அழகியசிங்கர்
என் கையில் எத்தனை தொகுப்பு நூல்கள் இருக்கின்றன என்பதைத் தேடிக்கொண்டிருக்கின்றேன்.
விருட்சம் வெளியீடாக நான் நான்குக் கவிதைத் தொகுதிகள் கொண்டு வந்துள்ளேன்.
- ‘ழ’ கவிதைகள் 2. விருட்சம் கவிதைகள் தொகுதி 1 3. விருட்சம் கவிதைகள் தொகுதி 2 4. மனதுக்குப் பிடித்த கவிதைகள்
‘ழ’ கவிதைகள் என்ற தொகுப்பு நூல் ஆத்மாநாம் கொண்டு வந்த ‘ழ’ என்ற சிற்றேட்டிலிருந்து தொகுக்கப்பட்டது. 1990ஆண்டில் வெளிவந்த தொகுப்பு நூல் இது. ‘ழ’ வில் எழுதிய எல்லாக் கவிஞர்களின் கவிதைகள் இதில் இடம் பெறவில்லை.
இதைத் தொகுத்தவர்கள் ஞானக்கூத்தன், ஆர்.ராஜகோபாலன், உடன் நானும் சேர்ந்து தொகுத்தேன்.
ஐராவதம் ழ கவிதைகளை அலசுகிறார். இறுதியில், ‘எத்தனையோ அவலங்கள் நிரம்பிய இன்றைய தமிழ் இலக்கியச் சுழலில், இந்தத் தொகுப்பு நூல் ஒரு ஆரோக்கியமான முயற்சி’ என்கிறார்.
ஞானக்கூத்தன் ழ கவிதைத் தொகுப்பில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.’ …இவையே புதுக்கவிதையின் முதல் நெறியைச் சுட்டிக் காட்டுபவை என்று உறுதியாகக் கூறலாம். மற்றவை சொல்லேய்புகள். பொய்மையின் புன்சிரிப்புகள்…’
பாரதிதாசனின் ‘குயிலு’க்கும் ஆத்மாநாமின் ‘ழ’ வுக்கும் இடையே காலம் மாறிவிட்டதை இத் தொகுப்பு தெள்ளத் தெளிவாக்குகிறது. இது இலக்கிய வளர்ச்சிக்கு இன்றியமையாத நிகழ்வாகும் என்கிறார். இத்தொகுப்பில் உள்ள ஆத்மாநாமின் கவிதை வீழ்ச்சி நிலை ஒன்று என்ற கவிதையை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.
அறிவு எதற்கு”
பொருள் எதற்கு
அனுபவங்கள் எதற்கு
காலம் வெளி
ஒன்று இரண்டு
என
தேடித் தேடி தேடி
தெளிவின்மையில்
ஒரு சுகங்கண்டு
மருண்டு
அதுவேயாகி
காண்போரைச் சினந்து
ஏன்
ஆர்ப்பரிக்கும் கடலலைகள்
நகைக்க
சிறுமீன்கள் நம்முடனே
மௌன மொழி பேச
நகுலனின் ஒரு கவிதையைப் பார்க்கலாம். ‘வண்ணாத்திப் பூச்சிகள்’ என்பது கவிதையின் தலைப்பு.
உண்ணூனிப் பிள்ளைக்கு கண்வலி
கேசவ மாதவன் ஊரில் இல்லை. சிவனைப்
பற்றித் தகவல் கிடைக்கவில்லை. நவீனன்
விருப்பப்படியே அவன் இறந்த பிறகு அவன்
பிரேதத்தை அவன் உற்ற நண்பர்கள்
நீளமாக ஒரு குழி வெட்டி அவனை
அதில் தலைகீழாக நிறுத்தி வைத்து
அடக்கம் செய்து விட்டார்கள். எங்கும்
அமைதி சூழ்ந்திருக்கிறது. வெயிலில்
வண்ணத்துப் பூச்சிகள் பறந்து
கொண்டிருக்கின்றன.
52 கவிஞர்களின் கவிதைத் தொகுதி இது.
‘மண்ணில் தெரியுது வானம்’ என்ற கவிதைத் தொகுப்பு இதன் தொகுப்பாசிரியர்கள் சிற்பி பலசுப்பிரமணியம், தா.வே .வீராசாமி.
சாகித்திய அகாதெமி கொண்டு வந்துள்ள தொகுப்பு நூல் இது.
இது 2007ஆம் ஆண்டு உருவான தொகுப்பு நூல்.
பாரதியாரிலிருந்து தொடங்கி உமாமகேஸ்வரியுடன் முடிகிறது இத்தத் தொகுப்பு நூல்.
137 கவிஞர்களின் தொகுப்பு நூல் இது. ஒரு இடத்தில் சிற்பி இப்படிக் குறிப்பிடுகிறார். ‘புதுக்கவிதையின் அகம் ‘எழுத்து’ மரபு என்றால் புறம் வானம்பாடிமரபு எனலாம். ஆயினும் எண்பதுகளில் இந்த எல்லைகள் மறைந்து மங்கிப்போய் அகமும் – புறமும் வெவ்வேறு அளவில் இருவகை கவிஞர்களிடமும் கலந்து போயிருக்கின்றன.
இதில் எல்லா வகைக் கவிஞர்களும் அடங்கி உள்ளார்கள். இத் தொகுப்பில் உள்ள மேலாடை என்று சுரதா கவிதையைப் பார்க்கலாம்.
விண்ணுக்கு மேலாடை வெயில் விழுங்கும் மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
மண்ணுக்கு மேலாடை மயில் நீல இருட்டு
மனத்திற்கு மேலாடை வளர்கின்ற நினைவு
கண்ணுக்கு மேலாடை காக்கின்ற இமைகள்
கனவுக்கு மேலாடை தேங்குகின்ற தூக்கம்.
எண்ணுக்கு மேலாடை எதுவென்றால் எழுத்தாம்
எழுத்துக்கு மேலாடை எண்ணங்கள் ஒன்றே
நிலவுக்கு மேலாடை நகராத மலைகள்
நீருக்கு மேலாடை படர்கின்ற பாசி
மலருக்கு மேலாடை கிளிப்பச்சை இலைகள்
மனைவிக்கு மேலாடை அவள் கணவன் ஆவான்
பலருக்கு மேலாடை கொதிக்கின்ற கோபம்
பத்துக்கு மேலாடை பதினொன்றேயாகும்
சிலருக்கு மேலாடை வற்றாத வீரம்
திறமைக்கு மேலாடை சிறந்த புகழ் ஒன்றே
இன்னும் பல தொகுப்பு நூல்களின் குறிப்புகள் இத் தொகுப்பு நூலில் காணப்படுகிறது.
தமிழ்க் கவிதைத் தொகுப்புகள் பல நம் சமகாலத்தில் வெளிவந்துள்ளன. திருச்சிராப்பள்ளியில் திருலோக சீதாராமன், அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார் ஆகியோர் ஐம்பதுகளில் புதுப்புனல் வெளியீடாக புதுத் தமிழ்க் கவிமலர் எனும் தொகுப்பை வெளியிட்டனர். எழுபதுகளில் த.பீ.செல்வம் சில புதுக்கவிதைகளைத் தொகுத்து விதி என்ற தொகுதியாக வெளியிட்டார். 1973ல் வானம்பாடிகளின் கவிதைகள் சிலவற்றை ஞானியின் முன்னுரையுடன் வெளிச்சங்கள் என்ற தலைப்பில் தமிழ் நாடன் ஒரு தொகுப்பாகப் பதிப்பித்தார் என்று குறிப்பிடுகிறார்.
இன்னும் தமிழில் வெளிவந்த தொகுப்புகளை ஆராய்வோம்.
(இன்னும் வரும்)
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 282 ஆம் இதழ்
- போர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2022)
- விலாசம்
- கவிதை
- பரிசு…
- அழலேர் வாளின் ஒப்ப
- பயணம்
- கனடா தமிழ் மிரர் பத்திரிகையின் விருது விழா
- கவிதைத் தொகுப்பு நூல்கள் 2
- மின்னல் கூடு
- துணைவியின் நினைவு நாள்
- காற்றுவெளி(2022)கார்த்திகை மின்னிதழ் கவிதைச் சிறப்பிதழாக வெளிவருகிறது
- சிறுகதைப் போட்டி
- வாழும் போதே வாழ்க்கையை கொண்டாடுவோம்