கே.எஸ்.சுதாகர்
பொதுவாகப் புலம்பெயர் நாடுகளில் தமிழ்ப் புத்தக வெளியீட்டு விழாக்களில் அதிகமானவர்களைக் காணமுடிவதில்லை. ஆனால் சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களைக் கண்டு நான் மலைத்துப் போய்விட்டேன்.
அவுஸ்திரேலியா மெல்பேர்ண் மாநகரில் கடந்த ஐப்பசி மாதம் 16 ஆம் திகதி, ஜெயராமசர்மா அவர்கள் எழுதிய `பண்பாட்டுப்பெட்டகம்’ என்னும் நூல் வெளியீட்டுவிழாக் கண்டது. அங்கேதான் இந்த அதிசயம் நிகழ்ந்தது. சிவா விஷ்ணு ஆலய `பீக்கொக்’ மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்விற்கு, ஸ்ரீமதி பாலம் லக்ஷ்மண ஐயர் அவர்கள் தலைமை தாங்கினார்.
பழந்தமிழ் இலக்கியத்தில் மிகவும் பரிச்சயம் கொண்ட ஸ்ரீமதி பாலம் லக்ஷ்மண ஐயர் அவர்கள், 96 வயதைக் கடந்தும் மிகவும் அபார ஞாபகசக்தியுடன் துடிப்பாக தனது அறிமுகவுரையை நிகழ்த்தினார். பண்பாட்டுப்பெட்டகத்தில் அமைந்திருக்கும் காரைக்கால் அம்மையார் பற்றிய கட்டுரையை முன்னிறுத்தும் வகையில், கம்போடியா நாட்டில் அமைந்திருக்கும் பண்டீஸ்ரீ கோயில் கோபுரத்தில் பேயுருவில் காட்சி தரும் காரைக்கால் அம்மையாரின் சிலை பற்றிய தகவலை தனது ஞாபகசக்தியிலிருந்து மீட்டெடுத்தார். தமிழ் மொழியைப் பற்றியும் இந்துசமயத்தைப் பற்றியும் எந்தவித அறிதலுமில்லாத சுற்றுலா வழிகாட்டி ஒருவர் காரைக்கால் அம்மையார் பற்றி விலாவாரியாகச் சொன்னதை எமக்குச் சொல்லிப் புளகாங்கிதம் அடைந்தார். `பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்’ என்ற காரைக்கால் அம்மையாரின் பெரியபுராணப் பாடலை இசைத்து எம்மை எல்லாம் மெய் மறக்கச் செய்தார்.
தொடர்ந்து திருமதி கலாதேவி பாலசண்முகன் அவர்கள் பண்பாட்டுப்பெட்டகம் பற்றி நூல்நயப்புரை செய்தார். அவர் தனக்கும் நூலில் உள்ள காரைக்கால் அம்மையார் பற்றிய கட்டுரை மிகவும் பிடித்துப் போனதாகக் கூறினார். மேலும் தொகுப்பில் கட்டுரைகள் – ஆன்மீகம், ஆளுமை, சமூகம் என்றவிதமாக அமைந்திருந்த போதிலும், ஆளுமை முதலிலும் தொடர்ந்து ஆன்மீகம், சமூகம் என்றவிதமாக வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற தனது கருத்தைக் கூறினார். நூல் நயப்புரையின் பின்னர் திரு ஜெயராமசர்மா அவர்கள் ஏற்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்வில் பல புதுமைகளைக் காணக்கூடியதாக இருந்தது. புத்தகத்தின் முதற்பிரதியை தலைமை வகித்தவருக்கே வழங்கி, மரபை மீறும் செயல் அதுவெனச் சொல்லி புதுமை படைத்தார் திரு ஜெயராமசர்மா அவர்கள். விழாவில் வெளியீட்டுரையை நான் காணவில்லை. நன்றியுரையை எழுத்தாளரின் மருமகன் செய்திருந்தார். வந்திருந்த அனைவருக்கும் நூலாசிரியர் தானே கையெழுத்திட்டு புத்தகத்தை வழங்கியமை மேலும் சிறப்பாக இருந்தது. விழா, மாலை மூன்று மணிக்கு ஆரம்பித்து ஐந்து மணிக்கு முடிவடையும் என்றிருந்தபோதும், சொல்லப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே விழா முடிவடைந்துவிட்டது. இத்தனை சிறப்புகளை `பண்பாட்டுப்பெட்டகம்’ பெற்றிருந்தது என்று சொன்னால் மிகையில்லை.
யாழ்ப்பாணம் `மெகா பதிப்பக’த்தினால் வெளிவந்திருக்கும் இந்தப் புத்தகமானது ஆன்மீகம், ஆளுமை, சமூகம் என்று மூன்று விடயப்பரப்புகளைக் கொண்டிருக்கின்றது. மூன்று தலைப்புகள், பொருத்தமாக மூன்று அணிந்துரைகள். பேராசிரியர் கலாநிதி என். சண்முகலிங்கம், பேராசிரியர் இலக்கிய கலாநிதி ப. கோபாலகிருஷ்ண ஐயர், பேராசிரியர் இ. பேச்சிமுத்து என மூன்று அறிஞர்களின் அணிந்துரையும் மூன்று முத்துக்கள். கூடவே முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன் அவர்களின் மனப்பதிவும் இருக்கின்றது.
பெட்டகத்தினுள் பொன்னும் மணியும் முத்தும் என எல்லாமே விரவிக் கிடக்கின்றன. முதல் அத்தியாயத்தில் `ஏன் கோவில்?’ என்பதற்கான விளக்கம் நமக்குக் கிட்டி விடுகின்றது. அதைப் புரிந்துகொண்டு உள்ளே சென்றால் நம் சுவைப்பிற்காக பல அத்தியாயங்கள் காத்துக் கிடக்கின்றன. ஆன்மீகம் என்ற பகுதியில் நவராத்திரி, தைப்பூசத் திருநாள், கேதாரகெளரி விரதம். கார்த்திகைத் தீபத்திருவிழா போன்றவற்றுடன் பல சுவையான கட்டுரைகளும் அடங்கியிருக்கின்றன. ஆளுமை என்ற பகுதியில் முதலில் வருபவர் காரைக்கால் அம்மையார். உலக மொழிகளில் தமிழ் மொழியில் மட்டுமே பக்தி இலக்கியம் இருக்கின்றதெனவும், பக்தி இலக்கியத்தில் எழுகின்ற ஞாயிறாக விளங்குபவர் காரைக்கால் அம்ம்மையார் என்பதுவும் புதிய தகவலாக இருந்தது. அறுபத்துமூன்று நாயன்மார்களில் மூவர் மாத்திரமே பெண்கள் எனவும், அவர்களுள் தலையாயவர் காரைக்கால் அம்மையார் எனவும் அறியக்கூடியதாக இருக்கின்றது. மேலும் ஆளுமை என்ற பகுதியில் நாயன்மார்கள் முதற்கொண்டு, நாவலர் பெருமான், சேர்.பொன்.இராமநாதன், யோகர் சுவாமிகள், விபுலானந்தர், உ.வே.சா, வாரியார் சுவாமிகள், கண்ணதாசன் என்று பலரைப்பற்றிச் சொல்லிச் செல்கின்றார் நூல் ஆசிரியர். `குழந்தைகளை உயரத்தில் வைத்துப் பார்க்கும் நிலை வரவேண்டும்’, `ஆரோக்கியம் என்பது ஆனந்தமான வாழ்வாகும்’, `திரையிசையில் தமிழிசையின் பங்களிப்பு’, `திரையில் மலர்ந்த தீந்தமிழ்’, `இக்காலப் பேச்சுத்தமிழ் – ஓர் ஆய்வு’ என்பவற்றை நான் மிகவும் விரும்பி வாசித்தேன்.
ஆன்மீகம், ஆளுமை, சமூகம் இவை மூன்றும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. அவற்றைத் தனியே பிரித்தெடுத்து நம் பார்வைக்கு அழகாக வைக்கின்றார் திரு ஜெயராமசர்மா அவர்கள். முன் அட்டையில் பளிச்சிடும் அழகான `பெட்டகம்’, பின் அட்டையில் நமக்கெல்லாம் இந்தப் பண்பாட்டுப்பெட்டகத்தைச் சுவைப்பதற்குத் தந்த `சிரிப்புச் செம்மல்’.
நாற்பத்தெட்டு அத்தியாயங்களைக் கொண்டிருக்கும் பண்பாட்டுப்பெட்டகம், `மாற்றம் ஏற்படுத்தும் மாமருந்து’ என்ற அத்தியாயத்துடன் நிறைவுறுகின்றது. வாசித்து முடிந்ததும் இந்தப் புத்தகம் நம்மில் பலருக்கு `மாற்றம் ஏற்படுத்தும் மாமருந்து’ என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்த அருமையான பெட்டகத்தை எமக்குத் தந்த திரு ஜெயராமசர்மா அவர்களுக்கு வாழ்த்துகள்.
- எனது மைல்கல்
- குறுக்குத்துறை
- ஜெயராமசர்மா அவர்கள் எழுதிய `பண்பாட்டுப்பெட்டகம்’
- ஆர்.வி கதைகள்….
- பிள்ளை கனியமுதே
- பெண் விடுதலை – நூல் அறிமுகம்
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்