று கொண்டைப்பணியாரம் செய்துதருவாள்.உடம்பிற்கு இயலாத நாட்களில் கூட சமைப்பதை நிறுத்துவிடமாட்டாள்.
இங்கு அப்பாச்சி கூட இருப்பது ஆறுதலாக இருக்கும்.தினமும் குளித்து துடைக்கமலேயே வீபூதியை அள்ளி நெற்றியெல்லாம் பரவிப்பூசி வருவாள்.கோயிலுக்குப்போனதை நான் காணவில்லை..அவளுக்கு வெளியே செல்லக்கூடாது என்று எழுதாத சட்டமுள்ளதோ தெரியவில்லை.கணவன் காலமானதின் பின்னர் ஒதுங்கியவள் அப்படியே பழகியிருக்கலாம்.காலை பத்து மணிக்கு நல்லூர் மணி அடிக்க முருகா என்பாள்…ஞானவயிரவர் கோயிலில் மணி கலகலவென ஒலிக்கையில் அது பன்னிரண்டு மணியென்று சொல்வாள்.வெயிலைப்பார்த்தே நேரம் சொல்வாள்.வெத்திலைக்கொழுந்து அழிந்து போனதில் அவளுள் கவலை இருந்திருக்கிறது..சொல்லவில்லை.புரிந்தது.. முதலியார் வளவிற்குள் பெரிய வெத்திலைத்தோட்டம் இருந்ததாகவும்,அப்பப்பா இறந்ததும் முடியாது போனதாம்…கடனைக் கொடுக்கமுடியாத நிலைவர அப்பாச்சியின் அண்ணன் கவடுபோட்டு அளந்து காணியைப் பிடித்துக்கொண்டாராம்.
காணிகள் கடனில் மூழ்கி தோட்டங்களும் இல்லாமல் போக அப்பாச்சி கலங்கி நிற்கையில் யாரும் உதவ வரவில்லை என்பதே அவள் உலைந்து போயிருக்கலாம்.அப்போது அப்பா தன் பதினைந்தாவது வயதில் தம்பியின் கொப்பிக்குள் இருந்த பதினைந்து ரூபாயை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார்.எங்கு போவது என்று தெரியாமல் கண்டிக்குச் சென்று தபால்காரனாகவும்,பின்னர் திருகோணமலை சென்று அங்கு சின்னச் சின்ன வேலைகள் செய்கையில் தான் ஊரவரான வேதநாயகத்தைச் சந்தித்திருக்கிறார்.அவரின் தம்பி பாடசாலைத்தோழன்.அவரே தான் கடமைபுரியும் நிறுவனத்தில் சேர்த்துவிட்டார்.அங்கிருந்தே உழைக்கும் பணத்தை செலவு போக மிகுதியை தாய்க்கு அனுப்பிவந்தார்.சில வருடங்களின் பின்பே றோயல் நேவி வேலை கிடைத்ததாக ஒருமுறை சொல்லியுமிருந்தார்.
கூனல் விழுந்திருந்தாலும் அப்பாச்சி துணிச்சல் அதிகமும் இருந்தது.துலாவில் நீர் இறைத்துக்குளிப்பாள். ‘உசார் கொஞ்சம் அதிகம்தான் அவளுக்கு’நைந்துபோன வெள்ளைப்புடவை ஆங்காங்கே கிழிசல்களைத்தை பகுதிகளை மறைத்தபடி உடுத்துவாள்.குளிக்கமுன்னர் புடவையினை அலம்பி கிணற்றடிச் சீமை கிளுவையில் கட்டிக்காயவிடுவள்.குளித்துமுடிய அடிக்கிற வெயிலில காய்திருக்கும் புடவையைச் சுற்றியபடி பின் பத்தியின் வளையில் தொங்கும் சிரட்டைக்குள் இருக்கும் வீபூதியினை கையினால் அள்ளி நெற்றியில் பூசிக்கொள்வாள்.ஈரத்துடன் வீபூதியும் ஒடிக்கொள்ள முகம் பளிச்செனத் தெரியும்.
அப்பாச்சி மேலாடை அணிந்து நான் பார்த்ததில்லை.சிலவேளைகளில் குறுக்குக்கட்டு கட்டியிருப்பாள்.அப்பாச்சி குனிந்துதான் நடப்பாள்.கூன் விழுந்துவிட்டது.துவரந்தடி கையில் எப்போதும் இருக்கும்.படுக்கையிலும் காவலுக்கென்று துவரந்தடியை மறக்காமல் வைப்பாள்.விளக்குமாற்றால் கூட்டமாட்டாள்.யார் என்ன சொன்னாலும் பூம்பாழையால்தான் கூட்டுவாள். நாங்கள் வளர்ந்து விளக்குமாற்றை வாங்கிக் கூட்டத்தொடங்கினாலும் பூம்பாழையை அவள் விடவில்லை..அதில் ஒரு சுகம் இருப்பதாக உணர்ந்திருக்கக்கூடும்.’சும்மா போடா அங்கால’ கேட்டாலும் தரமாட்டாள்.பெரியய்யா மச்சம் சாப்பிடமாட்டார்.குனிந்தபடியே தென்னம்பிள்ளை வளவிற்குச் சென்று தேங்காய் எடுத்துவருவாள்.அலவாங்கில் குத்தி தோலை உரித்து பொச்சை தனியாக்கி தேங்காயை என்னிடம் தருவாள்..அவளைப்பார்த்தபடியே வாங்கிக்கொள்வேன்..
பெரியய்யாவின் காணிக்குள் கறிவேப்பிலை மரம் மதாழிச்சு நிற்கும்.கிணற்றடித்தண்ணீர் பட்டு வாழையும் செழித்து நிற்கும்.இனிப்புப்புளியம் பழம் முற்றத்தில் கொட்டுண்டு கிடக்கும்.காலத்திற்குக்காலம் இலுப்பம்பழம் வவ்வால் கொண்டுவந்து போட அதனைப் பொறுக்கி ஆச்சியிடம் கொடுக்க அவற்றை காயவிட்டு பொன்னம்பலத்திடம் கொடுத்து எண்ணெயாகவும்,அரைப்பாகவும் தயார் செய்துவிடுவாள்.
‘என்ன பார்க்கிறாய்?ஒண்டரைக்கண்ணா’ சிரித்தபடி கடிவாள்.இந்த வயசிலயும் தைரியசாலிதான்..நான் சோம்பேறி என்பதை அப்போது ஒத்துக்கொண்டிருக்கவேண்டும்.குசினிக்குள்ள நிற்கும் போது யன்னலில் வந்து மோதிச்செல்லும் (ஒரு வகைப்பறவை) புழுனிகளை பார்க்க பரவசமாக இருக்கும்.வேலிக்கறையான்களைத் தட்டும்போது புழுனிகளும் சிறகடித்துப் பறக்கும். வைக்கோல் குவியலுகப்பால் பக்கத்துவீட்டுக் கோழிகள் நிற்பதைப்பார்த்து ஜிம்மி பாய்ந்தோடி அவற்றைக் கலைத்தான்.அப்பாச்சி தனக்குள் சிரித்துக்கொண்டாள்.பொக்கைவாய்ச் சிரிப்பில் கன்னத்தில் குழிவிழும்..
அப்பாச்சி நிறையக் கதைகள் சொல்வாள்.அவ்வளவும் அவளின் வாழ்வின் அனுபவங்கள்.சுவாரஸ்யமாகச் சொல்லுவாள்.நானும் அம்புலிமாமா,சந்தா மாமா வில் வரும் கதைகளை வாசித்துக்காட்டுவேன்.எனது கதை சொல்லும் முறையில் அவளின் கவனம் இருக்காது.ஆனாலும் எனக்க ரசிப்பது போலிருப்பாள் என்பது தெரியும்.ஆனாலும் விடுவதில்லை.வெயில் என்றால் அவளுக்கு மகிழ்ச்சி பொங்கும்.மழை என்றால் நான் குதூகலிப்பேன்.நனையலாம்.பரிதாபமாகப் பார்க்கும் மாட்டைச் செல்லமாகத் தடவியபடி கொட்டிலுக்கைக் கட்டலாம்.பள்ளிக்கூடம் வெள்ளம் என்று லீவு விடும்.மாணவர்களுடன் சேர்ந்து சிரமதானம் எனும் பெயரில் களைபிடுங்கப்போகலாம்..அப்பாச்சி பாவம்..குளிரில் நடுங்குவாள்.மேலாடையின்றியே அதிகநேரம் இருப்பாள்.புடவையால் எல்லாம் மறைய எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்வாள். நிறச்சேலை அவள் உடுப்பதை நான் காணவில்லை.வெள்ளை நிறத்திலான சேலையில் பொட்டுப் பொட்டாய் அல்லது சிறியளவிலான புள்ளிகள் இருப்பதுபோல பார்த்துக்கொள்வாள்.அவள் வயதிற்கு அது ஒன்றும் அதிசயமில்லை.பெரியய்யாவிற்குப் பீப்பயம்.அப்பாச்சிக்கு அடியும் விழும் என யாரோ சொல்லியிருந்தார்கள்.அப்பா தன் தாயின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்த தெரியும்.
குளிரில் நடுங்கியபடியே படுத்திருப்பாள்.கொடியில் கிடந்த எனது சாரத்தை எடுத்துப் போர்த்துவிடுவேன்.அருகில் துவரந்தடி இரண்டிருந்ததாம்.எமன் அடிக்கடி வந்து வெருட்டுவதால் பாதுகாப்பிற்கு வைத்திருந்தாராம்.ஒருநாள் பக்கத்துவீட்டுக்கோழிகளை கலைக்க ஒரு துவரந்தடியை பெரியய்யா எடுத்து எறிந்திருக்கிறார்.கோழிகள் பறந்துவிட்டன.துவரந்தடியும் பக்கத்து வளவிற்குள் போய்விழுந்தது.போய் எடுக்கவேயில்லை..அப்பா வாங்கித் தந்ததென்று அப்பாச்சி சொல்லும்.
பெரியய்யாவின் மகனுக்குத் திருமணம் நிச்சயமாகிருந்தது.அப்பா வரவில்லை.கொழும்பிலிருந்து சித்தப்பா குடும்பத்துடன் வந்திருந்தார். திருமண நாளன்று அனைத்து வாகனங்களிலும் எல்லோரும் ஏறிக்கொண்டிருந்தனர்.அண்ணரைப் பார்க்க கம்பீரமாக இருந்தார்.மாப்பிள்ளைக் கோலம் வேறு..என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை.இதே வீட்டில்தான் இருக்கிறேன்.ஆனாலும் எனக்காக பேசுவதற்கு யாருமற்ற சூன்யமாக இருந்தது.வந்திருந்த கார்களில் ஒன்றிலேற முற்பட சித்தப்பா
‘எங்க வாறாய்? வீட்டில ஒருத்தரும் இல்லை..உனக்கே கலியாணம்? ஆட்டிக்கொண்டு வெளிக்கிட்டிட்டாய்.போ..அங்க இரு’
வார்த்தையில் கடுமை தெரிந்தது. உள்வளைந்த கண்கள் பார்க்கப் பெரிதாக இருக்கும்..பேசிக்கலைத்துவிட்டதும் வில்லன் மூஞ்சியாகவே அவர் முகம் தெரிந்தது.முறுக்கு மீசை வேறு..அப்பா மீசை இன்றி,எப்போதும் சேவ் பண்ணியே இருப்பார்.பெரியய்யாவும் முழுசாய் சேவ் பண்ணியிருப்பார்..மீசை இருந்தது ஞாபகமில்லை.
அந்த வயதிலும் வலித்தது.அழுகையாய் வந்தது.எல்லோரும் பார்க்கிறார்கள் என வெட்கமாகவும் இருந்தது.
.’அவனும் வரட்டுமே’ யாரும் சொல்லவில்லை.அநாதையாய் நிற்பது போல இருந்தது. அவர்களும் என்ன செய்வார்கள்.சபையில் முந்தியிருக்க முண்டியடிக்கும் உறவுகளால் வாய்திறக்கமுடியாதுதான்..கேற்றைத் தாண்டி உள்ளே வந்தது.வீடு பெரியதாய் பயமுறுத்தியது. அண்ணியைப்பார்க்க எனக்கும் ஆசை இல்லையா?
அப்பாவும் அம்மாவும் கூட இருந்தால் இப்படி அந்தரப்பட்டிருக்கத்தேவையில்லை..
‘யாரும் இங்கு அனாதைகளில்லை’
அப்பா வரவில்லை.அதற்காகவெனினும் என்னை அழைத்துப்போயிருக்கலாம்.சிறுவன் என்று அழைக்கவில்லையாயினும்,இந்த வீட்டில் இப்போதைக்கு நானும் ஒரு அங்கத்தவன் தானே.இதை ஏன் மறந்தார்கள்? யார் மறந்தார்கள்?
திருவிழாவில் கதாப்பிரசங்கத்தில் கேட்டது ஞாபகம் வந்தது.
அண்ணியின் முகத்தை ஒரு தடவை பார்த்துவிட மனது துடித்தது.ஆனாலும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.பெற்றோர்களிடமிருந்து தனித்துவிடப்பட்டவன் எப்போதும் அனாதையாகத்தான் கணிப்பார்களோ? ஏதோ தங்கப்பதுமையை பாதுகாப்பது போல அண்ணியை கௌரவமாக நடத்தினார்கள் போலிருந்தது. அண்ணி பணக்கார வீட்டுப் பெண் என்பதும் ஒருகாரணமாக இருந்திருக்கலாம்.
அப்பாச்சி மூலையில் சுருண்டு கிடப்பது போல படுத்துக் கிடந்தாள்.அப்பாச்சியும் அனாதைதானோ??அருகில் போய் அமர்ந்தேன்…’சம்பளமில்லாத வீட்டுக் காவல்காரர்கள்தான்’ அப்பாச்சியின் முகத்தை பார்த்தேன்..அழுதிருக்கிறாள்.
பதினொரு பிள்ளைகளைப் பெற்றவள்..இப்போது தனித்த தீவாகி நிற்பதைப் போலிருந்தது.அப்பாச்சியை தன்னுடன் வைத்திருக்கவே அப்பா விரும்பினார்.எங்களுக்கும் அப்படியேதான் ஆசைப்பட்டோம்.அம்மா எதுவும் சொல்லமாட்டாள்.ஆதலினால் மாமி மருமகள் சண்டை வந்துவிடாது.அப்பாச்சிக்கு அப்பாவுடன் வந்திருப்பதில் ஆர்வம் இல்லை.மாதாமாதம் காசு அனுப்பத்தவறுவதில்லை.
அப்பாச்சிக்கென்று பழங்கள் வாங்கி அனுப்புவார்.அடிக்கடி பஸ்பிரயாணம் செய்வதால் அப்பாவிற்கு யாவரும் பழக்கம்.அப்போது இரவு அல்லது அதிகாலை யாழ்ப்பாணம் போற பஸ்ஸில் கொடுத்துவிட்டால் அப்பாச்சியின் கைக்குக் கிடைத்துவிடும்.
பற்கள் ஏற்கனவே விழுந்து பொக்கைவாயாகிவிட்ட அப்பாச்சி பொச்சுக்கொட்டியபடியே கதைப்பாள்.அவளின் மீதான பாசம் அவள்மீது எரிச்சல் வரவில்லை.
அப்பாவிற்குத் தன் தாயின் மீது அளவுகடந்த பாசம் இருந்தது.ஒரு முறை விமானத்தில் பயணிக்கவேண்டும் எனிகிற ஆசையை அறிந்த அப்பா அதையும் நிறைவேற்றினார்.இலங்கை முழுதும் சுற்றுலாவிற்காக அழைத்தும் சென்றிருந்தார்.
காரில் ஏறிய சித்தப்பாவின் பிள்ளைகளை ஞாபகப்படுத்தி அப்பாச்சியிடம் கேட்டும்விட்டேன்.
ஆச்சி தனக்கு மட்டுமே கேட்கும் படி சொன்னாள்.
அவையள் கொழும்பு..நீ திருகோணமலை…நான் இஞ்ச..’
‘ஒரு வகையில் நீயும் அனாதை..நானும் அனாதைதான்’ அப்பாச்சி அப்படிச் சொன்னது தாக்கமாக இருந்தது.அப்பாவிடவும்,அம்மாவிடவும் சொல்லி அழவேண்டும் போலிருந்தது.
சித்தப்பா கொழும்பில் நல்ல வேலையில் இருந்தார்.
கொழும்பெண்டா உசத்தி..திருகோணமலை எண்டா தாழ்ந்ததோ?
‘ஏன் அவ்வளவு இளக்காரமோ நாங்கள்?’
கேட்கவேண்டும் போலிருந்தது.கேட்கும் தைரியம் இல்லை.
அவை வரக்கு முதல் தொட்டிக்குள் தண்ணீர் இறைத்துவிடவேண்டும்..மோட்டர் இல்லையாதலால் குசினிக்கு,பூந்தோட்டத்து பைப்பில் தண்ணீர் எடுக்க கிணற்றடித் தொட்டிக்குள் காலையிலேயே குளிரென்றும் பாராமல் இறைத்துவிடவேண்டும்.
பக்கத்து வளவுக் கிணற்றில் துலாவில் ஏறி ஒருவர் மிதிக்க இன்னொருவர் தண்ணீரை வாளியில் மொண்டு இறைப்பார்.நிறைய வாழைமரங்கள் உண்டு.
துலாவில் இறைத்துக் குளிக்க நல்ல விருப்பம்..ஆனால் இப்போது சலிப்பாய் இருந்தது.
கால்களில் மிதிபடும் எதுவும் உணராமல் நடந்தேன்..
வானத்தில் அதிகமான நட்சத்திரங்கள் இல்லாமல் இருந்தன.மெதுவாக மரங்கள் அசைந்து அசைந்து சாமரம் வீசுவது போலவும்,அன்புடன் அமைதியாக வழியனுப்பிவைப்பது போலவும் இருந்தது.மறுநாள் சொல்லாமலேயே பஸ் ஏறிவிட்டேன். ஒரு தடவை இரதநாயகம் மாமா தனக்குத்தெரிந்த சாரதிகள் யாழ்ப்பாணம்,திருகோணமலை ரூட் பஸ்களை ஓட்டுபவர்களிடம் சொல்லி என்னை விடுமுறையில் அனுப்பிவைத்த அனுபவமும் தனியே போகும் தைரியத்தையும் தந்திருக்கலாம். சொல்லாமல் போய்விடுவது இது மூன்றாம் முறை..எதுவும் சொல்லத்தெரியவில்லை..பிடிக்கவில்லை..சுதந்திரமற்ற உணர்வு..அந்தச் சிறுவயதிலும் உறைத்தது.அப்பா அடித்தாலும்,அம்மா திட்டினாலும் அவர்களுடன் இருந்துவிடவே மனம் பிரியப்பட்டது.
‘பிள்ளை படிக்கட்டும்’ அப்பாவின் விருப்பம்..
அப்பாவுக்குள்ளும் நிறைய எதிர்காலம் பற்றிய கனவுகள் இருந்திருக்கலாம்.மகனின் மூலம் அது நிறைவேறலாம்.இப்படி சாதாரண தகப்பனின் எதிர்பார்ப்பும் அப்படியேதானே.
பிற இடங்களில் கடமை புரிபவர்களில் சிலர் தங்கள் பிள்ளைகளை சொந்த ஊரில் படிக்க அனுப்பிப் படிக்கவைப்பார்கள்.அப்பாவும் அப்படி நினைத்திருக்கலாம்.
அப்பா சம்பளம் எடுத்ததும் என்னையும் ரவுனுக்குக் கூட்டிப்போவார்.செல்வச்சந்நதி ஸ்ரோர்ஸில கிழமைக்கேற்ற பொருட்களை வாங்குவார்.மத்தியவீதியிலிருந்த பரராசசிங்கம் கடையில் ஓடருக்கு சஞ்சிகைகள்,பேப்பர் என வாங்குவார்.வெற்றிலையும் அவரிடமே வாங்குவதைக்கண்டிருக்கிறேன்.முன்னாலுள்ள ஹோட்டலில் கொத்துரொட்டி வாங்கித்தருவார்…கணேஸ்மாமாவின் கடையில் சர்பத் வாங்கித்தருவார்.கணேஸ் மாமாவும் எனக்கென ஐஸ்கட்டியும்,அன்னாசிப்பழத்தையும் சர்பத்தில் சேர்ப்பார்.ருசியாக இருக்கும்.
‘பிள்ளை யாழ்ப்பாணத்தில படிக்கிறான்’ என்று பெருமையாகச் சொல்லுவார்.பிறகு ஒரேயடியாக வந்தவுடன் அவரும் மனதுள் கவலைப்பட்டார்.பிறகு சர்பத்தும் இல்லாமல் போயிற்று.
இம் முறை அப்பா கொண்டு வந்து திரும்ப விடவில்லை.நிலைமையின் கொடூரத்தை உணர்ந்திருப்பாரோ?
பெரியய்யாவிற்கு எல்லோரும் பயம்..தன் மீது கோபப்பட யாரையும் வைத்ததில்லை..பிறர் கோபித்துக்கொள்ளும்படியானால் ஒதுங்கியே போய்விடுவார் அப்பா.
தங்கைகளுக்கு வருத்தம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.சிறியவர்களாக இருந்ததும் ஒரு காரணம்.அவர்களின் வயதை ஒத்தவர்களும் இல்லை என்பதும் உண்மையே.ஆனால் எனக்கு நிறையப்பேர் இருந்தார்கள்.
ஊரில் நிறைய என் வயதொத்தவர்கள் இருப்பினும் அவர்களுடன் விளையாட அனுமதி இல்லை..இதனால் அவர்களின் விளையாட்டில் என்னையும் சேர்த்துக்கொள்ள தயக்கம் காட்டினார்கள் என்பதே உண்மை.
பிள்ளையார் கோயிலுக்கு வெள்ளிக்கிழமைகளில் பொங்கல் பூசை நடக்கும்..நாகரத்தினம் மாமா.முருகேசு மாமா,சிவக்கொழுந்து மாமா,புண்ணியமூர்த்தி என பலரும் ஒன்றுகூட கொண்டாட்டமாக இருக்கும்.ஒருநாள் அப்பாவிற்கு முடியாது போயிற்று.ஆஸ்மா அதிகரித்தது.அப்பாவைப்பார்க்கவே பரிதாபமாக இருக்கும்.அதுதான் அப்ப யாழ்ப்பாணம் செல்ல முடிவெடுத்த நாளாய் அமைந்தும் விட்டது.யாழ்ப்பாணம் செல்வதில் துளிகூட மனமில்லை.
நீண்டகாலமாக அப்பா இருந்ததால் பலரும் கவலைப்பட்டனர்.எனினும் தங்களின் வாழ்க்கையும் இங்கு நிரந்தரமில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர்.
அதனால் அப்பா மாற்றலாகிப்போகையில் வருத்தம் சற்று அதிகமாகவே இருந்தது.பொருட்களை எல்லாம் ஏற்றிவிட்டு தேவையானவற்றை மட்டும் அவசரத்திற்கென வைத்துக்கொண்டு புறப்பட்டோம்.பொருட்களை ஏற்ற அப்பாவுடன் கூட வேலைசெய்பவர்கள் உதவினார்கள்.எனக்கு அவர்களைப்பார்க்க கவலையாகவும் இருந்தது.’தூரமாகப் போய்விடவில்லையே..காலை பஸ் எடுத்தால் மத்தியானம் வந்துவிடலாம்..எங்கட வீடு உங்களுக்காக திறந்திருக்கும்..மறந்துவிடமாட்டோம்’ என்றனர்.அது கடைசிவரை சாத்தியப்படவேயில்லை..ஆனந்தன்,சீலன்,பதியுதீன்,இர்பான்,ஜேசுதாசன் இப்படிப்பலரின் முகங்கள் ஞாபகத்திலிருந்து மறைய நாட்களாயிற்று.பிறிதொருமுறை நேர்முகப்பரிட்சைக்காக போனபோது கூட யாரையும் சந்திக்கமுடியாதபடி யாவரையும் மாற்றியிருந்தது.அம்மா எதுவும்பேசாமல் அப்பா பின்னாலேயே நடந்துகொள்வாள்.அதிகம் பேசமாட்டாள்..அதனால் அவளுள் எழும் எல்லா உணர்வுகளையும் புரிந்துகொள்ளமுடியாது.
அப்பா எது சொன்னாலும் தலையசைப்பாள்.அப்பா கோபப்பட்டாலும் சரியாகவே செய்வார் என்பது அம்மாவுக்குத் தெரியும்.அதனால் சரி பிழைகள் பற்றிக் கருத்துச் சொல்லமாட்டாள்.
அம்மா நன்றாகச் சமைப்பாள்.அப்பாவிற்கு கங்குங் கீரை விருப்பம் என அடிக்கடி சமைப்பாள்.அப்புக்காமி மாமாவின் மனைவியிடம் கற்றுக்கொண்ட கொண்டப்பணியாரம் அடிக்கடி செய்வாள்.யாழ்ப்பாணம் வந்ததும் அம்மாவிற்கு வேலை அதிகம்.அப்பாவிற்கு ஒத்தாசையாக ஆடு,மாடு,கோழிகளைப்பாராமரிப்பது.கொஞ்சம் இளைத்துமிருந்தாள்.
அப்பாவிற்குச் சின்னதாய் வருத்தம் இருந்திருக்க வாய்ப்புண்டு.எனக்குப் புரிந்தது..அப்பா வேலைக்குச் சேர்ந்த புதிதில் பிரிட்டிஷ்கார அதிகாரிகளால் தரம்பிரிக்கப்பட்ட வேலையாட்களை அந்தந்த துறைகளில் பயன்படுத்தினாலும் கெடுபிடிகளும் இருந்திருக்கின்றன.அவருக்கு வழங்கப்பட்டிருந்த இலக்கம் 26ஐ உச்சரித்தே கூப்பிடுவார்கள்.
பக்கத்துவீட்டு ஜோன் மாமி’ ரிவன்ரிசிக்ஸ் (twentysix)அண்ணே’ என்றுதான் கூப்பிடுவார்.அன்பின் நிமித்தமாக இருப்பினும் சங்கடமாக இருந்திருக்கும்..மற்றவர்களை அப்பா பெயர் சொல்லியோ,மச்சான் என்றோ கூப்பிட்டுக் கதைப்பார்.பெண்களெனில் இன்னாரின் அம்மா எனக் கூப்பிடுவார்.
குவார்ட்டஸில் குடியிருந்தவர்களின் குடும்பத்தார் ஒருவரை ஒருவர் பெயர் சொல்லி அண்ணே,மாமா என அழைத்தாலும் அப்பாவிற்கு இப்பெயரும் ஒட்டிக்கொண்டது.ஒரு நீளமான அறையை நடுவில் சுவர் அமைத்து இரண்டாக்கியிருந்தார்கள்.அறை பெரியது. யாழ்ப்பாணம் வந்த புதிதில் பெரியய்யா வீட்டில் தான் தங்கினோம்.அவரும் ஒன்றும் சொல்லவில்லை.அவரின் வீடு பெரிய வீடு.மாடிவீடாய் கட்ட முனைந்ததின் அறிகுறி அந்த வீட்டில் ஹோலுக்குள் நுழையும் போது தெரிந்துவிடும். கோழிகளும் ஏறித்தங்கிக்கொள்ளும்.பிறகு கலைப்போம்.அங்கிருந்தே வேலைக்கும் போய்வந்தார் அப்பா.முன்னர் வாங்கிவைத்திருந்த சைக்கிள் துருப்பிடித்தபடி பாவிப்பாரின்றி இருக்க அதை சைக்கிள் கடை தம்பிராசாவிடம் கொடுத்து திருத்தங்கள் செய்திருந்தார்.பெரியய்யாவின் மகன் வந்து பார்த்துவிட்டு சொல்லாமலேயே எடுத்துச்சென்றுவிட்டதில் அப்பா உடைந்துபோனார்.பெரியய்யாவும் ஒன்றும் சொல்லவில்லை.பிறகு லோன் போட்டு புதிதாய் ரலி சைக்கிள் ஒன்றை வாங்கினார்.அதையும் வந்து யாரும் எடுத்துச் சென்றுவிடுவார்களோ என்ற பயமும் ஏற்பட்டிருந்ததது. அண்ணரும் வருப்போது அப்பாவின் புதுச்சைக்கிளையும் தொட்டுப்பார்ப்பார்..ஏற்கனவே பிள்ளைகளின் குறும்புகளை ஏற்காமல் பெரியய்யா நச்சரிக்கத் தொடங்கத்தான் வளவிற்குள் கொட்டில் ஒன்றை போட்டு அங்கு குடிபெயர்ந்தோம்.
அப்பா மாற்றலாகி யாழ்ப்பாணம் வந்ததும் அவர் கட்ட ஆரம்பித்திருந்த வீடும் முடியாதநிலையில் இருந்தது.கறையான்,பாம்புப்புற்று வேறு.தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தும் எதுவும் பேசாமல் சிறு கொட்டிலை போட்டு அதற்குள் இருந்துகொண்டு கட்டி முடித்தார்.மாலை நேரங்களில் வளவு பார்க்கிற சாட்டில் வந்து போன அப்பாச்சியும் எங்களுடன் தங்கிக்கொண்டார்.
அப்பாச்சி எங்களுடன் தங்கியது எமக்கு மிக்க மகிழ்வைத் தந்தது.அம்மாவும் அப்பாச்சியை சிறப்பாகக் கவனித்தாள்.தன் தாயை தன்னுடன் வைத்துக்கொள்ளும் பாக்கியம் அம்மாவிற்குக் கிட்டாத நிலையில் அப்பாச்சியின் மீதான கரிசனை இன்னும் அதிகரித்தது.கதைகள் நிறையச்சொல்லுவார்.அந்தக் கதைகளுக்குள் மெல்லியதாய்ச் சோகம் இழையோடும்.அவளுடன் பயணித்தால் அதன் சோகத்தின் அர்த்தமும் புரியும்.
ஒருநாள் சாரைப்பாம்பு அம்மாவின் காலடியால் போனதாக அப்பா காலையில் தான் சொன்னார்.அம்மா பயந்துவிடுவாள் என்று அப்பா உடனே சொல்லவில்லை.
அம்மாவின் பெற்றோரைப் பார்த்ததில்லை. அம்மாவும் தன் பெற்றோர்கள் பற்றி சொன்னதில்லை. அதனால் அப்பாச்சியின் மீதான நெருக்கம் அதிகமானது.
சிலசமயங்களில் தனது கரகரத்த குரலில் சத்தமாகப் பாடுவார்.நாங்கள் சிரிப்போம்.
‘மண்ணுக்கு மரம் பாரமா..மரத்துக்குக் கிளை பாரமா’ பாடுவாள்.அம்மாவிற்கும் ஆசைகள் இருந்திருக்கும்.அசல் கிராமத்தாள் என்றே சொல்லலாம்.உறவுகள் எல்லோரும் சேர்ந்து இரண்டு மூன்றுகார்களில் ரவுனுக்குப் படம் பார்க்கப்போகையிலும் அம்மா போவதில்லை.வானொலியும் கேட்டதில்லை.ஆனாலும் யாரோ பாடக்கேட்டு சில பாடல்களை ஞாபகத்தில் வைத்திருந்தாள்.எப்பவாவது எங்களுக்காக பாடுவாள்.
அம்மா அதிகம் படித்தவள் இல்லை.சங்கீதம் படித்ததில்லை.எனினும் பாடும்போது ரசிக்கும்படியாக இருக்கும்.அம்மா என்பதால் ரசிக்கிறோமோ? அப்படியில்லை…அம்மா எங்களுக்காக பாடுகிறாள்.அப்பா குளிக்கும்போது பழைய பாடலை முணுமுணுத்தது ஞாபகம்.ஒவ்வொருவரின் ரசனையும் ஏதோ ஒருகட்டத்தில் உடைந்துபோகவே செய்கிறது.அப்பாவும்,அம்மாவும் தங்கள் குடும்ம்பத்தை இப்படி வடிவமைத்திருக்கலாம்.
அன்று புதன்கிழமை.
கோயிலுக்கு அம்மா பூக்களைப் பறித்துக்கொண்டிருந்தாள்.கிணற்றில் தண்ணீர் அள்ளும் சத்தம் கேட்டது.
‘வேலி அடைக்கவேணும்.சனிக்கிழமை வாருமன்’ என சண்முகத்திடம் சொல்லிவிட்டுத் திரும்பி வேலிக்கறையானைத் தட்டிக்கொண்டிருந்த அப்பாவிடம் கடிதத்தை கொடுத்துச்சென்றார் தபால்காரர்.
வந்த பதிவுத்தபாலை உடைத்துப் படித்த அப்பாவின் முகம் மாறியது.அம்மா என்ன என்று கேட்கவில்லை.அருகில் வந்து நின்றாள்.
வீடு கட்ட வாங்கிய கடனை வட்டியுடன் கட்டும்படி கேட்கப்பட்டிருந்தது அக்கடிதம்.நான் பிறக்க முதல் அத்திவாரம் போட ஆரம்பித்தவர் கடனும் கட்டிமுடியாமலும்,வீடும் கட்டிமுடிக்கப்படாமலும் இருந்தது ஏன் என்ற கேள்விக்கு அப்பாவிற்கு விடையில்லை.வீட்டு உறுதியும் நொத்தாரிஸ் மூலம் ஈடுவைத்தும் கடன் பெறப்பட்டிருந்தது பிறகு தெரியவந்ததும் அப்பா கலங்கிப்போனார்.நண்பரை நம்பி ஏமாந்தது புரிந்தது.பகைத்துக்கொள்ளாமலேயே ஒதுங்கியும் போனார்.
அப்பாவின் மாத வருமானம் மளிகைச் சாமான்களுக்கே போதாமல் இருந்தது.கையில் காசிருக்கையில் சந்தைக்குப் போய் மரக்கறி,மீன் என வாங்கிவருவார்.காலையில் பெரும்பாலும் மரவள்ளிக்கிழங்கும்,சம்பலும் தான்.பாணும் அவ்வப்போது தலைகாட்டும்.
பொன்னுத்துரை கடையில் பலசரக்குச் சாமான்களும்,செல்வரத்தினம் அண்ணரிடம் மூடையாக அரிசி,வைக்கல்,புண்ணாக்கு,தவிடு என வாங்கிவிடுவர்.சம்பளத்தை அங்கு கொஞ்சம் இங்கு கொஞ்சம் என பங்கிட சரியாகிவிடும்.அவர்களும் அப்பாவை நெருக்குவதில்லை.எங்களுக்கு எதுவும் தெரியக்கூடாது..பிள்ளைகள் படிக்கட்டும் என அம்மாவிடம் சொல்லியிருந்தார்.
‘மாமியிடம் ஐம்பது நூறு எண்டால் மாறிக்கொள்ளலாம்…இவ்வளவு பணம் எண்டால்?…’
பெரியய்யா வட்டிக்கு பணம் கொடுத்தே சகோதரர்களின் காணிகளை அபகரித்துக்கொண்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.அப்பா போய் கேட்கமாட்டார்.
அப்பா சொல்லாமல் அம்மா பெரியய்யாவிடம் கேட்கமாட்டாள்.
அவளுள் ஒரு யோசனை உதித்தது.
‘மாதகல் காணியை விற்றுவிட்டால் என்ன?’
அம்மாவிற்கென வயல்காணி ஒன்று இருந்தது.அம்மாவின் அண்ணர்தான் அதனை பராமரித்துவந்தார்.தன் ஆசிரியத் தொழிலுடன் வெள்ளாமையும் செய்துவந்தார்.அம்மாவின் காணியிலும் நல்ல வருமானம் வருவதாகவும்,விற்பதென்றால் தங்களுக்குத் தந்துவிடும்படியும் பலரும் கேட்டவண்ணம் இருந்தும் அப்பாவிற்கு மாமாவை பகைத்துக்கொள்ளவும் விரும்பவில்லை.3000 ரூபா வரை பலரும் கேட்க மாமா வெறும் 500 ரூபா மட்டும் தந்து கணக்கை முடித்துக்கொண்டது அம்மாவிற்கு வருத்தம் தான்.
முன்பொரு முறை மாமா சொல்லியிருந்தார்.பச்சைபசேல் என்றிருந்த அந்த வயல்காணி.வரம்பெல்லாம் புற்கள் நிறைந்திருக்கும்…பன்குளத்து வயல்காணிகளும் எப்போதும் பச்சைபசேலென்றிருக்கும்.வாய்க்காலில் எப்போதும் தண்ணீர் வந்துகொண்டிருக்கும்.ஆசைப்பட்டதொன்றும் கைகளில் நீண்டகாலம் கைகளுக்குள் இருக்காதோ?
எமக்குத்தெரிய வயல்காணி ஒன்றே எனத்தெரிந்திருந்தது.மாதகல் போகும்போது மாமா சொன்னது நினைப்பு.ஆனால் அம்மாவிற்கே கிடைக்கவிருந்த காணியை அம்மாவிற்குத்தருவதாகச் சொல்லி கையெழுத்தை வாங்கிக்கொண்டு தங்களுக்குள்ளேயே பகிர்ந்துகொண்டனர்.அம்மாவிற்கான பங்கைக்கூடத் தரவில்லை.அப்போது திருமணமாகியிருக்காதநிலையில் அம்மாவிற்கு அதுபற்றிய கவலை அல்லது ஏமாற்றம் பெரிதாகப் புரியவில்லை.கேட்டு என்னவாகிவிடப்போகிறது என்று அவள் நினைத்திருக்கலாம்.
அப்பா எதுவும் பேசவில்லை.
எப்படிப் பார்த்தாலும் கையில் கடனை முடிக்கக்கூடிய கையிருப்பு இல்லை.வீட்டைக்கட்டித்தருவதாக ஒத்தாசையாக இருந்த இரதநாயகம் மாமாவும் கையை விரித்தார்.அவர் தனது மூன்றாவது வீட்டையும் கட்டிமுடிந்தார்..தான் கேட்டபோது இல்லை என்று சொல்லிவிட்டதை எண்ணி அப்பா கலங்கினார்.அவரால்தான் தான் ஏமாந்ததை தற்போது உணர்கையில் காலம் கடந்துவிட்டிருந்தது.
‘அளவுக்கு மீறி ஆசைப்படக்கூடாது’ சித்தப்பாவும் தூரமாய் போனார்.
செய்வதறியாது திகைத்துநிற்கையில் தென்னம்பிள்ளைவளவு ஞாபகம் வர அதனை விற்க முடிவு செய்து செயல்பட்டார். சித்தப்பா புறுபுறுக்க கிணற்றுப்பங்கையிம் நீக்கி விற்றாயிற்று.விற்றகாசை அரசாங்கக்கடனை அடைத்தார்.மிச்சத்தில் நொத்தாரிஸ் மூலம் ஈடுவைத்ததையும் மீட்கமுடிந்தது..கடனும் ஓரளவிற்குத் தீர்ந்ததில் மகிழ்ந்தாலும்..வாழ்க்கை இன்னும் கஷ்டத்தில் தான் நடக்கும்போலிருந்தது.
கைகளுக்குள் எதுவும் அடங்கிப்போவதில்லை.வாழ்க்கையும் அப்படித்தான்.ஏதோ வழியில் ஏதோ ஒன்று துரத்திக்கொண்டுதான் இருப்பதை உணர்கையில் துவண்டுபோய்விடுகிறோம்.அப்பா கலங்கி நிற்கையில் அவரைப் பார்க்க கவலையாக இருந்தது..
பன்குளத்தில் அப்பாவின் நண்பரான மணியம் மாமாவை சிங்களவர் வாளால் வெட்டிக் கொன்றார்கள் என்று அறித்ததும்,தனது காணியையும் விற்றுவிடவேண்டும் என எண்ணினார்.ஆனால் அது முடியாது போயிற்று. மணியம் மாமா வாளால் வெட்டிக்கொலை செய்திருந்தமையை நினைக்க உடம்பு உதறும்..மணியம் மாமி எவ்வளவு துடித்திருப்பார்?யாழ்ப்பாணம் வந்தவுடன் நண்பர் ஒருவரிடம் கொடுத்துவந்திருந்தார்.அவரிடன் பணம் கேட்டுப்போனபோது அவரின் பதில் அப்பாவைக் காயப்படுத்திவிட்டது.அதற்குப்பிறகு அந்தக் காணியைப்பற்றிய நினைப்பையே மறந்துவிடும் நிலைக்கு வந்துவிட்டார்.
‘பொம்பிளைப்பிள்ளைகளை வைத்திருக்கிறாய்..யோசிச்சு நட’ சின்னத்துரை சொன்னது ஞாபகம் வந்தது.புறொபிடன்ற் பணம் வரேக்கை சமாளிக்கலாம்..அதுக்கும் இன்னும் காலம் இருக்குத்தானே’ சமாதானம் அடைந்தார் அப்பா.
வீட்டைத்திருத்தலாம் என முயன்றபோது எங்கிருந்து ஆரம்பிப்பது?சாத்திரியார் அதை இடி இதை நீட்டு என்றார்.வேறொரு சாத்திரியார் வடக்கு வாசலாக்கு என்றார்.இன்னொருவர் அதையெல்லாம் முறியடிக்குமாப்போல குசினியை இடி…கிழக்கு வாசலாக்கு…வீட்டு வடிவத்தையே கொஞ்சம் மாற்றினால்தான் குடும்பத்திற்கு நல்லது என்றாரே பார்க்கலாம்.அப்பா இடிந்து போய் இருந்தார்.
‘கஷ்டம் என்று வரும்போது யார் யாரோவெல்லாம் வருவினம்.கனக்க சொல்லுவினம்.எரிச்சல் வரும்..அதுக்குள்ள வருகிற சாத்திரிமாரும் தங்கள் பங்கிற்கு ஏதாவது சொல்லி பிடுங்கிக்கொண்டு போயிடுவினம்.’
மறுநாள் விசும்பல் ஒலி கேட்டது.
மூலையில் அரிக்கேன் விளக்கு தன் ஒளியை சற்று தணிந்தே இருந்தது.காதைக் கூர்மையாக்கி உற்றுக்கேட்கையில் மெல்ல மெல்ல அது அப்பாவின் விசும்பல் ஒலியாக நெஞ்சுள் இறங்கி இறுக்கியது.அப்பா அழுது நாம் பார்த்ததில்லை.அம்மா அழுதது ஞாபகம்.அப்பா அப்படியில்லை.அப்பா திடகாத்திரமான உடல்வாகு கொண்டவர் இல்லை.நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை என்றும் சொல்லிவிடமுடியாது.ஆனால் மன உறுதி அதிகம் அவரிடம் இருந்தது.எத்தனை கஷ்டங்களை கடந்துவந்தவர் தனிமரமாக உணர்ந்திருப்பாரோ?குமர்ப்பிள்ளைகளை எப்படி அவர்களுக்கான வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பது?நண்பர்களை நம்பி ஏமாந்த கதையை நினைத்திருப்பாரோ? எழுந்து கிட்டப்போய் ஆறுதல் சொல்லும் வயதில் நாம் இல்லை.சிலவேளை அவருக்கு சங்கடத்தையும் ஏற்படுத்தலாம்.அன்றைய இரவு மெதுவாகவே நகர்வது போலிருந்தது.முற்றத்து பிலா மரக்கிளைகளிலூடாக இலைகளை விலத்தியபடி சந்திரன் ஒளி காட்டிக்கொண்டிருந்தான்.
சுந்தரம் வீட்டுக்கிணற்றிலிருந்து தவளை கத்தும் சத்தம் தெளிவாகக்கெட்டது.சுந்தரம் வீட்டுக்கிணற்றில்தான் தண்ணீர் அள்ளுவோம்.அப்போது கிணறு வெட்டப்படவில்லை.குடிப்பதற்கு மட்டும் ஐயாத்துரை மாமாவின் வீட்டிற்குப் போவோம்..
வீட்டை விட்டு வெளியே போய் தண்ணிர் அள்ளவோ,குளிக்கவோ கூச்சமாகவோ,சங்கடமாகவோ இருக்கும்.பிறகு ஒருவாறு சின்னையாவின் காணிக்குள் இருந்த கிணற்றைத் துப்பரவாக்கி அதில் குளிக்கத்தொடங்கினோம்.பெரும்பாலும் தண்ணீரைச் சுடவைத்தே குடித்தோம்.அந்த கிணற்றடி பூவரசமரத்தில் அப்பா ஒரு உடைந்த கண்ணாடியை வைத்து சேவ் எடுப்பார்.அப்பா மீசையுடன் பார்த்ததில்லை.அப்பாவுக்கு மீசை வைத்தால் எப்படியிருக்கும் என்று நினைத்துப்பார்த்து நமக்குள்ளே சிரித்ததும் உண்டு.
அப்பாவிற்கு மாறி மாறி சிப்ட் எனவேலை வரும்.அதிகமாக இரவு வேலையே கிடைக்கும்.பலவருடங்களாக இப்படித்தான்.அதுதான் கோபம் அதிகமாக வருகிறது என அம்மா சொல்லுவாள்.அப்பாவை புரிந்தவளாதலால் அப்பாவுடன் குடும்பம் நடத்துகிறாள்.
தனக்கென பிள்ளைகள் வந்ததும்,தனது குடும்பம் மீதான அளவிற்கதிகான ஈடுபாடு அதிகமாகியது..அப்பா தானுண்டு என்றிருந்தாலும் யாரிடமும் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்படவில்லை.
அம்மா குடும்பத்தில் கடைசிப்பெண்.மூத்தவர்களெல்லாம் திருமணமாகி அவர்களின் குழந்தைகளையும் பராமரிக்கின்ற பொறுப்பும் அம்மாவின் மீதே விழுந்தது.அப்பாவைத் திருமணம் செய்யும்வரை அதுதொடர்ந்தது.இப்போது தனக்கும் குழந்தைகள் கிடைத்ததும் தனித்த தீவாகிப்போவதாக உணர்ந்தாள்.எனினும் வெளிக்காட்டவில்லை.
அம்மா அசல் கிராமத்திலிருந்து வந்தவள்.அப்பா போகுமிடமெல்லாம் மௌனமாக நடக்கின்ற பண்பே அவளை உயர்த்திக்காட்டியது.அப்பாவின் கோபம் பழகிவிட்டது.ஆரம்பத்தில் அழுதாலும் அது பழகிவிட இப்போதெல்லாம் அப்பாவின் கோபத்தை சட்டை செய்வதில்லை.அப்பாவும் கெட்டவரில்லை.அவருடன் வேலை பார்ப்பவர்கள் போல குடிப்பதில்லை.தூரப் பயணங்களில் மட்டும் திறி ரோஸஸ் புகைப்பார்.மற்றப்படி தொடவேமாட்டார்.நன்றாக வாசிப்பார்.ஆனால் யாழ்ப்பாணம் வந்தபின் அது கொஞ்சம் குறைந்துவீட்டது போலிருந்தது.வேலை முடிந்து வந்தால் ஏதோ ஒரு வேலை காத்திருக்கும்.திருகோணமலையில் நிறைய நேரம் இருந்தது.அங்கு அம்மா சிறிய அளவில் வீட்டுத்தோட்டம் வைத்திருந்தாள்.சைவக்கடையில் இடியப்பம்,தோசை,அப்பம் என வாங்கி காலை உணவாக்கிவிடுவாள்.மாலையில் கல்பணிஸ்,சுடச்சுட பாணை பேக்கரியில் வாங்கிவைத்திருப்பாள்.அப்பாவிற்கு உள்ளூர மகிழ்வார்.சிறுவயது குறும்புகள்,குழப்படிகளாகி அப்பாவிற்கு அவ்வப்போது கோபத்தை ஏற்படுத்திவிடும்.அம்மா அடிவிழுவதைத் தடுப்பாள்.சில சமயம் ஒதுங்கிவிடுவாள்.ஒருநாள் கோபத்தில் சுடவைத்த கம்பியை எனது கைகளில் சூடுவைத்துவிட ஓவென்று அழத்தொடங்கிவிட்டேன்..பக்கத்துவிட்டு மாமி வந்து மக்னீசியாவை காயத்தில் பூசிவிட்டாள்.
‘சூடு வைத்தால்தான் திருந்துங்கள்’ அப்பாவின் வாதம்.ஜோன் மாவும் மகளை குழப்படி என்று சாக்கில் கட்டி கடலில் எறியவென தூக்கிக்கொண்டு செல்ல அப்பா தடுத்துவிட்டார்.
‘ஆளுக்கொரு சட்டம்’ அம்மா உள்ளூர நினைத்திருப்பாளோ? ஜோன் மாமாவின் மனைவி அம்மாவை பரிதாபமாக பார்த்தாள்.அதில் வேறொரு அர்த்தம் தொனித்தது.’உவர் வெருட்டுறார்..ஆரும் பெத்த பிள்ளையை எறிவினமே…மேளை பயமுறுத்தவே இப்படி ஒரு நாடகம்’
அம்மா உள்ளே சென்றுவிடுவாள்.
அம்மா யாருடனும் அரட்டை அடிக்கமாட்டாள்.வெளியில் வந்து உடகாருத்து ஜோன் மாமி கதைகள் சொல்லும் போது சிறுவர்கள் கேட்போம்..அதிகமாய் பேய்க்கதைகள் தான் சொல்லுவார்.கதைகள் சொல்லாத நாளென்றால் மாமி ஊரில் இல்லை என்றே அர்த்தம்.
அம்மா மற்றப் பெண்களைப்போல தன்னை அலங்கரித்துக்கொள்பவல்ல.அப்பாவும் அப்படி எதிர்பார்ப்பவரல்ல.புஞ்சி பண்டாவின் மனைவி வலிய வந்து தனக்குத்தெரிந்த தமிழில் கொஞ்சும் மொழியில் அம்மாவுடன் கதைப்பாள்.தனக்குத் தெரிந்த பலகாரங்கள் செய்யும் முறைகளைச் சொல்லிக்கொடுப்பாள்.தான் வீட்டில் செய்தவைகளையும் கொண்டுவந்து கொடுப்பாள்.அம்மாவிற்கு அவளைப்பிடித்துப்போயிற்று. கொஞ்ச காலம் தான்..அவளுக்குப் புற்றுநோய் என்று ஊருக்குப்போனவள் திரும்பிவரவேயில்லை.அம்மா மிகுந்த கவலையுற்றாள்.அதற்கொரு இன்னொரு காரணமும் இருந்தது. கடைசித்தங்கை பிறந்தபின் அம்மாவிற்கு கர்ப்பப்பையில் புற்றுநோய் வந்திருப்பதாக சொல்லி சத்திரசிகிச்சை மூலம் கர்ப்பப்பையை எடுத்துவிட்டார்கள்.அதனல்தான் புஞ்சிபண்டாவின் மனைவியின் நட்பு இல்லையென்றான பின் கவலைகொண்டமை இயல்புதான்.மற்றப் பெண்களுடன் புன்னகை ஒன்றையே நட்பாய் தருவாள்.மாலையானதும் சாக்கு ஒன்றை எடுத்து குவார்ட்டஸிற்கு முன்னாலுள்ள புல்தரையில் உட்கார்ந்து பிள்ளைகளுக்கு பேன் பார்ப்பதும்,அரட்டையடிப்பதுமாய் இருக்க அம்மாஅவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஒற்றையாய் பதில்சொல அவர்களும் சலிப்பாகி அதிகம் பேசமாட்டார்கள்.நாங்கள் கோல்போஸ்டாக இரண்டு கல்லை வைத்து கால்பந்து விளையாடுவோம்.
விடுமுறையில் யாழ்ப்பாணம் போகையில் வெளிநாடுகளில் இருந்து வருவது போல வரவேற்பு இருக்கும்.ஒரு வித இனம்புரியாத மகிழ்ச்சி அங்கு இருந்தது.அப்பாவின் முடிவால் மகிழ்ந்துவிடும் மனநிலை இல்லை.அப்பாவிற்குள்ளும் ஏதோ ஒன்று நோய் வடிவில் ஒரு மாற்றத்தை,அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும்.நீண்ட காலமாக அவர் தீர்மானித்துமிருக்கலாம்.வாகனத்தில் ஒவ்வொன்றாய் பொருட்களை ஏற்றுகையில் அப்பாவின் கைகளின் நடுக்கம் இருந்தது.பிரிவின் ஆற்றாமையாகவும் இருக்கலாம்.இங்கு யாரும் நிரந்தரமில்லையே.இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து தொழில் நிமித்தம் வந்திருப்பவர்களே.உறவுகள் போல பழகினாலும் ஒருகட்டத்தில் பிரிந்து அவரவர் ஊர்களுக்குச் சென்றும் விடுவர்.இவை அப்போது நமக்குப் புரிந்திருக்கவில்லை.அப்பா தீர்மானமாக இருந்தார்.
ஆனால் ஊர் வந்ததும் அந்த அனுபவம் இல்லை..அம்மாவும் தன்னை குடும்பவட்டத்திற்குள் முற்றாக அர்ப்பணித்துக்கொண்டாள் என்றே சொல்லலாம்.பாவம் அம்மா..
இப்போது அப்பாச்சி கதைகள் சொல்லும் போது அம்மாவும் கேட்டபடி சமையலில் கவனத்தைச் செலுத்தியபடி இருப்பாள்.எதுவும் பேசமாட்டாள்.
அடி வளவிற்குள் காவோலைகள் உரசும் சத்தம் கேட்டது.அப்பா வேலைக்குப் போக ஆயத்தமானர்.அம்மா சாப்பாட்டை பார்சலாகக் கட்டி அப்பாவிடம் கொடுத்தாள்.அப்பாச்சி பார்த்துக் கொண்டிருந்தாள்.
மாடு ஒண்டை வாங்கினால் பால் வாங்குற காசு மிச்சம்.அம்மாவின் நினைப்பு அப்பாவிடம் சேர்ந்திருக்கவேண்டும்..சின்னத்துரை மாடு ஒண்டை வாங்கித்தருவதாகவும் அப்பா சொல்லிக்கொண்டது காதில் கேட்டது.திருகோணமலையில் இருந்தகாலத்தில் கிண்ணியாவிலிருந்து வரும் தயிரை விருப்பமாக வாங்கிக் குடிப்போம்.சின்னதாய் பால் டின்னில் போட்டு 40 சதத்திற்கு கிடைக்கும்.ருசியாகவும் இருக்கும்.புஹாரியிடம் சொன்னால் கன்றுடன் மாட்டைக் கொண்டுவந்து தருவார்.15 ரூபாய் மாதம் வாங்குவார்.நாங்களே சாப்பாடு போடவேணும்..பால் வற்ற மாட்டையும்,கன்றையும் கொடுத்துவிடவேணும்.அவரிடம் நிறைய மாடுகள் இருந்ததாகச் சொல்லுவார்கள்.
அதிகாலையிலேயே எழுந்துகொள்ளும் அம்மா எறும்பு மொய்த்திருந்த இடங்களையெல்லாம் விளக்குமாற்றால் மணலால் மூடிவிட்டு கூட்டத்தொடங்குவாள்.சிலநேரங்களில் தங்கள அந்த வேலையைச் செய்வார்கள்.இரவு முழுதும் ஊர்வனநடந்துசென்ற அடையாளங்கள் ஆங்காங்கே இருப்பதை காணக்கூடியதாக இருக்கும்.
அப்பாவின் சைக்கிள் படலையைத் தாண்டிச்செல்லும் சத்தம் கேட்டது.
‘அப்பாடா’ என வீடு கலகலப்பானது.சத்தம் போட்டு பாட அப்பாச்சி சிரித்தபடி கேட்டுக்கொண்டிருப்பாள்.
முன்பெல்லாம் பத்திரிகைகளில் வரும் குறுக்கெழுத்துப் போட்டிகளில் பங்குபற்ற அப்பா உதவுவார்.அம்மாவும் தனக்குத்தெரிந்த பதில்களையும் சொல்லுவாள்.வீட்டில் வானொலி இருக்கவில்லை.எப்போதாவாது யாழ்ப்பாணத்திலிருந்து வரும் உறவுக்காரர்கள் வந்து நிற்கும்போது அவர்கள் கொண்டுவரும் ரான்ஸ்ஸிஸ்டர் ரேடியோவில் பாட்டுக்கேட்போம்.அவர்கள் போனதும் அதுவும் இல்லை.பக்கத்து வீடுகளில் எப்பவாவது ஒலிக்கும்.சிலசமயங்களில் அவை கிறிஸ்தவ பாடல்களாகவோ,இஸ்லாமிய பாடல்களாகவோ இருக்கும்.அப்பாவும் நல்ல படங்கள் எனில் கூட்டிப்போவார்.அவரின் வருமானத்திற்கு கட்டுபடியாகாமல் இருந்திருக்கலாம்.அவரின் வாழ்வியற்சூழல் அவற்றிற்குப் பழக்கபாடாமல் இருந்திருக்கலாம்.அப்பாவின் மீது கோபம் வரவேயில்லை.அப்பா எப்போது நல்ல அப்பாவாகவே இருந்திருக்கிறார்.
பயணத்தால் அப்பா வந்தாரென்றால் நிறைய வாங்கிவருவார்.பெரும்பாலும் சாப்பாட்டுச்சாமான்களாகத்தானிருக்கும்.யாழ்ப்பாணம் போய் வந்தால் பனங்கிழங்கு,ஒடியல்,குரக்கன்மா, நெல்லி ரசம் ,பனங்கட்டி மறக்காமல் வாங்கிவருவார்.யாழ்ப்பாணம் வந்தபின் றம்புட்டான்,ஜம்புக்காய்,தயிர்,பொரி உருண்டை என பல தன் பைகளில் அடைத்து வாங்கிவந்துவிடுவார்.
அப்பா பன்குளம் போன இரு நாட்களும் பின் வளவுப்பக்கம் போகவில்லை.கொட்டிலுக்குள் இருக்கமுடியவில்லை.பெரியய்யாவின் வீட்டில்போய் தங்கவும் மனதுவரவில்லை.கட்டிய குறையில் கிடந்த வீட்டு விறாந்தையில் கறையான்,கற்குவியல்களுக்கிடையில் பொழுதைக்கழ்க்கவேண்டிவந்தது.அப்போது யாரோ தங்கள் மாடுகளைக் கொண்டுவந்த கட்டியிருந்தது புரிந்தது..பூரணம் மாமியாகத்தான் இருக்கவேண்டும்.அவள் கேட்பதில்லை.நாம் கேட்டால் ஏதேதோ சொல்லி மழுப்பிவிடுவாள்.அன்றும் அவள் சொல்லி மழுப்பினாள்.கோபமாக வந்தது.மாடு வீட்டின் பின்பக்கத்தை அலங்கோலப்படுத்தியிருந்தது.சாணியின் மணம் வேறு.. அப்பாவிடம் சொல்லி பூரணம் மாமியின் கொட்டத்தை அடக்கவேண்டும் என்று நினைத்தால் எதுவும் சொல்லமாட்டார்.’ஏன் வீணாய் சண்டை..’
யாழ்ப்பாணத்திற்கு வந்தபின் நேரமின்றி யாவரும் அலைவதை உணர்ந்தோம்.
அப்பா வேலைக்குப்போகவும்,வீடுவந்ததும் வளவைச் சுத்தம் செய்வதும்,வேலிகளைச் சரிசெய்வதும்,ஆடு மாடு,நாய் என வந்ததும் யாவரும் ஓய்வின்றியே நகர்ந்தனர்.
அப்பா இரவானதும் படுக்கையைச் சுற்றிச் சரசரக்கும்.அப்பா டோர்ச்லைட்டுடன் வெளியில் போய் பார்ப்பார்.பாம்பு சிலசமயம் போர்வைக்கு மேலால் போகும்.அசையாமல் படுத்திருப்போம்.எப்படித்தான் மண்ணெண்ணையை சுற்ற ஊற்றினாலும் பாம்பு,பூச்சிகளைக் கட்டுப்படுத்தமுடியவில்லை.
பகலில் பற்றரிகளை கழற்றி வெயிலில் காயவைத்துவிட்டு இரவானதும் டோர்ச்சை தயார் பண்ணிவிடுவார்
‘பேய் குடியிருக்கிற வளவு’ என்று அயலவர் சொல்லுவது உண்மையோ.
‘யாரும் பொன்விங்குகளுடன் பிறப்பதில்லை’ யாரோ போகிறப்போக்கில் சொல்லிப்போவது இன்றும் கேட்டது..வீதியில் சந்தைக்குப்போகும் ஒற்றைமாட்டுவண்டிலின் ஒலி…இரண்டு மூன்று வாழைக்குலைகளை பின் கரியலில் கட்டியபடி பலன்ஸ் தளராமல் போகும் புண்ணியமூர்த்தி…ஊ..ஊ என்று மூச்சுவிட்டபடி உடைகளைத் தோய்க்கும் முன்வீட்டு ஆழ்வான்..வீதி கலகலப்பாக இருக்கும்.காலை இப்படி விரியும்..மதியம் மீன்காரகளின் குரல் ஓங்கி ஒலிக்க வீதிக்கு வந்துவிடும் அம்மாக்கள்…மாலையில் தள்ளுவண்டியில் மணக்க மணக்க பணிஸ்,பாண்,,கல் பணிஸ் என கூவி விற்கும் பெரேரா…கூடவே பழைய கீறல் விழுந்த பாடல்களை ஒலித்தபடி எங்களுக்காகவே வருவது போல வரும் ஐஸ்கிரீம் வான்…
ஆறுமணியானதும் வீதி அடங்கிவிடும்..தட தட்வென புகையிரத செல்லும் ஒலி இங்கு இல்லை.ஓடிச் சென்று ஒரு சதத்தை தண்டவாளத்தில் வைத்துவிட்டு அது நசிந்து போய் கிடப்பதை ரசிக்கின்ற உணர்வு…பயணிகளை கைகளைக் காட்டியபடி குதூகலிக்கும் அனுபவம் இங்கில்லாமல் போனது கவலை.. புகையிரதப்பயணம் வாய்க்கவில்லை..யாழ்ப்பாணத்தில் புறப்பட்டால் சுற்றிப்போகும்.ஆங்காங்கே வேறு வேறு புகையிரதங்களில் மாறவேண்டுமாம்.பஸ் பிரயாணம் வசதியானது.செலவும் குறைவு.சுவாரஸ்யம் நிறைந்தது..ஆனால் புகையிரதத்தில் பயணிப்பவர்களைப் பார்க்க பொறாமையாக இருக்கும்.
எங்கள் வீட்டில் வானொலி இல்லையாதலால் பாடல்களைக் கேட்கும் ஆசை நிறைவேறவில்லை.தண்ணீர் அள்ளப்போகும் போது ஐயாத்துரை மாமா வீட்டின் பின்புறம்சுருட்டுச்சுற்றுவோ கேட்க வானொலி நெடுநேரம் ஒலிக்கும்.கொஞ்ச நேரம் நின்று கேட்கலாம்.என்றாலும் கூச்சம்.. ‘பொம்பிளைப்பிள்ளகள் இருக்கிற இடம்’ போவதும் நிறுத்தப்பட்டது. ஒன்றுவிட்ட அண்ணர் வாங்கித் தரும்வரைக்கும் வானொலி தூரமாகத்தான் இருந்தது.
பெரியய்யா வீட்டில் இருந்து படிக்கும்போது வானொலியைத் தொடப்பயம்.அடிவிழும்..ஆனால் மாலை நாலு மணியானதும் ரங்கநாதன் மாஸ்டர் வந்து வானொலியைத் திருகித் திருகி வானொலி கேட்பார்.அவரைப்பார்க்க பொறாமையாக இருக்கும்.அக்கா தேநீர் கொடுப்பாள்.தையல் மெசினில் தைத்தபடி பாடல்களைச் சிலாகிப்பார்.அக்காவுக்கும் பாடல்களுடன் பாடகர்களும் அத்துப்படி..அக்கா ரங்கநாதன் மாஸ்டரை விரும்புகிறாளோ? ரங்கநாதன் மாஸ்டர் ஒருதலையாக….நல்ல நண்பர்களாகவோ இருக்கலாமே..அவருக்கு இருந்த உரிமை எனக்கில்லையே என்று வலிக்கும்.. நிறைய திரைப்படப்பாடல் புத்தகங்களை கொண்டுவந்து கொடுப்பார்.மேசையில் குவிந்திருக்கும்.அக்கா அவற்றை எடுத்துப்படிப்பதை பார்த்ததில்லை. சில சமயங்களில் பாடல் ஒலிக்க ஆண் குரலில் ரங்கநாதன் மாஸ்டர் பாட தொடர்ந்து அக்கா பாடுவாள்.கிட்ட என்னை அனுமதிக்க மாட்டார்கள்..’ஓடு’ என விரட்டுவார்கள். எனக்கும் பாடவருமே..அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குள் என்னவாவது இருந்துவிட்டுப் போகட்டுமே. அக்காவிற்கு திருமணமாகியிருக்கவில்லை.தரகர் அடிக்கடி குறிப்புக்களைக் கொண்டுவந்து கொடுப்பதும்,ஒண்டும் சரிவராமல் தரகருக்கு பணத்தை இறைத்ததும் தனிக்கதை.ஒருவகையில் அக்கா பாவம் தான்.திருமண வயதைக் கடந்தும் இன்னும் திருமணம் செய்யும் காலம் அவருக்கு காலம் தந்துவிடைவில்லை போலும்.
வீட்டுப்பின்னால் போய் கறிவேப்பில்லை மர இலைகளை இழுத்து உதிரவிட்டபடி உரத்த குரலில் பாட பக்கத்து வீட்டும் நாய் சத்தமாய் குரைக்கும்.
அக்காவை ஏனோ பிடிக்காமல் போனது.
அக்காவிற்கு என்ன கோபமோ என் மீது…ஏதாவது சொல்லி பெரியய்யாவிடம் கோள்மூட்டி அடிவாங்கித் தந்துவிடுவாள்.ஒருமுறை கழிப்பறையில் பீடித்துண்டு இருந்தது என்று சொல்லிவிட்டாள்.பெரியயாவிடம் ‘நான் பீடி குடிக்கவில்லை’ என்று அழுது குழறியும் விடவில்லை.பூவரசம் தடி பிய்யும் வரை விளாசிவிட்டார்.’அக்கா எப்ப சாகும்?’அழுகையுடன் காயங்களைப் பார்த்துப் பொருமுவேன்..’அம்மா..அம்மா…’ காயங்கள் தடித்துச் சிவந்திருந்தன.
ஒருநாள் கழிப்பறையிலிருந்து புகை வந்துகொண்டிருப்பதை அக்கா கவனித்துவிட்டாள்.நான் இல்லை என்று தெரிந்து கொண்டு யார் அது எனக் கண்டறியக் காத்திருந்தாள்.ஒவ்வொரு நாள் காலையிலும் மலம் எடுக்கவருபவர் தான் உள்ளிருந்து வந்தார்.அக்காவைக் கண்டு தலையைச் சொறிந்துகொண்டான்.அக்கா எதுவும் சொல்லவில்லை.மௌனமாக வீட்டுக்குள் சென்றுவிட்டாள்.அதுபற்றி பெரியய்யாவிடம் சொன்னதாகவும் தெரியவில்லை.எனக்கும் ஒரு ஆறுதல். கழிப்பறையில் பீடித்துண்டு இருந்ததாகச் சொல்லி அம்மாவிடம் சொல்லி,அதனால் அடியும் விழுந்தது ஞாபகம் வந்தது.வீணாக சந்தேகப்பட்டு கோள்சொல்லி அடிவாங்கியும் தந்திருந்ததும்,இப்போது அதற்காக மன்னிப்பும் கேட்கவும் இல்லை..அவள் மீதான கோபம் இன்னும் அதிகரித்தது. ‘நாசமாய் போ’
அப்பா அதிகமாக வேட்டி கட்டுவதில்லை.தூரப்பயணம் என்றால் கட்டுவார்.ஊருக்குள்ள செத்தவீடு எனில் சரத்துடன் தான் போவார்.எனக்கும் வேட்டி கட்டிப்பார்க்க ஆசைதான்.அதற்கான காலம் அமையவில்லை.பெரியய்யா பென்சனில் வந்தபிறகு வேட்டியே அணிவார்.வேட்டியைத்தோய்த்து காயவிட்டுவிட்டு கோவணத்துடனேயே வளவுக்குள் திரிவார்.அப்பாவிற்கு அதில் சங்கடமுண்டு.அண்ணரிடம் எப்படிச் சொல்வது?.சொல்லவில்லை.உடம்பெல்லாம் சுள்ளென்று வெயில் கொளுத்தும்.அம்மா,தங்கைகள் இருக்க…அதுவும் துரிதமாக தன் வளவிற்குள் கொட்டில் என்றாலும் போட்டு சென்றுவிடவேண்டுமென்று அப்பா நினைத்திருக்கலாம்.வீரபத்திரர்கோயில் திருவிழாவிற்குப் போக நினைத்தபோது அப்பா தனது வேட்டியைத்தந்து ‘கட்டிக்கொண்டுபோ’ என்று சொல்லிவிட்டார்.திருவிழாவிற்கு காற்சட்டையுடன் போனால்தான் சௌகரியமாக இருக்கும்.அதற்குப் பல காரணங்கள் இருந்தும் மச்சாள்மார் வருவினம் என்பதே முக்கிய காரணம்…அப்பாவிற்காக மௌனமாக வேட்டியைக் கட்டிக்கொண்டேன்.பெரியய்யா வீட்டில் இருந்தபோதும் என் வயதொத்தவர்களின் முன்னே நிர்வாணமாக்கிவிட்டு வேட்டியை கட்டிவிட்டார். வெட்கமாக இருந்தது.அன்று முழுவதும் சந்தோசமாக இருக்கவில்லை.இப்போது மீசை அரும்பியிருக்கிற வயது…இதில் அப்பாவின் தலையீடு அசௌகரியமாக இருந்தது..ஆனால் அப்பாவின் கோபம்…மச்சாள்மாரிடம் போய் பேசிக்கொள்வதில் சிரமம் இருப்பதை உணர கனநேரம் பிடிக்கவில்லை.மாச்சாள்மார் யாரோ சில பெடியள்களுடன் பேசிக்கொண்டு போவதைக் கண்டதும் வேட்டியின் மேல் கோபமே வந்தது.அப்பாவின் மீதான கோபம் இருப்பினும் அப்பாவின் மீதுள்ள பாசமே அதிகமாக உள்ளது.
அன்று பெரியய்யா வர அம்மா பாயை எடுத்துப்போட்டாள்.அதில் உட்கார்ந்தார்.தளப்பாடங்கள் பெரியய்யாவின் வீட்டிலிருந்து இன்னும் எடுத்துவந்திருக்கவில்லை.ஆதலினால் பாய் தான் விருந்தினர்க்கான ஆசனம்.
நிலத்தில் காலை நீட்டியோ,சப்பாணி கட்டியோ உட்காருவது சுவாரஸ்யம் தரும் செயல்தான்..புல்வெளியில் உடகார்ந்துகொள்வது…கடற்கரை மணலில் காலாற நடந்துவிட்டு கொஞ்சம் உட்காருவது….செம்மண் தரையில் அல்லது படங்கு விரிக்கப்பட்ட நிலத்தில் உட்கார்ந்து நாடகம் பார்ப்பது..கோவில் வீதிகளில் மேளச்சமா,கண்ணன் கோஸ்டி,சின்னமேளம் நடக்கையில் கோயில் மதில் முதுகைச் சாத்தியபடி காலைப் பரப்பி உடகார்ந்தால்…
அம்மா தேநீர் கொடுத்தாள். உறிஞ்சத்தொடங்கினார்.அக்காவைப் பற்றி…செம்மணி வயலைப் பற்றி,பிலாவடி வயல் பற்றியெல்லாம் கதையாகச் சொல்லிவிட்டு பேசாமல் முற்றத்து நாவல் மரத்தை வெறித்துப்பார்த்துவிட்டுச் சொன்னார்..’உவங்கள் எல்லாம் சேர்ந்து சூத்திரகிணற்றுப் பங்கை பிரிச்சாங்கள்.தனக்கு ஒண்டும் தரேல்ல’ என்றார்.அப்பாவிற்கே கிடைக்கவில்லை என்று அம்மாவிற்குத்தெரியும்..அம்மா எதுவும் சொல்லவில்லை.அம்மாவிற்கு கதை சொல்வது போல சொல்லிக்கொண்டிருந்தார்.சகோதரங்களின் சொத்துக்களை அடாத்தா அமுக்கிக்கொண்டவர்…சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுக்கப்பார்க்கிறார் என அம்மா நினைத்தாள்.இப்படிக் கதைக்கிறார் என அப்பாவிற்கும் சொல்லி ஊதிப் பெருப்பிக்க அம்மா விரும்புவதில்லை.
பழுத்து விழுந்த பனம்பழம் வெடித்து சிதறியது மாதிரிக்கிடந்தது.வெகு நேரமாகியதில் இலையான்கள் மொய்த்தவண்ணமிருந்தன..மணம் சூழலைக் குலைத்தது.அப்பா கவனமாகப் பொறுக்கி அம்மாவிடம் கொடுத்து பிள்ளைகளுக்கு பணியாரம் செய்து கொடுக்கச்சொன்னார்.நமக்கு வாய் ஊறும்…
அப்பா வளவின் மூலையில் மண் குவித்து பனங்கொட்டைகளை அழகாக அடுக்கிவைத்தால் மாதங்களாக பனங்கிழங்கு தயாராகிவிடும்.பனங்கிழங்கு புட்டுப்பானையில் ஏறிவிடும்.அம்மாவையே வாய் ஊற பார்த்துக்கொண்டிருக்க பார்த்துக்கொண்டிருப்போம்.யாரும் வந்துவிடக்கூடது என்பதில் கனமாய் இருப்போம்.பங்கு கொடுக்கவேண்டும்…நாவூறுபட்டால் சாப்பிடமுடியாது போய்விடும்.ஆனாலும்நேரம் பார்த்து பெரியய்யாவோ,பூரணம் மாமியோ வந்துவிடுவார்கள்.ஒளித்துவிடமுடியாதபடி மணம் காட்டிக்கொடுத்துவிடும்..ஒரு பங்கு அன்று குறைந்துவிடும்…
அம்மா குளிச்சுச் சுத்தமாகச் சமைப்பாள்.வெள்ளிக்கிழமைகளில் காகத்திற்கும் பூவரசம் இலையில் சோறுவைப்பாள்.
ஒவ்வொருவருக்கும் அவரவர் பிரச்சினை பெரிதுதான்..அவரிடம் இருக்கும் பணத்தைச் செலவழிக்கவே தயக்கம் காட்டுவார்.பெரியம்மா இறந்தபின் தனியாகவே வாழ்கிறார்.அக்காவிற்காக வரன் பார்த்தும் ஒன்றும் சரிவரவில்லை…அக்காவிற்குள் கொஞ்சம் பணத்திமிரும் இருப்பதும் வரன் அமையாதது காரணம்..சமைப்பதற்கு அப்பாச்சி உதவியாக இருந்தார்.அப்பாச்சியும் இங்கு வந்துவிட்டார்.பெரியய்யா நினைத்திருந்தால் வீட்டுக்கடனுக்கு உதவியிருக்கலாம்.அப்பா பணத்திற்காக அலைந்ததும்.ஒவ்வொன்றாய் விற்று கடனை சரி செய்யமுயன்றதும் அவருக்குத் தெரியாமலில்லை.அவர் போகும் போது அம்மா அக்காவிற்கும் சாப்பாடு கட்டிக்கொடுத்தாள்.அவரும் எதுவும் பேசாமல் வாங்கிக்கொண்டு போனார்.எமக்கு கோபம்.அம்மா கோபப்படவில்லை.அப்பாச்சி புறுபுறுத்தாள். ‘இருக்கிற காசுக்கு சாப்பாட்டை ஓடருக்கு சாப்பிடலாம்..வேலைக்கு யாரையும் வைத்திருக்கலாம்..நீ பழக்கிவிட அது நெடுக வரப்போகுது’அப்பாச்சியின் புறுபுறுப்பு நியாயம் எனவே பட்டது.அம்மா மௌனமாக பெரிய வாளியில் அள்ளிவைக்கபட்டிருந்த வாளித்தண்ணியில் சட்டிபானைகளை கழுவத் தொடங்கிவிட்டாள். வெளியே வந்த பெரியய்யா அப்பாச்சியின் காதில் ஏதோ சொல்லிச் சென்றதை யாரும் கவனிக்கவில்லை. அப்பாச்சி சாவகாசமான ஒருநாளில் ‘தான் அங்கை போட்டு வாறன்’ என்று சொல்லிப் புறப்பட்டாள்.
திரும்பிவந்துவிடுவார் என்று அப்பா நம்பியிருந்தார்.நாலைந்து நாட்களின் பின் வளவு பார்க்கவருவது போல வந்தார் அப்பாச்சி..போய்விட்டார்.அவர் இருப்பதும் போவதும் அவரின் விருப்பம் என்றாலும் அங்கு போவதற்கான காரணத்தையும் சொல்லவில்லை.
பழைய புன்னகை இருக்கவில்லை என்பது மட்டும் புரிந்தது.என்னவோ நடந்திருக்கிறது?என்னவென்றுதான் புரியவில்லை..வயதும் ஒரு காரணமாயுமிருக்கலாமென்று அப்பா எதுவும் கேட்கவில்லை.சிலநாட்கள் கழித்து அம்மாவிடம் ‘நாளைக்கு வா..சங்கிலியைத் தாறன்’ என்று மட்டும் சொல்லிசென்றார்.அப்பாவின் உழைப்ப்பில் வாங்கியநகைகளில் இரட்டைப்பாட்டுச் சங்கிலியை அப்பாவிடம் கொடுக்கவேண்டும்.மற்றதை சித்தாப்பவிடம் கொடுக்கவேண்டும்..அவரே தனது செத்தவீட்டுச் செலவைப் பார்ப்பார் என்றும் சொல்லியிருந்தார்.
அம்மா தான் போவதாக இருந்தது.அம்மாவுடன் நானும் போனேன்.முற்றத்தில் நாவல் பழங்கள் சிதறிக்கிடந்தன.நேற்று தங்கைகள் சில்லுக்கோடு விளையாடிய அடையாளம் மாறாமல் இருந்தது.
அன்று அப்பாச்சியைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.அழுதிருப்பாள் போலும்.
முன்பொருநாள் தனக்குக் காணி எழுதித்தரவில்லை என அப்பாச்சியை அடித்துத் துன்புறுத்தியதாக தகவல் கிடைக்கவும்,அப்பா அவசரம் அவசரமாக பஸ் எடுத்துவந்து பார்த்தால் ஒன்றும் நடவாததுபோல் சூழல் இருக்கும்.ஆனாலும் அப்பா ஊகித்துக் கொள்வார்.அப்பாச்சியின் முகம் வலியினைக் காட்டிக்கொடுத்துவிடும்.நோவெண்ணை வாங்கிக்கொடுத்துவிட்டு அன்று மாலையே திரும்பிவிடுவார்.இப்போதும் அடிவிழுந்திருக்குமோ?நாங்கள் குடியிருக்கும் காணியையும் தனக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார் பெரியய்யா.சகோதரர்களுக்கு கஷ்டத்தில் உதுவதாகக் கூறி அவர்களிடமிருந்து காணிகளையும்,நகைகளையும் கையகப்படுத்திவிடுவார்.அதுமாதிரி அப்பாவிற்குத் தருவதாகச் சொன்ன இரட்டைப்பட்டுச் சங்கிலியையும் கொடுக்க பெரியய்யா அனுமதிக்கவில்லை என்பதையே சூழல் உணர்த்தியது.
‘அடிச்சிருப்பாரோ?உந்த மனுசன் ஏன் இப்படி?’ கோபமாக வந்தது..முற்றத்து மணலை காலால் கீறிக்கொண்டிருந்தேன்.
‘இந்தச் சீமைக்கிளுவன் தடியைப் பிடுங்கி சாத்தினால் என்ன?’ ‘நீஎப்ப பெரிய மனுஷனாகினனி?’பெரியய்யா கேட்கலாம்.அம்மா கொப்பரிட்ட வேண்டிப்போடுவாய்’ என்றும் சொல்வாள்.’அதுக்குள்ள வளந்திட்டியோ?’
பேசாமல் இருந்தேன்.அம்மாவின் அழுகை அதிகரிக்க அப்பாச்சி தன் கையாலாகாத் தனத்தை எண்ணி தனக்குள் உடைந்தாள். மஞ்சவண்ணத்தடிகளால் வேலிபோட்டு நாலைந்து வரிச்சு கிடுகுகளால் வரியப்பட்டிருந்த உள்வேலிக்கப்பால் வைக்கல் குவியல் உயரமாகத்தெரிந்தது.கிட்டடியிலதான் கதிரறுத்து..வைக்கலை கொண்டுவந்து குவித்திருப்பார்கள்.ஓடிப்போய் ஏறிக்குத்திக்க ஆசைதான். வைக்கல் குவியலில் ஏறிக்குதிக்கையில் ஏற்படுகிற இன்பம் ஒரு சுகம்தான்..சுணைக்கும் என்பதெல்லாம் பிறகு…குதூகலம் மீள வராது.முந்தி ஏறிவிளையாடி அடிவாங்கியதும் ஞாபகம் வந்தது. அப்ப இருந்தநிலையில் கோபம் என்மீது திரும்பலாம் என மௌனமானேன்.
பெரியய்யாவின் வீடு பெரிய வீடுதான்.ஆனால் அங்கு இதயம் இருக்கவேயில்லை.உள்ளே போக எவருக்கும் சம்மதம் இருந்ததில்லை.உள்ளேயிருந்து சன்னல்வழியே வெளியே பார்க்கையில் சிறையிலிருப்பது போல இருக்கும் என்பதை அறிவேன்.அப்பாச்சியின் வயிற்றுப்பிள்ளகள் தான்.ஆனாலும் எத்தனை வேறுபாடு..அப்பா மட்டும் மனிதனாக எனக்குத் தெரிந்தமை வியப்பைத்தரவில்லை.அப்பா அப்படித்தான் வாழ்கிறார்.எங்களுக்கும் அப்படித்தானே வழிநடத்துகிறார்.அப்பாவின் கைகளில் பணம் புரண்டதில்லைதான்.ஆனாலும் பலருக்கும் அப்பாவைத் தெரிந்திருக்கிறதே..
‘அப்பா வராதது நல்லது தான்..வீணாய் சண்டை வந்திருக்கும்’அம்மாவின் முகம் சோகத்தில் இருந்தது….நெற்றிச்சுருக்கத்திலிருந்து தெரிந்தது.
ஒரே பாதையில் பயணித்தாலும் அவரவர் மனதில் ஒத்த கருத்துக்கள் அமையாது போனால் பாதை சீராக இருக்காது.
அம்மா எப்போதும் அப்பாவின் மனதைப் புரிந்தவளாகவே பயணம் செய்கிறாள்.வாழ்க்கையெனும் பாக்குவெட்டியின் கூர்மையில் நசுங்கிவிடாதபடியான நிதானமும் இருந்தது.கடைசிப் பெண்ணாகப் பிறந்ததினால் ஏற்கனவே திருமணமாகிய அக்காக்களின் குழந்தைகளுடன் தன்னையும் ஐக்கியப்படுத்தி வாழப்பழகிகொண்டமையும்,விவசாயத்தைக் கவனிக்கும் தந்தைக்கு உதவியாகவும் இருந்தமையினால் அப்பாவுடன் வாழ தன்னைச் செப்பனிட்டுக்கொண்டாள்.அப்பாவின் பொறுமையை நிதானத்துடன் கையாளவும்,கோபத்தை மௌன அழுகையுடன் நகர்ந்து கொள்ளவும் முடிந்திருக்கிறது.சில எல்லைகளை மற்றப் பெண்களைப்போல உடைத்துக்கொள்ளாதவளாவும் இருந்தாள் என்பதே உண்மை.
அம்மாவின் கண்கள் உள்நோக்கியே அமைந்திருக்கும்.புருவ மயிர் தடித்திருக்கும்..நல்ல நிறம்…அவளளவில் அழகுதான்…நமக்கு அம்மா ஆதலால்..அழகிதான்…
கண்மூடி விழிப்பதற்குள் எல்லாம் நடந்துமுடிந்துவிடுவது காலம் இட்ட கட்டளை போலும்…நெடு நேரமாக அழுதுகொண்டிருந்தவள் உரல் வைத்து இடிக்கும் பகுதியில் கிடந்த மண்ணை எடுத்து வீசிவிட்டு நடந்தாள்.
‘நீங்கள் நல்லா இருக்கமாட்டியள்.ஆற்றையேன் சொத்துக்களை அடாத்தா அமத்திப்போட்டு நல்லாயிருப்பியளே.வரச்சொன்னபடியால்தானே வந்தனாங்கள்…உங்கட உந்தச் சங்கிலி இல்லையெண்டால் நாங்கள் செத்துப்போயிடமாட்டம்.வாறம்..எங்களுக்கும் காலம் வரும்..’
அம்மா அப்படிப் பேசிப் பார்த்ததில்லை.
அம்மாவின் கோபம் அவளின் நடையில் தெரிந்தது.ஒழுங்கை கிறவல் மண்ணும் சுட்டது போலிருந்தது. நாம் வந்திருக்கக்கூடாது.இப்படியொரு சூழல் வந்திருக்காது.யாரின் பிழையெனினும் ஜென்மப் பகையாகிவிட்டதே..யாரும் கொண்டுவந்ததுமில்லை..கொண்டு போவதும் இல்லைதான்.என்றாலும் மனிதன் தவறிழைத்தபடியே இருப்பதேன்? கிராமசபையால் றோட்டு போடவென்று ஓரமாகக் கொட்டப்பட்டிருந்த கற்குவியல் ஒழுங்கையிலும் சிதறிக்கிடந்தது.
தூரமாக வந்த சோமண்ணை வையவர் கோயில் ஒழுங்கைக்குள் திரும்பினார்.அவர் கண்டிருப்பாரோ? கண்டிருந்தால் நின்று கதைத்திருப்பார்.நல்ல மனிதர்.வீதியால் போகும்போதே அவரின் சைக்கிள் கிரிச்..கிரிச் சத்தத்தினால் அவர்தான் எனத் தெரிந்துவிடும். அம்மாவும் கனக்கக் கதைக்காட்டிலும் தெரிந்தவர் எனில் புன்னகைப்பார்.இன்று அம்மாவின் முகம் அழுகையும்,கோபமும் அழகாய் இல்லாமல் இருந்ததோ?
அம்மா நல்ல நிறம்.அம்மாவின் சகோதரிகள் கொஞ்சம் நிறம் குறைவு.மாமாவும் அம்மாவைப்போல நல்ல நிறம்.வீட்டில் கடைக்குட்டியாதலால் செல்லமாக வளர்ந்திருக்கலாம்.வயலில்,தோட்டத்தில் விளைவது வீட்டில் நிறைந்துகிடந்திருப்பதால் சாப்பாட்டிற்குக் குறைவிருந்திருக்காது.கஷ்டம் என்று தெரியாவிட்டாலும் நன்றாக இருந்திருப்பாள்.
அம்மா எப்போதும் நடு உச்சி பிரித்து அழகாக தலைவாரி பெரிதாக குங்குமப்பொட்டிட்டே வெளிக்கிடுவாள்.பழைய நூல் சேலையத்தவிர வேறெதுவும் கட்டிப்பார்த்ததில்லை.ஆடம்பரப்பிரியையுமில்லை.அதே அம்மா பரக்கப் பரக்க நடந்துகொண்டிருந்தாள்.ஏமாற்றம்…அலைக்கழிப்பு..கோபம் அவளைச் சூழ வேலிகட்டியிருந்த சூழலை மாற்ற எண்ணி பாட்டொன்றை முணுமுணுத்தேன்.அம்மாவின் முறை தொடரமுடியவில்லை..பொன்னம்மா வீட்டு நாயும் தன்பங்கிற்கு குரைத்து ஓய்ந்தது.
நாய் வெளியே வராது.கருக்குமட்டைகளினால் அழகாக வரிசையாக அடுக்கி அழகாய்த் தெரிந்தது.அந்த வரிச்சை மீறி நாய் வந்துவிடாது.ஆனாலும் நாய் இரண்டு தடவை கடிவாங்கிய அனுபவம் கொஞ்சம் பயம். அம்மா எதையும் சட்டை செய்யாமல் நடந்தாள்.
அம்மாவிடம் பேச்சுகொடுத்தால் வேலிமட்டையைப் பிடுங்கி அடித்தாலும் அடிப்பாள்.கிறவல் மண் அம்மாவின் கால்களில் படிந்திருந்தது.வேலிவரிச்சில் கிடந்த ஈக்கிளை உருவி எடுத்து பல்லை தோண்டமுனைந்தேன்..அப்புக்காத்து வெளிவளவிற்குள் யாரோ பட்டம் விட்டுக்கொண்டிருந்தார்கள்.மனது துருதுருத்தது.விளையாடப் போகும் நிலையில் இல்லை என்பதும் வருத்தமாக இருந்தது.
வாழ்க்கை பலருக்கு சுவாரஸ்யத்தை தருவதில்லை போலும்.
நாட்கள் கடந்தன.
வெளிக்கதவு அதிகமான நேரங்களில் சாத்துவதில்லை.விறாந்தையைக் கூட்டியபடி வந்த தங்கைக்கு விறாந்தையில் குந்தியிருந்த அப்பாச்க்cஇயைக் கண்டதும் அதிர்ச்சியும்,ஆச்சர்யமும் அடைந்தாள்.புன்னகைத்தபடி ‘உள்ள வாங்கோவன்’ என்றவளிடம் மறுவார்த்தை பேசாமல் ‘இந்தா..கொம்மாட்டைக்கொடு’ என்று சொல்லிய்படி இரட்டைப்பட்டுச்சங்கிலியை கொடுத்தாள்.வாங்கச் சங்கடப்பட்டாலும் வாங்க்காமலும் இருக்கமுடியவில்லை தங்கைக்கு.தருவது அப்பாச்சியல்லவா?ஆனாலும் இதற்காகத்தானே அண்டைக்குப் பிரச்சினை வந்தது’ என்றும் நினைத்தாள்.உள்ளே போய் சங்கிலியை தேயிலைப் பேணிக்குள் அடைத்துவிட்டு, தேநீருடன் வந்தாள்.அதற்குள் அப்பாச்சி சென்றுவிட்டிருந்தாள்.அம்மா வர எல்லாம் சொன்னாள்.
தேநீர் ஆறிப்போய் இருந்தது.’அவ அப்பாவைப்போல பிடிவாதக்காரி..ஓர்மம் அதிகம்’ என்றாள் அம்மா.அப்பாவைச் சரியாகணிக்கமுடிந்திருக்கிறது அம்மாவால்..எத்தனை வருட குடித்தன வாழ்க்கை.அன்றைய நிகழ்விற்குப்பிறகு பெரியய்யா எதுவும் நடவாதது போல வந்துசென்றார்.அப்பாவும் பேப்பர் வாங்கப்போகும் நேரத்தை மாற்றியிருந்தார்.ஏதாவது ஒரு சாக்கை பெரியய்யவிற்கு சொல்லுவார்.பேப்பரை வாசிக்கமுதல் யாராவது எடுத்துப்போனால் அதன் சுவாரஸ்யம் குன்றிப்போகும் என்பது அப்பாவைப்போன்ற வாசகர்களைத்தான் கேட்கவேண்டும்.பெரியய்யாவிற்காகத்தான் அப்பா சாட்டுச் சொல்வது நமக்குப் புரிந்தது. ‘கோபத்தை இப்படியும் காட்டலாமோ?ஒரே தாய்வயிற்றுபிள்ளைகளிடையே எத்தனை வேறுபாடுகள்?
வெளியே வானம் தெளிந்திருந்தது.
அப்பாச்சி வருவதை நிறுத்தி மாதங்களாயிற்று.
மழை தூறத்தொடங்கியது.
அன்றுதான் அந்த அதிர்ச்சியான செய்தி கிடைத்தது.
அப்பா பரபரத்தார்.அம்மா அப்பாவின் கைகளைத் தாங்கிக்கொண்டார்.
அப்பாச்சி இறந்துவிட்டதாக அச் செய்தி அமைந்தது.
‘நல்லா கதை சொல்லும் அப்பாச்சி எனி இல்லை’
‘பாடச் சொல்லிக் கேட்கமுடியாது..’
அப்பா அதிர்ந்துபோய் உடகார்ந்தமை நமக்கும் அதிர்ச்சியாய் இருந்தது.அப்பா பாவம்…தனக்கு என்று எதையும் சேமித்துவைக்கத் தெரியாதவர்.யாவருக்கும் அன்பையே கொடுக்க நினைப்பவர்.அம்மா அப்பாவின் கைகளை அழுத்திப்பிடித்தபடி ‘தேத்தண்ணி தரட்டே’எனக் கேட்க அப்பா எதுவும் பேசாது அமையாக இருந்தார்.
அம்மாவும் பாவம்.அப்பா மீதான பாசத்தை அன்றுதான் நாமும் உணர்ந்தோம்.அம்மாவின் அம்மா இறந்தபோது திருகோணமையில் இருந்தமையும்,கர்ப்பமாக இருந்தமையின் உடன் வரமுடியவில்லையாதலாலும் தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை.அது இப்போது அப்பாச்சியின் மரணம் அவளையும் அசைத்துப்பார்த்திருக்கிறது. அம்மம்மாவின் ஸ்பரிசம் நமக்கும் கிடைத்ததில்லை.அம்மாவின் அப்பாவை ஒருமுறை பாரக்கப்போனபோது கயித்துக்கட்டிலில் சுருண்டுபோய்க் கிடந்தார்.மா தான் குளிப்பாட்டிவிடுவார்.அதிகமான நாட்களில் கோவணத்துடனேயே கட்டிலில் கிடப்பார்.அப்போது பார்த்ததுதான்.
அப்பா அம்மாவிற்கென்று எதையும் வாங்கிக்கொடுத்ததில்லை.சம்பளத்தை அப்படியே அம்மாவின் கையில் கொடுப்பார்.தேவையானபோது அம்மாவிடம் பெற்றுக்கொள்வார்.மற்றவர்களைப்போல பேர்ஸ் கொண்டிதிரிபவரில்லை.யாழ்ப்பாணம் வந்தபின் செலவு அதிகமாக சம்பளப் பணத்தை கடனை அடைக்ககொடுத்துவிடுவார்.பிறகும் கடன் தொங்கும்.பலசரக்குக்கடைக்கு…மரக்கறிக்காரிக்கு…தவிடு பிண்ணாக்கு,அரிசி வாங்கிய கடனுக்கு என பிய்த்தது போகவே கொப்பி வாங்கவும்,ரியூசனுக்கும் என நமக்குக் கிடைக்கும்.
செலவாளியில்லை.எனினும் கடன் இடிக்கும்.
அப்பாவைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.
யாரோ கொழும்புக்கும் தகவல் சொல்லிவிட்டார்கள்.
இறுதிக் கிரியைகளுக்காக முத்துலிங்கம் மாமாவும்,இரதநாயகம் மாமாவும் ஓடிதிரிந்தனர்.
கொழும்பிலிருந்து வந்த சித்தப்பா கொஞ்சமாக அழுதுவிட்டு ஓரமாகப் போய் இருந்துகொண்டார்.அசல் கொழும்பு வாழ்க்கைக்குப் பழகிவிட்டவர் போலவும் நடந்துகொண்டார்.
பெரியய்யா மூலையில் முடங்கிக்கிடந்தார்.
வாசிகசாலைப் பெடியள் பந்தல் கட்டுவதிலும்,ஓடி ஓடி உழைத்தவண்ணமிருந்தனர்.வாசிகசாலை தொடங்கியதில் அப்பாவின் குடும்பத்தினர்க்கும் பங்கிருந்தது.அவரவர் குடும்பம்,தொழில் எனத் தூரமாகிப் போனாலும், ஒன்றுசேர்ந்து ஏதாவது பங்களிப்பை வழங்கியவண்ணமே இருப்பார்கள். பொங்கல் விழா,ஆண்டுவிழா,சரஸ்வதி பூசை என நடைபெறும்.பத்திரிகைகள் ஒன்றிரண்டு வரும்..அப்பா போவதில்லை.நாங்களும் போவதில்லை..நாடகம் பார்க்க போவதுண்டு.
அப்பா மீதான மரியாதை பலரையும் கூடச்செய்திருந்தது என்பதே உண்மை.
அப்பாச்சி எனி இல்லை.
அவள் இல்லை…அவளின் பேச்சை கேட்கமுடியாது.காதில் தொங்கும் கடுக்கனை ஆட்டியபடி…பொக்கை வாயால் ஏதாவது குதப்பியபடி,பூவசர்ம் இலையில் பீப்பி செய்து அதனை தானும் ஊதி எங்களையும் ஊதத்தருகின்ற,ஏதாவது புறுபுறுத்தபடி, ஏதாவது கதை சொல்லியபடி,கூனல் விழுந்த உடலை அசைத்து அசைத்து துவரந்தடியால் ஊன்றிய வீதியில் தனித்து நடக்குமே அந்த ஆச்சி எனி இல்லை..
எங்கள் உறவுகளில் அதிக காலம் வாழ்ந்தவள் அப்பாச்சிதான்.அப்பா உடைந்து அழுதார்.அம்மா பெண்களுடன் கூடி ஒப்பாரிவைத்து அழுதுகொண்டிருந்தாள்.
தாங்கமுடியாத காட்சி..வானம் ஏனோ இறுக்கமாய் இருந்தது.
ஒளித்துவிளையாடுகையில் மருதமர வேருக்குள் ஒளிந்துகொள்ளும் போதெல்லாம் செல்லமாய் கைகளைக் காட்டிக்கொடுத்துவிடுவாள்.மருதங்காய்களுடன்,சருகுகளும் கனநாளைக்கு அப்படியே கிடக்கும்…வளவெல்லாம் இலுப்பைக்கொட்டைகளை பொறுக்கிச் சேர்த்துதரமாட்டாள்.இனிப்புப் புளியம்பழங்களை உடைத்து சாப்பிடு சாப்பிடு என தரவும் ஆளில்லை.
அப்பா எவ்வளவு பாசத்தை உள்ளுக்குள் கட்டிவளர்த்திருக்கிறார்?இதுவரை மௌனமாகக் கடந்துவந்தவர் இப்போது குலுங்கிக் குலுங்கி அழுவதைப்பார்க்க நமக்கும் அழுகையாய் வந்தது.தந்தை இறந்து போக தன்னைத் தானே உழைப்பாளியாக்கி அம்மா என்ற பெற்ற தெய்வத்திற்கு சம்பளத்தை அனுப்பியது மட்டும் தான் நமக்குத் தெரியும்.அம்மாவின் மீதான பாசத்தை இவ்வளவு வைத்திருந்தாரா என இப்போதுதான் பார்க்கமுடிந்தது.’அப்பா ஒரு அமசடக்கை’ எனப் பலரும் சொல்வதுண்டு.உண்மையோ என இப்போது உணரமுடிகிறது.
சின்னத்துரை மாமா பாரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தார்.
யாரோ நெய்ப்பந்தங்களைத் தயாரித்துக்கொண்டிருந்தனர். திருமணம் மனிதர்களைத் தனித்தனி தீவுகளாக்கிவிடுகின்றன.ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்தான்.அப்பா தனி..சித்தப்பா,பெரியய்யா தனித்தனி..மூலையில் அப்பாச்சியின் துவரந்தடி தேடுவாரற்றுக்கிடந்தது.
எப்பவாவது அப்பாவின் கோபம் அம்மாவைக் காயப்படுத்தியிருக்கலாம்.ஒரு பாட்டம் கோபத்தில் அழுது தீர்த்துமிருப்பாள்.தொடர்ச்சியான அழுகையோ,சிடுமூஞ்சியாகவோ பார்த்ததில்லை.ஆனால் இன்று அம்மா வெடித்து அழுதுகொண்டிருந்தாள்.சின்னம்மா கூட வந்து யாரோ போல குந்தியிருந்து பெண்களுடன் அழுதாள்.வெறும் நடிப்பாகவே தெரிந்தது.ஆனால் அம்மாவின் அழுகையை எம்மால் கண்கொண்டு பார்க்கமுடியவில்லை.
அம்மா என்பதால் கொஞ்சம் கரிசனை அதிகமாக இருந்திருக்கலாம்.சித்தப்பா ஒப்புக்கு கண்களைத் துடைத்துக்கொண்டிருந்தார்.பெரியய்யாவிற்கு முன்னரே மனைவி இறந்த சோகமும் இப்போது ஞாபகம் வந்திருக்கலாம்.
அப்பாச்சியின் அண்ணரின் மகளையே திருமணம் செய்துமிருந்தார்.மனைவியின் பெயரையே வீட்டிற்கும் வைத்திருந்தார்.
யாரோ திடிரென கையில் நெய்ப்பந்தத்தை தந்து சென்றது பூமிக்கு வரவழைத்தது.
தேவரண்ணை பாடிக்கொண்டிருந்தார்.
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
அப்பாச்சியை மரக்கட்டிலில் கிடத்தியிருந்தார்கள்.குளிக்கவார்த்து..வெள்ளைச் சேலையுடன் நீட்டி நிமிர்ந்து படுத்திருந்தது போல கிடத்திவைத்திருந்தார்கள். அப்பாச்சி நிகழ்வுகளைக் கொண்டாடியதில்லை.யாழ்ப்பாணத்திற்கு விடுமுறைக்காக புறப்படும் போது அம்மா வாங்கிக்கொடுத்த வெள்ளைச்சேலையைதான் அவளுக்கு உடுத்தியிருந்தார்கள் என உணரும் போது நெஞ்சைப் பிழிந்தது.இளமையில் அவள் அழகாக இருந்திருக்கலாம்.நாம் பார்க்கத்தொடங்கிய நாளிலிருந்து கூனல் கிழவியாகவே இருந்தாள்.இப்போது மல்லாக்க கிடப்பதை முன்னர் பார்த்ததுமில்லை.அதிகமான நேரங்களில் ஒருக்கழித்தே படுத்திருப்பாள்.அதுவே அவளுக்கு சௌகரியமாக இருந்திருக்கும்.
உடலிலிருந்து ஏதோ உதிர்ந்ததுபோல ஒரு உணர்வு…
வயதாகி இயற்கையாக மரணித்திருந்தாலும் இழப்பை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
‘அப்பாச்சி பாவம்’ மரணம் பற்றிய தெளிவு இல்லாவிட்டாலும், இரத்த உறவின் பிரிவு மனதை ஆட்டிப்படைக்கவே செய்கிறது.அப்பாவின் அம்மா தான்..எனினும் ஒரு பரம்பரையின் அடிநாதம் அவளல்லவா? வேர்களில் ஒன்று அறுபட்டதான உணர்வு.. வளர்ந்தபிறகு சந்ததித் தொடர்ச்சி அப்பாச்சியிலிருந்தே ஆரம்பிக்கலாம்.அப்பாவிற்கும் மறந்து போகலாம்.
தூரத்திலிருந்து வேப்பம் பூக்களின் வாசம் காற்றில் வந்தது.
வெய்யிலின் உச்சம் கண்களைக் கூசவைத்தது.அக்காவைக் காணவில்லை.கண்கள் தேடின.அண்ணரும் அண்ணியும் வரவில்லை என்பதை உணரமுடிந்தது. பறைமேளம் அவற்றின் மொழியில் பேசிக்கொண்டிருந்தன. இசையை ரசிப்பவர்களுக்கு பறையின் ஒலி ஏதோ ஒன்றை இசைக்கும்.இல்லையெனில் செவிப்பறை கிழிகிறது என புலம்பவைக்கும்.
‘நாங்கள் இஞ்ச கனகாலம் இருக்கக்கூடாது..பிள்ளைகளுக்கு சொந்தங்கள் பற்றி மறந்துபோகும்.அதானால் தான் நாங்கள் மாற்றலெடுத்துப்போகிறோம்..பிள்ளைகளின் எதிர்காலம் பற்றியும் சிந்திக்கவேண்டியிருக்கிறது..ஒரு காலத்தில அரசியலும் எங்களைப் பிரிச்சுப்போடும்..’சிவராமலிங்கம் மாமா சொல்லியபடி யாழ்ப்பாணம் வந்திருந்தார். இப்போது அப்பாச்சியின் மரணம் சொந்தத்தின் அருமைபற்றி புரியவைத்துள்ளது.
அப்பாச்சி தன் பிள்ளைகளுக்காக உழைத்திருக்கிறார்.அப்பா நமக்காக உழைக்கிறார்.அப்பாவை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.அழுகை அழுகையாக வந்தது.
அப்பாச்சிக்கு கொள்ளிவைக்க சின்னையா மறுந்துவிட்டார்..ஏதேதோ காரணங்களை அடுக்கிக்கொண்டிருந்தார்.மிகக்கவனமாக நகைகளை வாங்கிக்கொண்டார்.
கடைசியிலும் கையறுநிலையை அப்பா புரிந்துகொண்டார்.
அம்மாவைப்பார்த்தார்.அப்பாவின் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட அம்மா தன்னைத் தயார்படுத்திக்கொண்டாள்.
இந்த சோகத்துக்கிடையிலும் மனது பக்கத்து வளவுக்குள் போக பரபரத்தது.பந்துவிளையாடிக்கொண்டிருப்பவர்களுடன் இணைந்துகொள்ளலாமோ என மனது குறுகுறுத்தது. அப்பாச்சியைச் சுற்றி நின்றாலும் ஐயருக்குக் கொஞ்சம் தூரமாக நிற்கவேண்டும்போலிருந்தது.ஐயர் திடிரென தேவாரம் படி எண்டால் ஏலாது எண்டு சொல்லேலாது.தேவாரம் தெரியவில்லை என அடிவிழும்..
‘வாங்கோவன் பிள்ளைகள்..வரிசையாய் சவத்தைச் சுத்தி நில்லுங்கோ’..
வரிசையில் நிறுத்தப்பட்டாலும்,சடுதியாக அப்பாச்சியை சவம் என்று சொன்னதும் தாங்கமுடியவில்லை.ஓங்கிக் கத்தவேண்டும் போலிருந்தது. ‘யார் உங்களுக்கு அதிகாரம் தந்தது…சவம் எண்டு சொல்ல எவ்வளவு தைரியம் வந்தது..?’
சூழ்நிலை கத்துவதற்காக அமையப்பெறவில்லை என உணர்ந்ததும் ,அப்பாச்சியை கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். ‘எணை ஆச்சி…எழும்பணை..நான் சவம் இல்லை..ஒரு மனுசி எண்டு சொல்லணை’ அப்பாச்சி அசையாமல் கிடந்தாள்.நிலைமை கட்டுப்பாட்டில் இல்லை.ஒவ்வொருவரும் ஓடித்திரிந்து அலுவல்களைப் பார்த்துக்கொண்டிருந்தாலும், சூழல் இறுக்கமாக இருந்தது.அம்மா அப்பாவைப் பார்த்தாள்.அதற்குள் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன.வெயில் உச்சத்தைத் தொட்டது.அதிக பிள்ளைகளைப் பெற்றும் கடைசியில் பெரியய்யா,சித்தப்பா,அப்பா ஆகியோரே எஞ்சி நின்றனர்.இருந்தும்,அப்பாச்சியின் இறுதிக் காரியங்கள் தடைப்பாட்டுவிடுமோ என இழுபறி நடக்க,அப்பா உசாராகி அக்காரியத்தைச் செய்தார்.அப்பாச்சி தந்த இரட்டைப்பட்டுச் சங்கிலி அவளின் இறுதிக்காரியத்திற்காக ஏற்படும் செலவிற்கு பயன்பட அடைவுகடைக்குச் சென்றது.
எல்லாம் ஆயிற்று. பெரியய்யாவின் வீடு பெரியதுதான்.ஆனால் அவரின் மனது அதுபோல இல்லை.ஆறு மணியானால் கூட விளக்கேற்றாத வீடு..முன்னர் அப்பாவின் அக்கா கொஞ்சநாள் அங்கிருந்தபோதும்…அப்பாச்சி வாழ்ந்திருந்தவரைக்கும் குசினி லைட் எரியும்.அதுவும் கொஞ்சநேரம்தான்.சாமி அறையிலாவது விளக்குப்போடும் மனம் யாருக்கும் இருந்ததில்லை.பெரியய்யா ஏதாவது சொல்லிவிடுவார் என்கிற பயம்..எனி அப்பாச்சி இல்லை என்றானபின் குசினி விளக்கும் எரியாது.கதிரனும் வெள்ளச்சியும் அவ்வப்போது வந்து மா இடிக்கவெனெ போடப்பட்ட பத்தியும் எனி யாரும் புழங்கப்போவதில்லை.சின்னய்யா கொழும்பைவிட்டு வரமாட்டார்.அப்பாச்சியைப் பார்க்க உரிமையோடு வரமுடிந்திருக்கிறது.எனி அதுவும் இல்லை.கொழும்புவாசியாகிவிட்டார்.அப்பாச்சிக்காகவென நிறையபேர் வந்திருந்தனர்.மாதகலிலிருந்தும்,நாயன்மார்கட்டிலிருந்தும் உறவுக்காரர்கள் வந்திருந்தனர்.’சொந்தம் விட்டுப்போகக்கூடாது’ என்று சிவராமலிங்கம் மாமா யாழ்ப்பாணம் மாற்றலாகி போகையில் சொன்னது ஞாபகம் வந்தது.உண்மைதான்.அப்பாவும் அதே கருத்தை உள்வாங்கியதால்தான் தனது மாற்றலுக்காக விண்ணப்பத்தையும் அனுப்பியிருந்தார்.இப்போது அப்பா உணர்ந்திருக்க வாய்ப்புண்டு.மனிதர்களிடத்தில்,மிருகங்களிடத்தில், மலர்கள்,செடிகளின் மீதான தனது அன்பை,கரிசனையை,பிரியத்தை மௌனமாக வெளிப்படுத்தியே வந்திருக்கிறார்.அப்பாச்சியும் அப்படித்தான் வாழ்ந்திருக்கிறார்.இறுதி வழியனுப்பு நிகழ்விற்கு வந்திருந்த சனம் பந்தலை நிறைத்திருந்தது.இளையவர்கள்,முதியவர்கள் என பலரும் சோகத்தில் காட்சிதந்தனர்.பெரிய திண்ணையை இடித்துவிட்டு பெரிதாக விறாந்தையாக்கியிருந்தார்.இதுதான் பெரியய்யா போன்றவர்கள் குறுகிப்போனார்கள். எல்லாமும் ஆகி அப்பாச்சியை தூக்கி பாடையில் வைத்தார்கள்.தண்டிகை வடிவத்தில் அமைந்திருந்தது அந்த பாடை.
ஐயர் ஏனோ அவசரப்படுத்தினார்.
பெண்கள் அனைவரதும் ஒப்பாரி வானுயர ஓங்கி ஒலித்தது.அப்பா கொள்ளிக்குடத்துடன் நடக்க,அப்பாச்சியின் ஊர்வலம் மெதுவாக செம்மணியை நோக்கி நகர்ந்தது.
அப்பாச்சியின் ஞாபகங்கள் எங்களுக்கு கனதியானவைதான்.சித்தப்பா எல்லாம் முடிந்ததும் ரயிலேறக்கூடும்..பெரியய்யா பெருமூச்சொன்றுடன் வாழப்பழகிவிடுவார்.
அப்பா….!
பறையின் ஒலி வானத்தை நிறைத்தது.
‘பாழ்பட்ட கிழவி பாயை விட்டெழும்படி…பாழ்பட்ட கிழவி பாயை விட்டெழும்படி..’
முல்லைஅமுதன்
15/07/2022