ஜி. ஏ. கௌதம்
நினைவிருக்கிறதா ?
முன்னால் காதலியை
மீண்டும் காதலிக்கும் ஒருவனின்
கவிதையொன்றை எழுதும் முன்
என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்…
நினைவிருக்கிறதா !?
நீ காதலிக்கப்பட்ட
முதல் தருணம் !
அவள் கண்கள்
முழுதும் நிறைத்த
காதலின் பூரணம் கண்டு
நீ மகிழ்ந்த தருணம் !
கண்சிமிட்டாமல் பார்த்தபடி
மடியிலிருந்து இதழுக்கு
நத்தையாக நகர்ந்து
உன் காதலை
முத்தத்தில் சொன்ன விதம் !
யாருமற்ற உன் வாழ்வின் பாதை
அவள் பாதங்களில் முடியும்
ரகசியம் அறிந்த அந்த இரவு !
அவள் கல்லூரியின்
மரங்கள் அடர்ந்த பாதையில்
சிந்திய மலர்கள்
உங்கள் பாதங்களை ஏந்திக்கொள்ள
அவள் கரங்களை இறுகப்பற்றியபடி
அவளுடன் நடந்த நெடிய பயணம் !
உன் மடியில் வருடிய
அவள் கூந்தலின் பிசுபிசுப்பு !
நீ மையல் கொண்ட
பெண்களின் பட்டியலை வாசிக்கையில்
அவள் கண்களில் எட்டிப்பார்க்கும்
பொறாமை !
நாள்காட்டிக்கு விடுமுறை அளித்து
நாள்கணக்கில் உங்களை நீங்களே
சிறை பிடித்துக்கொள்ள
உங்கள் அறைக்குள்
நீங்களே செய்து கொண்ட
அழகிய சிறை !
தூரத்திலிருந்தும் அவள் இருப்பை
உன் அறையில் நீ உணர்ந்த தருணம் !
அவள் தெகமெங்கும்
இதழ்களால் நீ வரைந்த
ஓவியங்கள் !
கூடலுக்குப் பிறகான
அவள் அணைப்பின்
இறுக்கம் !
கோபமுற்ற நாட்களில்
அவளை நீயும்,
உன்னை அவளும்,
பேசிக்கொள்ள சந்தர்ப்பம் தேடும்
கிறுக்குத்தனங்கள் !
நான் என்ற
அகந்தையை அழித்த
அவள் முதல் கோபம் !
உனக்காக சிந்திய
ஒரு சொட்டு கண்ணீர்
அவள் இமைகளின் இடுக்கில்
தேங்கி நின்ற தருணம் !
பிறிவில் உழன்று அழுது கரைத்த
உன் அகந்தைகளால்
புதிதாக பிறந்த உன்னை ஏந்த மறுத்த
அவள் கரங்கள் !
இறுதியாக,
நினைவிருக்கிறதா !?
என்னை… !
– ஜி.ஏ. கௌதம்
பீத்தோவன்
நீண்ட இரவின்
புணர்தலின் பின்னால்,
உறங்கிப்போனாய் களைப்பில்.
ஜன்னல் வழியே கசியும்
மின்விளக்கின் வெளிச்சம்
உன் முதுகுத்தண்டில்
மஞ்சள் நிற சாயம் பூச
முடிவற்ற பெருமூச்சு
எழுந்தது உன்னில்
உன் கைவிரல்கள் கைப்பற்றிய
என் சுண்டுவிரலின் இறுக்கத்தில்
நான் காதலிக்கிறேன் என்பதற்கும்
காதலிக்கப்படுகிறேன் என்பதற்குமான
இடைவெளியில்
பின்னால் இசைக்கிறது
பீத்தோவன்.
– ஜி.ஏ. கௌதம்
குருதி
மனித காலடி
படாத வனத்தில்
அடியாழம் தெரியும்
குளத்தின் கண்ணாடி மேனியில்
அன்பெனும் கரங்கள் கொண்டு
கழுவிய உன்னால்
சலனமற்று கலங்கிப்போனது
என் மனம்.
கழுவிய உன் கரங்களில்
கரைந்த குருதி பரவுகிறது
என் உடலெங்கும்.
– ஜி.ஏ.கௌதம்
இல்லை
மரித்துப்போன நம் காதலின்
16 ஆவது நாள் காரியம் நிகழ்ந்த
நீதிமன்ற வாசலில்,
அன்பின் சின்னமாய் அவள் விரல்களில்
நான் இட்ட மோதிரம்
நேரம் பார்த்துக்காத்திருந்த
அவள் ’திடீர் அண்ணன்’ ஒருவனின்
கரங்கள் வழியே என் கை சேர
அழுகிப்போன
வாழைப்பழ காம்பின் நுனியில்
இரு விரல்கள் பிடித்து எறியும்
அருவருப்பின் நிமித்தம்
அவள் பார்வையில்
ஒவ்வொரு நாளின்
உறக்கத்தையும் உறுத்துகிறது
அந்த பார்வை அந்த ஏளனம்
இல்லை
என முடிவான பின்
ஒரு பெண்ணின் மனதில்
அத்தனை எளிதில்
மக்கிய குப்பையாகப் போய்விடுகிறது
ஆணின் இதயம்…
– ஜி. ஏ. கௌதம்