துக்காராம் கோபால்ராவ்
தொடரும் வெள்ளங்களுக்கு தீர்வுக்கான முதல் அடிகள்
பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கில் ஏறத்தாழ பாதிக்கு மேல் தண்ணீர் சூழ்ந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
Pakistan’s devastating floods:
– 1350 people killed
– 50M people displaced
– 900K livestock deaths
– 1M houses washed away
– 40+ reservoirs breached
– 220+ bridges collapsed
– 90% cropped damaged
– $10B loss to economy
– 1/3 country underwater
https://en.wikipedia.org/wiki/2022_Pakistan_floods
இந்த வருடத்தில் , பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் மட்டுமே 784 சதவீதம் அதிகமாக மழை பெய்து வெள்ளக்காடாக ஆனது. அதே நேரத்தில் பங்களாதேஷிலும் இந்தியாவிலும் மிக அதிகமாக மழைக்காலத்து மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்தது.
அதற்கு ஒரு மாதத்துக்கு முன்னால் வரலாறு காணாத வெப்பத்தையும் இதே நாடுகள் கண்டன.
https://en.wikipedia.org/wiki/2022_heat_wave_in_India_and_Pakistan
பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா என்று மூன்று நாடுகளிலும் மே ஜூன் மாதத்தில் மிக அதிகமான வெப்பக்காற்று வீசின. இந்த வெப்பக்காற்று தொடர்ச்சியாக அடித்து மே ஜூன் மாதங்களில் இமாயலத்தில் உள்ள பனி ஆறுகளை இளக்கி அதிகமான ஈரப்பதத்தை உருவாக்கியதால், மழைக்காலத்து மழை ஆவியாகாமல் அனைத்தும் கொட்டி இந்த வெள்ளம் உருவாகிறது என்று தட்பவெப்ப ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஆகவே இது நிச்சயமாக புவி வெப்பமாதலால் உருவாகும் விஷயம் என்று அறியலாம்.
இது பாகிஸ்தானுக்கு புதியதல்ல.
Worldwide – Over 920 People Killed in Floods and Landslides in July 2021
ஜூலை 2021இல் உலகெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மும்பையில் 192 பேர் வெள்ளத்தில் கொல்லப்பட்டனர். கர்னாடகா, ஜம்மு காஷ்மீர் பங்களாதேஷ், ஹிமாசல் பிரதேஷ் போன்ற இடங்களிலும் வெள்ளத்தில் பலர் மாண்டனர்
ஆகஸ்ட் 2020 இல் பாகிஸ்தானில் பெரும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
https://floodlist.com/tag/pakistan/page/2
இப்போது இந்தியாவிலும் ஹிமாச்சல் பிரதேசம், அஸ்ஸாம், ஒரிஸ்ஸா, குஜராத், சென்னை, கர்னாடகா என்று பரவலாக மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இது சம்பந்தமான செய்திகள் இங்கே ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன.
https://floodlist.com/tag/india
சென்ற வருடம் 2021 செப்டம்பரில் தமிழ்நாட்டில் கனமழை பெய்து மாநிலமே வெள்ளக்காடாக ஆனது.
https://floodlist.com/asia/india-floods-tamil-nadu-chennai-november-2021
முழு செய்திகளையும் இணைப்புகளையும் மேலே உள்ள குறிப்புகளில் பார்க்கலாம்.
இந்த வருடமும் நிச்சயம் செப்டம்பரில் தமிழ்நாடு வெள்ளக்காடாகத்தான் ஆகும்.
தமிழகத்தை பொறுத்த மட்டில், அதனை தொலைநோக்கில் தீர்க்கும் வழி முறைகள் ஏதும் இல்லாதது மட்டுமல்ல, அது அரசியலாகவும் ஆக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின் ஆட்சியின் போது வெள்ளம் பெருக்கெடுத்தால் அதனை போட்டோ போட்டு விமர்சிக்கும் பாஜகவினரும், அதிமுகவினரும், அதிமுக ஆட்சிக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்தால் வாய் மூடி மௌனியாக ஆகிவிடுகிறார்கள்.
நாம் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தமிழ் சமுதாயம் இங்கே வாழ்ந்ததன் அடையாளமாகவும், வெள்ளங்களிலிருந்து பாடம் கற்றுகொண்டு எங்கே அதிகம் தண்ணீர் தேங்குகிறது என்பதை அறிந்து அங்கே குளங்களாகவும் ஏரிகளாகவும் ஆக்கி வைத்திருந்ததையும், கால்வாய்களை உருவாக்கி வைத்திருந்ததையும் சிதைத்து வீடுகளும் அடுக்கு மாடி கட்டிடங்களும் கட்டி வெள்ளத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம்.
மேலும் நாம் இனி சந்திக்கப்போகும் வெள்ளங்கள் இதுவரை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பார்க்காத வெள்ளங்களாக இருக்கப்போகின்றன.
அவற்றை எப்படி சந்திக்கப்போகிறோம் என்ற சிந்தனையோ விவாதமோ இங்கே இல்லை.
வெள்ளம் உருவாவதன் முக்கிய காரணம், அந்த தண்ணீர் போக இடம் இல்லை என்பதுதான். ஏற்கெனவே இருந்த ஏரிகள் தூர்க்கப்பட்டு அங்கு உயர் மாடி கட்டிடங்கள் கட்டப்பட்டதால், அங்கே இயற்கையாக தண்ணீர் சேர்கிறது.
இரண்டாவது தண்ணீர் போக இருக்கும் கால்வாய்கள் தூர்க்கப்பட்டாலும், அவை தூர் வாரப்படவில்லை என்றாலும் தண்ணீர் மேலே வந்து குடியிருப்புகளுக்குள் நுழைகிறது.
வெள்ளத்தின் போது மிக முக்கியமான விஷயம், அந்த தண்ணீரை சேமிப்பதல்ல, எவ்வளவு சீக்கிரம் அந்த தண்ணீர் வடிந்து மறைகிறது என்பதுதான்.
வெள்ளத்தின் போது தேங்கி நிற்கும் ஒவ்வொரு நாளும், பெரும் நஷ்டத்தினை சமூகம் அடைகிறது. உதாரணமாக வெள்ளம் வடியாமல் நிற்கும் விவசாய நிலங்களில், பயிரிடப்பட்ட பயிர்கள் அழுகி கெட்டு போகும். வெள்ளம் வடியாமல் இருக்கும் நகர்ப்புறங்களில் காலரா போன்ற வியாதிகள் பரவும். மக்களுக்கு அன்றாட கடன்களை கழிக்க இடம் இல்லாமல் போவதால், தேங்கி நிற்கும் தண்ணீரிலேயே அன்றாட கடன்களை கழிக்க நிர்ப்பந்திக்கப்படுவார்கள். குடிதண்ணீர் மாசு படும். குடி தண்ணீர் கிடைக்காது. நகர்ப்புறங்களில் சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தற்போது தமிழகத்தில் வசிக்கிறார்கள். இவர்களது வீடுகளில் சேமிக்கப்பட்டிருந்த உணவு, தானியங்கள் போன்றவை கெட்டுப்போய், அடுத்த வேளை சாப்பாடுக்கு சமூக நிறுவனங்களும் அரசாங்கமும் தரும் சாப்பாட்டு பொட்டலத்துக்கு கையேந்த வைக்கப்படுவார்கள். எவ்வளவு நாள் வெள்ளம் நீடிக்கிறதோ அவ்வளவு நாள் நஷ்டம் பன்மடங்கு அதிகரிக்கும். ஆகவே வெள்ளத்தின் போது மிக முக்கிய தேவை எவ்வளவு சீக்கிரம் வெள்ளம் வடிய வைக்கப்படுகிறது என்பதுதான்.
ஏற்கெனவே வைகை தாமிரபரணி போன்ற நிரந்தர வறண்ட நதிகள் கரை தொட்டு ஓடுகின்றன. இப்போது மழை பெய்தால் உபரி நீர் வெள்ளக்காடாக ஆகும். தற்போது வைகையின் கடல் முகத்துவாரத்தில் 30 டிஎம்ஸி தண்ணீர் கடலில் கலக்கிறது. இது வரலாறு காணாத நிகழ்வு. கண்மாய்கள் நிரம்பி விட்டன. இன்று கர்னாடகாவில் பெய்யும் மழையும் தமிழகத்தில் பெய்யும் மழையும் சேர்ந்து இந்த வருடம் தமிழகமும் சென்னையும் வெள்ளக்காடாக ஆகப்போகிறது.
கால்வாய்களை தூர்வாருவதும், ஏரிகளை தூர்வாருவதும் வருடாந்திர பொதுப்பணித்துறை நடவடிக்கைகள். இது தவிர குடி மராமத்து போன்றவையும் தமிழகத்தில் உண்டு. இவை ஓரளவுக்கு தமிழ்நாட்டிலும், இதர இந்திய மாநிலங்களிலும், பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் கூட நடைபெறுகின்றன.
இருந்தும் ஏன் வெள்ளங்கள் வருகின்றன என்பதற்கு எளிய விடை, இந்த ஏரிகளும், கால்வாய்களும் கொள்ளும் அளவை விட மழை பெய்வது அதிகமாக இருக்கிறது என்பதே.
கால்வாய்களை மிகவும் ஆழப்படுத்தினாலோ, அல்லது ஏரிகளை மிகவும் ஆழப்படுத்தினாலோ, அவை விவசாயத்துக்கு கஷ்டமாக ஆகிவிடும்.
உதாரணமாக ஏரிகளை ஆழப்படுத்தினால், தற்போதைய தண்ணீர் விளிம்பு நிலையில் இருக்கும் தண்ணீரை ஏற்றம் கொண்டு இறைத்து வயல்களுக்கு பாய்ச்சலாம்.
ஆனால், மிகுந்த ஆழத்துக்கு ஏரிகளை தூர்வாரிவிட்டால், மழைக்காலத்தில் ஏரியில் நிரம்பினாலும், தண்ணீர் விளிம்பு நிலையில் இருக்காது. ஆகையால் ஏற்றம் கொண்டு இறைப்பது கடினமாகிவிடும். அல்லது முடியாததாகிவிடும்.
இதனாலேயே பொதுப்பணித்துறையின் பிரிட்டிஷ் கால கணக்கின்படி, எவ்வளவு ஆழத்துக்கு தூர் வார வேண்டும் என்பது பதியப்பட்ட ஒரு விஷயம். தற்போதும் தூர் வாரும்போது அதே கணக்கிலேயே தூர் வாருவார்கள்.
துரதிர்ஷவசமாக, இந்த புராதன கணக்கீடுகள், நவீன விவசாயம் எவ்வாறு மாறிவிட்டது என்பதை கணக்கில் எடுத்துகொள்ளவில்லை.
தற்போது பெரும்பாலான இடங்களில் ஏற்றம் கொண்டு இறைப்பதில்லை. பம்ப் செட் போட்டுத்தான் இறைக்கிறார்கள்.
கால்வாய்களிலும் ஏரிகளிலும் கூட பம்பு போட்டு தான் தண்ணீர் இறைக்கிறார்கள்.
ஆகவே புராதன காலத்து கணக்கீடுகள் தற்போது மாற்றப்படவேண்டும்.
முன்பு முக்கியமான பிரச்னை ஏரியிலிருந்து தண்ணீர் எடுக்க வேண்டிய சக்தி. அது முன்பு மனித சக்தியாகவும், மாட்டு சக்தியாகவுமே இருந்தது.
தற்போது அனல் மின் நிலையங்களும், சூரிய சக்தி நிலையங்களும், அணு மின் நிலையங்களும் சக்தியை உற்பத்தி செய்வதற்காக இருக்கின்றன.
ஆகவே நாம் உபயோகிக்கும் தண்ணீர் போன்றவற்றை இயற்கையிலிருந்து பெறுவதும், அதனை தேவையான இடங்களுக்கு வினியோகிப்பதையும் நவீன முறைப்படியே சிந்திக்க வேண்டும்.
ஆகவே என்னுடைய ஆலோசனைகள்
1. ஒவ்வொரு மாவட்டத்திலும் மிக மிக ஆழமான ஏரிகள் உருவாக்கப்பட வேண்டும்.
2. ஒவ்வொரு மாவட்டத்திலும் பாசனத்துக்காக இருக்கும் ஏரிகள் கால்வாய்கள் மூலம் இந்த ஆழமான ஏரிகளுடன் இணைக்கப்பட வேண்டும்.
3. இந்த இணைப்பு இருவழி போக்குவரத்துக்கு உகந்ததாக அமைதல் நலம். இதற்கு படிநிலை கலிங்குகள் அமைத்து இருவழி போக்குவரத்தை செய்யலாம். இவற்றை நிர்வகிக்க கலிங்கு மேலாண்மை வாரியங்களை மாவட்டம் தோறும் அமைக்கப்படவேண்டும்.
4. பாசனத்துக்காக இருக்கும் ஏரிகள் ஆழமானதாகவோ ஆழமில்லாததாகவோ தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட வேண்டும்.
5. ஒவ்வொரு நகரத்திலும் பெரும் ஏரிகள் வெட்டப்பட வேண்டும். ஏற்கெனவே இருக்கும் ஏரிகள் மிக மிக ஆழமானவையாக உருவாக்கப்படவேண்டும். அதாவது சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் போன்ற முழுக்க நகரங்களாக ஆனவற்றில் ஏற்கெனவே இருந்த ஏரிகள் மிக மிக ஆழமானவையாக வடிவமைக்கப்பட வேண்டும். அவற்றை போர்க்கால அடிப்படையில் உடனே ஆழப்படுத்த வேண்டும். உதாரணமாக கடந்த வருடம் சென்னையில் பெரு மழை பெய்தபோது எவ்வளவு பெய்ததோ அத்தனை தண்ணீரின் அளவை விட இரண்டு மடங்கு ஆழமாக இந்த ஏரிகள் நோண்டப்பட வேண்டும்.
6. சென்னை போன்ற நகரங்களில் இருக்கும் தெரு அமைப்புகளை ஆராய்ந்து அவை இயற்கையாகவே இந்த ஆழமான ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்புமாறு அமைக்கப்பட வேண்டும். ஒரு சில இடங்களில் தண்ணீர் செல்தற்கு செயற்கை தடைகள், சுவர்கள் போன்றவை இருக்குமாயின் அவைகள் சரி செய்யப்பட்டு சென்னையில் பெய்யும் அனைத்து மழையும் இந்த ஆழமான ஏரிகளில் சேமிக்கும் படி செய்யப்பட வேண்டும். இருமடங்கு வெள்ளம் ஏற்பட்டால் எவ்வாறு தண்ணீர் இந்த ஏரிகளுக்கு செல்லும், அதற்கான நேரம் எவ்வளவு ஆகும் என்பதை அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து வடிகால்கள் அமைக்கப்படவேண்டும். மும்மடங்கு வெள்ளம் ஏற்பட்டால் எவ்வளவு நேரம் எடுக்கும் என்பது ஆராயப்பட்டு அதற்கேற்ற்றாற்போல வடிகால்கள் அமைக்கப்பட வேண்டும். ஏரி முழுவதும் நிரம்பிவிட்டபிறகு மழை பெய்தால், அது வெள்ளமாக ஆனால், இந்த ஏரிகளிலிருந்து எவ்வளவு சீக்கிரம் கடலுக்கு தண்ணீரை அனுப்பி வெள்ளத்தை வடிய வைக்கவேண்டும் என்பதை அறிவியற்பூர்வமாகவும், பொறியியல்பூர்வமாகவும் ஆராய்ந்து ஏரியிலிருந்து கடலில் கலக்க வடிகால்கள் அமைக்கப்பட வேண்டும்.
இதன் மூலம் பலவற்றை சாதிக்கலாம்.
1. மழைக்காலத்தில் உபரியாக பெய்யும் மழை இந்த ஆழமான ஏரிகளில் சேமிக்கப்படும். பரப்பளவு குறைவாகவும் ஆழம் அதிகமாகவும் இருப்பதால், வெப்ப காலங்களில் , கோடைக்காலங்களில் தண்ணீர் ஆவியாவது குறையும். தண்ணீர் ஆவியாவது ஏரியில் பரப்பளவை கொண்டது. அதன் கொள்ளளவை கொண்டதல்ல. ஆகவே பரப்பளவு குறைவாகவும், ஆழமானதாகவும் இருக்கும் ஏரிகள் குறைந்த அளவையே ஆவியாக இழக்கின்றன
2. ஆழமற்ற ஏரிகளில் சாதாரண காலங்களில் வழக்கம்போல விவசாயத்துக்கு பயன்படுத்தலாம்.
3. பெருமழைக்காலங்களில், ஆழமற்ற ஏரிகளில் நிரம்பும் அதிகப்படி தண்ணீர் வாய்க்கால்கள் மூலம் ஆழமான ஏரிகளுக்கு அனுப்பப்படுவதால், அவை வெள்ளக்காடாக குடியிருப்புகளை பாதிக்காமல், தண்ணீர் சேமிக்கப்படும்.
4. வரட்சியான காலங்களில் ஆழமான ஏரிகளில் தண்ணீர் மட்டம் குறைந்துவிடும். இந்த காலங்களில் சூரிய சக்தி, அனல் மின் நிலைய சக்தி போன்றவற்றை பயன்படுத்து தண்ணீரை மேடான பகுதிகளுக்கு அனுப்பலாம். வரட்சியான காலங்களில் இதே இணைப்பு வாய்க்கால்களில் ஆழமான ஏரியிலிருந்து தண்ணீரை படிநிலை கலிங்குகள் மூலம் பாசனத்துக்காக இருக்கும் ஆழமற்ற ஏரிகளுக்கு அனுப்பலாம். இதற்காக கலிங்கு வாரியம் அமைத்து இதன் மூலம் நீர் மேலாண்மையை செழிவு படுத்தலாம்.
5. பெருநகரங்களில் அமைக்கப்படும் ஆழமான ஏரிகள், மழைக்காலங்களில் தண்ணீரை சேமிக்கவும், வரட்சியான காலங்களில் அந்த தண்ணீரை நகர மக்கள் உபயோகப்படுத்துக்கும் பயன்படுத்தலாம். ஆழமான ஏரிகளிலிருந்து சூரிய சக்தி, அனல் மின் நிலைய சக்தி மூலமாக தண்ணீரை எடுத்து உபயோகப்படுத்தலாம்.
தற்போது நீர்நிலைகள், ஏரிகள், கால்வாய்கள் மீதே சூரிய மின்சார தகடுகளை பொருத்தி மின்சாரம் தயாரிக்கிறார்கள். இதனை இந்த ஆழமான ஏரிகள் மீதும் அமைத்து தண்ணீர் ஆவியாவதை தடுக்கலாம். அந்த மின்சாரத்தை, தண்ணீரை மேலே எடுக்க பம்புகளுக்கான சக்தியாகவும் பயன்படுத்தலாம்.
பெரும் நல்ல தண்ணீர் ஏரிகள் இருப்பது தரையில் இருக்கும் தரையடி தண்ணீரை அதிகரிக்கவும் பயன்படும்.
நான் சொல்லும் யோசனைகளில் சில பல குறைகள் இருக்கலாம்.
ஆனால் இந்த கட்டுரையின் முக்கிய நோக்கம், மக்களை இந்த திசையில் சிந்திக்க வைப்பதுதான்.
பலர் கூடித்தான் தேர் இழுக்கமுடியும்.
உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
- இரவு
- காற்றுவெளி புரட்டாதி (2022) மின்னிதழ்
- ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின?
- மாட்டுப் பிரச்சனை
- “ஜெயபாஸ்கரன் கவிதைகள்” -ஆய்வு-அணிந்துரை
- மெல்லச் சிரித்தாள்
- தொலைந்து போன சிரிப்புகள்
- சலனமின்றி அப்படியே….
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 277 ஆம் இதழ்
- சிவப்புச்சட்டை….
- நடேஸ்வராக்கல்லூரி பழையமாணவர் சங்க ஒன்றுகூடல் – 2022
- மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டில் முருகபூபதியின் பாரதி தரிசனம் நூல் வெளியீடு
- 2022 ஆண்டின் சிறந்த தொகுப்பாக நான் கருதுகிறேன் – எம்.டி.முத்துக்குமாரசாமியின் ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்
- தொடரும் வெள்ளங்கள் – தீர்வுக்கான முதல் அடிகள்