கண்ணீர் மறைத்தார்

author
0 minutes, 41 seconds Read
This entry is part 1 of 5 in the series 21 ஜூலை 2024

மீனாட்சி சுந்தரமூர்த்தி

                                                                      

வெள்ளைப் பளிங்கில் நெடிதுயர்ந்த அந்தத் திருமண மண்டபம் அரண்மனைபோல் வண்ண விளக்குகளின் ஒளியில் ஜொலித்துக் கொண்டிருந்தது. வெள்ளைச் சீருடையில் பணியாளர்கள் அங்குமிங்கும் இயங்கிக் கொண்டிருந்தனர். காணொளிகள் நேரலையாக ஆங்காங்கிருந்த பெரிய திரைகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன.

ஆர்ப்பாட்டம் இல்லாமல் இனிய இசையொலி மென்மையாக ஒலித்துக் கொண்டிருந்தது.பளீரென ஒளிவெள்ளம் பரவாமல், இதமாக மெல்லிய விளக்கொளி தவழ்ந்து கொண்டிருந்தது.முகப்பில் செயற்கை நீரூற்று, நான்கு புறமும் நான்கு மயில்கள் நீரை உமிழ்ந்துகொண்டிருந்தன. நடுவில்  ஒயிலாக மணிமுடி தரித்த வெண்சிறகுத் தேவதை குடுவையிலிருந்து நீர்வார்த்துக் கொண்டிருந்தது.

நான்கு இருக்கைகள் நடுவினில் மேஜை என வரவேற்பு ஹால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.அத்தனையும் பாலின் நிறம். பல்வேறு உணவு வகைகள் பழரசங்கள்  நட்சத்திர விடுதி சமையற்காரர்களால் தயாரிக்கப்பட்டிருந்தன. மணமேடையை கிளார்னெட் இசை தழுவியிருந்தது

காவல்துறை உயர் அதிகாரி விஸ்வநாதனின் மகன் ஜெயந்தனின் திருமணவிழா இது.

‘ என்னங்க ஜெயந்தனை இன்னும் காணோமே’

‘ சீக்கிரம் வந்திடுவான், நீ மத்த வேலையப் பாரு’

‘ விடிகாலை முகூர்த்தத்துக்கு எல்லா ஏற்பாடும் சரியானு பார்த்திடுங்க’

‘ அதெல்லாம் சரியா நடக்கும். நீ  கவலைப் படாதே’

‘ எதுக்கும் கொஞ்சம் கவனமா இருங்க’

‘ சரி சரி நான் இருக்கேன் நீ உடம்பைக் கெடுத்துக்காதே’

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே ஜெயந்தன் வாணியை அழைத்துக்கொண்டு வந்துவிட்டான். வாசலில் இருவரையும் நிற்க வைத்து ஆரத்தி எடுத்தாள் அம்மா.

மாநிறம்தான் என்றாலும் வாணி அழகுதான், அழகு நிலையம் வேறு தன்திறமை காட்டியிருந்தது. மெல்லிய துப்பட்டாவுடன் வெளிர் பச்சை லெஹங்காவில் மின்னினாள். ஜெயந்தன் கோதுமை நிறம் இராணுவ அதிகாரிக்கே உரிய மிடுக்குடன் நடந்தான்.

புகைப்படக் கலைஞர்கள் இருவரையும் விதவிதமாக  நிற்க வைத்துப் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

இருவரையும் வந்திருந்த விருந்தினர்கள் கண்டு இரசித்து வாழ்த்திக் கொண்டிருந்தனர்.

உறவினர்கள், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் என்று பலரும்  வாழ்த்தி பரிசுப்பொருட்கள் தந்து கொண்டிருந்தனர்.வாணியின் தோழியர் ஆறேழு பேர் மேடையேறி இருவருக்கும் கைகுலுக்கினர்.

இருவருக்கும் மோதிரம்  பரிசளித்து ஒருவருக்கொருவர் அணிவிக்கச் செய்தனர்.

;ஹேப்பி மேரீட் லைப்  ஜெயந்த்’

‘வாணி அம்மா அப்பா எங்கே?’

என்றாள் ஒருத்தி. இன்னொரு பெண் இதோ இங்கே எனச் சாதுரியமாக அவளை அழைத்துக் கொண்டு நகர்ந்தாள்.

ஆனால் வாணியின் முகம் அப்படியே வாடிவிட்டது. அதன்பின் வரிசையில் வந்து வாழ்த்தியவர்களுடன் பேசியதெல்லாம் அனிச்சைச் செயலாகவே இருந்தது.இதைக் கவனித்த ஜெயந்தன் அவள் கரத்தைப் பற்றி ஆதரவாக அழுத்தினான். ஜெயந்தனின் தங்கை உடன் ஓடி  வண்ணப் பீங்கான் கோப்பையில் பாதாம் பாலெடுத்து வந்து,

‘அண்ணி கொஞ்சம் குடிங்க, முகமெல்லாம் வேர்த்து விட்டது’ எனச் சொல்லி நெற்றியில் கைக்குட்டையால் ஒற்றி எடுத்தாள். முகம் புன்னகைத்தாலும் மனம் மட்டும் தனியாக ஓடியது வாணிக்கு.

இருபத்தைந்து வயதாகும்  வாணி  கல்கத்தா இராணுவ  மருத்துவ மனையில் மருத்துவராகப் பணிபுரிகிறாள்.கொரோனா நேரத்தில் அங்கு அட்மிட் ஆகியிருந்த  ஜெயந்தனுக்கு நோயுற்றவர்களை அவள் பரிவோடு அணுகும் விதமும், குணப்படுத்தும் திறமையும் பிடித்துப் போனது. ஆறே மாதங்களில்  கண்ணியமாகப் பேசி ஜெயந்தன் தன் விருப்பத்தைச் சொல்கிறான். வாணிக்கும் அவன் மீது இலயிப்பும், மதிப்பும் ஏற்பட்டுக் கனிந்திருந்தது. ஜெயந்தன் தன் விருப்பத்தைப் பெற்றோருக்கு தெரிவித்துவிட்டான். வாணி எப்படிச் சொல்வது என்று தவித்துக் கொண்டிருந்தபோது ஜெயந்தனே அந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டான்.

‘வாணி இப்படியே யோசிச்சுகிட்டு இருந்தா எப்படி?’

‘ இல்ல ஜெயந்த் எனக்கு தைரியம் வரலை’

 ஒரு மாசம் விடுமுறை எடுத்துட்டு  ஊருக்குப் போவோம்,  நான் நல்ல நாள் பார்த்து எங்கப்பா, அம்மாவோட உங்க வீட்டுக்கு வரேன்’

‘சரி ஜெயந்த்’  திட்டமிட்டபடியே ஒருமாத விடுமுறையில் இருவரும் சென்னை வந்தனர்.ஜெயந்தனின் அப்பா, வாணியின் தந்தை நடேசனிடம் மாட்ரிமோனியலில் கண்டதாகச் சொல்லி அலைபேசியில் பேசுகிறார். நடேசன் மனைவி சுகுமாரியிடம்,

‘ வாணிக்கு நல்ல வரன் வந்திருக்குது சுகு’

‘ எந்த ஊருங்க, பையன் என்ன பண்றான்?’

‘ சென்னைதான், அவனும் நம்ம வாணி போல  இராணுவத்தில் அதிகாரியா இருக்கான்’

‘ ஓ அப்படின்னா நல்லதுதான் வரச் சொல்லுங்க’

 ஒரு வெள்ளிக்கிழமை பெண்பார்க்க அவர்களை வரச்சொல்கிறார் நடேசன். விஸ்வநாதன் தன் குடும்பத்தினருடன் பெண் பார்க்க வருகிறார் சம்பிரதாயங்கள் முடிந்தபிறகு

‘ பையனுக்கும் எங்களுக்கும்  உங்க மகளை ரொம்பப் பிடிச்சிருக்கு’

‘சரிங்க சார் , ரொம்ப சந்தோஷம்’

‘ நீங்களும் உங்க முடிவைச் சொன்னா அடுத்து ஆகறதைப் பார்க்கலாம்’

 நடேசன் உள்ளே வந்து மனைவியைப் பார்க்க அவளுக்கு முகமெல்லாம் ரோஜாப்பூ.

வாணியிடம் கேட்டபோது அவள்,

‘ அப்பா, அம்மா  என்ன மன்னிச்சிடுங்க, ஜெயந்தை எனக்கு  ஒரு வருஷமா தெரியும், உங்ககிட்டச் சொல்ல தைரியம் வரலை’

‘சரிடா செல்லம் , நீ ஒரு தப்பும் பண்ணலை, அழாதேடா’

‘நாங்களே தேடியிருந்தாலும் இந்த மாதிரி பையன் கெடைச்சிருக்க மாட்டான்’ என்று மகளைக் கட்டிக் கொண்டாள் சுகுமாரி.

அப்புறம் என்ன? கோலாகலமாக திருமண ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்தனர்.நிச்சயதார்த்தத்தை விமர்சையாக நடத்தினார் நடேசன்.முகூர்த்தநாளும் குறிக்கப்பட்டது. எங்கள் வழக்கப்படி மணமகன் இல்லத்தாரே மணவிழா நடத்தவேண்டும் அதனால் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றார் விஸ்வநாதன்.திருமணத்திற்கு இரண்டு மாதங்கள் இருந்தது. வாணியும் ஜெயந்தனும் விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பிவிட்டனர்.

இருவரும் இன்னும் தைரியமாகச் சந்தித்துப் பேசினர். எதிர்காலத் திட்டங்கள் தீட்டினர். ஒரு மாத விடுப்பு கேட்டிருந்தனர் இருவரும். இவள் புறப்படுவதற்குச்  சில நாட்களே இருந்த நிலையில்

ஒருநாள் நடேசன் ,”வாணி கல்யாணத்தை தள்ளிப் போடலாம்னு நினைக்கறேன்டா ?’

‘என்னாச்சுப்பா, அம்மாக்கு உடம்பு சரியில்லையா?’

‘ ஒண்ணுமில்லடா, வா பார்க்கலாம்”

வாணி வீட்டிற்குச் சென்றபின் விஷயம் தெரிந்தது.

‘வாணி ஜெயந்தோட அண்ணனுக்கு இப்போ இருக்கற பொண்ணு?’

‘ ஆமாம்பா அவங்க ரெண்டாவது’

‘உனக்கு எப்படி தெரியும்?’

‘அவர் எனக்குச் சொல்லியிருக்காருப்பா’

‘ சரிடா முதல் மனைவி எப்படி இறந்தா னு தெரியுமா?’

‘தெரியும்பா, பட்டாசு வெடிச்சப்போ நடந்த விபத்துப்பா’

‘ இல்லடா, செல்லம், திட்டம்போட்ட விபத்து’

‘ உங்களுக்கு யார் சொன்னது?’

‘வசந்த் சொன்னான்.” போங்கப்பா அவனெல்லாம் ஒரு ஆளு ‘

‘உங்கிட்ட சொல்லிட்டு அவங்களை கேக்கணும்னு இருக்கேன்’

மகளிடம் பேசிவிட்டு நடேசன் விஸ்வநாதனுக்குப் போன் செய்து விவரம் கேட்கிறார்.

‘ நடேசன் நம்புங்க, அது தற்செயலா நடந்த விபத்து’

‘ சரி இதை ஏன் மறைச்சீங்க’

‘ மறைக்கலை நடேசன், சொல்லணும்னு தோணலை, மன்னிச்சிடுங்க’

‘ இல்ல இது சரியா வராது’

‘ நடேசன்  பசங்களைப் பிரிச்சிடாதீங்க,’

பதிலேதும் சொல்லாமல் போனை வைத்துவிட்டார் நடேசன்.

‘வாணி ஜெயந்தனை மறந்துடும்மா’

‘எங்களோட உயிரே நீதான்’

‘வசந்தை கல்யாணம் பண்ணிக்கோ, ‘

‘அத்தையும் மாமனும் உன்ன கண்ணுல வச்சி பாத்துப்பாங்க’

‘ஓ இப்போதான் புரியுதுப்பா, இது அவங்களோட வேலைதான்னு’

‘ஏங்க இப்ப அவ கேக்கற மனநிலையில இல்லை’

‘அம்மா நீ கூடப் புரிஞ்சுக்கலையே என்னை, அவரை நெனைச்ச மனசு மாறுமா?’

‘ஏண்டி, எங்கிட்டயே சினிமா வசனம் பேசறியா?’

‘அம்மா உன்னோட அண்ணன் மகன் நல்லவனா நீயே சொல்லு?’

‘சரிடா ம்மா வசந்த் வேணாம், வேற நல்ல பையனைப் பார்க்கறேன்’

‘ ஏங்க , அவனே சொல்லிட்டான், திருந்திட்டதா? போதாதா?’

‘ அப்பா, இதுவரைக்கும் எனக்குப் பிடிச்சதைதான் செஞ்சீங்க?’

‘ ஆமாம் இவரு கொடுத்த செல்லந்தான், உன்னோட பிடிவாதம்’

வாணியால் அவர்களை மாற்ற இயலவில்லை, அவளது கெஞ்சல், அழுகை எதுவும் எடுபடவில்லை.

ஜெயந்தனும்  வாணியின் பெற்றோரிடம் பேசிப் பார்த்துவிட்டான்..வாணி இருதலைக்கொள்ளி எறும்பானாள்.

உயிருக்குயிரான பெற்றவர்களா? இல்லை மனமார நேசித்தவனா? என்று.

‘உனக்கு அவன்தான் முக்கியம்னா எங்களை மறந்துடு’

‘உனக்கு வாங்கி வச்ச சீர்வரிசை, நகை பணம் எல்லாத்தையும் எடுத்துகிட்டு ஒரேயடியாப் போயிடு’ என்றாள் சுகுமாரி.

ஜெயந்தனும், அவனது பெற்றோரும் ஒரு துரும்பு கூட வேண்டாம் அவள்மட்டும் வந்தால் போதுமென்று. சொல்லிவிட்டனர்.

இன்று

 காதில்,மூக்கில்,கைகளில் என்று அணிந்திருந்த அத்தனை நகைகளையும் கழற்றி வைத்துவிட்டு துடைத்து வைத்த குத்துவிளக்குபோல் இருந்த வாணி , புறப்படும் வேளையில் பெற்றவர்களின் காலில் விழுந்து வணங்கத் திரும்பினாள் படாரென்று கதவுகள் மூடிக்கொண்டன. ஜெயந்தன் அவளது விழிநீர் துடைத்து கரம்பற்றி அழைத்துச் செல்ல பலகோடிச் சொத்துகளுக்கு ஒரே வாரிசான, அந்த மாளிகையின் இளவரசி வாயிலைக் கடந்தாள். சீருடையில் காவலுக்கு நின்ற மனிதர் வணங்கி கண்ணீர் மறைத்தார்.

Series Navigationதலாத்து  ஓயா  கே. கணேஷ் (1920 – 2004 )
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *