வெங்கடேசன் நாராயணசாமி
ஒரு கூட்டில் சிறு பறவையாகப் பிறந்தேன்.
அன்பின் இழைகளாலும், பாதுகாப்பின் கிளைகளாலும் பின்னப்பட்ட கூடு.
இவ்வாறே வாழ்வின் பரந்த வலிமைமிக்க மரத்தில் வளர்ந்தேன்.
நோய்ப் பாம்புகள் மற்றும் விதிக் கழுகுகளிடமிருந்து பாதுகாப்பாக வளர்ந்தேன்.
ஆகாயத்திலிருந்து மரத்திற்கும், மரத்திலிருந்து ஆகாயத்திற்குமாகப் பறந்து பறந்து வளர்ந்தேன்.
மரத்தின் இனிமையான பழங்களை உண்டு நான் விரைவில் வளர்ந்தேன்.
விழைவு மற்றும் ஆசையின் சிறகுகள் என்னை விசும்பெனும் வாழ்வில் பறக்க உதவின.
நான் காட்டின் பிற பகுதிகளுக்குப் பறந்தேன் – வலி மற்றும் துன்ப மரங்கள் தேடி.
மரத்தின் விதைகளை என்னுடன் எடுத்துச் சென்றேன்.
என் உடன்பிறப்புகளுக்கு வஸிப்பிடம் கொடுப்பதற்காக அவை பெரிய மரங்களாக ஆங்காங்கே வளர்ந்தன.
அம்மரங்கள் துன்பம் மற்றும் மகிழ்ச்சியின் கனிகளால் நிறைந்திருந்தது.
அக்கனிகளை உண்டு இரட்டை மனநிலை இடையில் ஆடினேன் ஊசல்.
ஒரு நாள், ஒரு கிளையில் அமர்ந்து என் வாழ்வைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனையில் மூழ்க,
திடீரென்று! இதோ! அம்மரம் என்னிடம் பேசுவதை நான் கேட்டேன்.
ஆம், வானளாவிய அப்பெருமரம் எப்போதும் என் குரு.
அது என்னிடம், “அன்பே, உனக்குத் தெரியுமா….
நீயே என் தாய், நான் உன் தந்தை.”
அபத்தமானது! அது எப்படி சாத்தியம்?
அதற்கு மரம், “ஆம், அன்பே, நான் ஒரு பறவையின் வயிற்றிலிருந்து பிறந்தேன்.
அதுவே விதையை விதைத்தது.
காலப்போக்கில், நான், ஒரு தந்தையைப் போல மரமாகி, உங்களைப் போன்ற பல பறவைகளை ஈன்று பாதுகாத்தேன்.
ஆனால் இப்போது கண்ணே, கண்ணை மூடிக் கொண்டு கனவு காண்.”
அடுத்த கணமே, நான் ஒரு மரமாய் கனவு கண்டேன்.
நான் என்னை வாழ் விருக்ஷமாக உணர்ந்தேன்.
இருப்பே எனதாணிவேர் – பகுக்க முடியாதது மற்றும் முழுமையானது.
அங்கிருந்து ‘நான்’ என்ற மர்ம முளை விட்டது.
அது விரைவில் மனமெனும் சாறு நிரம்பிய உடலெனும் மரத்தண்டாய் வளர்ந்தது.
மேலும் ‘நீ’, ‘அவன்’, ‘அவள்’, ‘அது’, மற்றும் ‘உலகம்’ ஆகிய கிளைகளாய் விரிந்தது.
கணக்கற்ற ஆசைகள், விழைவுகள், மற்றும் பசியின் எண்ணற்ற இலைகளாய் ஒரு பெரிய உயரிய விருக்ஷ விதான முகடாய் விரிந்தது.
மரத்தின் நிழல், வசதி மற்றும் குளிர்ச்சி அறியாமையாய் ஆனது.
திடீரென்று, மரம் ஒரு இனிய ஜோடிப் பறவைகளாய் ஆனது போல் கனாக் கண்டது.
அவை மரத்தில் ஒரு சிறிய கூடு கட்டின – மீண்டும், பழைய மரம் பிறந்தது பறவைக் குஞ்சுகள் மற்றும் குடும்பத்தின் கீசு கீசென்ற பேச்சரவத்துடன்.
மீண்டும் ஒரு பயங்கர பாம்பு வடிவில் தோன்றி
அம்மரம் அன்பான அப்பறவைக் குடும்பத்தைப் பயமுறுத்தியது.
வேட்டைக்காரனாக, மரணம் என் பெற்றோர்கள், சகோதரர்கள் மற்றும் சகோதரிகளை விழுங்கியது.
தனித்து விடப்பட்டு, இந்நாள் வரை ஒரு பறவையாக நான் பிழைத்தேன்.
இப்போது அறிவேன், நான் பறவை அல்ல, மரம் என்று.
இல்லை! இல்லை! மரம் எங்கே?
இதோ! இம்மர விதைகளைச் சூலுற்ற நிலம் நான்,
இங்கிருந்தே வளர்ந்துள்ளது இம்மரம்.
நீர் என் இரத்தம், சுடர்விடும் சூரிய-சந்திரர்கள் என் விழிகள்.
காற்று என் ஸுவாஸம், எல்லையற்ற நீள் விசும்பே என் இதயம்.
இதோ! கடைசியாக, நான் விழித்தேன், மரமும் பறவையும் நானல்ல என்பதை நன்கறிவேன்.
யாமே யாமே எல்லாமுமாய், எனினும் ஒன்றுமற்ற வெளியும் யாமே.
பேரின்பம், இருப்பு, மற்றும் வாழுயிர் எதுவோ அதுவும் யாமே.
அகண்ட ஸச்சிதானந்தம்.