ரயில் கிளம்ப இன்னும் பத்து நிமிடம் இருக்கிறது என்பதை உணர்ந்த இவன் வண்டியை விட்டுக் கீழே இறங்கினான். அந்தப் பையனோடு தனித்தே நின்று பேசுவதுதான் சரியாக இருக்கும் என்று தோன்றியது.
உங்க பேரு என்ன தம்பி?
மம்மது சார்…
அவன் சத்தமாகக் கூறியதைக் கேட்ட இவன், மெதுவா…மெதுவா…பொது இடங்கள்ல சத்தமில்லாமப் பேசணும்…என்றான் அவனைப் பார்த்து.
சரி சார்…என்று தலையாட்டிய அவன் ‘எங்கப்பாவுக்குச் சேர வேண்டிய பணமெல்லாம் கொடுத்துட்டீங்களா சார்…? – என்றான் அடுத்தபடியாக.
அவன் ஏதோ பிரச்னையோடுதான் வந்திருக்கிறான் என்பதாகத் தோன்றியது. அவன் குரலில் இருந்த படபடப்பு முகத்தில் தென்பட்ட கோபம், கண்களில் இருந்த கலக்கம், இது எல்லாவற்றையும்விட கலைந்து பறந்து கொண்டிருந்த தலை முடியோடு அவன் காட்சியளித்தது இவனை ரொம்பவும் யோசிக்க வைத்தது.
“ஆபீஸ் சம்பந்தப்பட்ட விஷயத்தை இங்கே பேச முடியாது தம்பி…புரிஞ்சிதா…எதுவானாலும் உங்க அம்மாவோட வந்து ஆபீஸ்ல விபரம் தெரிஞ்சிக்குங்க…நீங்க யாருன்னே எனக்குத் தெரியாது. உறபிபுல்லா பையன்னு சொல்றீங்க…இப்பத்தான் நான் உங்களை முதன் முதலாப் பார்க்கிறேன்…நீங்க அவர் பையன்தான்ங்கிறது உங்க அம்மா மூலமாகத்தான் நான் உறுதிப்படுத்திக்க முடியும். எதுவானாலும் ஆபீசுக்கு வந்து கேளுங்க…அதுதான் முறை…”
இல்ல சார்…நான் இங்கே தொழில் பார்த்துக்கிட்டிருக்கேன் சார்…அடிக்கடி அங்கே வர முடியாது. பஸ்ஸ_க்கு சும்மா செலவு செய்ய முடியுமா?
வேண்டாமே…உங்க அம்மா மூலமாத் தெரிஞ்சிக்கிடலாமே? நானே அவுங்களை அலைய வேண்டாம்னுதானே சொல்லியிருக்கேன். தபால் வந்த பிறகு வந்தாப் போதும்னு சொல்லியிருக்கேனே?
நீங்க சாவகாசமா செய்வீங்க…அதுவரை நாங்க பொறுத்துக்கிட்டிருக்க முடியுமா? எங்களுக்குத் தொழிலுக்குப் பணம் தேவைப்படுதுல்ல சார்…
அவன் பேச்சு வித்தியாசப்படுவதுபோல் தோன்றியது இவனுக்கு.
ரயில் கிளம்புவதற்கான அறிவிப்பு ஒலித்தது.
இந்த பாருங்க தம்பி…அநாவசியமான பேச்சு வேண்டாம்…நீங்க சின்னப் பையன். உங்களுக்கு எதுவும் தெரியாது. எதுவானாலும் உங்க அம்மாவோட வந்து பேசிக்குங்க…அவுங்கதான் உறபிபுல்லாவோட நாமினி…லீகல் Nஉறர்…எல்லாப் பணப் பலன்களும் அவுங்களைத்தான் சேரும்…அததுக்கான நேரத்துக்குள்ள அது அவுங்களுக்குக் கிடைக்கும். அதுக்கு நான் பொறுப்பு. நீங்க போகலாம். … – சொல்லிவிட்டு வண்டியினுள்; ஏறினான் கணேசன்.
ரயில் லேசாக நகர்ந்தபோது இவனை நோக்கிக் கையைக் காட்டி, விரலைச்சுட்டி எச்சரிக்கை செய்வது போன்ற சைகையில் அந்தப் பையன் ஏதோ சத்தமாகக் கத்துவதைக் கண்டான்.
ஓரிரு முறை அவனை அலுவலகம் உள்ள சாலையின் எதிர் டீக்கடையில் பார்த்தது போலவும், உறபிபுல்லாவோடு வாக்குவாதம் செய்து தகராறு ஆகி அருகிலிருந்த சிலர் விலக்கி விடுவது போன்ற காட்சியையும் ஜன்னல் வழியாகத் தான் கண்ணுற்றது இவன் மனதுக்குள் நெருடியது இப்போது.
அவன் யார், என்ன, ஏது என்று தான் விசாரிக்க முற்பட்டபோது ‘ஒண்ணுமில்ல சார்…தெரிஞ்ச பையன்தான் சார்…’ என்று உறபிபுல்லா சொல்லியிருந்ததும் நினைவுக்கு வந்தது.
தெரிஞ்ச பையன் இப்போது மகன் என்று சொல்லிக் கொண்டு வந்து நிற்கிறான். இது தெரியக் கூடாது என்றுதான் அன்று உறபிபுல்லா அப்படிச் சொல்லியிருப்பாரோ என்று தோன்றியது.
இரண்டு தினங்களுக்கு முன் இறந்து விட்டதாகக் கூறுகிறானே? செய்தி வரவேயில்லையே? உண்மையா? பொய்யா? – முதலில் இதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
உறபிபுல்லா இறந்து விட்டார் என்ற அந்தச் செய்தி மனதைத் திடுக்கிட வைத்தது. உண்மையாய் இருக்கக் கூடாது என்று தோன்றியது. ஆனாலும் அவர் பையன் என்று சொல்லும் அவன் சொன்னது எப்படிப் பொய்யாக இருக்க முடியும்? ஓய்வு பெற்று ஓராண்டு கூட நிறையவில்லையே? அதற்குள்ளா இப்படி நிகழ வேண்டும்?
உறவிபுல்லாவை நினைத்தபோது மனம் வேதனைப்பட்டது. அவரைப்போல் ஒரு திறமையான பியூனைப் பார்க்கவே முடியாது. பம்பரமாய்ச் சுழலுவார் ஆபீஸ் நேரத்தில். அவர் மீசையை முறுக்கும் அழகே தனி. ஆனால் அதற்குள் அவர் சிரிக்கும் பளீர் சிரிப்பும் மறக்க முடியாதது.
இது என் வேலை, இது உன் வேலை என்ற பேச்செல்லாம் அவரிடம் கிடையாது. எல்லாமே அவர் வேலைதான். பியூனுக்கான வேலைகளோடு ஒரு குமாஸ்தாவுக்கான வேலைகளையும் சேர்த்துப் பார்ப்பார். யார் எதைச் சொன்னாலும் மனம் கோணாமல், முகம் சுழிக்காமல் பார்ப்பார். உடனே செய்து விடுவார்.
சம்பளப்பட்டியல்களை நகலெடுப்பது, கோப்புகளைத் தைப்பது, அவற்றை இனம் வாரியாகப் பிரித்து அடுக்குவது, பக்க எண்கள் போட்டுக் கொடுப்பது, டீ வாங்க ஓடுவது… என்று அவருடைய வேலையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
நான் ஒருத்தன் எதுக்காக இருக்கேன் இங்கே? நீங்கபாட்டுக்கு உள்ளே போறீங்க? வந்தீங்கன்னா என்ன விஷயம், யாரைப் பார்க்கணும்னு சொல்லுங்க…என்னைப் பார்த்தா ஆளாத் தெரியலையா?
அலுவலரின் அறைக்குள் நுழைய முயன்ற ஒருவரை ஒரு நாள் இப்படி விரட்டியடிக்க, வந்தவர் ஒரு அரசியல்வாதி.
நீங்க யாரா இருந்தா எனக்கென்ன சார்? ஆபீசுக்குள்ளே நுழைஞ்சா முறைப்படி நடந்துக்கிட வேண்டாமா? நீங்கபாட்டுக்குத் திறந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சமாதிரிப் போனா?
வந்தவர் தவறாய் எடுத்துக்கொள்ள இந்தப் பேச்சுப் போதாதா? தலைமை வரை போனான் அந்த ஆள். நான் கேட்டதுல என்னா தப்பு? என்று கடைசி வரையில் பி
டியாய் நின்றார் உறபிபுல்லா.
அவரை மாதிரி ஆள் கிடைக்காது என்று சிபாரிசு செய்தார் அதிகாரி. ஜெயித்தது உறபிபுல்லாதான். காணாமலே போனான் அந்த ஆள். இப்படி எத்தனையோ சம்பவங்கள். ஆனால் அதே ஆள் ரெண்டு பேரை ஏவி விட்டு அவர் மாலையில் வீடு திரும்புகையில் கண்மண் தெரியாமல் அடிக்க விட்டானே?
‘பாய்’ ஆஸ்பத்திரியில் கிடந்தாரே! எவ்வளவு பரிதாபமாயிருந்தது.
போறான் சார், விடுங்க…கோழை…ஆள வச்சு அடிக்க விடுறவன் ஆம்பளையா? பொட்டைப்பய…அல்லா அவனை மன்னிக்கட்டும்…’ என்று கைகளை ஆசி கூறுவதுபோல் செய்து கண் கலங்கினாரே…
பியூன் உறபிபுல்லாவை நினைக்க நினைக்க வரிசையாக அவரது நற்குணங்களும் நன்னடத்தையும் மனதில் தோன்றி சங்கடப்படுத்தின இவனை.
இன்று அலுவலகம் போனதும் முதலில் இந்தச் செய்தியை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
வெகு நேரம் தான் யாருடனும் பேசாமலும் சிந்தனையுடனும் பயணம் செய்தது அன்று அவனுக்கே வியப்பாய் இருந்தது.
ரயிலை விட்டு இறங்கியபோது, ஆபீஸ் நினைவுகள் அப்படியே வந்து அவன் மனதை அப்பிக் கொண்டன. மாலை, புத்தகங்களைத் திருப்பித் தருவதாய் கடைசிப் பெட்டியிலிருந்து சைகை செய்தார்கள் நண்பர்கள்.
கால்களை வீசிப் போட்டு நடக்க ஆரம்பித்தவன் அன்றைய அலுவலகப் பிரச்னைகளை எதிர்கொள்ள மனதைத் தயார்படுத்திக் கொண்டான்.
- கனடா எழுத்தாளர் வ.ந. கிரிதரனின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா
- நாவல் தினை அத்தியாயம் நாற்பத்தொன்று பொ.யு 5000
- தகுதி 1
- தகுதி 2
- ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 5