முனைவர் என். பத்ரி,
கல்விக்கூடங்கள் பல்கலைவளர்ப்புக்கூடங்கள். மாணவர்களிடையே அறிவு, திறமை மற்றும் நேர்மறை மனப்பான்மைகளை வளர்க்கும் மையங்களாக கல்விக்கூடங்களே கருதப்படுகின்றன. தற்போதைய கால சூழலில் கற்றோராயிருக்கும் தாய் ,தந்தை இருவரும் பணிக்கு செல்லவேண்டியுள்ளது. கிராமப்புற பெற்றோர்களில் பலரோ போதுமான கல்வியறிவற்றோராய் உள்ளனர். இதன் காரணமாக மாணவர்கள் மீது அவர்களின் கண்காணிப்பு குறைந்து கொண்டே வருகிறது. பள்ளிகளில்தான் பெரும்பான்மையான நேரத்தை மாணவர்கள் செலவிடுகிறார்கள். எனவே,அவர்களின் தனிமனித ஒழுக்கத்தை வடிவமைப்பதில் பள்ளிகளின் பங்கு அதிகமாக உள்ளது.தற்போது மாணவர்கள் இணைய வழி கற்றலிலும் ஈடுபட்டு கற்கின்றனர். இதுபோன்ற சூழலில் பாலுணர்வுகளைத்தூண்டும் தேவையில்லாத வலைத்தளங்களின் பால் ஈர்ப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக அவைகளை மாணவர்கள் முயன்று பார்க்க வாய்ப்புகள் ஏராளம். இதன் காரணமாக தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவில் பெற்றோர்களின் நேரடியான ,மறைமுகமான கண்காணிப்புகள் மிகவும் அவசியமாகின்றன. தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்ற நிலையில் பதின்பருவ மாணவர்களை இவ்வாறு கண்காணிப்பது பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு சவாலான செயலாகும்.
மேலும் கரோனா தீநுண்மி சூழலில் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தவும் அரசு முயலாமல் இல்லை. ஒன்பது மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்து பாட ஆசிரியர்களுடன் படிப்பில் தமது ஐயங்களை கலந்துஆலோசித்து தீர்த்துக் கொள்ள வாய்ப்பு அளித்திருந்தது. மாணவர்களின் ஒழுக்கம் சார்ந்த விஷயங்களில் தற்போது காணப்படும் அசாதாராண சூழ்நிலையில் பள்ளிகளோ, பெற்றோர்களோ மாணவர்களின் விஷயத்தில் கவனம் செலுத்த முடிவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஒவ்வொரு தனிமனிதனின் அடிப்படை வாழ்வாதாரமே வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாட நிகழ்வுகளில் குடும்ப வன்முறைகளும் கொலை கொள்ளை இயல்பாகிவிடுமோ என அஞ்சவைக்கின்றது.. இவ்வகை நிகழ்வுகள் குடும்பங்களுக்கும் காவல் துறைக்கு பெரும் சவாலாக இருக்கின்றன.
பதின்பருவ மாணவர்கள் கூடாநட்புடன் சேர்ந்து விளைவுகள் அறியாது, படிப்பில் கவனம் செலுத்தாமல் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான நேர்ச்சிகள் ஊடகங்களில் வழியே வெளிச்சத்துக்கு வருவது வாடிக்கையாக போய்விட்டது.இதனால் அவர்களும் அவமானப்பட்டு பெற்றோர்களுக்கும் படிக்கும் பள்ளிக்கும் தீராத தலைகுனிவை ஏற்படுத்துகின்றனர். இது சமூக ஆர்வலர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன.
சமீபத்தில் படிப்பிற்கு பெயர் போன விருதுநகர் மாவட்டத்தில் ஒரு நிகழ்வு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி ஆறு மாத கர்ப்பமடைந்தார். இதற்கு காரணமானவன் அதே பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவன் என்பதை நம்மால் எவ்வாறு சீரணிக்க இயலும். இதே போன்று அரியலூர் மாவட்டப்பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ஐந்து மாணவிகள் மது அருந்தும் காட்சி விளையாட்டாக ஒளிப்பதிவுசெய்யபட்டு ஊடகங்களில் வெளியானது. இத்தகைய விபரீதமான நிகழ்வுகள் நம்மை கதிகலங்க வைக்கின்றது. இவை போன்று பலபள்ளிகளில் வெளிச்சத்துக்கு வராத பல விபரீதங்கள் அரங்கேறி அவைகள் நம்முடைய கவனத்துக்கு வந்து கவலை சேர்க்காமல் கூட இருக்கலாம்.
