முதல் ஆழ்வார்கள்  கண்ட அரன் [பொய்கையாழ்வார்]

author
8 minutes, 32 seconds Read
This entry is part 3 of 8 in the series 5 நவம்பர் 2023

                 எஸ் ஜெயலஷ்மி

48. ஆலம் அமர் கண்டத்து அரன் ——-ஆலகால விஷத்தைத் தன்            கழுத்திலே கொண்ட சிவன்

                                              தேவர்களும் அசுரர்களும் கூடி திருப்பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விஷம் வெளிப் பட்டது. அதன் வெம்மையைத் தாங்க முடியாமல் தேவர்கள் முறையிட்டபோது சிவன் அந்த விஷத்தை விழுங்கினார்.இதைக் கண்ட உமாதேவியார் தடுக்க அவ்விஷம் சிவனின் கழுத்திலேயே தங்கி விட்டது. சிவன் நீலகண்டன் என்று அழைக்கப்பட்டார்.

                               ஆலம் அமர் கண்டத்து அரன், ஆலமர நிழலில் அகஸ்தியர், புலத்தியர், தட்சர்,மார்க்கண்டேயர்

என் நால்வர்க்கும் அற நெறியை உபதேசம் செய்தான்.

         நெறி வாசல் தானேயாய் நின்றானை ஐந்து

         பொறி வாசல் போர்க்கதவம்சார்த்தி—அறிவானாம்

         ஆலமரநீழல் அறம் நால்வர்க்கு அன்றுரைத்த

         ஆலமமர் கண்டத்து அரன்

                    [முதல் திருவந்தாதி 4]   2085

 49.அரன்—-சிவன்

                        இப்பாசுரத்தில் அரனையும் திருமாலையும் ஒப்பிடுகிறார் ஆழ்வார். இருவருடய வாகனம், கொடி இருப்பிடம் தொழில், வண்ணம் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பேசுவதைப் பார்ப்போம்

                  அரனுக்கு வாகனம் எருது. நாரணனுக்கு கருடன்.

அரனுக்கு ஆகமம் நாரணானுக்கு வேதம். அரன் இருப்பிடம் கைலை மலை,என்றால் நாரணன் பள்ளி கொள்வது பாற்கடல். அரன் அழித்தல் தொழில் செய்கிறான். பெருமான் காத்தல் தொழிலை மேற்கொள்கிறான்.சிவன் செம்மேனி அம்மான் நாரணன் கார்வண்ணன்.  சிவன் முத்தலைச்சூலம் ஏந்துகிறான். பெருமான் ஆழி ஏந்துகிறான்.இப்படி வேறு வேறாகக் காட்சி தந்தாலும் சிவன் என்ற உடலுக்கு உயிர் பெருமான் என்று உய்த் துணர வைக்கிறார் ஆழ்வார்.

            அரன், நாரணன் நாமம்,ஆன்விடை புள் ஊர்தி

            உரைநூல், மறை,உறையும் கோயில் வரைநீர்;

            கருமம் அழிப்பு, அளிப்பு, கையது வேல், நேமி,

            உருவம் எரி, கார் மேனி ஒன்று

                  [முதல் திருவந்தாதி 5]  2086

     50.மாமதிள் மூன்றெய்த இறையான்—–திரிபுரம் எரித்த சிவன்

                              பெருமானின் பெருமைகளையும் சிறப்பு

களையும் வரிசப்படுத்துகிறார் இப்பாட்டில்.

                              மேகவண்ணா! உன் கைகளில் வலம் புரிச்சங்கும் சக்க்ரப்படையும் கொண்டு சங்கு சக்ரதாரியாகக் காட்சியளிக்கிறாய். ”அகலகில்லேன் இறையும்’ என்று பெரிய பிராட்டியான திருமகள் உன் திரு மார்பில் வாசம் செய்கிறாள்.

வேதங்களைக் கண்ணாகவும் செல்வமாகவும் கொண்ட பிரமன் நின் உந்திக் கமலத்தில் வீற்றிருக்கிறான் முப்புரங்களையும் தன் சிரிப்பால் எரித்த சிவன் உனது சரீரத்தில் ஒரு பாகத்தில் இடம் பெற்றிருக்கிறான் என்று பெருமானின் சரீரத்தில் இம்மூவரும் குடி கொண்டிருக்கும் பெருமையைப் போற்றுகிறார்

            கைய வலம்புரியும் நேமியும் கார்வண்ணத்

            தைய! மலர்மகள் நின் ஆகத்தாள்—செய்ய

            மறையான் நின் உந்தியான், மாமதிள் மூன்றெய்த

            இறையான் நின் ஆகத்திறை

                        [முதல் திருவந்தாதி 28]  2109

  51 .சென்னிப்பலியேற்ற வெண்புரி நூல் மார்பன்——-பிரம 

   கபாலத்தில் பிச்சையேற்ற வெண்மையான  நூலணிந்த

   திருமார்பையுடைய சிவன்.

