மலைப் பிரதேசத்துப் பறவைக் கூச்சலில் கர்ப்பூரமய்யன் விழித்தெழுந்த பொழுதில் ஆமைகள் பறக்கத் தொடங்கின.
திருவல்லிக்கேணியில் இருந்து பெயர் தெரியாத இங்கே வந்து ஒரு வாரமாகி விட்டது. திருவல்லிக்கேணியில் யார் உண்டு கர்ப்பூரத்துக்கு? பெண்டாட்டி கபிதாள் தேள்வளையில் கை நுழைத்து கடுமையான விஷம் உள்புக மூளை செயலற்று நின்றுபோய் இறந்துவிட்டாள். ரெண்டாமத்துப் பெண்டாட்டி பூரணி கிணற்றில் சாடி மரித்தாள்.
கர்ப்பூரத்தின் ஜீவிதம் தொடங்குவதற்கு முன்பே முடிந்து விட்டது.
அப்படியுமா ஒருத்தன் சகல விதமான பிரச்சனைகளில் இருந்தும் தப்பி வருவான் என்று கேட்டால் அது தவறான புரிதலாகும்.
அவன் குயிலியும் வானம்பாடியும் அவர்களுடைய காலத்துக்குப் போவதாக மட்டும் தெரிந்ததை வைத்துக் கொண்டு அவர்கள் இறந்தவர்களை மறு உயிர்ப்பு செய்ய முடிந்தவர்கள் என்று முடிவு செய்து அவர்களின் அடுத்துச் சென்று மன்றாட கடைசியாக ஓடி வந்து ஏறிக்கொண்டிருக்கிறான்.
நீலன் என்ற நாலாயிரத்துக்கும் மேலுமான வயது வாய்த்த வைத்தியரிடம் சஞ்சீவனி என்ற பெயரில் இறப்பைத் தள்ளிவைத்து இருப்பை நீட்டிக்கும் அற்புத மருந்து உண்டு என்று நினைக்கிறான் கர்ப்பூரம்.
நீலரும் குயிலியோடு வலுக்கட்டாயமாக இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் என்று பலமான கருதலோடு நீலன் வைத்தியர் காலில் விழுந்தாவது கபிதாளையும், பூரணியையும் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டுதலும் கர்ப்பூரய்யனின் நோக்கமாகும். உயிர் திரும்ப வந்தால், உடலும் எப்படியாவது திரும்பி வந்துவிடுமென்று தர்க்கபூர்ணமில்லாத நம்பிக்கை. நம்பினவனுக்குத் தர்க்கம் எதற்கு?
அவன் அடிமனதில் இன்னும் ஒரு காரணமும் படிந்திருப்பதை அவன் அறிவான் – எல்லாப் பயணமும், எல்லாப் பரிச்சயமும் போல், இந்தப் பயணத்தால் நாலு இல்லை நான்காயிரம் காசு கிடைக்குமென்றால் அதை வேண்டாமெனத் தள்ளிவைக்க ஏதும் காரணம் உண்டா என்ன?
குயிலி கர்ப்பூரத்தை என்ன சொல்லி அனுமதி வாங்கி காலப் படகில் அழைத்துப் போவது என்று யோசித்திருந்தபோது நீலன் வைத்தியருக்குப் பணிவிடை செய்யத் தன்னை வைத்துக் கொள்ளலாம் என்று கர்ப்பூரமே சொன்னான்.
அவனை நாலு பரிமாணத்திலும் கூறுகள் திருத்தி அலகிட்டு சற்றே வித்தியாசமான பரிமாணங்களில் காட்சிப் படாது போக வைப்பதில் வெற்றிபெற்றாள் குயிலி.
பெருந்தேளரும் மாறிக் கொண்டிருக்கிறார். மீறல்களைக் கண்டுகொள்ளாமல் அனுமதிப்பது அவருடைய அண்மைக்காலச் செயல்களில் வித்தியாசமானது.
குழலன் பொது ஊர்வலத்தின் போது தலை தனியாக, உடல் வேறாக மிதந்து வந்து அமைதி என்று சொல்லப்படும் சூழலை மாற்றிக் கவன ஈர்ப்பு செய்தபோது அப்படி ஒன்று நிகழ்கிறது என்று அறிந்தும் உதாசீனப்படுத்துவதாகவோ, கருத்து சுதந்திரத்தை அளிப்பதாகவோ தோன்ற தன் ரதத்திலிருந்து இறங்கி ஏமப் பெருந்துயில் மண்டபத்திற்குள் முதுபெருந்தேளருக்கு அஞ்சலி செலுத்தக் கால் கூப்பி நுழைய, குழலன் அவனது ஆர்ப்பாட்டத்தை ஒத்தி வைத்து அகன்றதை அவன் தனக்குக் கிட்டிய வெற்றியாகப் பார்க்கிறான்.
சிறு வெற்றி சில பெற்று பெருவெற்றி எய்த இயலாமல் சிறு வெற்றி வட்டத்துக்குள்ளேயே அவனை உயிர்த்திருக்க வைப்பதை பெருந்தேளர் சாதித்திருப்பதே உண்மை.
அது போல் குயிலி கர்ப்பூரய்யனைத் தன் ஆசைநாயகனாக வைத்திருக்கிறாள் என்றால் பெருந்தேளருக்கு ஒரு தீங்குமில்லையே. கர்ப்பூரன் காலப் படகில் இருப்பதையே உதாசீனப்படுத்தினார் பெருந்தேளர்.
இன்னும், குயிலியும் வானம்பாடியும் கர்ப்பூரய்யனோடு இன்பமெய்தி இருந்தால் அப்படி இருப்பதைக் கண்டு களிக்கக்கூட பெருந்தேளருக்கு ஆர்வமுண்டுதான். அவள் வானம்பாடியோடு உறவு வைத்திருந்தாலும் காண ஆவல்தான்.
ஆனால் அந்த லங்கிணிகள் நாற்பரிமாணங்களிலும் கூறுகளை புத்திசாலித்தனமாக மாற்றி எப்போது காலப்படகை ஹோலோகிராமாக அணுகிணாலும் அரைத் தூக்கத்தில் நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் நீலன் வைத்தியர் மட்டும் பார்வையில் படும்படி அமைத்திருந்த சாமர்த்தியத்தை பெருந்தேளர் பாராட்டியபடி பெருந்தேள்பெண்டு முதலான தன் பதினெட்டு ஆசை நாயகியரோடு கட்டிலேறி இறங்கி கொட்டிக் கொட்டப்பட்டு உறவு கொண்டிருந்தார்.
குயிலியும் வானம்பாடியும் நீலன் வைத்தியரைக் கூட்டி வந்து விட்டார்கள். கர்ப்பூரமும் கூடவே வந்து சேர்ந்தாகி விட்டது.
ஈதிப்படியிருக்க, பெருந்தேளரின் அரண்மனை வாசலில் கர்ப்பூரம் வந்து நின்றான். அவ்வர்த்தமானம் இனியுரைப்போம்.
சூரிய கிரணமொன்று ஒளித் துகள்களாக எத்தனையோ ஒளியாண்டுகள் முன் புறப்பட்டது. அதிர்ஷ்டம் செய்த கிரணம் அது. ராத்திரி முழுக்க சக்ரவர்த்தியோடு மதனோற்சவம் நடத்தி அதன் பின் சற்றுறங்கி, தாமதமாகக் கண் விழித்த வனசுந்தரியின் பருத்துருண்ட ஸ்தனங்களில் நடுவிலே புகுந்தது அது. அங்கிருந்து இறங்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த அந்தக் கிரணம் அவள் தேகம் குளிர்வித்து நெகிழ்ந்து தரையிறங்க மழையாக வா மன்மதா.
இந்த வனப்பான கவிதையைத் தமிழிலும் சமஸ்க்ருதத்திலும் குறுங்கவிதையாக, ஸ்லோகமாக மனதில் செய்து உரத்த குரலில் சொன்னான் – ஆயதனவான் பஹதி என அடிக்கொரு தடவை மலரையும், தானியத்தையும் நீரையும் அர்ப்பணிக்கும் மந்திர புஷ்ப உச்சாடனத்தைத் தொடர்ந்து முழங்க, பெருந்தேளர் அரண்மனைக் கபாடங்கள் திறந்தன.
சேவகக் கரப்புகளும், படை வீரச் செந்தேளரும் வெளியே வந்து கர்ப்பூரத்தை உள்ளே அழைத்துச் சென்றன. தம் இருக்கையில் இருந்தபடி ஒற்றைக் காலை அசைத்து கர்ப்பூரம் வந்ததை அங்கீகரிப்பது போல் பெருந்தேளர் தம் பெருமை காட்ட, கர்ப்பூரம் தரையில் சிரம் பட வணங்கி எழுந்தான்.
இரு செவியும் கரங்களால் சற்றுப் பொத்தி, ஓ ராஜன்,சக்ரவர்த்தி, களஞ்சியம் கிராமம், திருநெல்லி மாநிலம், பரத கண்டத்தில் ஜீவிக்கும் சொற்ப அறிவும் சொத்தும் கொண்ட, சதய நட்சத்திரத்தில் தமிழ் ஆண்டு தொடங்கிய அறுபதில் விபவ வருஷம் தை மாதம் அமாவாசையான சான்றோரால் ஆசீர்வதிக்கப்பட்ட நன்னாளில் பிறப்பெடுத்தேன் என்று விஸ்தாரமாகத் தன் வரலாறு சொல்லிக் கொண்டிருந்தான் கர்ப்பூரமய்யன்.
அது முழுக்க வடமொழியாக இருந்ததால் அடிக்கடி அந்த உச்சாடனத்தில் வரும் பவதி என்ற சொல்லை மட்டும் கர்ப்பூரமய்யனோடு சேர்ந்து குஷியாக உச்சரித்ததோடு மட்டுமில்லாமல், பவதி சொல்லும்போது பூவும் நீரும் எடுத்துச் சிதறிப் புது சடங்கொன்றை உருவாக்கிப் பழக்கப்படுத்த அளித்தார் பெருந்தேளர்.
ஒரு வழியாக கர்ப்பூரத்தின் மெய்க்கீர்த்தி நிறைவு பெற அவன் இன்னும் பேசக்கூடாது என்பதால் பெருந்தேளர் முந்திக்கொண்டு பேசத் தொடங்கினார்.
நீலர் வைத்தியரின் உடல்நிலை தற்போது எப்படியுள்ளது?
ஊர்வலத்தில் நின்று கைகளை அசைத்து வர இயலவில்லை. இருந்து ஆசியருளவும் அவருக்கு நல்லூழ் கிட்டவில்லை. எனினும் கிடந்துறங்கியபடி உலா வர, என்னோடு வர அவருக்கு வாய்த்தது கோகர்மலைநாட்டுக்கு நல்லதுதான்.
நீலர் வைத்தியரத்தினம் அடுத்த வாரம் எழுந்து சஞ்சீவனி மருந்து உண்டாக்கும்போது இந்நாட்டு மக்கள் தான் அவர் மனதில் இருப்பர் என்பது திண்ணம். தேள்பெரும் சமூகத்தினர், ஒன்றிரண்டு கரப்பினர், அறிவுசால் மானுடர் என்று பலருக்கும் ஆயுள் நீட்டிக்கும் சஞ்சீவனி காய்ச்சிக் குவளைகளிலிட்டுத் தருவதை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
பெருந்தேளர் பேசி ஓய்ந்தார்.
பாராளும் சக்கரவர்த்திகளிடம் இந்த எளியோனின் கோரிக்கை ஒன்றை வைக்க உத்தரவு தர வேண்டுகிறேன்.
கர்ப்பூரம் செவி பொத்திய கோலத்திலேயே நிலத்தில் விழுந்த நெற்றியும் இரு செவியும் இரு விழியும் நாசியும் வாயும் தரைபட வணங்கினான்.
வணக்கத்தை சிறப்படைய வைக்க நாவை வாய்க்கு வெளியே நீட்டி தரையில் நா படர வைத்திருந்தான்,
பெருந்தேளர் அவன் விசுவாசம் சொன்ன தோரணையை மெச்சிக் கொடுக்கை அந்நாவில் ஒரு வினாடி அமர்த்த, கர்ப்பூரமய்யன் எந்தப் பயமுமின்றி அப்படியே நாவை வைத்திருக்க, பெருந்தேளர் கால்கள் கொண்டு கர்ப்பூரமய்யனைத் தழுவி நீரெனக்குப் புதல்வனானீர் என்று அன்பு பாராட்டினார். அவர் வாயில் சாராய வாடை அடித்தது.
சக்ரவர்த்தி சஞ்சீவனியின் சக்தி சற்றே சொல்லவா எனக் கேட்டான்.
சொல்லுக சொல்லுக எமக்கிந்த சஞ்சீவனிதன் மாண்பெலாம். கொஞ்சநாளாக எமக்கு செவ்வியல் இசை ஓர் பித்தாகவே போயுள்ளது.
அரசவையில் இனி உரையாட, கேள்வி கேட்க, கணக்கு ஒப்புவிக்க எல்லாம் இசை ரூபமாகவே இருந்தால் என்ன என்று தோன்றியது.
போதையில் அவர் தலை நிற்காமல் ஆட, அவர் வாய்மொழிந்தார் – தேள்ப் பசங்க அத்தனையும் தேவடியாப் பசங்க, என்னையும் சேர்த்து. என்ன பாக்கறீர் தேள் பசங்க எப்படின்னு சொல்றீங்க. பத்து வருஷம் உயிரோட ஒரு தேளச்சி இருந்தா அதிகம். அதுக்குள்ளே பத்தாயிரம் தடவை கிட்டத்தட்ட ஆயிரம் ஆண் தேளோடு உறவு வச்சிருப்பா அந்தத் தேவடியா. அவளை சந்தோஷம் கொண்டாடின கணக்கை எல்லாம் பாட்டாகப்பாடுன்னா அவ சகானாவைக் கண்டாளா கோபிகானாவைத் தெரியுமா.
ஆக நான் சொல்ல வந்தது என்னன்னா நீர் பேச உத்தேசித்ததைப் பாட்டாகப் பாடும். எங்கே சரிகமப சகமபநி பாடுமய்யா.
கர்ப்பூரம் எந்தக் காலத்திலேயோ லம்போதர லகுமிகரா என்று கர்னாடக இசைக்கான ஆரம்பப்பாடம் கற்றதை நினைவு கூர்ந்து அதே மெட்டைப் போடு என மனதில் சொல்லி சஞ்சீவினி காசுமரம் சஞ்சீவனி காமதேனு சஞ்சீவனி பொன்முட்டையிடும் ஆம்பிளைவாத்து என்று குரலெடுத்துப் பாடினான். பேய்க்கு வாழ்க்கைப் பட்டாச்சே.
சஞ்சீவனி இருந்தால் இன்னும் பலப்பல பலப்பல பலப்பல தலைமுறைக்கு நிதி நிலைமை பற்றி கவலையே பட வேண்டியதில்லை. ஆனால் ஒண்ணு எப்படி பயன்படுத்தணும்னு தெரிஞ்சு பயன்படுத்தணும். சற்றே செவி தரும் எனக் கூவினான்.
காதென்ன, குறியே இந்தாரும் என பீஜம் கர்ப்பூரம் காதருகே வைத்துப் பேசும் என்றார். இதென்ன ஒலிபெருக்கியா நாசமாப் போச்சு என்று எரிச்சல் பட்ட கர்ப்பூரம் சற்றே சமாதானமடைந்தான். அவன் மனதில் ஓடிய எண்ணம் இப்படி இருந்தது –
ஆரியக் கூத்தாட வந்தாச்சு அங்கே. இங்கே அவமானப்பட்டால் என்ன போச்சு. தனக்கே சொல்லிக் கொண்டான் கர்ப்பூரம்.
காசு வந்து கொட்ட வழி சொல்லப் போகிறேன் என்று தேளரின் நீள் கொடுக்கின் மேல் கையமர்த்திச் சொல்லத் தொடங்கினான்.
இந்தப் பிரகாரமானது அது- ஒவ்வொரு குடும்பத்துக்கும் சஞ்சீவனி புகட்டுவது கட்டாயமானது.
ஒவ்வொரு குடும்ப அங்கத்தினருக்கும் மூன்று பைனரி நாணயம் கட்டணம். பத்து உறுப்பினர்களுக்கு மேல் உள்ள குடும்பம் மொத்தமாக இருபத்தைந்து நாணயம் கட்டினால் போதுமானது. இது அடிப்படை சஞ்சீவினி கட்டணம்.
நலவாழ்வு சோதனைகள், ஜலதோஷத்துக்கான மருந்துகள், இருமல் மருந்து ஆகியவை இந்த சஞ்சீவனி பொதியலில் இடம் பெறும் மற்ற மருந்துகள். இப்படியான பொதியை வீடுகளுக்கு எட்டரை நாணயம் கட்டி சஞ்சீவனியோடு பெற்றுக் கொள்ளலாம்.
சஞ்சீவனியை முன்கூட்டியே பதிவு செய்ய ஒரு சிறு கட்டணம் செலுத்தி வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் அடுத்த ஈடு மருந்து பருகும் வேளையில் மருந்து கிடைக்காமல் திண்டாட வேண்டாம். அரை பைனரி நாணயம் இந்த முன்பதிவுக்கான கட்டணமாகும். வீட்டுக்கு என்றாலும் குடும்பத்தினருக்கென்றாலும் அரை நாணயம் மட்டும் அதிகமாகக் கட்டி வைக்கலாம். இது முன்பதிவு கட்டணமாகும். மருந்துக்கான கட்டணம் ஏற்கனவே அறிவித்தபடி தனி நபருக்கு மூன்று நாணயமாகும்.
