ஆர் வத்ஸலா
மல்லாந்து படுத்து
கருநீல வானின்
வைரங்களை
விடிய விடிய
எண்ண ஆசைப்படும் வரை
ஒவ்வொரு பூனையின்
ஒவ்வொரு முகபாவமும்
வெவ்வேறாகத் தோன்றும் வரை
முன்பின் தெரியாத
கைக்குழந்தை
என்னை பார்த்து
களுக்கென சிரிக்கும் வரை
மரத்தில் இருந்து
உதிர்ந்த மலரின்
அழகை காணத் தெரிந்த வரை
ஜன்னல் வழியே
பறவைகளையும்
பறக்கும் விமானத்தையும்
கண்டு
அதிசயக்கும் வரை
இருக்கிறது
தகுதி
எனக்கு
வாழ