கவிதைகள்

author
0 minutes, 2 seconds Read
This entry is part 2 of 10 in the series 14 ஜுலை 2024

ரவி அல்லது

பறித்தாலும்

பழகாத அறம்.

அவர்கள் ஏற்படுத்திய வலிகள் இருக்கிறது

தழும்புகளாக வெறுப்புகள் சூழ.

தண்ணீர் விடாமல்

தவிக்கவிட்ட ஆற்றாமை அடங்கவே இல்லை

இப்பொழுதும்.

மேலூட்டமிடாத கலைப்பு  தருகிறது

மேனி வாடுமாறு.

அனவரத ரணத்திலும்

பூத்தலை

நிறுத்தவே முடியவில்லை

இச்செடிகளால்

யாவுமதன்

இயல்பில் இருப்பதால்.

***

எதிர்பாராதது.

பார்வை தூரத்தில்

பலரிடம் கையேந்தி வரும்

முக்காடிட்ட கிழவிக்கு

நான் உதவிட காத்து நிற்கிறேனென்பது

தெரியாது

இலக்கு நானாக இல்லாமல் இருப்பதால்.

அதன்

புறக் கணிப்புகள்

தாண்டி

கையில் புகுத்திய பணத்தால்

நிலை தடுமாறி

சொன்ன வார்த்தைகள் மனதிலேறவில்லை

நன்றியறிதலின்

உச்சத்தில்

உதிர்த்தது

உள்ளமுரசி

சிலிர்க்கவிட்டதால்.

***

பெரிதாக ஒன்றுமற்ற தாமதங்கள்.

சுமையேற்றி வந்த

இரயில் வண்டி

புறப்பட தாமதிப்பதற்கு காரணங்கள் எதுவுமிருக்கலாம்

இக்காத்திருப்பிற்கு.

பழுத்த சுமையொன்று

பாரம் தூக்க முடியாமல் ஏறியதை பலரும் வேடிக்கைதான் பார்த்தார்கள்

இரக்கக்கசிவு இல்லாமல் போனதால்.

கரம் சாயாக்காரர்கள்

காணாமல் இருப்பதால் இது எதிர்பாராததென தெரிகிறது

எல்லோருக்கும்.

வழியனுப்ப வந்தவர்களின்   அதிகாலையில் நேரம் 

ஏதுவாக இருந்தது

இங்குமங்கும் நடந்து

அசௌகரியம்

போக்க.

சேமித்த நேசம் செலவாகிப் போனது. முகத்தை யாவரும் முன்பக்க விளக்கை அடிக்கடி நோக்குவதில்

தெரிந்தது.

சொல்லிவிடுவதில் தேர்ந்தவர்கள் கிளம்பிக் கொண்டும் இருந்தார்கள் காத்திருந்து அனுப்புவது முட்டாள்தனமென நினைத்து.

அவ்வப்பொழுதான அறிவிப்புகளில் இந்த வண்டியின் எக்குறிப்புகளும் இல்லை ஆசுவாசம் கொள்ள.

முன்னனுப பயணிகள் நீரேற்றுவதாகவும் பேசிக்கொண்டார்கள் இதுபோன்றதொரு

பழைய நிகழ்வை அங்கலாய்த்து.

யாவையும் மறந்து வெளியில் நின்று

பேசிக்கொண்டிருந்த காவலருக்கும் இரயிலில் வேலை பார்க்கும் பெண்ணிற்குமான உரையாடல்கள் பாலின ஈர்ப்பென

அப்பட்டமாகவே தெரிந்தது

பலருக்கும்.

பனிக்காற்றின் குளிர் நடுக்கம் பலருக்கு தடித்தாடையை போடாதது தவறென நினைக்க வைத்தது

உள் நடுக்கத்தில்.

இப்படியாக தாமதத்தின்

காரணமறியாமலையே

கவிதை எழுதிக்கொண்டிருக்கும்

நான்

கல்யாணமொன்றிற்கு செல்லவேண்டிய ஓட்டுநரை

காக்க வைத்திருக்கிறேன் என்பதையும்

நீங்கள்

அறியவும்.

***

நன்றி:

04:50அ புறப்படாமல் 05:25க்கு புறப்பட்ட இரயிலுக்கு.

==

Email: ravizazen123@gmail.com

Series Navigationமரம்கனடா பீல் பிரதேச சொப்கா மன்றத்தின் 15வது ஆண்டுவிழா
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *