க.நா.சு கதைகள்

author
4 minutes, 8 seconds Read
This entry is part 7 of 9 in the series 18 டிசம்பர் 2022

அழகியசிங்கர் 

            க.நா.சு ஒரு கட்டுரையில் சிறுகதை எல்லாம் பொய் என்று எழுதியிருக்கிறார்.  சிறுகதை புனைவது என்பது பொய்தான்.  பொய்தான் எல்லோரும் புனைந்து கொண்டிருக்கிறோம். பொய்யைத்தான் எல்லோரும் படித்துக்கொண்டும் இருக்கிறோம்.

            ஆனால் இன்னொரு விஷயம் சொல்கிறார்.  பத்திரிகைக் கதை இலக்கியத்தரமான கதை என்று.  இந்தப் பிரிவைத்தான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

            எது இலக்கியக் கதைகள் எது பத்திரிகைக் கதைகள்.  இதை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்.

            இதை ரொம்பவும் விளக்காமல் இருப்பது நன்றாக இருக்கும். இதைக் கண்டு பிடிக்க முயற்சி செய்தால் குழப்பத்தில் முடிந்து விடும்.

க.நா.சு சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.  ஆனால் அவருடைய கதைகள் இலக்கியக் கதைகளா பத்திரிகைக் கதைகளா என்பதை அவர் விளக்கவில்லை.

            மணிக்கொடி காலத்தில்தான் அதுமாதிரி பிரிவு உருவாயிருக்கும்.கல்கிக்கும் மணிக்கொடிக்கும் வித்தியாசம் ஏற்பட கல்கி பத்திரிகைக் கதைகள் என்று எழுத, மணிக்கொடி எழுத்தாளர்கள் இலக்கியக் கதைகள் எழுதியிருக்கிறார்கள்.

            பத்திரிகைக் கதைகள் படிப்பவர்கள் அதிகமாக இருப்பார்கள். ஆனால் இலக்கியக் கதைகளை ரொம்பவும் குறைவானவர்களே வாசிப்பார்கள்.

            உண்மையில் க.நா.சு சிறுகதைகளை எழுதியிருக்கிறார் என்று தெரியுமா?

            யாரும் அவர் கவிதைகள் எழுதியிருப்பதாகக் கூடத் தெரியாது. அவர் சிறந்த முறையில் கதைகள் எழுதியிருக்கிறார்.  அவர் கதைகள் பெரும்பாலும் தன்னை மையப்படுத்தி எழுதியிருக்கிறார்.

            அவர் கதைகள் சிறுபத்திரிக்கைகளில் தவிர வேற எங்கும் வர வாய்ப்பில்லை. 

            எம்.வி.வெங்கட்ராமன் என்ற எழுத்தாளர் மௌனி என்ற எழுத்தாளரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  மௌனி தன கதைகள் ஆனந்தவிகடன், குமுதம் பத்திரிகைகளில் வரவேண்டுமென்று விரும்பினாராம். 

            ‘ஏன்?’ என்று கேட்டதற்கு, இன்னும் அதிகமான பேர்கள் என் கதைகளை வாசிக்க வாய்ப்புண்டு என்றாராம்.

            மௌனி கதைகள் பிரபல பத்திரிகைகளில் வர வாய்ப்பில்லை. இது அவருக்குத் தெரியவில்லையே என்று கிண்டல் செய்கிறார் வெங்கட்ராமன்.

            சுஜாதா ஒரு குறுநாவல் ஒரே ஒரு இலக்கிய இதழ் கொண்டு வந்த நகுலனின் குருúக்ஷத்ரம் இதழில் வெளிவந்திருக்கிறது. ஆனால் பெரும்பாலும் அவர் கதைகள் பிரபல பத்திரிகைகளில்தான் வந்திருக்கின்றன.

            இன்னொரு உதாரணம் அசோகமித்திரனின் கதைகள் எல்லாம் பெரும் பத்திரிகைகளில்தான் வந்திருக்கின்றன.

