ஆர் வத்ஸலா
தினமும் ‘பீச்’ வரை நடை பயிற்சி
சதை, சர்க்கரை குறைக்க
இயற்கையை ரசிக்க
எல்லாவற்றிற்குமாக
காலை நனைத்துக் கொண்டு
மணல் மீதே எழுப்பப் பட்ட
ஒரு சிறு ஆலயத்தில் அமர்ந்திருந்த அம்மனுக்குக்
கடமைக் கும்பிடொன்று போட்டு விட்டு
திரும்பிய போது
தீடீரென முளைத்து என்னை பின் தொடர்ந்தது
அந்த சின்னஞ்சிறு பூனைக்குட்டி
துரிதமாக நடந்தேன்
வலுப்பெறா குட்டிக் கால்களுடன்
வேகமாக பின் தொடர்ந்தது
அதுவும்
அதற்கு என்னை பிடித்திருந்தது என்பது
எனக்கு பெருமையாகத் தான் இருந்தது
ஆனால் ஒரு கவலை
வீடு வரை வந்து விட்டால் என்ன செய்வது?
நான் செல்லப் பிராணி வளர்க்கும் ரகம் இல்லையே!
வழியில்
ஒரு பிரதான சாலையை
கடக்கையில் வாகனங்களுக்கு வழி விட
நான் நின்ற போதெல்லாம்
அதுவும் என்னுடன் நின்றது
சாலையை கடந்ததும்
ஓடிப் போய் விட்டது
என்னைப் பிரிந்து
என் செருக்கை நிர்மூலமாக்கிக் கொண்டு