தூங்கும் பனிநீர் –குறும் திரைப்படப்பிரதி

This entry is part 10 of 17 in the series 23 அக்டோபர் 2022

 

கே.எஸ்.சுதாகர்

ஐந்து  பாத்திரங்கள் :           சிந்து, பிரதீபன் (சிந்துவின் தம்பி),

சிந்துவின் அம்மா, சிந்துவின் அப்பா,

ஜோதி ரீச்சர்

 

காட்சி 1

உள்

வீடு

மாலை

சிந்துவும் பிரதீபனும் ஹோலிற்குள் இருந்து, ரெலிவிஷனில் தமிழ் சினிமா பார்க்கின்றார்கள். (க்ளோஸ் ஷாட் / close shot). ஹோலிற்குள் லைற் எரிகின்றது. வீட்டிற்கு வெளியே கார் வந்து நிற்கும் சத்தம்.

      பிரதீபன்    : அக்கா…! அப்பாவும் அம்மாவும் வேலையாலை வந்திட்டினம்.

சிந்து       : சனலை நியூசிற்கு மாத்து. படிக்கிறதை விட்டிட்டு, படம் பாத்துக் கொண்டிருக்கிறாய் எண்டு தெரிஞ்சா அம்மா கத்துவா.

பிரதீபன் அவரசப்பட்டு ரி.வி சனலை மாத்துகின்றான். அது எத்தனையோ சனலுக்கு மாறி மாறிப் போய் கடைசியில் நியூஸ் சனலுக்கு வருகின்றது. சிந்து வீட்டின் கதவை நோக்கிப் பார்க்கின்றாள். சிந்துவின் அம்மா கதவைத் திறந்தபடி நிற்கின்றார்.

சிந்துவின் அம்மா : சிந்து… பிரதீபன்… இரண்டு பேரும் நான் சொல்லுறதை வடிவாக் கேளுங்கோ… நானும் அப்பாவும் ஒருக்கா ஜோதி ரீச்சர் வீட்டை போட்டு வாறம். வாறதுக்கு கொஞ்சம் லேற்றாகும். நீங்கள் இரவுச் சாப்பாட்டை முடிச்சிட்டுப் படுங்கோ. நாங்கள் திறப்பு வைச்சிருக்கிறம்… திறந்துகொண்டு வருவம்.

சிந்து & பிரதீபன்   : ஐய்… ஜோதி ரீச்சர் வீடுதானே! நாங்களும் வாறம்.

சிந்துவின் அம்மா : உங்களை நாங்கள் இன்னொருநாள் கூட்டிக்கொண்டு போவம். இப்ப ஒரு அவசர அலுவலாப் போறம். அப்பா காருக்குள்ளை இருக்கிறார்.

சிந்து              : என்னம்மா நீங்கள்? (சலித்தபடி) ஜோதி ரீச்சர் ஒஸ்ரேலியாக்கு வந்தாப் பிறகு நான் ஒருக்காவும் அவவைச் சந்திக்கேல்லை.

சிந்துவின் அம்மா : சரி.. சரி.. கண்ணைக் கசக்கிறதை விட்டிட்டு ஹப்பியா இரு. இன்னும் ஆறு மாசத்திலை உனக்குக் கலியாணம். கதவை உள்ளாலை பூட்டிப் போட்டு இருங்கோ. Bye

சிந்து & பிரதீபன்   : bye அம்மா…

சிந்துவின் அம்மா போகின்றார். பிரதீபன் எழுந்து போய், கதவைப் பூட்டிவிட்டு வந்து மீண்டும் படம் பார்க்கின்றான்.

சிந்து             : அம்மாவும் அப்பாவும் ஏன் எங்களை ஜோதி ரீச்சர் வீட்டுக்குக் கூட்டிப் போகல்லை…

பிரதீபன்           : நான் நினைக்கிறன்… ஜோதி ரீச்சருக்கும் அவவின்ரை ஹஸ்பனுக்குமிடையிலை ஏதோ பிரச்சினை…

சிந்து              : உனக்கெப்படித் தெரியும்?

பிரதீபன்           : அப்பாவும் அம்மாவும் நேற்று அவையைப்பற்றி ரகசியம் கதைக்கேக்கை நான் ஒட்டுக் கேட்டனான்.

சிந்து              : ரீச்சர் பாவம் என்ன? எனக்கு ஒரே கவலையாக் கிடக்கு.

சிறிது நேரம் ரி.வி பார்க்கின்றார்கள்.

சிந்து             : நான் றூமுக்குப் போறன் தம்பி. நிறைய வேலை இருக்கு. குட் நைற்…

பிரதீபன்           : சாப்பிடேல்லையே அக்கா?

சிந்து              : எனக்குப் பசிக்கேல்லை. நீ சாப்பிட்டிட்டுப் படு. நான் வேணுமெண்டா பிறகு சாப்பிடுறன்.

 

காட்சி மாற்றம் 2

உள்

சிந்துவின் அறை

இரவு

ஃபேட் இன் / fade in. ரேபிள் லாம்ப் எரிகின்றது. சுவரில் மணிக்கூடு இரவு இரண்டைத் தாண்டிவிட்டது. சிந்து படுக்கையில் புரண்டு புரண்டு படுக்கின்றாள். எழுந்து தலையைப் பொத்தியபடி படுக்கையில் இருக்கின்றாள் (க்ளோஸ் அப் /close up). கார் ஒன்று வந்து வீட்டுக்கு வெளியே நிற்கும் சத்தம். தொடர்ந்து கதவு திறந்து மூடும் சத்தம். சிந்துவின் அப்பாவும் அம்மாவும் கதவைத் திறந்து உள்ளே வரும் சத்தம் சிந்துவுக்குக் கேட்கின்றது. அவர்கள் வரும்போதே கசமுசா கசமுசா என்று கத்திக் கதைத்தபடி வருகின்றார்கள். அப்பா அம்மாவின் படுக்கை அறை, சிந்துவின் அறைக்கு அருகே இருப்பதால் அவர்களின் குரல் விட்டு விட்டுக் கேட்கின்றது. (மெல்லிய இசை. இந்த இடத்தில் படத்தின் டைட்டில்கள் போடலாம்.)

சிந்துவின் அப்பா  : பேசிச் செய்யிற சில கலியாணங்களிலை உதுதான் வாற பிரச்சினை. ஆரெண்டு தெரியாமை திடீரெண்டு கழுத்தை நீட்டெண்டா என்ன செய்யுறது?

சிந்துவின் அம்மா : என்ன இருந்தாலும் ஒரு ஆண் இப்பிடியும் செய்வானா? தறுதலை… போதை தலைக்கேறிவிட்டால், பெண்ணை எதுவும் செய்யலாமா?

சிந்துவின் அப்பா  : அடிக்கிறதும்…. சிகரெட்டால் சுடுகிறதும்… மயிரையும் புடுங்குவானா?

சிந்துவின் அம்மா : ஒரு பெண்குழந்தைக்கும் அப்பனாகிட்டான். எப்பிடி நடந்துகொள்ளுறது எண்டு தெரியேல்லை…

சிந்துவின் அப்பா : இதுக்கு இப்ப என்னதான் முடிவு?

சிந்துவின் அம்மா : பாவம் ஜோதி… என்னோடை படிச்சவைக்கை ஜோதி மட்டும் தான் யூனிக்கே போனவள். இப்ப ஒஸ்ரேலியா எண்டு வந்து பிள்ளையோடை கஸ்டப்படுறாள். உங்களுக்கு நாளைக்கு வேலை இல்லாட்டி, இன்னொருக்காப் போய் கதைச்சுப் பாக்கலாம்…

சிந்துவின் அப்பா  : கதைச்சு ஒண்டும் நடக்கப் போறதில்லை… சிந்துவின்ரை கலியாணமும் வருது. சற்றடேயும்  வேலை செய்தா தான் கொஞ்சம் காசும் சேமிக்கலாம்.

பின்னர் அவர்கள் இருவரும் ஏதேதோ குசுகுசுக்கின்றார்கள். சிந்துவுக்குக் கேட்கவில்லை. படத்தின் டைட்டில்கள் முடிவடைகின்றன. ஃபேட் அவுட் / fade out. காட்சி மாற்றம்.

 

காட்சி மாற்றம் 3

உள்

வீடு

பகல்

`ஆறு மாதங்களின் பின்னர்’ என்று டைட்டில் விழுகின்றது.

வீடு சோடனைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது (வீட்டின் உள் புறத்தை கமராவினால் சுற்றிக் காட்டுதல்). ரேப் றெக்கோடரில் இனிமையான நாதஸ்வரக் கச்சேரி மெல்லிதாக எழுகின்றது. பெண்களின் கலகலப்பான ஒலி குசினிக்குள் இருந்து கேட்கின்றது. சிந்து தனது றூமிற்குள் ஒரு கதிரையில் தலை குனிந்தபடி இருக்கின்றாள். (க்ளோசப் / close up பின்னர் க்ளோஸ் ஷாட் / close shot)

சிந்துவின் அம்மா : என்ன பிள்ளை? இன்னும் ரெடியாகேல்லையே! ஜோதி ரீச்சரல்லே வரப்போறா…. (சிந்துவின் றூமைத் திறந்தபடி)

சிந்து              : ஜோதி ரீச்சரா? அவா ஏன் இஞ்சை வரவேணும்?

சிந்துவின் அம்மா : அவா தானே உனக்கு மேக்கப் போடப்போறா!

சிந்து              : (திடுக்கிட்டு) அம்மா… எப்பிடியம்மா? இது எப்பிடி?

சிந்துவின் அம்மா : எது எப்பிடி?

சிந்து              : அவா என்னுடைய ஸ்கூல் ரீச்சர். ரீச்சருக்கு ஒரு மரியாதை குடுக்க வேண்டாம். எனக்கு பெரிய அவமானமா இருக்கு!

சிந்துவின் அம்மா : இதிலை அவமானப்படுறதுக்கு என்ன இருக்கு. பெருமைப்படு. உனக்கு இலங்கையிலை படிப்பிச்சதோடை, அவுஸ்திரேலியாவிலை உன்ரை கலியாணத்திலும் கலந்து கொள்ளுறா எண்டதை நினைச்சுப் பெருமைப்படு.

சிந்து              : எனக்கு இதிலை துளிகூட விருப்பம் இல்லையம்மா

சிந்துவின் அம்மா : ஜோதியும் நானும் ஒண்டாப் பள்ளிக்கூடத்திலை படிச்சனாங்கள். அதைவிட சின்னனிலையிருந்தே ஃபிரன்ஸ். எப்பிடியும் கலியாணத்துக்கு அவவும் வரப்போகின்றா. தன்னை விட்டிட்டு வேறை ஆரையேனும் மேக்கப்புக்குப் பிடிச்சா, அவ என்ன நினைப்பா…

(அவர்கள் வாக்குவாதப்பட்டுக் கொண்டிருக்கும்போது கதவு பெல் சத்தம் கேட்கின்றது.)

சிந்துவின் அம்மா : ஜோதி ரீச்சர் வந்திட்டா போல கிடக்கு. எங்களுக்காக ஒண்டரை மணித்தியாலம் கார் ஓடி வாறா. உன்னை மண்டாடிக் கேக்கிறன். கலியாணவீட்டிலை குழப்பம் செய்யாதை…

சிந்துவின் அம்மா கதவை நோக்கி விரைந்து போகின்றார். சிந்துவின் அம்மாவுடன் கமரா வாசல் நோக்கி நகருகின்றது / dolly tracking shot. பாதிக்கதவு திறக்கும்போதே  ஜோதி ரீச்சரின் ஆரவாரம் கேட்கிறது. ரீச்சருடன் அவரைப்போலவே மூக்கும் முழியுமாக ஒரு சிறுபெண்ணும் நிற்கின்றாள் / dolly in.

பான்/ pan – கமராவினால் காட்சியைப் பெருக்கிக் காட்டல்.

ஜோதி ரீச்சர்      : (முகமெல்லாம் சிரிப்புடன்) இது என்ன வாசலிலை மூங்கில் மரமெல்லாம் வச்சிருக்கிறியள்…

(சுற்றுமுற்றும் பார்த்தபடியே பாடத் தொடங்குகின்றார்.) மூங்கில் இலை மேலே… தூங்கும் பனி நீரே

சிந்துவின் அம்மா : (ஜோதி ரீச்சர் ஆரம்பிக்க, சிந்துவின் அம்மா தொடர்கின்றார்) தூங்கும் பனி நீரை… வாங்கும் கதிரோனே

இருவரும் கட்டிப்பிடித்து சுழன்றடிக்கின்றார்கள்.

ஜோதி ரீச்சர்      : எனக்கொரு சிறகில்லையே ஏங்கும் இளமைக்குத் துணையில்லையே… குளிருக்கு நெருப்பில்லையே பெண்ணின் குணத்துக்கு மனம் இல்லையே (வீட்டின் சுவர்புறம் திரும்பி, கண்ணைக் கசக்கிக் கொள்கின்றார்)

சிந்துவின் அம்மா : சரி…. சரி… அதை விடு. இப்ப சந்தோஷமா இரு (சிந்துவின் அம்மா ஜோதி ரீச்சரை தேற்றிக் கொள்கின்றார்)

ஜோதி ரீச்சர்      : மகளைத் தெரியுந்தானே! ஏழாம்வகுப்புப் படிக்கிறாள். உன்னுடைய வீட்டுக் கலியாணம் எண்டபடியாலை கூட்டி வந்தேன்.

சிந்துவின் அம்மா : வாம்மா… வந்து இந்தச் செற்றியிலை இரு (சிறுமியை ஆதரவாகத் தடவி உள்ளே கூட்டி வந்து செற்றியில் இருத்துகின்றார்)

ஜோதி ரீச்சர்      : அது சரி…. எங்கே உன் கதிரவன்?

சிந்துவின் அம்மா : ஹோலிலை நிறைய வேலையள் இருக்கெண்டு மகனையும் கூட்டிக்கொண்டு போயிட்டார். சீக்கிரம் வந்திடுவினம்.

ஜோதி ரீச்சர்      : எங்கே சிந்து? என்னுடைய ஒரு ஸ்ருடண்டிற்கு மேக்கப் போடுறது, எனக்கு எவ்வளவு பெருமையாக இருக்குத் தெரியுமாடீ

சிந்துவின் அம்மா : உதைப் போய் அவளிட்டைச் சொல்லு. எல்லாத்துக்கும் முதல் உன்னை என்ரை நண்பிகளுக்கு அறிமுகப்படுத்த வேணும்.  நிறைய ஃபிரண்ட்ஸ் கிச்சினுக்கை நிக்கினம். உன்னை முதலிலை அவைக்கு introduce பண்ணிட்டு, அப்புறமா சிந்துவிட்டைக் கூட்டிப் போறன்.

 

காட்சி 4

உள்

சிந்துவின் அறை

பகல்

ஜோதி ரீச்சர் அறைக்குள் நுழைந்ததும் சிந்துவைக் கட்டிப்பிடித்துக் கொஞ்சுகின்றார்.

      ஜோதி ரீச்சர்      : நீ என்னுடைய மகளைப் போல…

சிந்து கண் கலங்குகின்றாள். கண்ணில் இருந்து நீர்த்துளிகள் விழுகின்றன.

ஜோதி ரீச்சர்      : நீர் என்னட்டை இலங்கையிலை ஆறாம் வகுப்பு மட்டும் படிச்சிருக்கிறீர் என்ன?

சிந்து             : ஓம் ரீச்சர். நீங்கள் எங்களுக்கு சயன்ஸ் படிப்பிச்சதோடை, நீங்கள் தானே எங்கடை வகுப்புச் ரீச்சரும்.

ஜோதி ரீச்சர்      : உம்முடைய தம்பியும் என்னட்டைப் படிச்சவன் தானே!

சிந்து              : இல்லைச் ரீச்சர்… அவனுக்கு அப்ப சின்ன வயசு.

ஜோதி ரீச்சர்      : சரி… சரி… இப்ப சொல்லும்… அப்பவெல்லாம் என்னைப் பற்றி என்னவெல்லாம் கதைச்சிருப்பியள்?

சிந்து              : (தயங்கியபடியே) சொல்லலாம் தானே!

ஜோதி ரீச்சர்      : தாரளமா…

சிந்து              :  நீங்க அப்ப நல்ல மெல்லீசு. சீலை உடுத்தி, மூக்குக் கண்ணாடி போட்டுக்கொண்டு நடந்து வரேக்கை நடிகை சோபா மாதிரி இருப்பியள். உங்கடை குரல்கூட அப்பிடியே சோபா மாதிரித்தான் இருக்கும். ஆனா என்ன? உங்களைத் தூரத்திலை கண்டவுடனேயே எங்களுக்கெல்லாம் பயம் பிடிச்சிடும். நல்லாப் படிப்பிப்பியள், ஆனா பொல்லாத ரீச்சர்… நீங்கள் படிப்பிக்கேக்கை நாங்கள் எல்லாம் உங்களையே பாத்துக் கொண்டு நிப்பம்…

ஜோதி ரீச்சர் வெட்கப்படுகின்றார். கதைத்துக் கொண்டே ஜோதி ரீச்சர் சிந்துவுக்கான அலங்காரத்தைத் தொடங்குகின்றார். சிந்துவைத் தேவதையாக மாற்றுகின்றார். அவளுக்கான சீலையை அணிவிக்கும்போதும், மார்புகளைத் தீண்டும் போதும் சிந்து வெட்கத்தில் கூனிக்குறுகிப் போகின்றாள்.  அதை அவதானித்த ரீச்சர், உரையாடலைத் திசைதிருப்புகின்றார்.

ஜோதி ரீச்சர்      : நான் வெளிநாடு வருவன் எண்டு ஒருநாளும் நினைச்சும் பாக்கேல்லை. அதாலை இங்கிலிஷ் படிக்கிறதிலை துளியும் அக்கறை காட்டேல்லை. அதுக்கு இன்னுமொரு காரணம்… எங்கடை தமிழ் வாத்தியார். ஜப்பான், ரஷ்யா, சீனா போல நாங்களும் எங்கடை மொழியில் படிக்கும் காலம் இந்தா வந்துவிடும் எண்டு அடிக்கடி சொல்லுவார். யூனியிலைகூட இனிமேல் தமிழில் எல்லாப் புத்தகங்களும் எழுதப்பட்டுவிடும் எண்டும் சொல்லுவார். அந்த மனிசன் இதையே அடிக்கடி எங்கட காதுக்குள்ளை ஓதும். அந்தத் தமிழ் வாத்தியை நான் பிறகு ஒருக்காலும் காணேல்லை. கண்டிருந்தா அவற்ரை காதைக் கடிச்சுத் துப்பியிருப்பன். உண்மையில நாங்கள் எத்தனை மொழியளைப் படிக்கிறோமோ அவ்வளவுக்கு நல்லது.

                    நீங்கள் எல்லாம் சின்ன வயசிலேயே புலம்பெயர்ந்து வந்துட்டீங்கள். அதாலை எல்லாத்தையும் ஈசியா அடப் பண்ணிட்டியள். எனக்கும் இஞ்சை ஆசிரியத்தொழில் பாக்க விருப்பம் தான். மொழி ஒரு பிரச்சினை. காலமும் நேரமும் கை கூடி வரவேணும்.

சிந்து             : ஏன் ரீச்சர்….. உங்கள் ஹஸ்பண்ட் வேலைக்குப் போறதில்லையா?

ஜோதி ரீச்சர் சிறிது நேரம் ஒன்றும் கதைக்கவில்லை. தொடர்ந்தும் சிந்துவுக்கு மேக்கப் செய்கின்றார். சிந்துவுக்கு தன் பள்ளி ஞாபகங்கள் ஃபிளாஷ் பேக்காக வந்து போகின்றன.

ஃபிளாஷ் பேக்/ Flash back (ஜோதி ரீச்சர் கரும்பலகைக்கு முன்னால் நிற்கின்றார். மாணவர்களைப் பார்த்து, கத்திச் சொல்கின்றார்.

“ஸ்ருடன்ஸ்…. நீங்கள் உங்கட வாழ்க்கையிலை, எந்த ஒரு நிலையிலும், உங்களை ஒருநாளும் விட்டுக் கொடுக்காதீர்கள்”

சிந்து மனதிற்குள் சொல்கின்றாள். “எந்த ஒரு நிலையிலும் விட்டுக்கொடுக்க வேண்டாம் எண்டு சொன்ன ரீச்சரே, இண்டைக்கு தன்ரை வேலையை விட்டிட்டு வேறை வேலை பாக்கிறார்”

ஜோதி ரீச்சர்             : (சிந்துவைக் கூர்ந்து பார்க்கின்றார்) சிந்து… நீர் முந்தி சரியான துடுக்குத்தனம்… இப்ப அமைதி…

ஜோதி ரீச்சர் குனிந்து நிமிர்ந்து, சிந்துவை அலங்கரிக்கும் போதெல்லால், அவரின் கழுத்திலிருந்த தாலி சிந்துவின் முகத்திற்கு முன்னே ஊஞ்சலாடுகின்றது.

சிந்து                     : ரீச்சர்… ஏன் உங்கட ஹஸ்பண்ட் என்னுடைய கலியாணத்துக்கு வரல்லை…

ஜோதி ரீச்சர்             : சிந்து… அகதி வாழ்க்கையின்ரை அவலங்களிலை இதுவும் ஒண்டு… நான் இந்தத் தொழிலைச் செய்யிறதுக்கு ஆருடைய வற்புறுத்தலும் காரணம் இல்லை. உழைத்துச் சாப்பிட வேணும். என்ர குழந்தைக்கு நல்ல கல்வி வேணும். அவ்வளவும் தான்.

                    சரி… சரி… இதையெல்லாம் போய் நான் உமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறன். ஒருக்கால் கண்ணாடியிலை  பாருங்கோ… எப்பிடி இருக்கிறியள் எண்டு. எல்லாம் சரியெண்டா ஃபைனல் ரச் அப் செய்யலாம். (சிந்துவைப் பிடித்து கண்ணாடியருகே கூட்டிச் செல்கின்றார்)

சிந்து நிலைக்கண்ணாடிக்குள் தன்னைப் பார்த்து ஆச்சரியப் படுகின்றாள். அவளால் அவளையே நம்ப முடியவில்லை. ஒரு அழகு தேவதை போல காட்சி தருகின்றாள். கண்ணாடிக்குள் ரீச்சரும் அழகாகத் தெரிகின்றார்.

சிந்து              : ரீச்சர்… நீங்களும் ரொம்ப அழகா இருக்கிறீங்கள்… நடிகை ஷோபா மாதிரி.

ரீச்சர் வெட்கத்தில் தலை குனிகின்றார்.

ஜோதி ரீச்சர்            : சிந்து…. நீர் நல்ல வடிவா இருக்கின்றீர். அப்பா அம்மாவோடை வளருற பிள்ளை எப்பவும் நல்ல வளர்ப்புடன் தான் இருக்கும்.

சிந்து                   : தாங்ஸ் ரீச்சர்

ஜோதி ரீச்சர்             : மகளே! ஒண்டு சொல்லுவன். வரப்போகிற உன் கணவனை போதைக்கு அடிமையாகாமல் பாத்துக் கொள்.

சிந்து                   : காதலிச்சு, அப்பா அம்மா சம்மதத்தோடை எங்கட கலியாணம் நடக்குது ரீச்சர்

ஜோதி ரீச்சர்            : அப்பிடியா? லக்கி கேர்ள். அம்மாவைப் போல. உன்ர வாழ்வு சிறக்க என்ரை வாழ்த்துகள்.

உன்ர வெடிங் டேயண்டு ஒரு குட் நியூஸ் சொல்லப் போறன். கேள். உன்ரை ஜோதி ரீச்சர், கூடிய சீக்கிரம் ஒஸ்ரேலியாவிலை ரீச்சராகப் போகின்றா…

சிந்துவும் ஜோதி ரீச்சரும் மகிழ்ச்சி ஆரவாரத்தில் சிரிக்கின்றார்கள். உள்ளே ஆரவாரம் கேட்டு, சிந்துவின் அம்மா வந்து கதவைத் திறந்து எட்டிப் பார்க்கின்றார்.

சிந்துவின் அம்மா        : ரீச்சரும்  ஸ்டுடண்டும் எத்தனையோ வருஷங்களுக்குப் பிறகு சந்திச்சிருக்கிறியள் என்ன…? அதுதான் ஆனந்தக் கண்ணீர் விடுறியள்..

(முற்றும்)

 

Series Navigationசிற்றிதழ்களின் சிறப்பிதழ் – காற்றுவெளிஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா மெய்நிகரில்
author

கே.எஸ்.சுதாகர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *