பாச்சுடர் வளவ. துரையன்
வாழ்த்து
எடுத்த பணி இனிது நிறைவேறியது குறித்து மகிழ்ந்த இந்நூலாசிரியர் ஒட்டக்கூத்தர் நன்றிக் கடனாகவும். நல்வாழ்த்தாகவும், தம்மையும், தமிழையும் தமிழ் மக்களையும் காத்தருள் செய்த, செய்யும் கடவுளரைக் காவலராய் விளங்கும் மன்னர்களைப் போற்றிப் பாடி நூலை நிறைவு செய்யும் பகுதி இதுவாகும்.
====================================================================================
இஞ்சியின் வல்உரு மேறுகிடந்த
வஞ்சியின் வாகை புனைந்தவன் வாழியே. 800
[இஞ்சி=மதில்; வல்=வலிமை; உருமேறு=இடிஏறு; வஞ்சி=சேரநாட்டின் தலைநகரம்; வாகை=வெற்றியின் சின்னம்]
கோட்டையின் மதில்கள் மேல் மழைமேகம் இடி ஏற்றுடன் தவழும் சேர மன்னனின் வஞ்சி மாநகர் சென்று அவனை வென்று வாகை சூடிய இராசராசன் வாழ்க.
=====================================================================================
வில்லவன் வில்லர் மாகோதை விடாத ஓர்
வல்லவன் வல்ல பிரான்மகன் வாழியே. 801
[வில்லவன்=விற்கொடி உடையவன்;=வில்லர்=சேரர் பிரான்; பெரியோன்
வில்லைக் கொடிச்சின்னமாகக் கொண்ட சேர மன்னனின் மற்றொரு தலைநகராம் மாகோதையை வென்ற வலிமை உடைய பெரியோன் வாழ்க.
=====================================================================================
குறுகு முடுக்கும் இலங்கு பொலங்கொடி
மன்னவர் மன்னன் வரோதயன் வாழியே. 803
[குறுகு=குறுகிய; முடுக்கு=மூலை;இலங்கு=விளங்கும்; மறுகு=தெரு]
குறுகிய மூலைமுடுக்கு வீதிகளில் சோழர் பொற்கொடி புலிக்கொடி பறக்கவிட்ட பெரியோன் வாழ்க.
=====================================================================================
தென்னவர் தென்மதுராபுரி சீறிய
மன்னவர் மன்னன் வரோதயன் வாழியே. 804
[தென்னர்=பாண்டியர்; சீறிய=சினந்த; வரோதயன்=மேன்மை உடையவன்]
தென்னவர் பாண்டியர் தலைநகர், தென்மதுரையைப் போரிட்டு வென்ற மன்னர் மன்னன் இராசராசன் வாழ்க.
=====================================================================================
தில்லை வனம் கடவுள் கற்பக
வல்ல வனம் பெற வந்தவன் வாழியே. 804
[கற்பகம்=தேவர் உலக மரம்]
தில்லை வனமாக இருந்த சிதம்பரத்தில் தெய்வத்தன்மை பொருந்திய பெரிய கற்பக மரச் சோலை கண்டவன் வாழ்க.
=====================================================================================
மீனவன் மீனவர் ஏக விடுபடை
மானதன் மான பராயணன் வாழியே. 805
[மீனவபாண்டியர்; ஏக=தோற்றோட; மானதன்=மக்களில் சிறந்தவன்; மானபராயணன்=மக்களன்பன்]
மீனைக் கொடியிலே சின்னமாகக் கொண்ட பாண்டியர்கள் தோற்றோடப் படை நடத்திய மக்களில் சிறந்தவன் மானபராயணன் வாழ்க.
=====================================================================================
ஆன் நிரை தந்து அதில் ஐம்மடி மும்மத
மான் நிரை தந்த பிரான் வாழியே. 806
[ஆன்நிரை=பசுக் கூட்டம்; ஐம்மடி=ஐந்து மடங்கு; மும்மதம்= கன்ன மதம்; கபோல மதம்; மதநீர்; மான் நிரை=யானைக் கூட்டம்]
ஆன் நிரை கவர்ந்து கொண்டு வந்து, அதைப் போல அதற்குப் பதிலாக ஐந்து பங்கு யானைக் கூட்டத்தைப் பெற்றுத் தந்த பேராளன் வாழ்க.
=====================================================================================
பார் தருவார் பெற மாறில் பசும்பொன்
தேர் தரு மாபரமேசுவரி வாழியே. 807
[கேசரி=சிங்கம்; பரகேசரி=பகைவர்களுக்குச் சிங்கம்]
போரிலே வெற்றி பெற்று நாட்டை விரிவாக்கிய படைத் தளபதிகளுக்குப் பசும்பொன்னாலான தேர்களைப் பரிசாகத் தரும் பரகேசரி மாமன்னர் வாழ்க!
====================================================================================== கூடம் எடுத்த குளத்தொடு கோபுர
மாடம் எடுத்த பிரான்மகள் வாழியே. 808
[குடம்=மணிமண்டபம்; மாடம்=கோபுர நிலைமாடம்]
கோயில் மண்டபமும், திருக்குளமும் பல மாடக் கோபுரமும் எடுத்துக் கோவில் திருப்பணி செய்த மன்னர் மகன் வாழ்க.
====================================================================================
கோயில்முன் ஏழ்நிலை கொண்டதோர் கோபுர
வாயில் வகுத்த பிரான் மகன் வாழியே. 809
[வாயில்=வாசல்; வகுத்த=உண்டாக்கிய]
தில்லைக் கோயில் முன் ஏழ்நிலை மாடக் கோபுரம் திகழ்வாயில் அமைத்த பெருமான் மகன் வாழ்க.
=================================================================================
எண்தரு திக்கினில் திலையில் எல்லையில்
மண்டபம் வைத்த பிரான்மகன் வாழியே. 810
[எண்தரு=எண்ணும்; பிரான்=இராசராசன்]
எண்ணக் கூடிய எல்லாத் திசைகளிலும் மண்டபம் உண்டாக்கிய மாமன்னன் வாழ்க.
=====================================================================================
இறையவன் இராச புரந்தரன் ஏத்தும்
மறையவர் வாழி! மகத்தவர் வாழியே! 811
[மறையவர்=வேதம் ஓதுவோர்; மகத்தவர்=வேள்வி செய்வோர்]
மக்களுக்கு இறை போன்ற இராசபுரந்தரன் என்னும் இராசராசன் போற்றும் மறையவர் வாழ்க! அந்தணர் வாழ்க!
=====================================================================================
வாழிய மண்டல மாமால்வரை வாழிகுடக்கோழி மாநகர்
வாழிய வற்றாத காவிரி வாழி வரராச ராசனே. 812
வாழிய சோழ மண்டலம்! வாழிய மாமலை கொல்லிமலை. வாழி மேற்குக் கோழிநகர் உறையூர்! வாழிய வற்றாத காவிரி ஆறு. வாழ்க வரராசராச மாமன்னன்.
=====================================================================================
ஆக்கம் பெருக்கும் மடந்தை வாழியே
ஆற்றங்கரைச் சொற்கிழத்தி வாழியே
கோக்கும் தமிழ்க் கொத்து அனைத்தும் வாழியே
கூத்தன் கவிச்சக்கர வர்த்தி வாழியே. 813
செல்வம் பெருக்கும் இலக்குமி தேவி வாழ்க. அரிசிலாற்றங்கரைச் சொல்லரசி சரசுவதி வாழ்க. தமிழ்ப்பாடல்கள் வாழ்க. கூத்தபிரான் கவிச்சகரவர்த்தி வாழ்க.
=====================================================================================
வாழி தமிழ்ச்சொல் தெரிந்தநூல் துறை
வாழி தமிழ்க்கொத்து அனைத்து மார்க்கமும்
வாழி திசைக்கு அப்புறத்து நாற்கவி
வாழிகவிச் சக்கரவர்த்தி கூத்தனே. 814
சொல் தெரிந்த நூல் இலக்கணம் வாழ்க. தமிழ்க் கொத்து இயல்,இசை,நாடகம் வாழ்க. ஆசு, மதுர, சித்தார வித்தரக் கவி நான்கும் திசை எங்கும் பரவி வாழ்க. வாழ்க கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.
=====================================================================================
தக்கயாகப் பரணி மூலமும் விளக்க உரையும் நிறைவுற்றன
- சொப்கா பீல் குடும்பமன்றம் ஒன்றுகூடல் – 2022
- அகம் புறம்
- இது போதும்..
- தேன் குடித்த சொற்கள் !
- முடிவை நோக்கி !
- தக்கயாகப் பரணி [நிறைவுப் பகுதி]
- திண்ணை இதழ் ஜனநேசன் படைப்புக்கு விருது
- கைப்பேசிக்குள் நிகழ்ந்த கவர்ச்சி நடனம்.
- நிமித்தங்கள்
- பூமியில் அடித்தட்டு அதிர்வுப் பெயர்ச்சி இல்லாது [Plate Tectonics] உயிரினங்கள் பெருகச் சூழ்வெளி உதவியிருக்க முடியாது
- பாலியல் அத்துமீறல் இல்லாத பிரதேசத்திலிருந்து ஒரு வெளியேற்றம்..