மலையக இலக்கிய முன்னோடி தெளிவத்தை ஜோசப்  நினைவுகள்

author
1 minute, 46 seconds Read
This entry is part 16 of 17 in the series 23 அக்டோபர் 2022

 

 

அஞ்சலிக்குறிப்பு  :

 

மலையக இலக்கிய முன்னோடி தெளிவத்தை ஜோசப்  நினைவுகள்

                                                              முருகபூபதி

இலங்கையின் மூத்த எழுத்தாளரும்  மலையக மக்களின் ஆத்மாவை தனது படைப்புகளில் பிரதிபலித்தவரும், மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராக  நீண்ட  காலம் இயங்கியவருமான தெளிவத்தை ஜோசப்  இம்மாதம் 21  ஆம் திகதி அதிகாலை  வத்தளையில் தமது இல்லத்தில் மறைந்துவிட்டார்.

அமைதியான இயல்புகளைக்  கொண்டிருந்த அவர், ஆழ்ந்த    உறக்கத்திலேயே உலகைவிட்டு விடைபெற்றுவிட்டார்.

அவர் உடல் நலக்குறைவோடு இருப்பது அறிந்து சில நாட்களுக்கு முன்னர் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினேன்.  தனக்கு சற்று சோர்வாக இருப்பதாகச் சொன்னார்.

அவருடனான முதல் சந்திப்பு பற்றி யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் தீம்புனல் வார இதழில்  அண்மையில் எழுதியிருந்தேன்.  எனினும்,  அவர் அதனைப் பார்த்தாரோ தெரியாது. தற்போது ஆழ்ந்த துயரத்துடன் இந்த அஞ்சலிக் குறிப்புகளை எழுதுகின்றேன்.

அவரது மறைவுச் செய்தியறிந்ததும்,  அவரது புதல்வி சியாமளாவுடன் தொடர்புகொண்டு ஆறுதலும் அனுதாபமும் தெரிவித்துவிட்டே  இந்தப்பதிவை எழுதுகின்றேன்.

அவர் தனது புதல்விகள் திரேசா – சியாமளா ஆகியோரின் பெயர்களிலும் முன்னர் தினகரனில் இலக்கிய பத்தி எழுத்துக்களை எழுதினார்.

சமகாலத்தில் அடுத்தடுத்து எமது கலை, இலக்கிய, ஊடக ஆளுமைகளை இழந்துகொண்டிருக்கின்றோம்.  இறுதியாக 2019 ஆம் ஆண்டு பிற்பகுதியில் தெளிவத்தை ஜோசப்பின் தலைமையில்தான், யாழ். காலைக்கதிரில் 40 வாரங்கள் தொடராக வெளியான எனது இலங்கையில் பாரதி ஆய்வு நூலுருப்பெற்று  கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் காலைக்கதிர் ஆசிரியர் நண்பர் வித்தியாதரனும், கலந்துகொண்டு உரையாற்றினார். அந்த நிகழ்வில் கலந்துகொண்ட இலக்கிய ஆர்வலர் சட்டத்தரணி இராஜகுலேந்திரா, மற்றும் இலக்கியத் திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன் இலக்கிய ஆர்வலர் பொலிஸ் அத்தியட்சர் அரசரத்தினம் ஆகியோரைத் தொடர்ந்து தெளிவத்தை ஜோசப் அவர்களும் விடைபெற்றிருப்பது மனதில் மிகுந்த சோகத்தை உருவாக்கியிருக்கிறது.

 கடந்த 21 ஆம் திகதி காலையில்  அவரது குடும்பத்தினர், அவரை துயில் எழுப்பச்சென்றபோதுதான், அவரது உயிர் அவரை விட்டு பிரிந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.

எவருக்கும் சிரமம் தராமல் அமைதியாக விடைபெற்றுவிட்டார் இந்த இலக்கியவாதி.

சந்தனசாமி ஜோசப் என்ற இயற் பெயரைக் கொண்டிருந்த அவர்,   1934  ஆம் ஆண்டு பதுளை மாவட்டத்தில்  ஊவாக்கட்டவளை என்ற கிராமத்தில் பிறந்தார்.

பின்னாளில்  பெற்றோரின் பூர்வீகமான தமிழ்நாடு கும்பகோணத்தில் படித்துவிட்டு, மீண்டும்  தாயகம் திரும்பி பதுளை புனித பேதுருவானவர் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்து, தெளிவத்தை என்ற மலையகத் தோட்டத்தில் ஆசிரியராக பணியாற்றினார்.

இலக்கியப்பிரதிகளை இந்த ஊரின் பெயரை முன்னிறுத்தி தனது பெயரையும் இணைத்துக்கொண்டு எழுதியவர். தெளிவத்தை என்றால்,  எழுத்தாளர் ஜோசப்தான்.  அந்த ஊருக்கும் ஒரு அடையாளத்தை வழங்கினார்.

மலையகத்தில் ஒரு தோட்டப் பாடசாலையில் ஆசிரிய பணியாற்றியவர், கணக்கியல் படித்து தேர்ந்தார்.  கொழும்புக்கு வந்து அக்காலத்தில் பிரபல்யமான இனிப்புவகையான ஸ்டார் பிராண்ட் டொபி உற்பத்திசெய்யும்  Modern Confectionary Works Ltd  என்ற நிறுவனத்தில்  கணக்காளராக பணியாற்றினார்.  

சிறுகதைகள், நாவல்கள் , குறுநாவல்கள், ஆய்வுத் தொடர்கள், கட்டுரைகள் என அயராமல் எழுதிவந்தவர்.

தெளிவத்தை ஜோசப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை தொகுத்து செம்பதிப்பாக தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள் என்ற நூலை, இவரது நீண்ட கால நண்பர்கள் மாத்தளை செல்வா என அழைக்கப்படும் எச். எச். விக்கிரமசிங்காவும் லண்டனில் வதியும் எழுத்தாளர் மு. நித்தியானந்தனும்  வெளியிடவிருக்கிறார்கள்.  

இந்த இனிப்பான செய்தியையும் அறிந்துவிட்டே விடைபெற்றுவிட்டார் எங்கள் தெளிவத்தை. 

தனது  கதைகள், நாவல்களில் மலையக மக்களின் வாழ்க்கையை உயிர்த்துடிப்போடு சித்திரித்திருக்கும் தெளிவத்தை அவர்கள்,  தான் திரைக்கதை வசனம் எழுதிய புதிய காற்று திரைப்படத்திலும் அம்மக்களின் அவலமான வாழ்க்கையை சித்திரிக்கத் தவறவில்லை.

1975 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படம்தான் புதிய காற்று. 

இந்தத்திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமானவர்கள் இருவர்.  இன்று இலங்கையில் பிரபல அரசியல் தலைவர்கள். அவர்கள்தான் மனோ கணேசன் – பிரபா கணேசன்.  இவர்களின் தந்தையார் வி.பி. கணேசன் இலங்கை ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் செயலாளராக இருந்தவர்.

எஸ். இராமநாதனின் இயக்கத்தில் வெளிவந்த இந்தப்படத்தை வி.பி.கணேசன் தயாரித்து கதாநாயகனாகவும் தோன்றினார்.

தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள் எழுதிக்கொண்டே ஆய்வுகளிலும் ஈடுபட்டவர்.  அந்த ஆய்வுகளில் மகுடமாகத் திகழ்வது மலையக சிறுகதை வரலாறு. 

1960 களில் இலக்கியப்பிரதிகள் எழுதத் தொடங்கிய தெளிவத்தையின்  ஒரு சிறுகதை ஜி. உமாபதி அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் வெளியிட்ட உமா என்ற இதழில் வெளிவந்திருக்கிறது.

யார் இந்த உமாபதி?

இவர்தான் சிவாஜி கணேசன் நடிப்பில் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் வெளியான ராஜராஜ சோழன் திரைப்படத்தின் தயாரிப்பாளர்.

1960 களில் தெளிவத்தை ஜோசப் சிறுதைகள் எழுதத் தொடங்கியிருந்தாலும், நூலுருவில் முதலில் வெளிவந்தது காலங்கள் சாவதில்லை  நாவல்தான். இதனை வீரகேசரி பிரசுரம் 1974 இல் வெளியிட்டது. அதற்குப்பின்னர்தான், மு. நித்தியானந்தனின் வைகறை வெளியீடாக இவருடைய கதைகளின் தொகுதி நாமிருக்கும் நாடே 1979 இல் வெளிவருகிறது. இதற்கு தேசிய சாகித்திய விருதும் கிடைத்தது.

  தேசியசாகித்திய விருதினை இரண்டு தடவை பெற்றுள்ள          தெளிவத்தை , சம்பந்தன் விருதும் பெற்றவர். கலாசார                        அமைச்சின் கலாபூஷணம் பட்டமும்  கிடைத்தது. பேராதனை          பல்கலைக்கழகம் அழைத்து பாராட்டி கௌரவித்திருக்கிறது.  தமிழ்நாட்டில் 2003 இல் காலச்சுவடு நடத்திய தமிழினி                      மாநாட்டிலும் அவுஸ்திரேலியாவில் 2009 இல் நடந்த தமிழ் எழுத்தாளர் விழாவிலும்  கலந்துகொண்டவர். இலங்கையில் இலக்கியத்திற்கான உயர் விருதான சாகித்திய ரத்னாவும் இவருக்கு கிடைத்தது.

பின்னாளில் பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின்  ஏற்பாட்டில் வழங்கப்படும் விஷ்ணுபுரம் விருதும்  கிடைத்திருக்கிறது.

இங்கிலாந்திற்கும் கனடாவுக்கும் அழைக்கப்பட்டு பாராட்டி கௌரவிக்கப்பட்டவர்.

1983 ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தின்போது தான் பணியாற்றிய  ஸ்டார்  இனிப்புக் கம்பனிக்கு அருகிலிருந்த ஸெயின்ஸ்தான் திரையரங்கில் இரண்டு நாட்கள் தான்  சிறைப்பட்டிருந்த அவலத்தை நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983 என்ற உண்மைப்புனைவு நாவலில் தெளிவத்தை சித்திரித்திருக்கிறார்.

இன்று அந்த இனிப்புக் கம்பனியும் இல்லை ஸெயின்ஸ்தான் திரையரங்கும் இல்லை. தெளிவத்தை ஜோசப்பும் இன்றில்லை.

அன்று நடந்த அவலக்கதை மாத்திரம் தெளிவத்தையின் படைப்பில் வாழ்கிறது!

தெளிவத்தையின்  வாசிப்புத்தளமும் விரிவானது. எந்தவொரு இலக்கியக்கூட்டத்திலும் மேம்போக்காக பேசமாட்டார். தான்    எடுத்துக்கொண்ட தலைப்புக்காக பல நாட்கள்                ஆதாரங்களையும்                  திரட்டி கோவைப்படுத்திக்கோண்டே                   பேசுவார்.

நாவல், சிறுகதை எழுதிக்கொண்டே பத்திரிகைகளில் ஆய்வுத்தொடர்களையும் தந்திருப்பவர்.  பல வருடங்களுக்கு முன்னர், தினகரன் வாரமஞ்சரியில் பல தமிழக – ஈழத்து முன்னோடி             எழுத்தாளர்களின் சிறுகதைகளைத்  தேடி எடுத்து பிரசுரித்து   வந்தார். கதையை மாத்திரம் அறிமுகப்படுத்தாமல் குறிப்பிட்ட அக்கதையை எழுதியவரின் வாழ்க்கைச் சரிதத்தையும்                சுருக்கமாக பதிவுசெய்தார்.

தற்போது எம்மிடம் எஞ்சியிருப்பது தெளிவத்தை ஜோசப் பற்றிய நினைவுகளும் அவரது படைப்புகளும் அன்னாரது பாசமிகு குடும்பத்தினரும்தான்.

தொலைவிலிருந்து சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துகின்றேன்.

—-0—-

letchumananm@gmail.com

 

Series Navigationமுதுமையை போற்றுவோம்சொல்வனம் இணையப் பத்திரிகையின் 281 ஆம் இதழ் இன்று
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *