—-வளவ. துரையன்
மௌனத்தோடு
பேசிக்கொண்டிருக்கிறேன்.
அதற்குச் சைகை மொழிதான்
பிடிக்கும்.
எப்பொழுது அழைத்தாலும்
வந்து சேர்ந்துவிடும்.
எதிர்வார்த்தைகள்
ஏதும் பேசாது.
ஆழத்தைக் காட்டும்
தெளிவான நீர்போல
மனம் திறந்து காட்டும்.
சில நேரம் ஆர்ப்பரிக்கும்
அலைகள் போலவும்
கூக்குரலிடும்.
அதன் செயல்களுக்குக்
காரணங்கள்
கேட்பது அறிவீனம்.
விளைவுகளுக்குப் பின்
அது விளக்கங்கள் கூறும்.
மௌனம் அருமையான
இணைபிரியாத நண்பன்.