சோம. அழகு
‘வாழ்க்கைதான் எவ்வளவு அழகானது!’ என்று கவித்துவமாக சிலர் கூறக் கேட்டு ‘ரசித்து மகிழ்ந்த’ காலம் சமீபமாகக் கானல் நீராகத் தெரிகிறது. இப்போதெல்லாம் இது போன்ற வாக்கியங்கள் உடனடியாக சில முகங்களை அகக்கண் முன் கொண்டு வந்து ‘பரந்து கெடுக…!’ என சபிக்கப் பணிக்கிறது. ‘இவருக்கா இப்படி?’ எனத் தோன்ற வைக்குமே? அவ்வகை முகங்கள். இக்கேள்விக்கு இரு தொனிகள் உண்டு. ‘கொஞ்சமும் மனசாட்சியே இல்லாமல் நடந்து கொண்ட இவருக்கு வந்த வாழ்வைப் பாரேன். அடேங்கப்பா! இவருக்கா இப்படி?’ ; ‘ஒரு பாவமும் அறியாத இவருக்கு விதிக்கப்பட்ட வாழ்வைப் பாரேன். அடக்கொடுமையே! இவருக்கா இப்படி?’ – இதில் முதல் வகையறாக்களைக் காலம் பார்த்துக் கொள்ளும் என்று விட்டுவிடுவோம். வாழ்வின் அழகியல் பற்றி யாரேனும் எடுத்துக் கூறும் போதெல்லாம் என்னுள் அழுத்தந்திருத்தமாகப் பதிந்து விட்ட அந்த இரண்டாம் வகை முகங்கள் ரொம்பவே என்னை வாட்டி வதைக்கின்றன.
*************************************
அவ்வாறான ஒரு முகம் செல்வத் திருமகள் உடையது. எனது ஆய்வு படிப்பின் போது இளநிலை ஆய்வாளராக எங்கள் துறையில் சேர்ந்தாள். அரிதாகச் சிலரைக் காரணமே இல்லாமல் பிடித்துப் போகுமே? அப்படித்தான் எனக்கு அவளைப் பிடித்தது. பிடித்துப் போன பின் அவளைப் பற்றிய எல்லாமே ‘இன்னும்’ அழகாகவும் நன்றாகவும் தெரிந்தது. யாருக்கும் பிடித்துப் போகும் சாந்தமான, பெயருக்கு ஏற்றாற் போன்ற திருமகளின் முகம்; அதில் அனைவரையும் வென்றெடுக்கும் மென்னகை; எப்போதும் உதவக் காத்திருக்கும் நற்பண்பு… ‘இந்தச் சிறிய வயதில் இவ்வளவு அமைதியும் பக்குவமும் எப்படி?’ என வியக்காதவர் இருக்க மாட்டார். நாங்கள் நெருக்கமான தோழிகள் எல்லாம் கிடையாது. ஆனாலும் எங்கள் இருவருக்கும் நல்ல நட்பு இருந்தது. விளையாட்டாக அவளைக் கிண்டல் செய்யும் போதெல்லாம் சிரித்துக் கொண்டே ‘அக்க்காஆஆ…’ என அவளுக்கே உரிய தனித்துவமான தொனியில் செல்லமாக அதட்டுவாள். நான் அவ்வப்போது வாங்கிச் செல்லும் ‘விஞ்சை விலாஸ்’ இட்லி அவளுக்குப் பிடிக்கும். அவளது அம்மா வெள்ளை எள், நிலக்கடலை கலந்து திரித்த பொடியை எல்லா வகைப் பொரியலிலும் சேர்ப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். உணவோடு அன்பையும் கரிசனத்தையும் பரிமாறிக் கொள்ளும் ஒரு இயல்பான நட்புதான்.
பின்னர் சில காலத்திலேயே நான் ஆய்வுப் படிப்பு முடித்து மணம் ஆகி வேறு ஊருக்குச் செல்ல குறுஞ்செய்திகளுள் சுருங்கியது அந்நட்பு. அவளது திருமணத்திற்கும் அதில்தான் வாழ்த்து தெரிவிக்க முடிந்தது. ‘அவ்வப்போது’ல் இருந்து ‘அரிது’க்குச் சென்றன குறுஞ்செய்திகள். அவரவர் பாதையில் சென்று கொண்டிருந்ததில் காலப் போக்கில் பெரும்பாலும் இருவருமே ஒருவரை ஒருவர் மறந்து விட்டிருந்தோம். அப்படிப்பட்ட ஒருவள் என் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாதவளாகிப் போவாள் என்றெல்லாம் எண்ணிக் கூடப் பார்த்ததில்லை, அன்றொரு நாள் அப்பாவின் அலைபேசி அழைப்பு வரும் வரை. வழமையான அழைப்பாகத் தான் பாவித்து எடுத்தேன்.
“ஹலோ அப்பா…”
“நம்ம துறையில் ஆய்வு மாணவியா சேர்ந்தாளே? செல்வத் திருமகள்…”
“ஆமா… ரொம்ப நாள் ஆச்சு பேசி…”
“அவ இறந்திட்டா…”
“சரியா கேக்கல…” சரியாகத்தான் கேட்டது. அவ்வார்த்தைகளாய் இருக்கக் கூடாது என்ற பயத்தில், உறுதிப்படுத்த மீண்டும் கேட்டேன்.
“அவ இறந்துட்டா டா”
“ப்பா..?!”
‘ஏன்?’ ‘எப்படி?’ ‘என்ன?’ என்று கூட விசாரிக்கத் தோன்றாத அதிர்ச்சி.
அப்பாவே தொடர்ந்தார்கள். “பிரசவ வலி வந்துது போல…”
“உண்டாயிருந்தாளா?” அடுத்த அதிர்ச்சி
எதுவுமே தோன்றவில்லை. அழக் கூட வரவில்லை. மூளை இயங்க மறுத்துப் போராட்டம் செய்தது. முகம் மரத்துப் போய் விரல்கள் சில்லிட்டுப் பதற ஒன்றுமே யோசிக்க முடியாமல் எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்திருந்தேன் எனத் தெரியவில்லை.
முந்தைய நாள் இரவு இடுப்பு வலி எடுத்ததில் உடனே மருத்துவமனை அழைத்துச் சென்றிருக்கிறார்கள் அவளது அப்பா. வாசலில் இறங்கியதும் “அப்பா…” என்றவாறே ஒரு கையைத் தலையிலும் இன்னொரு கையை வயிற்றிலும் வைத்துச் சரிந்திருக்கிறாள். அவள் கூறும் கடைசி வார்த்தை அது என்றோ கடைசியாக அவளது குழந்தைக்குக் கிடைத்த தாயின் ஸ்பரிசம் அது என்றோ சத்தியமாக அவளது பெற்றோர்கள் செவிலியர்கள் மருத்துவர்கள்.. ஏன்? அவளுக்கோ வேறு யாருக்கோ கூடத் தெரிந்திருக்காது. ஒருவனைத் தவிர… அவன்தான்… அந்த உலகியற்றும் சல்லிப்பயல்.
அவள் ஊர் மருத்துமனையில் அவளது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வர இயன்ற வரை போராடி “பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிருங்க” என்றார்கள். ஒரு மணி நேரப் பயணம். அந்த இட மாற்றத்தின் போதே உணர்விழந்த முழு மயக்க நிலைக்குச் சென்று விட்டாள். பெரிய ஆஸ்பத்திரியில் பரிசோதித்த மருத்துவர்கள் “உங்களுக்குப் பொய் நம்பிக்கை குடுக்க விரும்பல. மன்னிச்சுடுங்க…” என்று கூற்றுவனின் கருணையற்ற வருகைக்குக் கட்டியம் கூறினர். உலகில் எந்தப் பெற்றோருக்கும் நேரக் கூடாத கொடுமை. அவள் இல்லாது போகப் போகும் உலகிற்கு எவ்வாறு அப்பெற்றோரால் தயாராக இயலும்? அவர்கள் மொத்தமாக நிலைகுலைந்து நின்றதில் ‘கையறு நிலை’ என்ற சொல்லே வீரியம் போதாமல் பின் நகர்ந்து கொண்டது. குழந்தையை மட்டுமாவது காப்பாற்ற எத்தனித்து அறுவை சிகிச்சை நடந்தது. குழந்தை இன்குபேட்டரில் கதகதப்பாகப் புற உலகிற்குப் பழகிக் கொண்டிருந்தது. அவளது உடலோ மெல்ல மெல்லச் சூட்டை இழந்து கொண்டிருந்தது. சில மணி நேரங்களில் யாரும் விரும்பாத அக்கொடுஞ் செய்தி தாங்க இயலாத வெக்கையை எல்லோரிடமும் பரப்பியது.
எல்லாமே இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள், அவளது இருபத்தி ஐந்தாம் வயதிற்குள் நடந்து முடிந்தது. மறுநாள் பிரம்மாச்சி அக்கா அலைபேசியில் பேசும் போது சொன்னார்கள் “அடுத்த மாசம்தான் அவளுக்கு முதல் கல்யாண நாள் வருது. அதுக்குள்ள….”. “அய்யோ! கடவுளே!” (It’s just an expression! Definitely nothing religious) என்று கத்த வேண்டும் போல் இருந்தது. உள்ளே அழுந்திய எல்லா உணர்வுகளும் கண்ணீராய் வெளிப்பட்டது.
தற்போது ஒரு வருடம் கடந்த நிலையில் தோழி ஒருத்தியுடன் பேசிக் கொண்டிருந்தேன். இருவரும் மிகக் கவனமாக அவளது பேச்சைத் தவிர்க்க முயன்றோம். முயன்று ‘தோற்பது’தானே அவளுக்கு செய்யும் நியாயமாக இருக்க முடியும். புலம்பினோம்; வெதும்பினோம்; கலங்கினோம்… இன்னும் எப்படி எப்படியெல்லாமோ உழன்று தவித்தோம். நாட்கள் உருண்டோடி விட்டாலும் எங்கள் உணர்வின் ஆழம் குறையவே இல்லை. குறையவும் குறையாது. அலைபேசியை வைக்கும் முன்பு சொன்னாள் “அக்கா… அவ குழந்தை படம் அனுப்புறேன். பாருங்களேன்”.
நான் தேவதைகளைக் கண்டதில்லை. இப்போது காணக் கிடைத்தது, அதுவும் குழந்தை உருவில். அவளேதான்! என் முகத்தில் புன்னகை எட்டிப் பார்க்கும் முன்னரே நீர்த்திரை புகைப்படத்தை மங்கலாக்கியது. தாய் பெயரையும் சேர்த்து ‘செல்வத் திருமகள் இசக்கி’ என்று பெயரிட்டுப்பதாக அறிந்தேன். திருமகளுக்கு இரண்டு மூத்த சகோதரிகள் உண்டு. அவர்கள் ஒவ்வொருவரின் இரண்டு குழந்தைகளும் ‘சித்தி.. சித்தி..’ என இவளையேதான் சுற்றிச் சுற்றி வருவார்களாம். அவளது அலைபேசி முகப்புப் படத்தை எப்போதும் அச்சிறுவர்கள்தான் அலங்கரித்திருப்பார்கள். அக்குழந்தைகளைச் சீராட்டியவள் இசக்கியை உலகெனக் கொண்டாடித் தீர்த்திருப்பாள். தற்போது தம் மகளையே மீண்டும் ஒரு முறை உயிருக்கு உயிராக வளர்த்துக் கொண்டிருக்கின்றனர் செல்வத் திருமகளின் பெற்றோர்.
*************************************
இவளைப் போன்றே என்னை அவ்வப்போது மருக வைக்கும் இன்னொரு முகமும் உண்டு. நான் பிரசவித்த நாள் அது. அறுவை சிகிச்சை முடிந்து தீவிர சிகிச்சை அறையில் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருந்தேன். அங்கு என்னையும் என் குழந்தையையும் தவிர இரண்டு செவிலியர்கள் மட்டுமே இருந்தனர். குழந்தை தன் வரவை அழுது அறிவித்த களைப்பில் சற்று தள்ளி தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தாள். மெல்ல மெல்ல என் மயக்கம் கலையத் துவங்கவும் புதிதாக இன்னொரு பெண் எனது வலது புற படுக்கைக்கு வந்ததை உணர்ந்தேன். அப்போது நான் கண் விழித்திருக்கவில்லை. அவளும் அரை மயக்கத்தில் இருந்தாள் போலும். கொஞ்ச நேரத்தில் அவளது முனகல் சத்தம் கேட்கவும் என் ஒட்டு மொத்த சக்தியையும் திரட்டி கண்களைத் திறந்து மெதுவாக வலப்புறம் திரும்பினேன். குறுக்கே திரையிட்டிருந்தார்கள். செவிலி அவளருகே போய் “ஒண்ணும் இல்ல… தூங்குங்க” என்று திரும்பத் திரும்பச் சொல்லி சமாதானம் செய்து கொண்டிருந்தார்.
முனகல் சத்தம் நின்ற பாடில்லை. என்ன சொல்கிறாள் என்று தெளிவாய்க் கேட்கவில்லை. கொஞ்ச நேரத்தில் என் குழந்தை சிணுங்கவும் அவள் “என் குழந்தை…” என்று சத்தமாகக் கத்தினாள். செவிலி உடனே அவளருகே சென்று “பதறாதீங்க… உங்க குழந்தை இன்குபேட்டர்ல நல்லா இருக்கு. நீங்க தூங்குங்க” என்றாள். “இல்ல… எனக்கு இப்போவே என் குழந்தையைப் பாக்கணும் சிஸ்டர்… ப்ளீஸ்.. காமிங்களேன்” என்று கெஞ்சினாள். “தையல் போட்டுருக்குமா… இப்படியெல்லாம் அழக்கூடாது. பாப்பா சீக்கிரம் பொறந்துடுச்சுல்ல? நுரையீரல் இன்னும் வளர்ச்சி அடையணும். அது வரைக்கும் பத்திரமா பாத்துக்கணும்ல? நீங்க கவலைப்படாம தூங்கி ஓய்வெடுங்க. உங்களுக்கு இன்னும் மயக்கம் தெளியல” என்றார் செவிலி.
மாலை என்னை அறைக்கு மாற்றினார்கள். என் அறையின் எதிர் வரிசையில் இரண்டு அறை தள்ளிதான் அவளும் மாற்றப்பட்டிருந்தாள். மறுநாள்தான் கேள்வியுற்றேன் இன்குபேட்டரால் அத்தாயின் கருப்பையை ஈடு செய்ய இயலவில்லை என்று. எனக்கு விஷயம் தெரிந்த போது அவளுக்குச் சொல்லப்படவில்லை. அவளது உடல்நலன் கருதி மூன்று நாட்கள் கழித்துதான் சொல்லப்பட்டது. “இன்னும் கொஞ்ச நாள் உள்ள இருந்திருந்தா பிள்ளைய காப்பாத்தியிருக்கலாம்” என்று மருத்துவர் கூறியதாகச் சொன்னார்கள். அவளது ஐந்து வருடக் காத்திருப்பு அம்மகவு. சற்றே தாய்மை அடைந்திருந்த என் கட்டுப்பாட்டில் அடங்க மறுத்த உணர்வுகளால் என்னையும் அறியாமல் மனதும் உடலும் விம்மியது. “நல்லவேளை… கடவுள் புண்ணியத்துல ஒனக்கு….” – அருவருப்பும் கோபமும் மேலிட்டு நாராசமாய்க் காதைக் கிழித்தது, பிள்ளையைப் பார்க்கவென வந்து தொலைத்த சிலரின் பேச்சு. இதையெல்லாம் என்ன மாதிரியான ஆறுதல் என்று தூக்கிக் கொண்டு வருகிறார்கள்?
எங்கள் இருவரையும் ஒரே நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்தார்கள். மருத்துவமனை வாசலை நோக்கி நான் மெதுவாக நடந்து சென்று கொண்டிருக்க தன் பேத்தியைப் பொக்கிஷமாக அணைத்துக் கொண்டு வந்தாள் என் அம்மா. திடீரென இருபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் எங்களை நோக்கித் தயங்கியபடியே வந்து, “தப்பா எடுத்துக்காதீங்க…. அக்கா வெளியதான் நிக்குறா… வண்டி இப்போ வந்துடும். நாங்க போன அப்புறம் வர்றீங்களா? எதுவும் நெனச்சுக்காதீங்க…” என்றாள். “ஒண்ணும் பிரச்சனை இல்லம்மா… நாங்க மெதுவா வந்துக்குறோம். கவலைப்படாதீங்க… அக்காவுக்கு சீக்கிரம் நல்லபடியா கொழந்த பொறக்கும். போய்ட்டு வாங்க” என்று நெகிழ்ந்து போய் தழுதழுத்த குரலில் கூறினாள் அம்மா. இவர்களின் உரையாடலில் இருந்தே இப்பெண்ணை யாரென்று அறிந்தேன். போகத் திரும்பியவளிடம் “அவங்க உடம்பையும் மனசையும் நல்லா பாத்துக்கோங்க” என்று மட்டுமே சொல்ல முடிந்தது. அவ்வளவு சோகத்திலும் மெலிதாகப் புன்னகைத்து நன்றி தெரிவித்துக் கிளம்பினாள்.
கால் மணி நேரம் காத்திருந்து விட்டு அவர்கள் புறப்பட்டுச் சென்றதை உறுதிபடுத்திக் கொண்டு வெளியே வந்தோம். அன்று அந்தப் பொழுதில் மிகச் சரியாக அவ்வருடத்தின் முதல் தூறல் விழத் துவங்கியது. சாரல் காலம் எனினும் அத்தனை நாள் வெயில் வாட்டிக் கொண்டிருந்ததால் குடை கொண்டு வந்திருக்கவில்லை. அப்பா வண்டி எடுக்கச் சென்று விட பிள்ளை நனைந்து விடக் கூடாதே என்று நாங்கள் கவலைப் பட்டுக் கொண்டிருக்க ஒருவர் எங்கிருந்தோ வந்து குழந்தைக்குப் பாதுகாப்பாகக் குடை பிடித்தார். வண்டியில் ஏறும் வரை காத்திருந்தவருக்கு நன்றி சொல்லிக் கிளம்பினோம். “பாப்பாவ நல்லா பாத்துக்கோங்க” என்று எதார்த்தமான(அப்படித்தான் எனக்குத் தோன்றியது!) வாஞ்சையுடன் சொல்லிச் சென்றார். வண்டி கொஞ்ச தூரம் சென்றவுடன் அம்மா சொன்னாள் “அந்தப் பெண்ணோட கணவர்” என்று.
உள்ளுக்குள் விளக்க முடியாத ஒரு நடுக்கம். உதடுகள் துடிதுடிக்க தொண்டை கெட்டியாக அடைத்தது எனக்கு. பிரம்மாச்சி அக்காவின் வார்த்தைகளைப் போல் அன்னார் கடைசியாகச் சொல்லிச் சென்ற வார்த்தைகள் கனன்று அனலெனத் தகித்தது மனதில். மண்ணின் புழுக்கம் தாளாமல் மழை கொட்டத் துவங்கியது. மனப்புழுக்கம் தாங்காமல் நான் உடைந்து கொண்டிருந்ததை என் மகள் உணர்ந்திருக்க வேண்டும். எனக்கான வெளியை எனக்கு ஏற்படுத்தித் தர வேண்டி என் கேவல்களைத் தன் அழுகை சத்தத்தில் அமிழ்ந்து போகச் செய்தாள். எனவே வேறு யாரும் கவனிக்கவில்லை.
குடை பிடித்த அன்னாரது முகத்தைச் சரியாகக் கூடப் பார்க்கவில்லை. அவரது மனைவியின் முகத்தையோ அரைகுறையாகக் கூடப் பார்த்ததில்லை. அவர்கள் என்னில் விட்டுச் சென்ற உணர்வுகளுக்குத்தான் முகங்கள் எதற்கு?
நெருக்கமில்லாதவர்களுக்கென வெளிப்படும் கண்ணீரில் ஏன் இவ்வளவு கனம்? எப்படி இவ்வளவு செறிவு? இவர்களை, இன்னும் இவர்களைப் போன்றே நியாயமற்ற வாழ்க்கையை எதிர்கொள்வோர்களை எப்படி so called வாழ்வின் அழகிய தருணங்களில் நினைத்துக் கொள்ளாமல் இருக்க இயலும்? இசக்கி, திருமகளின் அரவணைப்பில் மகிழ்ந்திருக்க விதிக்கப்படாததற்கும் ‘குழலினிது யாழினிது’ , ‘சிறுகை அளாவிய கூழ்’ என்றெல்லாம் முகமறியாத அப்பெற்றோருக்கு வாழ்வில் வசந்தத்தைப் பார்க்க நேராததற்கும் எங்ஙனம் கழிவிரக்கம் கொள்ளாமல் அந்நொடியைக் கடக்க முடியும்?
தம்மைச் சுற்றி நடக்கும் இவை போன்ற துன்பியல்களைக் காணுற நேர்கையிலும் எப்படி பெரும்பான்மையோரால் கன்னத்தில் போட்டுக் கொண்டும் தலையில் கொட்டிக் கொண்டும் பிச்சை எடுக்க முடிகிறது? எனக்கெல்லாம் வாயிலும் வயிற்றிலும் நெஞ்சிலும் அடித்து அரைகாணி அறிவு கூட இல்லாத காலனை, ஒரு முந்திரி அளவு மூளை கூட இல்லாமல் காலனை இயக்கும் கடவுளை நல்ல வசைபாட வேண்டும் போல் இருக்கிறது. “எதற்கு இவர்களுக்கு இப்படி?” என்னும் கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறான் கடவுள் எனச் சட்டையைப் பிடித்து உலுக்கிக் கேட்க வேண்டும். எந்தப் பதிலாயினும் மண்ணை வாரித் தூற்றி “நீயெல்லாம் நிச்சயம் நாசமாத்தான் போவ” என்று சபிக்க வேண்டும். ஆனால் அப்படி ஒன்று இருக்கவே இயலாது என்பதைத்தான் இக்குரூரங்கள் மீண்டும் மீண்டும் நிறுவுகின்றன.
ஒருவேளை இருக்கிறதென்றே கொள்வோம். ஒன்றல்ல; இரண்டல்ல… தினுசு தினுசாய் ரக ரகமாய்… எத்த்த்தன? ஒன்று கூட வந்து இவர்களைக் காக்கவில்லையே?
பரந்து கெட்டு ஒழிக ஒவ்வொன்றும்!
- சோம. அழகு