Posted in

யாக்கை

This entry is part 9 of 14 in the series 28 மே 2023

ராமலக்ஷ்மி

வெறித்து நிற்கிறாள்

போதை இறங்காது வீழ்ந்து கிடப்பவனை.

எக்கவலையுமற்றவன் தருந்துயரும்

தனியொருவளாய்த் தாங்கும் 

அன்றாடத்தின் பாரமும் 

அழுத்துகிறது 

உள்ளத்தையும் 

உடலையும்.

ஒவ்வொரு உறுப்பும்

ஓய்வு கேட்டுக் கெஞ்ச

எண்ணிப் பார்க்கிறாள்

கடிகாரத்தின் முகத்திற்கும், அதன் 

நொடி நிமிட மணிக் கைகளுக்கும்,

நாற்காலியின் முதுகிற்கும்

நாளெல்லாம் நிற்கும்

மேசையின் கால்களுக்கும்

ஒருபோதும் சோர்வு ஏற்படாததை.

வீசும் காற்றில் ஓசை எழுப்பும்

மணிகளின் நாக்குகளுக்கு

இருக்கிறது சுதந்திரம் 

நினைப்பதை அரற்றிட.

விம்மிச் சிவக்காத மூக்குடன் கூஜாவும்

நெரிக்கப்படாத கழுத்துடன் போத்தலும்

நிற்கின்றன ஒய்யாரமாக எப்போதும்.

புயலின் கண் எரிவதில்லை

குகையின் வாய் துடிப்பதில்லை.

சீராக வழி தென்படாத

மகத்தான வாழ்வில்

உயிரற்றவைக்கு வாய்த்தது

உயிரற்றக் கூடாக உலவும் 

தனக்கு வாய்க்காததை

சிந்தனையை ஓட விட்டு 

அலுப்புடன் ஒப்பிட்டு

நோகும் தேகம் முறித்து

அடைகிறாள்  இருளில்

அற்ப ஆறுதலை.

*

– ராமலக்ஷ்மி

Series Navigationவேவுபுத்தகக் கொள்ளையும்,  பாலஸ்தீனக்குழந்தைகளும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *