வெங்கடேசன் நாராயணசாமி
( சமஸ்கிருதத்திலிருந்து ஸ்ரீமத் பாகவதம் செய்யுளின் மொழிபெயர்ப்புகள் சில )
துருவன் பகவானைப் போற்றுதல்:
ௐ [ஶ்ரீம.பா-4.9.6]
எனாவி உடல் உட்புகுந்து ஆட்கொண்டாய்!
ஜடமாய் உறங்கும் பொறி புலன்கள் உயிர்ப்பித்து இயக்கினாய்!
மூச்சானாய்! பேச்சானாய்! அறிவாற்றல் ஆன்மாவானாய்!
உயிருக்குயிரான பகவானே!
உணர்வெனும் பெரும்பதப் புருடனே! போற்றி! போற்றி!
ந [ஶ்ரீம.பா-4.9.7]
ஒன்றேயான உறுபொருள் பகவன் நும் ஆத்மசக்தியால்
அனாதி மாயா ஆற்றல்மிகு குணத்திரிபால்
அகண்ட பேருணர்வால் அண்டங்கள் படைத்தும்
அந்தர்யாமியாய் அவற்றுள் நுழைந்தும்
வெவ்வேறு விறகு உருவில் பற்றி எரி ஜ்வாலையாய்
வியாபித்துத் தோன்றினாய் ஜீவேஶ்வர ஜகங்களாய்.
மோ [ஶ்ரீம.பா-4.9.8]
தங்களையே ஶரணைடந்த அயனும் – நாதா!
தாங்களருளிய அறிவால் மலங்க கண்டார் அகிலமனைத்தையும்
தானே தூங்கியெழுந்தவன் பார்ப்பது போலே!
முத்தர்களும் ஶரண்புகும் நும் செங்கமலச் சேவடிகள் தம்மை – ஏழைப்பங்காளா!
நற்பிறவி பெற்ற நன்றியுடை பத்தர்கள் எங்ஙனம் மறப்பர்?
ப4 [ஶ்ரீம.பா-4.9.9]
பிறப்பிறப்பின் முத்தி நல்கும் கற்பகத்தருவே இறைவா! நும்மை
அழியும் அற்ப பிணவுடல் ஸுகம் வேண்டி பூஜித்தே
நிச்சயமாய் மோசம் போனார் மூடர் நின் மாயையால், ஏனேனில்
பாழ் நரகிலும் கிடைப்பது பொறிபுலனின்பம் தானே!
க3 [ஶ்ரீம.பா-4.9.10]
நினதேயான கம்பீர பிரம்மானந்தத்திலும் இல்லை நாதா,
நின் மலரடித் தியானம் மற்றும் செவிக்கினிய நின்னடியார்கள் சரிதை நல்கும் நிரந்தர அகண்டானந்த அமைதி – எனில் என் சொல்வேன்
வெட்டுண்டு கால வாளால் ஸ்வர்க்காதி விமானங்கள் விட்டு
வீழும் விடய போகிகளின் அற்ப ஸுகங்கள் பற்றி?
வ [ஶ்ரீம.பா-4.9.11]
அனந்தா! நும் பக்தி வெள்ளம் மூழ்கித் திளைக்கும்
உத்தமர்தம் உறவு என்றென்றும் எமக்கு வேண்டும்.
பெருமைபெறும் நினது புகழ் அவர் பாட
அக்கதையமுதம் பருகிய களிப்பில்
துன்பமிகு பிறவிப் பெருங்கடலை
இன்பமுற கடப்பேன் எளிதாக.
தே [ஶ்ரீம.பா-4.9.12]
பற்பநாபா! அருமை ஈஶா! உன் செங்கமலச் சீரடிகள்
நறுமணம் தன்னை தன்னுள்ளம் தேக்கிய சான்றோர்
நல்லிணக்கமுடை அடியார்கள், யாவர்க்கும் பிரியமாம்
அழிந்தொழியும் இவ்வுடலை எண்ணவே எண்ணார்.
ஒழிந்தொழித்தார் இவ்வுடல்சார் மனைவி-மக்கள், உற்றார்-உறவினர், வீடு-வாசல், சொத்து-செல்வம் ஆகிய நினைப்பனைத்தும்.
வா [ஶ்ரீம.பா-4.9.13]
பிறப்பில்லா பரம்பொருளே! மரம் மா
பறப்பன ஊர்வன ஸுராஸுர நர ஆகிய பல தோற்றங்களாய் நிறைந்து
மெய்-பொய் குணத்திரிபால் விரிந்து
பேரண்ட மெய்யுணர்வின் வெளிப்பாடாம்
விந்தையான உன் தூல விராட ரூபம் தவிர
வாத-விவாதங்களுக்கு அப்பாற்பட்ட நின் ஸூக்கும-காரண
உன்னத உருவை யான் அறியேன்.
ஸு [ஶ்ரீம.பா-4.9.14]
கற்ப முடிவில் பெரும் பிரளய இறுதியில்
அண்டங்களைத் தன் உந்தியிலடக்கி
பைந்நாகத் திருமடியில் பரம புருட பகவானே
ஆத்மானுபவத்திளைப்பில் பள்ளிகொண்டாய். உன்
திருவுதரக் கடலில் முளைத்தெழுந்த பொற்றாமரைப் பூந்தளத்தில்
உதித்தனன் ஒளியாய் அயன். பதினான்கு உலகங்களும் அப்பொற்கமலத்திலிருந்தே படைக்கப்பட,
அவ்வனந்த பற்பநாபன் நீயே! நின் பொற்பாதங்கள் பணிந்தேன் போற்றி! போற்றி!
தே3 [ஶ்ரீம.பா-4.9.15]
நித்திய முத்தையனே! தூயனே! ஞான பரமாத்மனே!
உணர்வெனும் ஒளியே! ஆதிபுருடனே! அறுவளம் அருளும் பகவானே! திருவின் திருவே! முப்புடி முதல்வனே!
முக்குண மாயை முறிக்கும் ஈஶனே!
கண்ணிற்குக் கண்ணாய் கண்ணின்றிக் காணும் அந்தமிலாக் கருமணியே!
வேள்விகள் புகழும் பெருவேள்வியாம் விஷ்ணுவே!
ஜகத்தைக் காக்கும் மஹாவிஷ்ணுவே!
ஆகாயம் மற்றும் ஆதித்யன் போல்
ஒட்டியும் ஒட்டாமலும் சேர்ந்தும் தனித்தும்
எல்லாமும் தானாயும் இருப்பவனே! எம்பெருமானே! நும் எழிலடிகள் இறைஞ்சினேன் போற்றி! போற்றி!
வா [ஶ்ரீம.பா-4.9.16]
எதிர்மறை சுழற்சியாம் அறிவறியாமையின் ஆதிமூலமே!
ஆற்றொழுக்காய் ஒன்றன்பின் ஒன்றாய்
எப்போதும் தொடர்ந்து தோன்றும் இரட்டை மற்றும் முப்புடி ஆற்றலின்
அதிஷ்டான காரணா! ஜகத்காரணா! பரிபூரணா!
ஒன்றேயான பரப்பிரம்மமே!
தூயனே! அகண்டனே! அச்சுதனே! ஆனந்தனே!
தஞ்சம் அடைந்தேன் நின் செம்மலர்த்தாள் போற்றி! போற்றி!
ய [ஶ்ரீம.பா-4.9.17]
நல்லாஶி என்பது பகவானே நும்
செங்கமலத்தாள் நணிந்தேத்தல் நாள்தொறும் – புருடார்த்தமூர்த்தே!
ஆயினும் காரணமே கருதாது ஈஶனே! தன்
கன்றைக் காக்கும் தலையீற்றுப் பசுபோல் – பகவானே!
தீனனெமைப் பேணுகின்றாய் பேரன்புடனே.