                                           நான்கு வேதங்களையுடைய

பிரமனின் ஒருதலையை சிவன் கிள்ளிய போது அது கையில் ஒட்டிக் கொண்டது. சிவன் எவ்வளவோ முயற்சி செய்தும் அதை நீக்க முடியவில்லை, சிவனுடைய பிரமஹத்திப்ப் பாவத்தைப் போக்குவதற்காக பெருமான் த மார்பைப் புண்ணாக்கிக் கொண்டு சிவனுக்குத் தன் மார்பிலிருந்த்து உதிரம் கொடுத்ததார்.இப்படி உதவிசெய்த எம்பெருமானின் திருவடிகளைப் பற்றிக் கொள்ப வர்கள் இந்த உலகை ஆள்வதோடு பரமபத அனுபவத்தையும் பெறுவார்கள் என்கிறார் ஆழ்வார்

      பண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற

     வெண்புரிநூல் மார்பன் வினைதீர—-புண்புரிந்த

     ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர் அமரர் தம்

     போகத்தால் பூமியாள் வார்.

             [முதல் திருவந்தாதி  46]   2127

52.  ஏற்றான்- எயிலெரித்தான், நீற்றான்,  கூற்றொருபால் மங்கையான்,வார் சடையான், கங்கையான்——— சிவன்.

                         இப்பாசுரத்தில் சிவன், திருமால் ஆகிய இருவருடைய தன்மைகளை, வேறுபாடுகளை வரிசைப்படுத்து கிறார் ஆழ்வார்

                   எருதை வாகனமாக உடையவன் சிவன். பறவை களுக்கு அரசனான கருடனை வாகனமாகக் கொண்டவன் பெருமான். சிவன் முப்புரங்ளை எரித்தான் என்றால் பெருமான் இரணியனது மார்பை இடந்தான். சிவன் பால் வெண்ணீறு பூசிய மேனியன்என்றால் பெருமான் நீலமணி வண்ணன். மலைமகளை இடப்பாகம் கொண்டிருக்கிறான் சிவன். பூமகளை மார்பில் வாசம் கொண்டிருக்கிறான் பெருமான் தனது சடைமுடியில் கங்காநதி யைத்தாங்கிக் கொண்டிருக்கிறான் சிவன். நீண்ட முடியையும் நீண்ட திருவடியும் கொண்டு காட்சி தருகிறான் பெருமான்

        ஏற்றான், புள் ஊர்ந்தான்,எயிலெரித்தான், மார்விடந்தான்

        நீற்றான், நிழல்மணி வண்ணத்தான்—கூற்றொருபால்

        மங்கையான், பூமகளான்; வார்சடையான், நீண்முடியான்,

        கங்கையான்,நீள் கழலான் காப்பு.

                   [முதலாம் திருவந்தாதி  74]   2155

53அனற் கங்கை யேற்றான்—–கையிலே தீயயும் சடாமுடியிலே கங்கா நதியையும் ஏற்ற சிவன்.

                                 தனது பிடியுடன் சேர்ந்து வாழும்படி கஜேந்திரன் என்ற யானைக்கு அருள் புரிந்ததைக் குறிப்பிட்ட ஆழ்வார் சிவபெருமானின் கற்றைச் சடைமுடியில் பாய்ந்த கங்கை என்னும் நதி பெருமானின் திருவடிகளை அடைந்து அவ ருடைய திருவருளால் பாவிகளையும் பரிசுத்தர்களாக மாற்று வதை வியந்து போற்றுகிறார்

             பிடிசேர் களிறளித்த பேராளா! உன்றன்

             அடிசேர்ந்தருள் பெற்றாளன்றோ?—பொடிசேர்

             அனற் கங்கை யேற்றான் அவிர்சடைமேல் பாய்ந்த

             புனற் கங்கை யென்னும் பேர்ப்பெண்

                         [முதல் திருவந்தாதி 97]  2178

  54. புரிசடையம் புண்ணியன்—சடைமுடியையுடைய சிவன். 

