சுலோச்சனா அருண்
சிறுகதைத் தொகுப்பு வெளியீடும், பரிசளிப்பு விழாவும் சென்னை காந்தி மண்டபச் சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் யூலை 27 ஆம் திகதி 2023 மாலை 6:00 மணிக்கு, முனைவர் வவேசு அவர்களின் தலைமையில் ஆரம்பமாகிச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பிரபல எழுத்தாளர் சிவசங்கரி அவர்களும், மற்றும் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
2022 யூலை தொடக்கம் 2023 யூன் மாதம் வரை சர்வதேசத் தமிழ் இதழிகளில் வெளிவந்த சிறுகதைகளை வாசித்து அவற்றில் சிறந்த ஒரு சிறுகதையை ஒவ்வொரு மாதமும் தெரிவு செய்து, அப்படித் தெரிவான 12 சிறுகதைகளைத் தொகுத்து சிறுகதைத் தொகுப்பாகத் தமிழகத்தில் இருக்கும் குவிகம் பதிப்பகத்தினர் வெளியிட்டிருக்கிறார்கள். இச்சிறுகதைத் தெரிவுகளுக்காகப் பிரபல மூத்த எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் பிரதம நடுவராகக் கடமையாற்றியிருந்தார்.
நவம்பர் 2022 ஆம் ஆண்டு திண்ணை இதழில் வெளிவந்த எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் எழுதிய ‘தாயகக் கனவுடன்’ என்ற ஈழவிடுதலைப் போராட்டம் சார்ந்த சிறுகதை அம்மாதம் வெளிவந்த 69 சிறுகதைகளில் சிறந்த கதையாகத் தெரிவாகியிருந்தது. இத்தொகுப்பில் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களது சிறுகதையும் இடம் பெற்றிருக்கின்றது.
‘இலங்கை நகரில் நடந்த இனப்படுகொலையையும், யுத்தம் என்ற பெயரில் தமிழர்கள் சூறையாடப்பட்டதையும் மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. கதாசிரியரின் பார்வையில் ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் இன, மான உணர்வு அதிமிருக்கலாம் என்கிறார். மேலும் ‘யுத்தம் முடிந்து விட்டதாகச் சொல்லப்பட்டாலும், பெண் போராளி பிரியாவின் நிலை என்ன?’ என்று உணர்வு பூர்வமாக எழுதுகின்றார்.’ என்று நடுவர்களில் ஒருவரான எழுத்தாளர் சுரேஸ் ராஜகோபால் இச்சிறுகதை பற்றித் தனது கருத்தை முன்வைத்திருக்கின்றார்.
சுப்ரபாரதிமணியன் எழுதிய ‘பாலியல் அத்துமீறல் இல்லாத பிரதேசத்தில் இருந்து ஒரு வெளியேற்றம்,’ சியாமளா கோபு எழுதிய ‘ஊமைச்சாமி,’ ஜிப்ரி ஹாசன் எழுதிய ‘ஒத்திகைக்கான இடம்,’ கிறிஸ்டி நல்லரெத்தினம் எழுதிய ‘அனாதை மரங்கள்,’ குரு அரவிந்தன் எழுதிய ‘தாயகக் கனவுடன்,’ ஆர்னிகா நாசர் எழுதிய ‘சாமி போட்ட பணம்,’ இரா. சசிகலாதேவி எழுதிய ‘பிரம்ம சாமுண்டீஸ்வரி,’ சாந்தன் எழுதிய ‘பாட்டுவெயில்,’ சோ.சுப்புராஜ் எழுதிய ‘தாவரங்களுடன் உரையாடுபவன்,’ ஜார்ஜ் ஜோசப் எழுதிய ‘மங்க்கி கேட்ச்,’ மா காமுதுரை எழுதிய ‘ஒரு துளி நெருப்புக்கக் காத்திருக்கும் யாக குண்டங்கள்,’ அரவிந்தன் எழுதிய ‘விருது’ ஆகிய 12 சிறுகதைகள் 137 பக்கங்களைக் கொண்ட இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.
‘இச் சிறுகதைத் தொகுப்பில் தேர்வாகி இருக்கும் 12 கதைகளும் ஒரே மாதிரியான கருத்துக்களை உள்ளடக்காமல், ஒன்றில் இருந்து மற்றொன்று கரு, சூழல், நடை என்று அனைத்திலும் மாறுபட்டு இருப்பது கவனிக்கத்தக்கது. வட்டார வழக்கு, ஈழத்தமிழ், மனோதத்துவ ரீதியிலான அணுகுமுறை, புதுப்புது கதை களங்கள் என்று பல சிறப்புக்களை இந்தக் கதைகளில் காணமுடிகின்றது’ என்று எழுத்தாளர் சிவசங்கரி தனது முன்னுரையில் குறிப்பிட்டு இருக்கின்றார்.
- நாவல் தினை அத்தியாயம் முப்பத்திரண்டு பொ.யு 5000
- பிரம்ம சாமுண்டீஸ்வரி சிறுகதைத் தொகுப்பு வெளியீடு