ஆர் வத்ஸலா
ஒரு காலத்தில்
எனக்கு நண்பனாக
இருந்தான்
எப்போதாவது சந்திப்போம்
எப்போதாவது
பேசுவோம்
புலனத்தில்
குறுஞ்செய்தி பரிமாற்றம் அடிக்கடி
மனைவியைப் பற்றி
மகளைப் பற்றி அன்புடன் பேசுவான்
அவன் மேல்
எனக்கிருந்தது
அன்பும் மதிப்பும்
என் காரணமாக
என் குடும்பத்தினருக்கும்
பிறகு
காரணம் சொல்லாமல்
வந்தது
அவனது
மௌன விலகல்
என்னை வருத்திக் கொண்டு
நீண்ட மௌனத்திற்குப்
பிறகு வரத் தொடங்கின
நட்புக்கு கல்லறை கட்ட மறுத்து
நான் பிடிவாதமாக
அனுப்பக் கொண்டிருந்த குறுஞ்செய்திகளுக்கு
எதிர்வினைகள்
மரியாதை நிமித்தம் அனுப்பப் பட்டவை என்று பறை சாற்றிக் கொண்டு
மறுக்கிறேன்
நான்தான்
முதல் கல்லை வைக்க
விடுதலைக்கான முதலடி அதுதான்
என்றறிந்திருந்தும்