சஞ்சீவனிக் கட்டணம் ஒரு வீட்டுக்கு அதிக பட்சம் இருபத்தைந்து நாணயம் உடனே கட்ட முடியாது போனால், ஐந்து தவணைகளில் கட்டலாம்.
சஞ்சீவனி பரிசுச்சீட்டு அரை நாணயத்துக்கு வாங்கி, பரிசு நூறு டிஜிட்டல் நாணயம் வென்றால் கட்டணம் எதுவும் கட்ட வேண்டியதில்லை இரண்டு மூவாண்டுக் கால கட்டத்துக்கு.
சஞ்சீவனி தொலைக்காட்சி, உடல் நலம், ஆயுள் நீட்டிப்பு அமிர்தம், உடை,உணவு என ப்ரதி வருஷம் நூறு நாணயம் கட்டி வைத்தால் எல்லாத் தேவைகளும் நீங்கள் கவனித்துக்கொள்ளத் தேவையின்றி அரசே உங்கள் சார்பில் நினைவு வைத்து அவ்வப்போது கொடுக்க வேண்டியது கொடுத்தும் கட்ட வேண்டிய தினத்தில் கட்டியும் சீராக நடக்கச் செய்யலாம்.
இந்த யோசனைகள் மூலம் அரையே அரைக்கால் கோடி நாணயம் பெருந்தேளருக்கு சொந்த லாபம் கிட்டும்.
கர்ப்பூரம் சொல்லி நிறுத்த பெருந்தேளர் தூசி படிந்த கர்ப்பூரத்தின் காலை முத்தமிட்டு அய்யா நீர் எசமானர் நான் உமதடிமை எனவும் இன்னும் பலவும் பிதற்றி நன்றி பாராட்டினதாகத் தெரிந்தது.
பலவிதமான கட்டணங்களை மற்றும் பலவிதமான சௌகரியங்களோடு இணைத்து வாங்குவதும் நன்மை பெறுவதும் நன்மை என்று முழக்கத்தோடு தேளரே உமக்கு அரசு கருவூலத்தில் நாணய மழை நிற்காமல் பெய்யும்.
வரவு வரவுதான் செலவும் வரவுதான் அமைப்பில் ஒரு சிறு கட்டணம் செலுத்தி பல பரிசுகள் உமக்கே. இந்தப் பொதிக்குக் கட்டணம் கட்டினால் ஆயுள் அதிகமாகிறதோ என்னவோ, கட்டணத்தை ரத்து செய்யவோ கட்டாமல் இருக்கவோ முடியாது என்று சிரித்தான் கர்ப்பூரம்.
இதெல்லாம் எங்கே கற்றீர் என அதிசயித்துக் கேட்டன கரப்புகளும். இறப்பே இல்லாமல் போனால் நமக்கு நன்மையா இல்லையா எனக் கேட்டார் பெருந்தேளர்.
சந்தேகமென்ன, நன்மை தான். கட்டண வரவு தொடர்ந்து வருமே. அதோடு அவ்வப்போது சின்னச் சின்னதாக ஏதாவது புதுப் பரிசு இந்தப் பொதிகளில் புதியதாகக் கூட்டிச் சேர்த்து விளம்பரம் செய்து, கூடவே கட்ட வேண்டிய கட்டணத்தை மெல்ல அதிகப்படுத்தினால் யார் அதைப் பற்றிப் புகார் சொல்லப் போகிறார்கள்.
அவர்களுக்கு அதி உன்னதப் பரிசு ஏதாவது அறிவித்து வாகனயோகம் வழங்கலாம். பொன் மோதிரம் சின்னஞ்சிறியதாகக் கையில் போட்டு விட்டு கால் காசுக்கு பிரயோஜனமில்லாத கௌரவப் பதவி ஏதும் தரலாம். வாயைத் திறப்பார்களா?
பெருந்தேளரசரைப் புன்னகையோடு நோக்கினான் கர்ப்பூரம். எல்லா பிரமிப்போடும், யாரும் அருகே, சுற்றிலும் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு பெருந்தேளர் கர்ப்பூரமய்யன் பாதம் பணிந்தார்.
அரை சதவிகிதம் என் பங்கு போதும் என்றான் கர்ப்பூரம்.
இலவசச் சாப்பாடு என்றேதுமுண்டா? அவன் பாடியபடி வெளியேறினான்.
தொடரும்
- நிலா
- இந்திய நிலா தளஆய்வி சந்திராயின் -3 நிலவின் தென் துருவத்தில் முதன்முதல் தடம் வைத்துள்ளது
- என்ன செய்வது?
- வாக்குமூலம்
- நாவல் தினை -அத்தியாயம் 29 – CE 5000