இவ்வாறான ஒழுங்கீனங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க போர்க்கால நடவடிக்கைகளை தமிழகக் கல்வித்துறை எடுக்க வேண்டும். வரும் கல்வியாண்டு முதல் ஒழுக்கத்தில் சிறந்த மாணவர்களை தமிழகம் உருவாக்க வேண்டும். ஒழுக்கமின்மை வாழ்வில் நல்ல வேலைவாய்ப்புகளுக்கும் தடைக்கல்லாக மாறும் என்பதை மாணவர்களுக்கு உணரவைக்க வேண்டும். ஒழுக்கம் ஒருமுறை தவறினால் அதை நேர் செய்ய மறுதேர்வு கிடையாது என்பதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. ஒழுக்கக் கல்விக்கு என மதிப்பெண் ஒதுக்கலாம்.பள்ளிவேலை நேரம் முடிந்து மாணவிகளை வீட்டுக்கு அனுப்பி அரைமணி நேரம் கழித்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பலாம்
கட்டப்படுள்ள தலைமைஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கைகளை அவிழ்த்து மாணவர்களிடையே நல்லொழுக்கம் பேணுவதற்கான கூடுதல் அதிகாரங்களை அவர்களுக்கு அளிக்கலாம்.பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களை அடிக்கடி கூட்டி மாணவர் படிப்பு மற்றும் ஒழுக்கம் சார்ந்த விவாதங்களை வெளிப்படையாக நடத்தலாம். இதன்மூலம் பிரச்சனைகளை தொடக்கத்திலேயே கண்டறிந்து அவைகளுக்கான தீர்வுகளை காணலாம் .திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் இடம் பெறும் காதல் காட்சிகளில் பள்ளிச்சீருடையுடன் கலைஞர்கள் காணப்படும் காட்சிகளுக்கு சட்டபூர்வமான தடைகளை ஏற்படுத்தலாம். .பதின்பருவ மாணவர்களின் செயல்பாடுகளுக்கு ஊடகக்காட்சிகள் வலுசேர்க்கும் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
பள்ளிகளில் அவ்வப்போது மனஆலோசணை நிகழ்வுகளை நிபுணர்களைக் கொண்டு நடத்தி அவ்வாறான நிகழ்வுகளில் மாணவ, மாணவிகளின் உளவியல் பிரச்சனைகள் தனித்தனியே விவாதிக்கப்பட்டு அவைகளுக்கு தீர்வுகள் காணப்படவேண்டும்.தனிநபர் சார்ந்த விவரங்களில் ரகசியம் காக்கப்பட்டு மாணவர்களின் உடல்நலத்தையும் உள்ள நலத்தையும் செம்மையாக பராமரிக்க முயற்சிகள் அனைத்து நிலைகளிலும் உடனடித்தேவையாகும். மாணவ ,மாணவியர்களிடையே ஆரோக்கியமான உறவுகள் பேணப்படுவதற்கு ஏற்ற கல்விசார் நடவடிக்கைகளை ஒவ்வொரு கல்விஆண்டின் தொடக்கத்திலும் நன்கு திட்டமிட்டு அவற்றை முறையாக செயல்படுத்த வேண்டும்.
பதின்பருவ மாணவிகள் மாணவனுடன் பேசவேண்டிய தேவை ஏற்படும்போது குறைந்தது மூன்று மாணவிகளை உடன் வைத்துக்கொள்வது தேவையற்ற வதந்திகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடக்கத்திலேயே அணைபோடும்.மேலும் மாணவிகள் மாணவனுடன் பேசும்போது மூன்றடி இடைவெளி விட்டு பேச வேண்டும்.அவ்வாறான உரையாடல்களும் மூன்று நிமிடங்களுக்கு மேல் நீடிக்கமால் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பள்ளிகள் மதிப்பெண்களின் மீது மட்டும் கவனம் செலுத்தும் போக்கு மாற வேண்டும். நீதிபோதனை வகுப்புகளில் மீதி பாடங்களை கற்பிக்கும் நிலை மாறி அவை மாணவர்களிடயே வாழ்வியல் திறன்களையும் நல்லொழுக்கத்தின் மாண்பிணையும் மாணவர்களிடையே வளர்க்கும் பட்டறைகளாக இனியாவது மாறவேண்டும்.ஒவ்வொரு வகுப்பிலும் மற்றும் மாணவர்கள் கூடும் இடங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பது மாணவ மாணவியர் இடையே ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கும் அல்லது குறைக்கும்.பதின்பரும மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே அவர்களுக்கு விருப்பமான தொழில் சார்ந்த படிப்புகளில் ஈடுபட வாய்ப்புகளை ஏற்படுத்தவேண்டும்.மேலும் சேமிக்கும் பழக்கம் சிக்கனப்பழக்கம்,சரியான நேரமேலாண்மை,பெரியோரை மதித்தல், இறைபக்தி போன்றவற்றில் மாணவர்கள் ஈடுபடும்போது மாணவர்களிடம் நல்லொழுக்கம் கூடும்.. களிமண்போன்ற மாணவர்களை நன்கு வார்க்கவேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது.ஒழுக்கக்கேடு மாணவர்களின் பிற்கால வாழ்க்கையை புதைக்குழியில் தள்ளிவிடும்..படிக்கும் மாணவனுக்கு ஒழுக்கம் பிடிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. வகுப்பறை நல்லொழுக்கம் மாணவன் வாழ்வினில் விழுப்பத்தை தந்து அவர்கள் வாழ்வை சிறக்க வைக்கும்.
63/2,அருளலீஸ்வரன் கோயில் தெரு,மதுராந்தகம்-603306
- படிக்கும் மாணவனுக்கு பிடிக்கும் ஒழுக்கம்
- உண்மையான உண்மையும் உண்மைபோலும் உண்மையும்…….
- இன்று புதிதாய்ப் பிறந்தோம்!
- தெளிவு! 3 குறுநாவல்கள். ஜனநேசன்.
- அணைந்து போனது ஓவியரின் அகவிழிப் பார்வை
- க.நா.சு கதைகள்
- படித்தோம் சொல்கின்றோம்: அ. யேசுராசாவின் அங்குமிங்குமாய்
- ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்
- A Game of Emotions by Kanishk