            க.நா.சுவை எடுத்துக்கொள்வோம் அவர் தேள் என்ற கதை பெரிய பத்திரிகையில் வருகிற வாய்ப்பு இருந்திருக்கும்.  கோணங்கி, நகுலன் கதைகள் எல்லாம் பெரிய பத்திரிகைகளில் கொண்டு வர முடியாது.

            வாசகர்கள் படிக்க மாட்டார்கள் என்பதில்லை. வாசகர்களுக்கு அது மாதிரி அனுபவத்தைத் தர அந்தப் பத்திரிகைகள் தயாராக இல்லை. வாசகர்கள் புத்திசாலியாக இருப்பதைப் பெரிய பத்திரிகைகள் விரும்பவில்லை போல் தோன்றுகிறது.

            ஒரு அமைப்பு சமீபத்தில் சிறுகதைப் போட்டி வைத்தது. அதற்கு 300 வந்துள்ளதாக அந்த அமைப்பு பெருமைப் பட்டுக்கொள்கிறது. 

            அந்த அமைப்பு எப்படி அந்தக் கதைகளைத் தேர்ந்தெடுத்து பரிசுக்குரியதாக லிஸ்ட் பண்ணப் போகிறது.  தேர்ந்தெடுப்பவர்களின் தகுதி என்ன? அவர்களுக்குக் கதைகளைப் பற்றி என்ன அறிவு இருக்கிறது என்ற கேள்விகளை எல்லாம் அந்த அமைப்பிடம் கேட்க முடியாது.

            அதைத் தேர்ந்தெடுப்பவர்கள் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்காமல் விட்டுவிடலாம்.  க.நா.சு வின் தேள் கதையை அந்த அமைப்பிற்கு அனுப்பினால், நிச்சயமாகத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.

            இந்த மூன்னூறு கதைகள் எழுதியும் எத்தனை அபாக்கிய வாதிகள் தேர்ந்தெடுக்கப்படாமல் போய் விடுவார்களோ? 

            இப்போது தேள் கதையைப் பார்ப்போம். இதில் கதைசொல்லியாக வருபவன் யார்? க.நா.சுவேதான்.  அவர் மனைவி பெயர் ராஜீ.  அந்தப் பெயரை இந்தக் கதையில் குறிப்பிடுகிறார்.  

            கநாசு தன்னை முன்னிலைப் படுத்திக் கதை எழுதுபவர்.  இதே உத்தியை நகுலனும் அவர் கதைகளில் தெரியப்படுத்துவார்.

            கதையில் சுந்தாப்பாட்டி கதைசொல்லியைப் பார்த்துக் கோபப் படுகிறார்.  

            “ராத்திரி இவ்வளவு நாழி கழிச்சு வந்தால் சேனியத் தெரு வழியா வராதேடா மேலத் தெருவரியா வா”  என்கிறாள்.

            “ஏன்?” என்று கேட்கிறான் கதைசொல்லி.

            அந்தத் தெருவில் ஏதோ அசாம்பவிதம் நடந்து விட்டது.  அதனால் இரவு நேரத்தில் வந்தால் பயந்து கொண்டு விடலாம் என்ற எண்ணம் பாட்டிக்கு.

            கதைசொல்லி. சாதாரணமாக சுந்தாப்பாட்டி சொல்லுவதைத்  தட்டுவது கிடையாது.  பாட்டி பேய் பிசாசு பற்றிப்  பேசுகிறாள்.

            கதைசொல்லி  கேட்கிறான்.  ஏன் பாட்டி உனக்குக் கூட பேய் பிசாசு இதிலெல்லாம் நம்பிக்கை உண்டா என்ன?

            பாட்டி பதில் சொல்லும்போது ஒரு நல்ல கருத்தைச் சொல்கிறாள்.  “பேயிருக்கோ பிசாசு இருக்குமோ.அதனால் ஏற்படுகிறது பயம் மட்டும் உலகத்திலிருந்துகொண்டுதானே இருக்கிறது” என்கிறாள்.