                                அரியும் அரனும் வேறு வேறானவர் களாகக் காட்சி தந்தாலும் ஒருவர் அங்கத்தில் ஒருவர் இருக்கிறார் என்பதே உண்மை என்பதைப் புலப்படுத்துகிறார். இரு வரும் சேர்ந்து சங்கரநாராயணனாகக் காட்சி தருகிறார்கள்!

         நம்மாழ்வாரும், ”பரன் திறமன்றிப் பல்லுலகீர் தெய்வம்

                            மற்றொன்றில்லை பேசுமினே”

   என்றும்               ‘’வலத்தலன் திரிபுரம் எரித்தவன்

  என்றும் உபதேசம் செய்கிறார்.

         பொன் திகழும் மேனிப் புரிசடையம் புண்ணியனும்

         நின்றுலகம் தாய நெடுமாலும்—–என்றும்

         இருவரங்கத்தால்  திரிவரேலும் ஒருவன்

         ஒருவன் அங்கத்தென்றும் உளன்

                   [முதல் திருவந்தாதி  98]    2179

==============================================================

                               பூதத்தாழ்வார் கண்ட அரன்

55. பிறையிருந்த செஞ்சடையான்—-சடைமுடியில் பிறைச் 

                  சந்திரனை தரித்த சிவன்.

                                தேவேந்திரனும் பிரமனும்வணங்கும் பெருமையுடையவன் எம்பெருமான்.தன் சிவந்த சடையில் பிறைச் சந்த்ரன்னைத் தரித்த சிவன், பெருமானிடம் சென்று தன் குறை யைக் கூறியபோது, அக்குறையை நிவர்த்தி செய்தான். நமது குறைகளையும் அப்பெருமானைத்தவிர யார் போக்குவார்? (வேறு யாரும் இல்லை)என்று வினா எழுப்புகிறார் ஆழ்வார்

             மற்றார் அயலாவார் வானவர்கோன் மாமலரோன்

             சுற்றும் வணங்கும் தொழிலானை—ஒற்றைப்

             பிறையிருந்த செஞ்சடையான் பின்சென்று மாலைக்

             குறையிருந்து தான்முடித்தான் கொண்டு

                         [2ம் திருவந்தாதி 17]   2198

56 எரியுருவத்து ஏறேறி.—-எருதை வாகனமாகக் கொண்ட தீ வண்ணன் [சிவன்]

                நப்பின்னைக்காக ஏழு எருதுகளை அடக்கிய கண்ணன், எருதைவாகனமாகக் கொண்ட்அ தீ வண்ணானான சிவ பெருமானுடைய கையிலிருந்த பிரம்மகபாலத்தைப் போக்கும் பொருட்டுத்தன் மார்பிலிருந்து உதிரம் அளித்தான். உடனே அக் கபாலம் சிவன் கையை விட்டு அகன்றது.இந்நிகழ்ச்சியை சொல்லத் தொடங்கினால் அது ஒரு பாரதக் கதையாக ஆகிவிடும்

என்கிறார் ஆழ்வார்.

             ஏறேழும் வென்றடர்த்த எந்தை,எரியுருவத்து

             ஏறேறி பட்ட விடுசாபம்—-பாறேறி

             உண்டதலை வாய் நிறையக் கோட்டங்கை ஒண்குருதி

             கண்டபொருள் சொல்லில் கதை

                         [2ம் திருவந்தாதி 63]   2244

========================================================================

                              பேயாழ்வார்

57.நறவேற்றான்——-தேன் போன்ற கங்காநதியைச் சடையிலே ஏற்றவன்[சிவன்]

                         நரசிங்கமாகத் தூணில் தோன்றி இரணிய னுடைய மார்பைப்பிளந்தவன் எங்கெல்லாம் காணப்படுகிறான் என்றுசொல்கிறார் பேயாழ்வார். கண்ணும் செவியும் ஒன்றாக உடைய ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்டவன். நான்கு வேதப் பொருளானவன்.கங்காதரனான சிவபெருமானின் இடப் பக்கத்தில் உறைபவன். திருப்பாற்கடலில் பள்ளி கொண்டவன்.

             [நறவு—–தேன்.]

              இவையவன் கோயில், இரணியன தாகம்

              அவைசெய்து அரியுருவமானான் –செவிதெரியா

              நாகத்தான்,நால்வேதத்துள்ளான், நறவேற்றான்

              பாகத்தான்,பாற்கடலுளான்

                               [3ம் திருவந்தாதி 31]   2312

58.சங்கரநாராயணன்——அரனும் அரியும் சேர்ந்த உருவம்.

                          தாழ்ந்த சடையும் மழுவும் நாகா பரணமும் கொண்ட சிவனும் நீண்ட திருமுடியும் திருவாழி ஆழ்வானும். பொன்னர நாணும் கொண்டு விளங்கும் பெருமானும்

சேர்ந்து ஒரே வடிவாகத் திருமலை மேல் விளங்குபதைக் கண்டு

அதிசயிக்கிறார் ஆழ்வார்.

                               இறைவனுடைய பல வடிவங்களுள் ஒன்று சங்கரநாராயண வடிவம். பாதி ஸ்ரீமந்நாராயணனாகவும்

பாதி பரமசிவனாகவும் கொண்ட கோலமிது! சைவ வைணவ வேற்றுமைகளை அழிக்க வந்த அவதாரம். அரியும் சிவனும் ஒண்ணு என்னும் உண்மையை மக்களுக்குக் காட்டுவதற்காகவே சங்கரன் கோயில் என்னும் தலத்தில் இப்படிக் காட்சியளிக்கிறார் கள் இருவரும் சேர்ந்து.

         தாழ்சடையும், நீள்முடியும், ஒண்மழுவும், சக்கரமும்

         சூழரவும் பொன்னாணும் தோன்றுமால்—-சூழும்

         திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு

         இரண்டுருவம் ஒன்றாய் இசைந்து.

                [3ம் திருவந்தாதி 63]   2344

59.வார்சடையான்———–,நீண்ட சடையையுடைய சிவன்

                                                                            நாபியில தாமரைப்பூவையும் காயாம்பூவைப்

போன்ற கரிய திருமேனியும் கொண்ட எம்பெருமான், இந்திரனும் பிரமனும், நீண்ட சடையை உடைய சிவனும் தம் நெஞ்சால் நினைக்கத் தகுந்தவனோ? ( அல்லன்). அது அவ்வளாவு எளிதான காரியம் அல்ல

             அலரெடுத்த உந்தியான் ஆங்கெழிலாய

             மலரெடுத்த மாமேனி மாயன்—அலரெடுத்த

             வண்னத்தான் மாமலரான் வார்சடையான்என்றிவர்கட்

             கெண்ணத்தான் அமோ இவை

                         [3ம் திருவந்தாதி 97]  2378

                     திருமழிசையாழ்வார்

                     (நான்முகன் திருவந்தாதி)

60. சங்கரன்—–சிவன்

                     நாராயணன் நான்முகனான பிரமனைப் படைத்தான். அப்பிரமன் சிவனைப் படைத்தான். எனவே மூல முழுமுதற் கடவுள் நாராயணனே எப்பது திரிமழிசை ஆழ்வாரின்

கொள்கை இதை நான்முகன் திருவந்தாதி மூலமாக அறிவிக் கிறேன் என்கிறார் ஆழ்வார்.

       நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்

       தான்முகமாய்ச் சங்கரனைத்தான் படைத்தான் — 

                                                 யான்முகமாய்

       அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ்பொருளை

       சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து

                         [நான்முகன் திருவந்தாதி 1]  2382

61.ஆறு சடைக் கரந்தான்—கங்கா நதியைத் தன் சடாமுடியிலே

           மறைத்தவன்   [சிவன்]

                         பூவுலகில் பாய்ந்துவந்த கங்கா நதியின் வேகத்தையடக்கித் தன் சடாமுடியிலே மறைத்த சிவன், தேவாதி தேவனான எம்பெருமானின் ஒரு பாகத்திலே வீற்றிருக்கிறான். வேறெந்த தெய்வமும் தனக்கு ஒப்பாகாத பெருமானைச் சொல் லும் ஒலியையும் தனக்கு வாசகமாகும்படி உள்ள பெருமானுடைய

பெருமைகளை பேச விழைகிறேன் என்கிறார் ஆழ்வார்

             ஆறு சடைக்கரந்தான் அண்டர்கோன் தன்னோடும்

             கூறுடையான் என்பதுவும் கொள்கைத்தே வேறொருவர்

             இல்லாமை நின்றானை எம்மானை எப்பொருட்கும்

             சொல்லானைச் சொன்னேன் தொகுத்து

                         [நான்முகன் திருவந்தாதி  4]  2385

Series Navigationருசி 2பூமியைச் சுற்றிவரும் நிலவின் சுற்றுப்பாதை நிகழ்வை முதன்முதல் சூரிய ஒளியில் படமெடுத்த நாசாவின துணைக்கோள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *