ஒன்று கவிதை எழுதுங்கள் அல்லது கலுவத்தில் மருந்து அரையுங்கள்.
இது மருத்துவன் நீலன் தருமனிடம் மற்ற கவிஞர்களும் மருத்துவர்களும் சொன்னது. சரியாகச் சொன்னால் மருத்துவர் நீலர் தருமரிடம். எனினும் அவர் வெகு காலமாக நீலன் வைத்தியராக உள்ளார். அழைக்க ஏதோ ஒரு பெயர். அதற்குமேல் என்ன வேண்டும்?
அவரை அவரது மோசமான கவிதைகளுக்காக மற்ற மருத்துவர்கள் கொண்டாடினார்கள். உள்நாக்கில் அடக்கிக் கரையக் கரைய எச்சில் விழுங்க வேண்டிய மூலிகையைத் தவறுதலாக நாசித் துவாரங்களில் பிழிந்து மூக்கில் தீப்பற்றியது போல் எரிய வைத்து, தீராத நோய் தீர்த்த அவரது மருத்துவத்துக்காகப் பிற கவிஞர்கள் அவரைப் போற்றினார்கள். அரசவை அங்கத்தவர்கள் அவரைச் சுருக்கமாக அழைப்பது கவிமருந்து என்று. மருட்கவி என்றும் பயன்பாடுண்டு.
எப்போதும் புன்னகை பூத்த வதனத்தோடு காட்சியளிக்கிறவர் நீலன். யாரையும் வெறுக்கத் தெரியாது. யார் மேலும் சினம் கொள்ள இயலாது. சான்றோர் என்ற அடைமொழி பெற இன்னும் சில ஆண்டுகள் ஆக வேண்டும். அகவை முப்பத்தைந்து அடைந்தவர். பார்வைக்கு முப்பது என்று மதிப்பிடப்படலாம். வயது ஓர் எண் மட்டுமென்பார் நீலன்.
அரசன் அவைக்கு வந்து சேர்வதற்கு முன் கூடியிருந்தவர்கள் வெற்றுப் பேச்சில் காலம் நகர்த்தும்போது அவரை அண்டுகிறவர்கள் வேண்டுவது இப்படி இருக்கும் –
நாளை மறுநாள் கார்த்திகை ரோகிணி நாளில் என் தங்கை மகள் ஆதிரைக்குத் திரண்டுக்குளி வைபவம். நிகழ்ச்சி நிரக்க, தாய்மாமனாக நான் கட்டளைக் கலித்துறையிலோ, தரவு கொச்சகக் கலிப்பாவிலேயோ வாழ்த்துப் பொழிந்தால் நேர்த்தியாக இருக்கும்.
எதுவும் இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது கோதுமை உப்புமா, மாது உமைக்கும் ஈசனுக்கும் பிரியமான நேரிசை வெண்பா,
நானே பாடிடுவேன். ஆனால் பாருங்கள் எழுத ஆரம்பித்தால் உறக்கம் வந்து விடுகிறது. என் அன்பான தோழரில்லையா நீங்கள். எனவே.
”ஓய், நீர் பாடினாலென்கொல், யான் யாத்தாலென்கொல்? தளை தட்டாத எல்லாக் கவிதையும் புரை தீர்த்த நன்மையே பயக்கும்” என்று அருள்வாக்குத் தருவார் நீலன் வைத்தியர்.
“என்றாலும் நீலன் யாத்த வாழ்த்துப்பா போல் வருமா? பாடுவீர் தயை கூர்ந்து” விடாது மன்றாடி, வேண்டுமெனக் கேட்டவர் இரைஞ்சுவர்.
”பாடுவேன், இரண்டு நாளாக நீர்க்கோவை தலைக்குள் நீர் கட்டிக் கொண்டு மூக்கடைத்து சிந்திச் சிந்தி ஓய்ந்து போனேன். நீர்க்கோவைக்கு மருந்துக் கவிதை புனைந்திருக்கிறேன். நோக்குதிர்”.
”திரண்டு குளி வெண்பா அளித்தால் சிறக்கும். நிகழ்வு நன்றாக இருக்கும். நீர்க்கோவைக்கு வெண்பா எதற்கு? வேட்டி நுனியில் மூக்கைத் துடைத்து, மருந்து கலக்கிக் கொடுத்தாலே போதுமய்யா”.
எதற்கு காசு கொடுத்து மூக்கடைப்பு நிவாரணியும் அறுபதாண்டு நிறைவு வாழ்த்தும் வாங்கிக் கொள்ளணும், எல்லோருக்கும் அரசு தரப்பு சேவையாக இதெல்லாம் விலையின்றித் தர மருத்துவருக்கு அரசு ஊதியம் கொடுக்கப்படுகிறது என்று சில குசும்பர்கள் கிளப்பிவிட்டார்கள்.
ஆக விலையிலா பாவும் விலையிலா மருந்தும் மருத்துவர் நீலன் அளிக்கச் சகல தரப்பிலிருந்தும் நிர்ப்பந்தம்.
மருத்துவர் காசின்றி அளிக்கும் சேவையைக் குறுக்கினார். குழந்தை காது குத்து விழா வெண்பாவை பத்துத் தடவை மூச்சை இழுத்து உள்வாங்கியும், வெளிப் போக்கியும் உரக்கச் சொன்னாலே மூக்கடைப்பு தீரும் என்று இரண்டு சேவைக்கு ஓரொற்றைத் தீர்வாக அளிக்க முற்பட்டதை அரசனே விரும்பவில்லை.
இரண்டுக்கும் தனித்தனித் தீர்வு வேண்டும் என்று கூறிய அவன் சின்னச் சின்னதாகக் குறள் வெண்பாக்கள் பாடியளித்தால் போதும் என்று சலுகை அறிவித்தான். ஒன்றே முக்காலடி குறள் வெண்பா நிரக்காது என்று சொன்ன அரண்மனைப் பிரதானிகள் அரசன் குறித்த உரைநடை வாழ்த்தை அவர்களே எழுதி ஊரெங்கும் பரப்பினர்.
வேண்டா வகையுளி, அகஸ்மாத்தாக அறம் பாடியமை, ஒற்று மிகுதல், புணர்ச்சி விதி மீறல், தவறான தற்சமம், தற்பவம் என்று அத்தனை பிழையும் அக்கவிதையிலிருக்கும். எந்தக் கவலையும் இல்லாமல் இலக்கணத்தைக் காற்றில் பறக்க விட்டு, திரும்பப் பிடித்துக் கிடப்பில் போட்டு விட்டு, அவர்கள் எல்லோரும் அபத்தக் களஞ்சியங்களாக எழுதியதைப் படித்து அரசன் நொந்து போனான்.
எந்த மருத்துவனிடமிருந்தும் மருந்தும், நோய் தீராத போது அவனிடமிருந்தே கைலாச அனுமதி வெண்பாவும் விலையில்லாது வாங்கிக்கொள்ள வழி செய்து அரசாணை பிறப்பிக்க இருந்த தருணம் அது.
அதெல்லாம் வேண்டாம், அததுக்குக் காசு கொடுத்து விடலாம் என்று அரசவை தீர்மானித்தது. இதைப் பொருட்படுத்த வேண்டாம், போனால் போகட்டும் என்று மருத்துவன் நீலன் தருமர் தன் பணிகளைத் தானே மீண்டும் தொடங்கியது நூறாண்டு கடந்த சூடாலை அம்மையின் கருமாதி சிறக்கக் கூறிய வாழ்த்தில்.
அவர் மீண்டும் அளிக்கத் தொடங்கிக் கொடுத்த மருந்துப் பொடியும் சூரணமும், பிருஷ்டத்தில் கட்டி வந்து படுக்க முடியாமல் போன ராஜநர்த்தகிக்குக் கட்டி பழுத்து உடையவாம். அதற்கு மருந்து மட்டும் போதாதாம். டண்டண் டணடண டண்டண் என்று கட்டி உடைய இது விஷயமாகப் பாட்டெழுதி அனுதினம் குழாமாக இருந்து உரக்கப் பாடவும் வேண்டும் என்றும் பெரிய இடத்துப் பரிந்துரைகள் வந்தன.
கட்டி உடைந்த கதை எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தொடரும்