அமராவதி என்னும் ஆடு

This entry is part 13 of 13 in the series 11 செப்டம்பர் 2022

             

                                  வளவ. துரையன்

 

பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பார்கள். வள்ளுவர் அவ்விய நெஞ்சம் உடையவனுக்கு செல்வமும், நேர்மையானவனுக்குக் கேடும் வருகிறது என்று எழுதுவார்.

 

“அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்”

என்பது குறள். [169].

 

இவை ஆராயத்தான் வேண்டும் என்று கூறிவிடுகிறார் வள்ளுவர். ஆராய்ந்தால் உலகம் தோன்றிய நாளிலிருந்து இப்படித்தான் இருக்கிறது என்று அறிய முடிகிறது. அதுவேதான் அமராவதி என்னும் சிறுகதையின் நாயகன் மகேந்திரனுக்கும் ஏற்படுகிறது.

 

வறுமையில் வாடும் ஏழை மக்கள் தொடர்ந்து துன்பத்திலேயே உழல்கிறார்கள். அவர்களின் ஏழ்மையைப் பயன்படுத்திப் பணம் இருப்பவர்கள் மேலும் பணம் சேர்த்துக் கொழுக்கிறார்கள். இதுவே உலக நியதி என்பதே இக்கதையின் கருவாகும்.

சிறுகதையை எழுதிய அல்லிநகரம் தாமோதரன் இதற்கு நேரடியாகத் தீர்வு எதையும் சொல்லவில்லை.  ஆனால் மறைமுகமாக ஒன்று சொல்கிறார். ”ஏழைகள் தனக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் கிடைக்கும் இடத்திற்குச் சென்று பொருள் சம்பாதிக்க வேண்டும். கிடைப்பதில் கொஞ்சம் அவசரச் செலவுக்காகச் சேமிக்கவும் வேண்டும்” என்பதுதான் நாம் உணர வேண்டிய கருத்தாகும்.

 

மகேந்திரன் மற்றும் பர்வதம் இருவரும் கணவன் மனைவிகள். அவர்களுக்குப் பூரணி என்னும் மகளும் ஆறுமாதக் கைக்குழந்தையான ராகுலும் இருக்கின்றனர். அமராவதி என்னும் ஆட்டை அவர்கள் வளர்த்து வருகின்றனர். பூரணி என்னும் சிறுமிக்கு ஆட்டின் மீது மிகவும் பாசம். தன் கொலுசைக் கூட ஆட்டிற்கு அணிவித்துப் பார்க்கிறாள் அவள்.

 

ராகுலுக்குக் கடுமையான காய்ச்சல் வருகிறது. கணவன் மனைவி இருவரும் பேசி முடிவெடுத்துக் கந்துவட்டிக்காரனிடம் கடன் வாங்குகின்றனர். கடனுக்கு வட்டி கூட மகேந்திரனால் கொடுக்க முடியவில்லை. வட்டிக்குப் பணம் கொடுத்தவன் பனத்திற்குப் பதிலாக ஆட்டை இழுத்துக் கொண்டு போய்விடுகிறான். குழந்தை இறக்கிறது. ஆடும் கசாப்புக் கடையில் வெட்டப்படுகிறது.

 

மகேந்திரன் ஒரு பாவப்பட்ட ஜென்மம்தான். மரவேலை செய்பவன். ஒரு வீட்டில் சாரத்தின் மீது ஏறி வேலை செய்யும்போது கீழே விழுந்து விடுகிறான். உள்ளூரில் சரியான  வேலை கிடக்கவில்லை. குழந்தைக்குக் கடுமையான காய்ச்சல் வருகிறது. கந்து வட்டிக்காரனிடம் கடன் வாங்கிக் கட்ட முடியாமல் ஆட்டைப் பறிகொடுக்கிறான். வேலை தேடி நகரம் செல்கிறான். அப்பொழுது இங்கே குழந்தை இறந்து விடுகிறது.

 

கேள்விப்பட்ட மகேந்திரன் ஓடி வருகிறான். பூரணி கசாப்புக் கடையில் கிடந்த அவர்கள் வீட்டு ஆட்டின் கொம்பை எடுத்து வந்து காட்டுகிறாள். “எம்புள்ள ராகுலு போன எடத்துக்கே ஒன்னையும் அனுப்ப்பிட்டாங்களா அமராவதி” என்று அக்கொம்பைத் தன் தலையில் அடித்துக் கொண்டு அவன் அழுகிறான்.

 

பர்வதத்திற்கு முதல் குழந்தை பெண்ணாகப் பிறக்கிறது. இரண்டாவது குழந்தை ஆணாகப் பிறந்ததும் ஏகப்பட்ட மகிழ்ச்சி. ராகுல் எனப் பெயர் வைக்கிறாள். நோபல் பரிசு பெற்றுவிட்டாள் என்பதைப் போல் ஊரே அவர்களைப் பார்த்ததாம். அக்குழந்தையை காக்கவே முதலில் வட்டிக்குக் கடன் வாங்குகிறார்கள், வட்டி கூடக் கட்ட முடியாததால் கடன் கொடுத்தவன் ஆட்டை இழுத்துக் கொண்டு போகிறான்.

 

ஏற்கனவே கணவனுக்குச் சிகிச்சை செய்ய பரமகுரு என்பவனிடம் வட்டிக்குக் கடன் வாங்கி இருக்கிறாள். எப்படியாவது கடனை அடைக்க வேண்டும். எனவே கணவனை டவுனுக்குப் போய் சம்பாதிக்கச் சொல்கிறாள். அதற்குள் குழந்தையும் இறக்க ஆடும் போய்விட பர்வதம் சோகத்தில் ஆழ்கிறாள்.

 

அமராவதி என்று பெயர் சூட்டப்பட்டு வளர்க்கப்படும் ஆடு இக்கதையில் முக்கியமானதாகும். ஏழைக்குடும்பத்தால் வளர்க்கப்படும் ஆடு அது. அக்குடும்பத்தில் அனைவரும் அதன்மீது மிகுந்த பாசத்தைப் பொழிகின்றனர். அந்த வீட்டின் சிறுமி பூரணி பெற்றோருக்குத் தெரியாமல்  தன் கொலுசையே அதன் காலில் அணிவிக்கிறாள். அழகு பார்க்கிறாள்.

 

அந்த இரவில் ஆடு புரளும் போது கொலுசின் ஒலி கேட்கிறது பூரணியின் தாய் தந்தையர் ஏதோ காத்து கருப்பு வேலை என்று பயப்படுகிறார்கள். காலையில் விவரம் தெரிந்து அனைவரும் சிரிக்கிறார்கள். கடன் கொடுத்தவன் அமராவதியை இழுத்துக் கொண்டு போகும்போது பூரணி கதறுகிறாள். கசாப்புக்கடையில் கிடக்கும் அமராவதியின் கொம்பைக் கொண்டு வந்து அப்பாவிடம் தருகிறாள். அவளும் அழுகிறாள்.

 

இக்கதை மிக எளிமையான நடையில் சொல்லப்பட்டு இருக்கிறது. குழந்தை ராகுல் காய்ச்சல் வந்து துவண்டு கிடப்பதை, “வேருடன் பிடுங்கி வீசப்பட்ட பாகற்கொடி போல வாடிக் கிடந்தான்” என்ற உவமையால் விளக்குகிறார். முதலில் மகேந்திரன் குழந்தை பிறந்தவுடன் “இறுதிக் காலத்தில் தொற்றிப் படர வேலி கிடைத்திட்ட கொடி” யாக உணர்கிறான் என்கிறார் கதாசிரியர். இப்படிக் கிராமத்திற்கேற்ற எளிய உவமைகளால் கதை நம் மனத்தில் எளிதாக இடம் பிடிக்கிறது.

 

அமராவதி கதையைப் படித்தவுடன் நம் மனம் கனக்கிறது. அக்குடும்பம் போல நம் நாட்டில் மக்கள் வறுமையால் வாடிக் கொண்டுதான் இருக்கின்றனர். வறுமையைப் போக்க சரியான வேலை கிடைக்காமல் திண்டாடுகிறார்கள்.

 

இருக்கும் பொருள்களை விற்கிறார்கள். கந்து வட்டி வலையில் வீழ்கிறார்கள். அது பெரும் தொல்லைஉயா கவடிப்வெடுக்கிறது. இதுதாஅன் என்றும் நிலைமை போலிருக்கிறது. இது மாறவேண்டும் என்றே அனைவரும் விரும்புகிறோம்.

அல்லிநகரம் தாமோதரன் எழுதிய அருமையான சிறுகதை “அமராவதி”

 

 

Series Navigationபூகோளச் சூடேற்றக் குறைப்பில் அணுமின் சக்தியின் முக்கிய பங்கு
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *