நாவல் தினை அத்தியாயம் பதினேழு CE 5000

This entry is part 8 of 9 in the series 4 ஜூன் 2023

ஏமப் பெருந்துயில் மையத்தில் மொத்தம் எட்டு பேழைகள் மின்சாரக் குளிரை உயிர்த் தேனாகக் கொண்டு கிட்டத்தட்ட இறப்பு நீக்கி உறைந்து கிடந்தன. எட்டில் ஒன்று மட்டும் பாதி தேளுடல் கொண்ட மாற்றுடல் பெண்.

இடுப்புக்கு மேல் மனுஷி உடல் வனப்பாக மலர்ந்திருந்தது. கீழே சிவப்பு உக்ரமாக உயிர் பறிக்கும் செந்தேளுடலோடு கால்கள் சிறு மயிர் பூத்து மூடித் தளர்ந்து கிடந்தன.

கண்ணாடியும் தேறலியமுமாக*** நீண்டிருந்த பெட்டிக்குள் தேள்ப்பெண் உடலின் உறுப்புகள் ஓய்வெடுத்தபடி அவசியமான அளவு மட்டும் இயங்கின. துர்வாடை உடலின் சகல துவாரங்களில் இருந்தும் மெழுகு போல் சொட்டியது. பேழைக்குள்ளிருந்து நீளமாக வெளியேகும் சன்னமான குழாய்கள் காற்றழுத்தம் மிகுத்துத் தள்ள சுமந்து வந்த கழிவைப் பேழையை ஒட்டி வெளியே பிரிந்தன.

ஏமப் பெருந்துயில் ஆய்வு என்று அடுத்த ஆய்வுக்கான தேதி பேழைக்குப் பக்கவாட்டில் பொறித்திருந்தது. அந்தத் தேதி ஒரு மாதம் சென்று ஏற்படும் என்று பொறித்த தகவல் சொன்னது.

வாசலுக்கு அருகே அமைந்த நோய்த் தடுப்பு மிகுந்த இந்த ஆழ்வுறக்க அறைக்கு அடுத்து உள்நோக்கிக் கதவு திறக்கும் அறையில் கை, கால், காதுகள், குறிகள் என்ற பிறப்புறுப்புகள் என்று அவயவங்கள் கண்ணாடிச் சுவருக்கு அப்புறம் வெற்றிடம் இடைபட ரகவாரியாகக் குவிக்கப் பட்டிருந்தன.

அந்தக் குவியல்களை இயங்க வைக்கும் மின்னுயிர் காந்த ஈர்ப்பு அலை சுற்றிச் சுழன்று வரும்போது, சிறிதுபோல் அழுத்தம் அதிகரிக்க, கைகளும், கால்களும் துள்ளி எழுந்து ஆடி அடங்குவதை ஏமப் பெருந்துயில் குறித்து அறியாதவர்கள் குழு நாட்டிய நிகழ்வாகக் கருதி மயங்குதல் இயல்பாகும்.

அதற்கு அடுத்த ஏமப் பெருந்துயில் அறையில் தற்போதைய பெருந்தேளர் மகா சக்கரவர்த்திகளின் தந்தையாரின் உடல் மின்னுயிர் கொண்டு சீராகப் பேணப்பட்டு வருகிறது. இந்தக் காலத்துக்கு அடுத்து வரும் காலம் எதிலும் இறந்தவர்கள் உயிர்க்க வழி கண்டால் பழைய அரசரின் உடல் உயிர்பெற்று மறுபடி ஆள வருவார் என்ற நம்பிக்கைதான் இதற்கு அடிப்படை.
*** தேறலியம் Polyvinyl material

அந்த அறைக்கு மட்டும் சிறு தேளரும் கரப்பரும் பள்ளியிலிருந்து வந்து பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லிப் போவது தவறாது நடக்கிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் ஆண்டிலொரு முறை அஞ்சலி செலுத்துவது கட்டாயமானது.

அஞ்சலி செலுத்திவிட்டு வெளியே நடைபாதையில் புரண்டு தலையைக் கல்லில் மோதி ஓவென்று அலறி மண்டியிட்டுப் பழைய அரசர் நேற்றுத்தான் இறந்தது போல் அழுது ஆர்ப்பாட்டம் செய்து துயர் களைவது எவ்வளவு அதிகம் என்பதைப் பொறுத்துத்தான் அவர்களின் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் இடமாற்றலும் நிச்சயமாகும்.

ஏமப் பெருந்துயில் மையத்தைச் சுற்றிச் சிறு புகைப்பட கேமிராக்கள் கொண்டு துயர் களைதலை இருபத்துநாலு மணி நேரமும் கண்டு குறிப்பெழுத ஊழியருண்டு. இவற்றில் மிகச் சிறப்பானவை அதிக ஊதிய உயர்வைப் பெற்றுத் தர வல்லவை.

அஞ்சலி செலுத்த வராமல் போனாலோ, வந்து, கடனே என்று அஞ்சலி செலுத்திப் போனாலோ, கண்காணிப்பு ஊழியர்கள் அரசுக்கு உடனே தகவல் அனுப்பிவிடுவார்கள். அப்புறம் எதுவும் நடக்கலாம். அடுத்த ஆண்டு அஞ்சலி செலுத்த வராமல் போவதும் அவற்றில் ஒரு நடப்பு.

இன்றைய அஞ்சலி என்ற பெயரில் அரசு தொலைக்காட்சியில் தினம் ஒரு மணி நேரம் அன்றைக்கு நிகழ்ந்த அஞ்சலிகளில் நேர்த்தியானவை ஒளிபரப்பாகும்.

போன வாரம் கையில் கத்தி எடுத்து ஹரகிரி என்னும் ஜப்பானிய முறையில் தன்னுயிர் போக்க முற்பட்டு உடனே தடுக்கப்பட்ட அறுபத்தெட்டு வயது முதியவரின் அரச விசுவாசம் காட்டப்பட்டு நாடு முழுவதும் பாராட்டப்பட்டுள்ளது.

சிரத்தில் ஷவரம் செய்து மயிரை ஒரு தேள் படுத்திருப்பதுபோல் வழித்தெடுத்து அஞ்சலி செலுத்த வந்த ஒரு முப்பது வயதுக்காரன் எல்லோராலும் கைதட்டலோடும் பொன் காசுகளை அன்பளித்தும் கொண்டாடப் பட்டான். இன்னொருத்தன் இரண்டு தேள்கள் கலவி செய்வதாக தலைமயிர் மழித்து வந்ததற்கு என்ன பரிசு கிடைத்தது என்று இன்னும் தெரியவில்லை.

முகச் சவர பிளேட்களை வரிசையாக விழுங்கி அரசே நானும் உம்மோடு உமக்கு மறு உலகில் பணி செய்ய வருகிறேன் என்று கூவி உயிர் களைய முற்பட்ட நடுவயது குடிமகனின் விசுவாசம் சமூக வலைத் தளங்களில் அவரை ப்ளேட் அங்கிள் என்று செல்லமாகக் கூப்பிடப்படும் அளவு பிரபலமானது. அந்த ப்ளேட் கம்பெனி நிகழ்ச்சி வழங்குகிறவராக blade uncle-க்கு நிதியளிக்க அடுத்து முன்வந்தது.

கலவி செய்யும் தேள்களாக மயிரைச் சிரைத்து வந்தவனுக்கு பத்து மானிட ஆண்களுக்கு சர்வாங்க சவரம் செய்துவிடத் தண்டனை வழங்கப்பட்டது.

அடுத்த ஏமப் பெருந்துயில் அறை தண்டனை வழங்கப்பட்டு தற்காலிகமாக ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தப்படுகிறவர்களுக்கானது. போன வாரம் தொலைக்காட்சிச் செய்தியாளினி பெருந்தேளரசு என்று அறிக்கையில் இருந்ததை பெருந்தோலரசு என்று தவறாக உச்சரிக்க, அவளை மூன்று நாள் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தி அவள் உறங்கும்போது இரு செவியருகிலும் பலமான தாளங்களைத் தொடர்ந்து முழக்கினர்.

தொலைக்காட்சி செய்தியாளினி கிட்டத்தட்ட சவ்வு கிழிந்த காதுகளைப் பொத்திக்கொண்டே மூன்று நாள் சென்று எழுந்தார். ஒரு வாரம் அடுத்து அவள் முழு குணம் அடைய ஆனது. இனி அவள் கனவிலும் தேளரசரைத் தவறாகப் பலுக்க மாட்டாள், எனில், உச்சரிக்க மாட்டாள். தண்டோரா முரசுச் சத்தம் இல்லாமல் உறங்க அவளால் இனி முடியாமல் போனதும் குறிப்பிடப்பட வேண்டியது.

அடுத்த மூன்று ஏமப் பெருந்துயில் அறைகளில் மகா மகா சக்கரவர்த்திகளின் பார்வையில் பட்டு, அவர் கண்டதும் காமுற்ற ஆண்களும் பெண்களும், அவரின் ஆண், பெண் ஆசை நாயக நாயகியர்களும் ஆழ் உறக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்கள் அங்கே துயில்வது, அரசருக்கு அவர்களோடு இணை விழைவு ஏற்படும்போது அதை நிறைவேற்றித்தரவாகும்.

இந்த சேவை, சக்கரவர்த்திகள் இந்த அழகன் அல்லது அழகியோடு இன்று இரவு கூட வேண்டும் என்று உத்தரவு அளித்த ஒரு மணி நேரத்தில் அந்த ஆசை நாயகி அல்லது நாயகன் அரச உறவை எதிர்பார்த்து இருக்கும் படியாக விரைவுப் பணியாகும்.

ஆசைப் பெண் அல்லது ஆண் அரச அழைப்பை எதிர்பார்த்து தினசரி உடல் தூய்மை ஏற்படுத்தப்பட்டு, வாசனை திரவியங்கள் விசிறப்பட்டு தேவையான ஆடம்பர உடுப்பு நெகிழ்த்தி உடுத்தி இருக்கும்படியாக தினசரி உயிர் உறக்க ஆய்வு நிகழும். அரசு சேவையில் ஈடுபடும் அரச ஆசை நாயகி, நாயகருக்குச் சக்கரவர்த்திகளால் பொன் உபசாரமும் வாயுபசாரமும் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப் படுவார்கள்.

எட்டாவது பேழை சற்று வித்தியாசமானது. அரச விருந்தினர்கள் அரசின் மகிழ்ச்சிக்காக நாள் குறிக்காமல் இங்கே இருந்து போக வழிசெய்யப்படும். விருந்தினர் இங்கே தங்க விரும்ப வைக்கப்படுவார். அவர் இன்னும் தீர்மானமாக விருந்து வர மறுத்தால் இந்த சுகவாச தலத்தின் சௌகரியங்கள் வேறு யாரோ அனுபவித்த பொழுது பதிவான நகர் படமாகக் காட்டி ஆற்றுப்படுத்தப் படுவர்.

அரசின் மகிழ்ச்சிக்காக ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விருந்தாளி ஆக வாய்ப்பு இருக்கும்போது அடுத்த மண்டபம் தயார் செய்யப்பட்டு விருந்தாளிக்கு இடமளிக்கப்படும்.

அதிதி தேவோ பவ. விருந்தாளி தெய்வம் போன்றவர். இல்லாவிட்டால் ஆக்கப்படுவார்.

தொடரும்

Series Navigationஇந்த இரவுபெரிய சைஸ் இட்லி குண்டானுக்குள் பதுங்கியிருக்கும் காலம்
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *