குமரி எஸ். நீலகண்டன்
75 வது சுதந்திரத் திருநாளின் முந்தைய நாள் ஈரோடு புத்தக கண்காட்சியில் சிவகுமார் அவர்களின் திருக்குறள் 100 உரை கேட்டேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே வள்ளுவரே உலகின் மூத்த மொழியான தமிழ்வழி உலகம் உய்வதற்கு உன்னதமான அறக் கருத்துக்களை ஈரடி குறளில் இனிமையாக தந்து விட்டார். அதன் பின் தலைமுறை தலைமுறையாக அந்தக் குறளை மக்களிடம் சேர்க்க அறிஞர்கள் பலரும் வெவ்வேறு உத்திகளைக் கையாண்டு வந்திருக்கிறார்கள். அந்தந்தக் காலத்து மொழி நடையில் பல்வேறு உரைகள் வெளி வந்தன. எளிமையாக உரை சொன்னார்கள். குறள்களை மேற்கோளிட்டு சுவைபட பேசினார்கள். பல கதைகளோடு சொன்னார்கள். அரசியல் உரைகளிலும் பட்டி மன்றங்களிலும் மேற்கோளிட்டுப் பேசினார்கள். பள்ளிகளிலும் படித்தார்கள். பேருந்துகளிலும் குறள் வாசகமாய் பயணித்தது. எல்லாவற்றிற்கும் ஓரளவு பயன் கிட்டியது.
திருக்குறள் என்ற அற நூலின் அனைத்து கருத்தியலையும் ஒட்டி வாழும் மனிதர் சிவகுமார். அத்தோடு திருக்குறளின் குறள் வழி வாழ்ந்த மனிதர்களோடு வாழ்ந்து அவர்களின் கதையை உற்றுணர்ந்து உணர்வு பூர்வமாக இந்த சமூகத்திற்கு கூறி அந்தந்தக் குறளின் கதா பாத்திரங்களாக அவர்களை ஆக்கிய பெருமை சிவகுமாரையேச் சாரும். வாழ்வதற்கான அறிவுரையை வாழ்ந்தவர்களின் அனுபவங்களோடு கோடிட்டுக் காட்டி சமூகத்திற்கு வளமூட்டிய பெருமைக்குரியவர் அவர்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் படைக்கப்பட்ட குறளின் நூறு குறள்களின் உயிரார்த்தமான ஆளுமைகளை ஈரோடு மேடையில் தோன்ற வைத்தார். சிவகுமார் உரையாற்றும் போது வேலுமணி, பிலோமினா, பழனியம்மாள், பெரியம்மா, சின்னம்மா, மனோ தேவதாஸ், காந்தி, காமராஜ், துயரத்திலும் எளிமையின் சிகரமான ஜீவா உட்பட்ட பேராளுமைகளெல்லாம் பரவசத்தோடு அவரைச் சுற்றி நின்று அந்தக் குறளின் குரலை கேட்பது போல் இருந்தது அந்த நிகழ்வு. அந்த நூறு ஆளுமைகளின் ஒருமித்த அடையாளமாய் ஒன்றான பேராளுமை சிவகுமார் என்றே சொல்லலாம்.
குறளின் உன்னதங்களை ஒலியால் கோடுகளிட்டு மூச்சால் வண்ணம் தீட்டி சித்திரமாக்கி உயிரூட்டி ஒவ்வொருவர் இதயத்திலும் ஆழமாய் உலவ விட்டார். இனி வரும் தலைமுறைக் குழந்தைகளின் இதயங்களில் சிவகுமாரின் குரலோடு இந்த ஆளுமைகளும் உலா வருவார்கள்.
கதையை சுவையாக நகர்த்தி குறளின் குரலாக ஒலித்த விதம் மிக அருமை. உடலால் வலுவான ஒருவன் (மாவீரன் அலெக்சாண்டர்) 33 வருடங்கள் வாழ்ந்து எல்லாவற்றையும் துறந்து இறந்தான். உள்ளத்தால் ஈரமான வலுவான ஒருத்தி பேச்சியம்மாள் என்ற புண்ணியவதி 109 வருடங்கள் வாழ்ந்து எதையும் இழக்காமல் இன்னும் மரணமிலாப் பெருவாழ்வு வாழ்கிறாள்.
சிவகுமாரின் வைராக்கியம் என்ற வைரத்தால் பிலோமினா குடும்பத்தின் ஆழமான அன்பை வெளியே கொண்டு வந்து விடுகிறார். அன்பின் முன் வைராக்கியம் ஒரு குறளாக மிளிர்ந்து விட்டது.
மூடிய கண்களுக்குள் கற்றுக் கொண்ட அறிவியலும் கணக்கும் பொங்கியாத்தாவின் தலைமுறையை தலைநிமிர வைத்திருக்கிறது. உரையைக் கேட்ட போது பொங்கியாத்தாதான் உலக அழகியாக மிளிர்கிறாள். குறளைப் படிக்கிற போது சிவகுமார் கூறிய கதையும் அந்தக் கதையைக் கேட்டால் குறளும் நினைவில் வருகிற அளவிற்கு குறளும் கதையும் ஆழமாய் ஒத்திருக்கிறது.
ஒரு புனிதமான இதயத்திலிருந்து ஒவ்வொரு குறளும் குரலாக ஒலித்திருக்கிறது. அந்தக் குரல் உன்னதமான மனிதர்களையெல்லாம் உயர்த்தி உலகிற்கு வெளிச்சமூட்டியது. திருக்குறளை இதைவிட விளக்கமாய் எளிதாய் ஆழமாய் இனியொருவர் சொல்வதற்கு வாய்ப்பே இல்லை என்ற அளவிற்கு அழுத்தமான ஒரு உத்தியில் குறளைச் சொல்லி விட்டார் சிவகுமார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையக் குறளை, அரங்கமடங்கா ஆயிரமாயிரம் மனிதர்களின் முன்பு சுதந்திரத்தின் 75 வது ஆண்டினை எட்டும் அதி உன்னத நிமிடங்களில், 81 வயதில், மூன்றரை மணி நேரம் நூறு மனிதர்களை ஈரடி குறளென்ற சிம்மாசனத்தில் இருத்தி, ஆறடி மனிதர்களின் இதயங்களில் இருத்தியப் பெருமை, ஒற்றை மனிதர் சிவகுமாரன்றி இனி ஒருவருக்குமில்லை.
சிவகுமார் காற்றைக் கூட நேர்த்தியாக சுவாசிப்பார். உணவில் நேர்த்தி, உடற் பயிற்சியில் நேர்த்தி, பார்வையில் நேர்த்தி, பழகுவதில் நேர்த்தி, அவருடைய பேச்சில் நேர்த்தி, ஓவியத்தில் நேர்த்தி, நினைவுத் திறனில் நேர்த்தி, நட்பில் நேர்த்தி, எல்லாம் நேர்த்தி, அவரின் ஒவ்வொரு நொடியும் நேர்த்தி. அதுதான் 81 வயது இளமை மாறா மார்க்கண்டேயனின் ஆரோக்கியத்திற்கும் அதி உன்னதமான நினைவு சக்திக்குமான ரகசியம்.
உயர்ந்த அறம். உயிரினும் மேலான நட்பு, விருந்தோம்பும் தமிழ் உள்ளத்தின் உன்னதம், தளராத தர்மம். காலமறிந்து செய்யும் வினை, கொல்லும் சினம், கருணையின் மேன்மை, வேறுபாடுகளைக் கூறு போடும் வெகுண்ட பார்வையென அவரது குறள் கருத்துக் கதம்பங்களோடு ஓடிய நேரம் மூன்றில் நில்ல இயலாது களைத்து நான்கு மணி நேரத்தில் வந்து நின்றது. அப்போது குறள் சொன்ன 81 வயது மார்க்கண்டேயனின் முகத்தில் எந்தக் களைப்பும் இல்லை. அப்போதுதான் தமிழ் ஒரு ஆரோக்கிய பானம் என்று அனைவருக்கும் புரிந்தது.
குமரி எஸ். நீலகண்டன்
punarthan@gmail.co
- அசோகமித்திரனும் நானும்…
- முன்தொடக்கக் கல்விக்கு முன்னுரிமை வேண்டும்
- குரு அரவிந்தன் எழுதிய ‘ஆறாம் நிலத்திணை’ நூலுகுப் பரிசு
- அம்மன் அருள்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 276 ஆம் இதழ்
- மனப்பிறழ்வு
- குறளின் குரலாக சிவகுமார்
- பிரியாவிடை (Adieu)
- அணுப்பிணைவு முறை மின்சக்தி உற்பத்திக்கு கட்டுப்பாட்டுத் தூண்டியக்கம் முதன்முதல் கண்டுபிடிப்பு.
- குரல்
- வாசிப்பு அனுபவப்பகிர்வு : எழுத்தாளர் நடேசனின் புதிய நாவல்