அழகியசிங்கர்
இப்போது பின்கட்டு என்ற கதைப் புத்தகத்தைப் பற்றி சொல்லப்போகிறேன்.
5 கதைகள் கொண்ட இப் புத்தகம் 70 பக்கங்கள் கொண்டது. க்ரியா என்ற பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளது. பின்கட்டு என்ற தலைப்பிடப் பட்ட இப்புத்தகத்தின் சொந்தக்காரர் எஸ்.ராமகிருஷ்ணன்.
எஸ்.ராமகிருஷ்ணன் என்ற பெயரைப் பார்த்தவுடன் உங்களுக்குச் சமீபத்தில் சாகித்திய அக்காதெமி விருதுபெற்ற எழுத்தாளர் ராமகிருஷ்ணன் பெயர் ஞாபகம் வரும்.
ஆனால் இவர் வேறு எஸ் ராமகிருஷ்ணன். இவர் இன்று உயிரோடு இருந்திருந்தால் இந்தப் புத்தகத்தைக் கொண்டு வர விரும்பியிருக்க மாட்டார்.அவ்வளவு பிடிவாதக்காரர்.
கோணல்கள் என்ற தொகுப்பு 1966ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்தத் தொகுப்பில் இவர் எழுதிய கதைகளும், பின் நடை, கசடதபற என்ற சிற்றேடுகளிலும் இவர் எழுதிய கதைகள் இத் தொகுப்பில் அடங்கி உள்ளன.
மொத்தமே 5 கதைகள்தான். கடைசியாக இவர் எழுதிய ‘மழைக்காக காத்திருந்தவன்’ என்ற கதை நவம்பர் 1970 ஆண்டில் வெளிவந்தது.
அதன்பின் இவர் கதைகள் எந்தப் பத்திரிகையிலும் வரவில்லை. கதை எழுத இவர் முயற்சி செய்யவுமில்லை. க்ரியா என்ற பதிப்பகம் ஆரம்பித்துப் பல சாதனைகள் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு கொரானா பாதிப்பால் மரணம் அடைந்தார். இவர் மரணம் அடைந்தபின் இவர் ஞாபகமாய் இவர் சிறுகதைத் தொகுப்பும், கட்டுரைத் தொகுப்பும், க்ரியா என்ற அமைப்பு கொண்டு வந்துள்ளது.
‘பின்கட்டு’ என்ற அந்தத் தொகுப்புதான் எஸ்.ராமகிருஷ்ணன் என்ற பெயருடன் க்ரியா வெளியிட்டுள்ளது. க்ரியா ராமகிருஷ்ணன் என்று பெயரிட்டுக் கொண்டு வந்திருந்தால் பொருத்தமாக இருக்கும்.
மொத்தமே ஐந்து கதைகள் கொண்ட இத் தொகுப்பில் உள்ள கதைகள் எவற்றை அடையாளப்படுத்துகின்றன.
சிறுபத்திரிகை கதைகள் என்ற முத்திரை கொடுக்க வேண்டுமென்று நினைத்திருந்தால் இத் தொகுப்பிற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
ஒரு காலத்தில் மௌனி என்ற எழுத்தாளரின் பாதிப்பு பெரும்பாலும் சிறுபத்திரிகைகளைத்தான் பாதித்தன. ‘கசடதபற’ என்ற சிறுபத்திரிகையில் எழுதிய எழுத்தாளர்கள் மௌனி கதையில் வருவது போல் கதாபாத்திரங்களுக்குப் பேர் வைக்காமல் எழுதிக்கொண்டு போனார்கள்.
ராமகிருஷ்ணனின் ‘அவளிடம் சொல்லப் போகிறான்’ என்ற முதல் கதையே மௌனியின் டச் இருந்தாலும், மௌனியின் வார்த்தைப் பிரயோகம் திருகலாக இருக்கும். ஆனால் ராமகிருஷ்ணன் கதையில் அது இல்லை. ஆனால் சிறுபத்திரிகை கதை. சராசரி வாசகனால் ரசிக்க முடியாது. அவளிடம் சொல்லப் போகிறான் கதை போகிற போக்கைச் சற்று கவனியுங்கள்.
‘கோடை வெயில் அனலாய்க் காய்ந்துகொண்டிருந்தது. மணி நான்கு ஆகிவிட்டாலும், பகல் இரண்டு மணியைப் போன்ற தோற்றம். சாலையில் இன்னும் ஜன நடமாட்டம் அதிகமாகவில்லை. நீண்டிருந்த சாலையின் வெறுமையும், கடல் காற்று படியாததால் இன்னும் வீசிக்கொண்டிருந்து அனல் காற்றும் உடலையும் உள்ளத்தையும் என்னவோ செய்தது. வெப்பத்தில் தார் உருகி, திட்டுத்திட்டாய் சாலை முழுதும் படிந்திருந்தது….. ‘
‘கைக்குட்டையை மடித்துச் சட்டைப் பையில் வைத்தவாறு அவன் வீட்டிற்கு வெளியே வந்து நின்றான்..’
கதாபாத்திரத்திற்கு எந்தப் பெயருமில்லை. அவன். அவன் யாரைப் பார்க்கப் போகிறான் அவளை. அவளுக்கும் பெயரில்லை.
அந்தக் காலத்தில் இப்படித்தான் சிறுபத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்தார்.
பெரும்பாலும் சுய மோகக் கதைகளாக இருந்தன. இதை உணர்ந்ததால்தான் ராமகிருஷ்ணன் தன் கதைகளை வெளியிட விரும்பவில்லை என்று நினைக்கிறேன். மேலும் அவர் எழுதுவதையே நிறுத்தி விட்டார். அவர் க்ரியாவை நடத்திக்கொண்டு வந்தார். அதன் மூலம் பல தரமான புத்தகங்களைக் கொண்டு வந்தார். தமிழ் அகராதி க்ரியாவின் முக்கியமான பணிகளில் ஒன்று.
கடைசியில் அவர் இறந்து போகிற சமயத்தில் அந்த அகராதியின் மூன்றாவது பதிப்பை வெளியிட்டு விட்டு இறந்து போனார்.
அவர் கதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறாரென்றும் அவற்றைப் புத்தகங்களாகக் கொண்டு வர வேண்டுமென்ற எண்ணமும் இல்லாமலிருந்தார். அவருக்குப் பின், கரியா அமைப்பு அவர் புத்தகங்களைக் கொண்டு வருவதில் மும்முரமாய் செயல்பட்டுள்ளன.
இன்னொன்றும் சொல்ல விரும்புகிறேன். இவர் கதைகளை இப்போது படிக்கும் போது வித்தியாசமாகவும், படிக்க படிக்க சுவாரசியம் மிகுந்ததாகவும் இருக்கின்றன.
‘அவளிடம் சொல்லப் போகிறான்’ என்ற கதையில் அவளிடம் I shall have nothing to do with you! என்று சொல்ல விரும்புகிறான். அவன் அவளைப் பார்த்துச் சொன்னானா என்பது கதையில் இல்லை.
கீழ்க் கண்டவாறு இக் கதையைப் பார்க்கலாம்.
- அவனுக்கும் அவளுக்கும் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.
- அவளைப் பார்க்கச் செல்கிறான் என்று வருகிறது. எங்கே இருந்து எங்கே செல்கிறான் என்பது கதையில் சொல்லப் படவில்லை. ஏன்? தேவையில்லை என்று கதாசிரியர் முடிவு செய்து விட்டாரா.?.
அவனைவிட மூத்தப் பெண்களைத்தான் அவன் விரும்புகிறான். ஒரு இடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
‘வயதில் மூத்த பெண்களையே விரும்புவது அவன் வாழ்க்கையின் பெரும் அம்சமாகிவிட்டிருக்கிறது என்று வருகிறது. அவன் அவளிடம் சொல்ல வருகிறான். ஆனால் இன்னும் அவளைப் பார்க்க வரவில்லை.
பாலியல் சிந்தனையைத் தூண்டுவதுபோல் சில இடங்களில் இக் கதையில் வருகிறது.
ஒரு ஓட்டலுக்குப் போகிறான். வெயிட்டரிடம் ப்ளாக் காப்பி குடிக்க உத்தரவிடுகிறான்.
கடைசியில் இப்படி எழுதியிருக்கிறார்.
கால்களை நீட்டி அவன் நாற்காலியில் சாய்ந்து கொண்டான். கைகளை முறித்துக்கொண்டான். மேலே விசிறி சுழல ஆரம்பித்தது.
அவ்வளவுதான் கதை.Stream of Consciousness என்ற உத்தியில் இந்தக் கதை சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது.
கதை முடிந்தபின் கதையைப்பற்றி நம் நினைவுகளைச் சுண்டி விடுகிறார். இதுதான் இந்தக் கதையின் சிறப்பு, இன்னும் சில கதைகளையும் பார்ப்போம்.
(இன்னும் வரும்)
- படிக்க வா
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 278 ஆம் இதழ்
- ஷ்யாமளா கோபு அவர்கள் எழுதி திண்ணை ஆகஸ்ட் 29 வெளிவந்த சிறுகதை “ஊமைச்சாமி” ஆகஸ்ட் 2022 மாத சிறுகதையாகத் தேர்வு
- இலக்கியத் திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன் ( 1936 – 2022 ) நினைவுகள்
- க்ரியா ராமகிருஷ்ணனின் பின்கட்டு என்ற கதைத் தொகுப்பு
- உணர்வுடன் இயைந்ததா பயணம்?
- அணுவியல் துறை வெப்ப சக்தி உற்பத்தியால் குளிர் & வெப்ப நாடுகள் பெறும் உறுதிப் பயன்பாடுகள்