ஆ.மீனாட்சி சுந்தரமூர்த்தி.
அன்று பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது கல்யாணிக்குச் சோர்வாக இருந்தது. தனியார் பள்ளி என்றால் சும்மாவா, நம்முடைய பணியைச் சரியாகச் செய்தால் மட்டும் போதாது. நிர்வாகம், மற்றும் தலைமையின் நல்லெண்ணமும் பெறுதல் அவசியம். அதே சமயத்தில் திறமைக்கான அங்கீகாரமும் கிடைக்காமல் போகாது. இந்தப் பள்ளியைப் பொறுத்த வரையில் தாளாளர் நல்ல பண்பாளர். கட்டணம் கூட மற்றப் பள்ளிகளை விடவும் குறைவுதான். அதனால்தான் குறைந்த வருமானம் உள்ளவர்களும் பிள்ளைகளை அனுப்புகின்றனர்.அவர்களுக்கு நம்பிக்கை தந்து ஆசிரியர்களைத் தனிகவனம் எடுக்க வைப்பார் இவர். இதனாலேயே நல்ல மதிப்பைப் பெற்றிருந்தது இந்தப் பள்ளி. பணிச்சுமை கூடுதலாகவே இருக்கும். இயற்பியல் ஆசிரியை இவள்.
திருமணமாகி ஒரு வருடமாகிறது. விசாகப்பட்டினத்தில் அரவிந்த் கப்பற்படையில் அதிகாரியாக இருக்கிறான்.இன்னும் இவளை அழைத்துச் செல்லவில்லை. இன்னும் இரண்டு மாதங்களாகும். கல்லூரி முடித்தவுடன் இங்கு சேர்ந்தாள் இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டன..
அன்றுஆட்டோக்காரர் திடீரென அவசரவேலை வந்து விட்டதால் வேறு வண்டி அனுப்புகிறேன் என்றார் ஆனால் இவள் வேறு வண்டி அனுப்ப வேண்டாமெனச் சொல்லி விட்டாள். காலாற நடக்கலாமென நடந்துவிட்டாள். ஏறத்தாழ மூன்று கி.மீ. தூரம். அதிலேயே களைத்துப் போனாள்.வீட்டிற்குள் நுழைந்தபோது அப்பா போர்டிகோவில் நின்று மல்லிகை அரும்புகளைப் பறித்துக் கொண்டிருந்தார். தினம் அப்பாவின் மாலை நேர வேலை இது. அம்மா அவற்றைச் சரமாக்கி இவள் தலையில் வைத்து விட்டு தானும் விரலளவு வைத்துக் கொண்டு சாமி படங்களுக்குப் போடுவாள். ‘ஏம்மா ஆட்டோ வரலை?’ இல்லை பா.
சரி சரி போய் முகம் கழுவிட்டு வா. என்றவர் ‘அடியே, கல்யாணி வந்துட்டா பாரு‘ என்றார்.
சேலை மாற்றிக்கொண்டு வரவும் அம்மா இரண்டு தட்டுகளில் சுடச் சுட பஜ்ஜி கொண்டு வந்தாள். அப்பா உள்ளே வந்தவர்
‘உமா இன்னொரு தட்டில் வச்சி அவனு்க்குக் கொடு‘
ஆச்சரியமாய் யாரது என்று பார்த்தாள் கல்யாணி.
ஐந்து வயது சிறுவன் ஒருவன் நிலைப்படியில் .
அடடா அசந்து போனாள்.கார்மேக நிறம். திராட்சை விழிகள் துருதுருவென சுழலும் வட்ட நிலாமுகம். கோகுலத்துக் கண்ணன் இப்படிதான் இருந்திருப்பானோ !, அம்மா உள்ளே வாவென அழைத்து தட்டைத் தந்தாள்.
கீழே இறங்கும் கால்சட்டையை தூக்கிவிட்டுக் கொண்டே தரையில் அமர்ந்தான் ஆவலாக, வேகமாக உண்டு முடித்தான்.பசியோ?
அம்மா அவனுக்கும் சிறிய டம்ளரில் காபி கலந்து தந்தாள். அப்பா யார் இவன் என்று கேட்க நினைத் தாள் கல்யாணி, அதற்குள் அப்பாவே
‘பக்கத்து மனையில வீடு கட்ட வந்திருக்காங்கமா ‘ என்றார்.
அதற்குள் அவன் அப்பாவிடம்
‘ இவுங்கதான் உங்க பொண்ணா‘
‘ஆமாம்‘
டீச்சரா? ‘ஆமாம் உனக்கு எப்படித் தெரியும்?
நீ வரும்போது பேக் மாட்டிட்டு வந்தியே நான் பார்த்தேன்.
பேக் மாட்டினா டீச்சரா?
டி.வி யில பார்த்திருக்கேன், குடை கூட வச்சிருந்தே.
சரி உன்பேர் என்ன?
ரங்கன் ரங்கு ரங்குனு கூப்புடுவாங்க. ‘
‘நல்ல பேர்‘
ஆமா எனுக்கே தெரியும்.
எம் பேர் தெரியுமா?
தெரியுமே கல்யாணி தாத்தா சொன்னாரு.
களைப்பெல்லாம் பறந்தே போனது.
சரி உங்க வீட்டில யாரெல்லாம் இருக்கீங்க?
நானு, அம்மா, அப்பா தான்.
அண்ணன் பெரிப்பா கூட கரும்பு வெட்ட திருநாமல போயிருக்கான்.
அம்மா அங்கே அமர்ந்து பூத்தொடுக்க அப்பா மூன்று மூன்று அரும்புகளாக அடுக்கி வைத்தார்.ரங்கன் கவனம் அதிலே சென்றது. தானும் அரும்புகளை அடுக்கத் தொடங்கினான்.கலயாணி எழுந்து சென்றாள் தனது அறைக்கு. மேத்தாவின் கவிதைகளை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள். எவ்வளவு நேரமானதோ தெரியவில்லை. திடீரென ‘படிக்கறியா நீ‘ என வாயிலில் ரங்கன்.
ஆமாம் என்றாள். நானு கூட படிக்கணும் ,
ஓ உனக்குப் படிக்க ஆசையா?
ஆமா நெறைய, நெறைய புத்தகம் படிக்கணும்.
அந்த நேரம் ரங்கு ரங்கு என்று அவனுடைய அம்மா வந்தாள்.
உங்க பையன ஸ்கூலில் சேர்க்கலையா
எங்கமா, நாங்க ஊர் ஊரா ரெண்டு மாசம், மூணு மாசம்னு வேலக்கி போறோம்
இங்கன இந்த வீடு கட்டி முடியற வரை இருப்போம்.
ஓரு ஓரமா குடிசை போட்டுட்டு இருக்கோம்.
அவன் படிக்க ஆசைப்படறானே
அவன் வெளையாட்டா சொல்றாமா‘
அழைத்துச் சென்று விட்டாள்.
அடுத்த நாள் மாலை கல்யாணி முதல் வகுப்பு புத்தகங்களோடு வீட்டிற்கு வந்தாள்.
அவள் உள்ளே வரும்போதே ரங்கன் பக்கத்து மனையிலிருந்து ஓடோடி வந்தான்.
புத்தம் புதிய புத்தகங்களைப் பார்த்ததும் அவன் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பாக ஒளிர்ந்தது.
‘எனுக்கா இதெல்லாம்.
உனக்குதான் ஒரு அரை மணி நேரம் பொறுத்து நான் கூப்பிடறேன் வா படிக்கலாம்‘
சரி நானு அம்மாகிட்ட சொல்றேன், மான் குட்டியாகத் துள்ளிக் கொண்டு ஓடினான் குழந்தை.
அன்று முதல் தினமும் பாடம் நடந்தது. ஆர்வமாகக் கற்றான்.சொல்வதை வேகமாகப் புரிந்து கொண்டான். அதோடு நல்ல நினைவாற்றல். அவனுடைய அம்மாவிற்கு அளவிலா மகிழ்ச்சி, இந்தப் பிள்ளையாவது நாலு எழுத்து படிக்கிறதே என்று. இரண்டு மாதத்தில் எழுத்து கூட்டிப் படிக்க ஆரம்பித்து விட்டான்.பெரியவனைப் படிக்க வைக்கவில்லை,அவனும் அதைப்பற்றிப் பேசினதும் இல்லை, பதினைந்து வயதாகிறது, இவர்களைப் போலவே கூலி வேலைக்குப் பழகி விட்டான்.
அன்று சனிக்கிழமை வரதராஜப் பெருமாள் கோவிலுக்குச் சென்று விட்டு வீட்டிற்குத் திரும்பினதும் ரங்கனின் அம்மா வந்தாள். அம்மா தந்த புளியோதரை, மிளகு வடையை வாங்கிக் கொண்டு
எங்களுக்கு வேல முடிஞ்சிடுச்சி, புதன்கிழமை செஞ்சிக்குத் திரும்பிப் போறோம். என்றாள்.
அவள் போனதும் அப்பாவே பேச்சை ஆரம்பித்தார்.
‘என்ன உமா சொல்ற ரங்கன இங்கேயே வச்சிருந்து படிக்க வைக்கலாமா?
ஆமாங்க நானும் இத நெனச்சேன்
கல்யாணிக்கு பெரிய சந்தோஷம். தன் மனமறிந்து நடக்கும் பெற்றோர்,
அப்பா அவங்ககிட்ட கேட்டுட்டீங்களா
இல்லமா நாளக்கி கேட்டுடறேன்.
திங்களன்று இவள் பள்ளியிலிருந்து திரும்பியபோது வாசலில் அந்தச் சின்னக் கண்ணனைக் காணவில்லை.
அப்பாவின் முகம் இறுகியிருந்தது. ‘அம்மா என்னாச்சு‘
ரங்கனப் படிக்க வைக்கிறோம்னு கேட்டதற்கு முனியன்( ரங்கனின் தந்தை)
‘அதெல்லாம் விட முடியாது, பையன எங்ககிட்ட இருந்து பிரிக்கப் பாக்கறியா,
பொண்ணா இருந்தா கேப்பியா?, அவன் படிச்சி ஆக வேண்டியது ஒண்ணும் இல்ல,
பெரிய மனுஸனா இருக்க, இது கூடத் தெரியல‘
என்று பேசிவிட்டானாம்.
‘உமா எதுக்கு இதையெல்லாம் அவகிட்ட சொல்ற.’
அப்பா என்னாலதான பா, உங்களுக்கு இந்த பேச்சு.
அட விடும்மா, அவனுக்குப் புரியல அவ்வளவுதான்‘
என்று சிரித்தார். பேசினதோடு நிற்காமல் மதியமே மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு கிளம்பி விட்டார்களாம். இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை . மனமெலாம் கனமானது.
ரங்கனின் முகம் ஏக்கமாக கல்யாணியின் விழிகளில் படிக்க வா என நின்றது.
—
- படிக்க வா
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 278 ஆம் இதழ்
- ஷ்யாமளா கோபு அவர்கள் எழுதி திண்ணை ஆகஸ்ட் 29 வெளிவந்த சிறுகதை “ஊமைச்சாமி” ஆகஸ்ட் 2022 மாத சிறுகதையாகத் தேர்வு
- இலக்கியத் திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன் ( 1936 – 2022 ) நினைவுகள்
- க்ரியா ராமகிருஷ்ணனின் பின்கட்டு என்ற கதைத் தொகுப்பு
- உணர்வுடன் இயைந்ததா பயணம்?
- அணுவியல் துறை வெப்ப சக்தி உற்பத்தியால் குளிர் & வெப்ப நாடுகள் பெறும் உறுதிப் பயன்பாடுகள்