தினை       அத்தியாயம்  முப்பத்தெட்டு     பொ.யு 5000

This entry is part 6 of 8 in the series 5 நவம்பர் 2023

கர்ப்பூரம் நடுராத்திரிக்கு இரண்டு பிசாசுகளைக் கண்டான். அவன் படுக்கையில் அவன் தலைமாட்டில் ஒன்றும் கால்மாட்டில் இன்னொன்றுமாக துர்நாற்றம் வீசிக் கொண்டு இருந்தன அவை.  

அவற்றின் கண்கள் குழிந்திருந்தன. பாதி திறந்த இமைகளில் பீழை கனமாக ஒட்டியிருந்தது. வாய் தான் முழு துர்நாற்றத்துக்கும் காரணம் என்று தெரிய வாய் திறந்து வாச்சி வாச்சியாக நான்கு வரிசை மஞ்சள் பல் காட்டி ஏன்யா என்று ஒரு பிசாசு சத்தம் தாழ்த்தி அழைத்தது.

கர்ப்பூரம்   பின்னால் இருக்கிற யாரையோ கூப்பிடுகிறது என்று நினைத்து பின்னால் திரும்பிப் பார்த்தான்.  உன்னைத் தான்யா என்று கூட வந்த பிசாசு வாயைத் திறந்து இன்னொரு மாதிரி துர்வாடை கிளப்பிக் கொண்டு சத்தம் போட்டது.

மசகு போல் அடர்த்தியான களிம்பு ஏதோ அடையடையாக அப்பிய கிழிந்த பிடவை உடுத்திய இரண்டும் அந்தச் சேலையையே மேலே தலைப்பு உயர்த்தி மார்பை மூடியிருந்தன. அவை பெருத்த முலைகள் என்று கர்ப்பூரத்துக்குத் தோன்றியது.

கழுதைக்குப் பேர் கர்ப்பூரமா, எழுந்திருடா என்று அவன் தலைக்கு வெகு அருகே தலை குனிந்து ஒன்று கிரீச்சிட குமட்டி வாந்தி எடுத்தபடி கிடந்தான் அவன்.

மிகுந்த சிரமத்துடன் கண் திறந்து பார்க்க, தலையில் மயிர் இல்லாமல் முண்டனம் செய்ததாக இரு பைசாசங்களும் தோன்றின. கபாலத்தில் திட்டுத் திட்டாக ஏதோ ஒட்டி அதன் போக்கில் இன்னொரு துர்வாடையைக் கிளப்பிக் கொண்டிருந்தது.

கர்ப்பூரம் எழுந்திருடா என்ன தூக்கம் வேண்டியிருக்கு என்று மறுபடி இரண்டு அலாதியான ரூபங்களும் அவன் படுக்கைக்கு அரை அடி மேலே சுற்றிப் பறந்தன.

என்னை நினவு இருக்காடா? முடைநாற்றம் கையிடுக்கிலிருந்தும் கொங்கைகளிலிருந்தும் கசிய கர்ப்பூரனை மிக நெருங்கிப் பறந்த பைசாசம் நாலு வரிசைப் பல்லும் வெளியே தெரியச் சிரித்தது.

இன்னொரு முறை கர்ப்பூரனுக்கு வயிறு எக்களித்து வாயில் வந்தது. சுற்றிவர வாந்தி சால் கட்டி நிற்க நடுவே மல்லாந்து படுத்திருந்தான்.

என்னை விட நீதாண்டா நாறிப் பிடுங்கறே என்று சிரித்தபடி அறை உத்தரத்தில் முதுகால் தட்டிவிட்டு அப்படியே கீழே வந்து கர்ப்பூரனை அணைத்துக் கொண்டு அவன் வாயில் முத்தமிட்டது அந்தப் பைசாசம். அந்த அண்மையும் ஸ்பரிசமும் வாடையும் அவனுக்கு ஏனோ வேண்டியிருந்தன.

அவனுக்கு இதெல்லாம் பழக்கமானதாகத் தெரிந்தது. யார், பூரணாவா?   அவன் நம்ப முடியாமல் கேட்டான். இரண்டு பிசாசுகளும் அவனுக்கு நேர்மேலே மிதந்தபடி ஊவென்று ஒலி எழுப்பின.

ஆமாடா, நான் பூரணா அவள் யாருன்னு உனக்குத் தெரியுமே என்று கேட்ட பிசாசு பூரணா என்று நம்ப மனம் மறுத்தது, ஆனால் அந்த வியர்வை வாடையும், உடல் வாடையும் அவள் தான் என்றன.

பக்கத்தில் வந்து வாயில் காட்டிய நான்கு ஒழுங்கில்லாத வரிசைப் பற்கள் மஞ்சள் பற்காரை கெட்டித்து  பார்க்கக் கொடூரமாக இருந்தது. அந்த களிம்பு துடைத்த புடைவைக்குள் முழுப் பெண் உடல் இருக்குமா என்று அவனுக்கு ஒரு வினாடி சந்தேகம்.

ஏன், இருந்தால் இப்படியே கலவி செய்வாயா? அந்தப் பிசாசு  கூட வந்தது கோபத்தோடு சொன்னது.

 கர்ப்பூரன் கபி கபி கபிதாவா என்று நம்ப முடியாமல் கேட்டான். வாய் கோணி மேலே செருக தொண்டையில் ஏதோ அடைத்த மாதிரி பேசவிடாமல் தடுத்தது.

ஆமா கபிதா தான் அதுக்கு இப்போ என்ன பண்ணனும்கறே. அந்தப் பைசாசம் உச்சத்தில் சிரித்தபடி அறைச் சுவரில் முட்டிக்கொள்ளாமல் பறந்தது.

எப்படி எப்படி நீங்க ரெண்டு பேரும் எப்படி திரும்ப. அவன் மிகுந்த சிரமப்பட்டுக் கேள்வியை முடிக்காமல் அந்தரத்தில் விட, இரண்டு பைசாசங்களில் ஒன்று எப்படி மறுபடியும் உயிரோடு இருக்க முடியும்னு கேட்கறியா? அதெல்லாம் உனக்கு எதுக்கு சொல்லணும்?

கதவு காற்றில் திறந்து சத்தத்தோடு மூடிக் கொண்டது. இன்னும் இரண்டு பெண் பைசாசங்கள் உள்ளே பறந்து வந்திருந்தன.

சாரி, நாங்க இங்கே நீண்டநாள் தங்கின பிசாசுகள். நீங்க – உள்ளே வந்தவை இருந்த இரண்டைக் கேட்டன.

நாங்க புதுசா வந்திருக்கோம். இப்போ போயிடுவோம் என்று மரியாதையோடு சொல்லின கர்ப்பூரத்தை வம்பிழுத்த இரண்டும்.

நீங்க இங்கே இடம் எடுத்துக்கறதுன்னா எடுத்துக்குங்க என்று வீட்டுப் பிசாசுகள் சகஜம் காட்ட, வேண்டாம், நாங்க போகணும் என்று பிரியத்தோடு மறுத்தன வந்த இரண்டும்.

வீட்டுப் பைசாசங்கள் வெளியே போகும்போது நல்லிரவு என்று வாழ்த்திப் போனதை கர்ப்பூரன் கவனிக்கத் தவறவில்லை. அவை இருந்திருந்தால் எதோ ஒரு மாதிரி பலம் வந்திருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது.

இந்த ரெண்டு பிசாசும் தொல்லை கொடுக்க வந்ததாகத்தான் இருக்கும். இருபதாம் நூற்றாண்டிலிருந்து ஐம்பதாம் நூற்றாண்டுக்கு பிசாசுகள் பயணப்பட்டிருக்க முடியுமா?

நீங்க ரெண்டு பிசாசும் என் துணைவியர் என்று எப்படி நம்பறது? மேலே இருந்து பார்த்துக் கொண்டிருந்த இரண்டும் ஒரே ஜாடை, ஒரே மாதிரி உடுப்பு, பறத்தல், கிரீச்சிடும் குரல் என்று இருப்பதேன்?

கபிதாவும் பூரணாவும் தான் அவர்கள் அவைகள் என்றால் வித்தியாசம் தெரியாமல் இருக்குமா? 

எங்களை காலக் கோட்டில் ஒட்டாமல் விலகி வரச் செய்தது எங்கள் பிரியமான குழலியும் வானம்பாடியும் தான் என்று சொன்னால் நீ என்ன செய்யப் போகிறாய்?

அவர்கள் உங்களை காலப் பயணம் நடத்த வைத்திருப்பதற்கு பதில் கொஞ்சம் பின்னால் போய் உயிர் நீங்க ஒருத்தி தேள் வளையில் கைவிட்டும், மற்றவள் கிணற்றில் சாடியும் மரித்துப் போவதற்கு சற்று முன்பே காலத்தைப் பிடித்துப் பின்வலித்து உங்களை உயிர் பிழைக்க வைத்திருக்கலாமே என்று கேட்டான் கர்ப்பூரன்.

அவன் சொல்லிக் கொண்டிருந்தபோதே கண்கள் அயர்வில் மூடிக் கொள்ள அவன் உறக்கத்தில் ஆழ்ந்தான். இதெல்லாம் அவனுக்கு எதுவும் நினைவு வராது என்று சொல்லியபடி, வீட்டுக்குள் வந்த பிசாசுகள் வெளியேறும்போது, வீட்டுப் பிசாசுகள் அவற்றிடம் நீங்கள் யார், பிசாசங்களாகத் தெரியவில்லையே என்று கேட்டன.

ஆமா, நாங்கள் ஆல்ட் எஸ் பிரபஞ்சத்திலிருந்து வந்திருக்கும் பெண்கள். ஷேப் ஷிஃப்டர்ஸ். பிசாசுகளாக உருவம் மாற்றினோம். அவனிடம் ஒரு முக்கியத் தகவல் கெல்லி எடுக்க வேண்டியுள்ளது. நீதி நோக்கில்அவன் நடத்தை தவறு என்று அவனைக் குற்றவாளி ஆக்கி விசாரிக்க  வந்திருக்கிறோம். அவன் புத்திசாலித்தனமாகக் கேள்வி கேட்டு இந்த அவதாரத்தை செயலிழக்க வைத்துவிட்டான். அடுத்து வேறு அவதாரத்தில் வருவோம்.

இவன் மேல் அவ்வளவு கரிசனமா? வீட்டுப் பிசாசுகள் வினவின.

வெகுமதி கிடைத்தால் என்ன அவதாரம் வேணுமென்றாலும் எடுக்க தயார்.

அப்படியா நீங்கள் ஆல்ட் எஸ் பிரபஞ்ச பெண்களா, நாங்கள் ஆல்ட் க்யூ பிரபஞ்சப் பெண்கள். கர்ப்பூரம் இங்கே வந்ததுமே எங்கள் உளவுத்துறை இங்கே எங்களை அனுப்பி விட்டது. ஷேப் ஷிப்டிங்கில் ரெண்டு பேரும் டாக்டரேட் வாங்கியுள்ளோம். வாங்கி என்ன? சதா நாத்தம் பிடிச்ச மெழுகுசீலையைக் கட்டிக்கிட்டு வேலை பார்க்க வேண்டியிருக்கு. அப்போ அப்போ யாரையாவது பின் தொடர்ந்து ஊர்வன, பறப்பன, நடப்பனவாக மாற வேண்டியிருக்கு. முந்தாநாள் பெண் கரடிகளாக வேண்டியிருந்தது.

ஐயய்யோ, இங்கே ஒரு காமுகக் கரடி இருக்கே, அது கையிலே மாட்டிக்கிட்டா கதவு இடுக்கிலே சிக்கின பல்லி மாதிரி சப்பையாக்கிப் போட்டுடும். சிக்கிக்கிடாம இருங்க, ஜாக்கிரதை என்றன ஆல்ட் எஸ் ஷேப் ஷிஃப்டர் பிசாசுகள்.

அது கிட்டே ரொம்ப பாதுகாப்பாக உணர்ந்தோம். அது கரடிப் பெண்களைத்தான் இப்போ எல்லாம் துரத்தறதாம். எங்களுக்கு தேனெல்லாம் கொடுத்து உபசரிச்சுது.

சஞ்சீவினி   செய்முறையை நீலன் வைத்தியர் இந்தப் புழுத்துப்போன கர்ப்பூரம் கிட்டே கொடுத்து வச்சிருக்குன்னு எங்க பிரபஞ்சத்திலே நம்பத் தகுந்த தகவல். அதைத் தேடித்தான் முக்கியமா வந்தது. ஆல்ட் எஸ் பெண்கள் புன்சிரிப்போடு சொன்னார்கள். நீங்க?

நாங்களும் அதுக்குத்தான் வந்தோம். ஆல்ட் க்யூ பெண் சொன்னாள்.

ஆல்ட் க்யூ பிசாசுகள் சொந்த உருவம் மாறின. ஆல்ட் எஸ் பிசாசுகளும்.

நாலு பெண்களும் விடியும் வரை அரட்டை அடித்துக் கொண்டிருக்க கர்ப்பூரம் எழுந்திருக்கவே இல்லை.                                 

  தொடரும்

Series Navigationகனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ – 2023ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 2
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *