செந்தில்…

ஒரு அந்தி மாலை நேரம்….
அமைதி தவழும் அடர்ந்த கானகம் ஒன்றின் குறுக்குப் பாதைகளில் ஆணவச் செருக்குடன் என் நடைப்பயணம்…..
திண்மையான செருப்பு அணிந்த திமிருடன் வழியில் கிடந்த முட்கழி ஒன்றை எற்றி உதைத்தேன்….அதன் மறுமுனைக் காற்றைக் கிழித்து என் கண்களை நோக்கி எகிறியது….
கணத்தில் கர்வம் நீங்கி கவனத்துடன் கடந்த போது
மனம் கவர்ந்த மணங்கமழ் மலர் ஒன்றை பறிக்க விழைகையில்
வழிமறித்த முட்கொடி ஒன்றை பயபவ்யத்துடன் விலக்கி தள்ளினேன்…
அதுவோ ஒரு முரட்டு வலிமையுடன் என் தலையை முட்கீரிடமாக சுற்றி வளைத்தது…
சடுதியில் சுழன்றெழுந்த பலத்தக் காற்றில் உரசி உராய்ந்து உரத்து உரையாடும் உயர்ந்த மரங்களின் ஊடாக..நடையை தொடர்ந்தேன்…
வேப்ப மர உச்சியின் மீது பேயொன்று ஆடுதென்று…என பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளை அசை போட்டபடி
உற்று மேல் நோக்கினேன்…
வேப்ப மரங்கள் இல்லை தான்…
ஆனால், மாப்பில் மரங்கள்…
உச்சியில் இருந்தது பேய் இல்லைதான்…ஆனால்….
ஒரு பெருங்கருங்கரடி என்னை உற்று பார்த்தபடி….
சப்தமின்றி சடுதியில் நடந்தேன்…
மலைகளின் நடுவில் தவழும் மேகத் திரள்கள் போல மரங்களிடை பாய்ந்திறங்கும் கதிரவனின் சாளர ஒளிக்கற்றைகள் பகரும்.. ஒரு மந்திர வாக்கியம்… “ஞானமின்றி ஞாலத்தை வெல்ல முடியாது”
கர்வம் கண்களை மறைக்கிறது…
அழகு சிறை வைக்கிறது…
அடக்கம் தலைக்கு பாரமாகிறது….
திடீர் திருப்பம் அதிர்வளிக்கிறது…
அறிவோ திகைத்து நிற்கிறது…
ஆதி ஒளியோ ஆன்மாவை சுத்தம் செய்கிறது…