            பாட்டி ஒரு கதை சொல்கிறாள். அது பேய், பிசாசு பற்றிக் கதை கிடையாது.  ஆனால் தேள் பற்றிக் கதை.

            அறுபது எழுபது வருஷங்களுக்கு முன்னால் அதாவது நான் கல்யாணம் செய்துகொண்டு சாத்தனூர் புக்கம் புகுந்த காலத்தில் நடந்த கதை இது என்று ஆரம்பிக்கிறாள் பாட்டி.

            “எப்பொழுதாவது ஒரு சமயம் ஒரு தெருவிலே இரு குடும்பத்தாருக்குள் சண்டை  வந்து விட்டது.  கால் காசு பெறாத காரணம்தான் விஷயம் பெரிதாக வளர்ந்து விரோதம் முற்றி விட்டது.

            இப்படிப்பட்ட விரோதம் ராஜ÷ சாஸ்திரிகளுக்கும் கிட்டாவையருக்கும் வந்து விட்டது.  ரா3÷ சாஸ்திரிகள் நல்ல சொத்துள்ளவாறு முரட்டுப் பணக்காரன்.  ஆகவே தெருவிலே அவருக்கு நல்ல செல்வாக்கு.      கிட்டாவையர் அவ்வளவு சொத்து இல்லாதவர்.  நியம நிஷ்டைகள் தவறாதவர்.  வீட்டிலே பூஜைகளெல்லாம் அமர்க்களப்படும்.  மலையாளப் பக்கத்தில் யாரோ ஒரு சாமியாருடன் கூடிக்கொண்டு மந்திரம் தந்திரம்.  ரசவாதம் எல்லாம் படித்தவர் என்று சொல்லிக்கொள்வார்கள்.           

            ராஜு .சாஸ்திரிகள் இரண்டாவது பெண்ணிற்குக் கல்யாணம்.  இந்தக் கல்யாணத்தை முன்னிட்டு இருவருக்கும் சமரசம் செய்யப் பலர் முன்னின்று செயல்பட்டவர்கள்.  அதில் கதைசொல்லியின் தாத்தாவும் ஒருவர்.

            கிட்டவையர் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் ராஜ÷ சாஸ்திரிகள் அசைந்து கொடுக்கவில்லை.  அது பணத் திமிரா, அல்லது சுபாவமாகிவிட்ட ஒரு அலட்சியமோ எது என்று தெரியவில்லை.

            கிட்டாவையரைக் கூப்பிடவில்லை.  

            கல்யாணத்தன்று தெருவும் ஊரும் திரண்டு வந்திருந்தது.  முகூர்த்தம் நடந்த சமயத்தில் கிட்டாவையர் கல்யாண வீட்டிற்கு எதிர்வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.  அவர் தன் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டார்.  கையில் ஒரு விசிறியுடன் தூணில் சாய்ந்து கொண்டிருந்தார்.

            கெட்டிமேளம் கொட்டியது.  பெண்ணின் கழுத்தில் தாலியேறிவிட்டது.  மற்ற காரியங்கள் நடந்து கொண்டிருக்கச் சபைக்குச் சந்தனம், சர்க்கரை, வெற்றிலை பாக்கு வழங்கப்பட்டது. 

            பாதிக்கு மேல் வழங்கியிருப்பார்கள்.  மறுபாதிக்கு வெற்றிலை பாக்குத் தட்டில் அடுக்கி வைத்திருந்தார்கள்.

            திடீரென்று சபை அல்லோலகல்லோலப்பட்டது.  சபையில் இருவர்களில் பலர் திடுதிடுவென்று வெளியே ஓடிவரத் தலைப்பட்டார்கள். ஒருசிலர் கூச்சலிட்டார்கள் ஒரு சிலர் என்ன என்ன என்றார்கள். இப்படியாகக் கல்யாண வீட்டில் ஏகப்பட்ட அமர்க்களம்.

            கல்யாண வீட்டில் அமர்க்களத்திற்கெல்லாம் இதுதான் காரணம்.  சபா தாம்பூலத்தில்  வழங்கிய வெற்றிலையில் வைத்திருந்த பாக்கெல்லாம் திடீரென்று தேளாக மாறிவிட்டது.  தாம்பூலத்தை வாங்கியவர்கள் எல்லாம் ஐயோ தேள் என்று கீழே போட்டார்கள்.

            ஒரு பத்து நிமிடம் அமர்க்களம் சொல்லிமாளாது. அங்கிருந்து எல்லோரும் ஏக காலத்தில் வெளியேற முயன்றார்கள்.

            ஆனால் மணக்  கோலத்துடன் தர்மியே வெளியே வந்து எதிர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்த கிட்டாவையருக்கு நமஸ்காரம் பண்ணி  “என் கல்யாணத்திலே இப்படி எல்லாம் நீ நடத்த விடலாமா சித்தப்பா” என்று கேட்டாள்.

கிட்டாவையர் வெற்றிலையைக் குதப்பிக்கொண்டே  “என்னடி தர்மி என்ன இப்ப நடந்துடுத்து” என்றார்.

            பிறகு “உன்னைக் கைப்படிச்சவன் எங்கேடி அவனையும் நான் பார்க்கணுமே” என்றார்.

            யாரோ போய் மணமகனையும் அழைத்து வந்தார்கள். அவனும் கிட்டவையருக்கு நமஸ்காரம் பண்ணினான்.  இருவரையும் ஆசிர்வதித்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பி விட்டார் கிட்டவய்யர்.  

ராஜு சாஸ்திரிகளின் வீடு பூராவும் நிறைந்து நெளிந்த தேள்களெல்லாம் எங்கேயோ மாயமாக மறைந்து விட்டன.  அதன் பின் கல்யாணம் சுபமாக நிறைவேறியது.

            பிறகு ராஜு  சாஸ்திரிகள் நேரில் போய் தம்பியை அழைத்தார். கிட்டாவையார் வரேன் போ அண்ணா என்று சொன்னாரே தவிர போகவில்லை.  அதற்கும் பிறகும் அவர்கள் உறவு தொடரவில்லை.

            கதையை ஒருவழியாக முடித்தாள் பாட்டி.  கதைசொல்லி  “என்ன பாட்டி? பிசாசுக் கதை சொல்றேன்னு பார்த்தா ஏதோ வேடிக்கைக் கதை சொல்லிவிட்டாயே” என்கிறான்.

            “உனக்கு எல்லாம் வேடிக்கையாகத்தான் இருக்கும்.  நானும் உன் தாத்தவும் தாம்பூலம் கையில் வாங்கிண்டு பாக்கு பார்க்கறச்சே கையில் தேற் நெளியதைப் பார்த்திருந்தால் தெரியும்” என்றாள் சுந்தாப்பாட்டி

            “இதெல்லாம் வெறும் மனப்பிராந்திதான்” என்றான் கதைசொல்லி.

            “உனக்கும் எனக்கும் புரியாத விஷயம் உலகிலே எத்தனையோ இருக்குடா” என்கிறாள் பாட்டி,

            இத்தனை நேரம் மௌனமாக நின்ற ராஜி பதட்டமாக “ஐயோ தேளு” என்றாள்.

            கைவிளக்கின் ஒளி வட்டத்தின் ஓரத்திலே ஒரு பெரிய தேள் உண்மையிலேயே தெரிந்தது.  அதை அடிக்க கதைசொல்லி  எழுந்தான் என்று முடிகிறது கதை.

            இந்த அற்புதமான கதை பெரிய பத்திரிகைகளில் வந்திருக்க வேண்டியது.  ஆனால் வழக்கம் போல் சிறுபத்திரிகையில் வந்திருக்கும்.  யார் கவனத்தையும் கவராமல் போயிருக்கும்.

                .

Series Navigationஅணைந்து போனது ஓவியரின் அகவிழிப் பார்வைபடித்தோம் சொல்கின்றோம்: அ. யேசுராசாவின் அங்குமிங்குமாய்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *