காலமும் கணங்களும் :
இலக்கிய உறவில் ஒரு ஞானத்தந்தை தலாத்து ஓயா கே. கணேஷ் (1920 – 2004 )
நூற்றாண்டு கடந்தும் பேசப்படும் இலக்கிய ஆளுமை பற்றிய நினைவுகள் !
முருகபூபதி
பாலாவின் இயக்கத்தில் வெளியான பரதேசி திரைப்படத்தைப்பார்த்த எனது இரண்டாவது மகள் பிரியா மிகவும் கலவரமடைந்து “ அப்பா…நாம் விரும்பி ருசித்து அருந்தும் தேநீருக்குப் பின்னால் துயரம் நிறைந்த பெரிய வரலாறே இருக்கிறதே…பரதேசி படம் என்னை மிகவும் பாதித்துவிட்டது ” என்றாள்.

தேநீரின் நிறம் சிவப்பு. அதன் மூலப்பொருளை உற்பத்தி செய்யும் மக்களின் குருதியிலிருந்து – உழைப்பிலிருந்து பிறந்த பானம். பிரித்தானியர் இந்தியாவிலிருந்து தமிழ்மக்களை கூலி அடிமைகளாக அழைத்துவந்து இறுதியில் அவர்களை நாடற்றவர்களாக்கிவிட்டுச்சென்ற வரலாற்றை மகளுக்குச் சுருக்கமாகச்சொன்னேன்.
மறைந்த இலக்கியவாதி கே.கணேஷ் அவர்களைப்பற்றி எனது காலமும் கணங்களும் தொடரில் எழுதும்போது பரதேசி படமும் கணேஷ் நீண்ட நாட்களுக்கு முன்னர் எனக்கு எழுதியிருந்த பின்வரும் கவிதையும் நினைவுக்கு வந்தன.
உழைக்கின்ற மக்கள் நிலையோ தாழ்வு
உழைக்காத துரைமார்கள் சுகபோக வாழ்வு
மழைக்காற்று மதிக்காது வடிக்கின்ற மேல்நீர்
மனம்குளிர நாமுண்ணும் ஒரு கோப்பைத்தேநீர்
இந்தக்கவிதையை இயற்கையும் பசுமையும் கொஞ்சும் மலையகத்தை சித்திரிக்கும் ஒரு Picture Postcard இல் எழுதி 1988 ஆம் ஆண்டு எனக்கு அனுப்பியிருந்தார் நண்பர் கே.கணேஷ். இலங்கை மலையகத்தில் பெண்கள் கொழுந்து பறிக்கும் அழகியகாட்சி அந்த அட்டையில் பதிவாகியிருந்தது.
சென்னையில் பல தசாப்தங்களுக்கு முன்னர் வெளியான லோகசக்தி இதழில் கணேஷ் எழுதிய அந்தக்கவிதையை எனக்கு அந்த மடலில் நினைவூட்டியிருந்தார்.
நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னர் எனக்கு மாதம் ஒரு தடவை அவரிடமிருந்து கடிதங்கள் வந்துகொண்டிருந்தன. மறைவு வரையில் எழுதிக்கொண்டேயிருந்தார். ஒவ்வொருகடிதத்திலும் ஏதாவது ஒரு இலக்கியப்புதினம் இருக்கும். சிலரது எதிர்பாராத மறைவு பற்றிய சோகச்செய்தி இருக்கும்.
இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியிலேயே தமிழ் இலக்கிய உலகில் கவனம்பெற்ற ஆக்கஇலக்கிய படைப்பாளிதான் கணேஷ். கண்டி அம்பிட்டியாவில் 1920 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி பிறந்து, 05-06-2004 இல் கண்டி தலாத்து ஓயாவில் தமது 84 ஆவது வயதில் மறைந்தார்.
அவரது நூற்றாண்டு 2020 ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. விரைவில் அவரது பிரசுரிக்கப்படாத படைப்புகளைத் தொகுத்து வெளியிடுவதற்கான பணிகளை அவரது புதல்வி ஜெயந்தியும் மைத்துனர் – முன்னாள் அமைச்சர் பி. தேவராஜ் மற்றும் இலக்கிய அன்பர்களும் முன்னெடுத்து வருகின்றனர்.
இறுதியாக அவரை 2002 இல் சந்தித்தேன். அப்பொழுது அவரது தலாத்துஓயா இல்லத்தில் தங்கியிருந்து நெடுநேரம் உரையாடிக்கொண்டிருந்தேன். அப்பொழுது அவர் சற்று உடல்நலம் குன்றியிருந்தார்.
ஞானம் ஆசிரியர்டொக்டர் ஞானசேகரனும் கண்டி கலை இலக்கியஆர்வலர்இராமனும் இணைந்து தங்கள்இலக்கிய வட்டத்தின் சார்பாக என்னையும் மனைவி மாலதியையும் வரவேற்று இலக்கியச்சந்திப்பும் நடத்தி தேநீர்விருந்தும் வழங்கினார்கள். அச்சந்திப்பில் எழுத்தாளர்கள் அந்தனிஜீவா, துரைமனோகரன், திருமதி ஞானம், ரூபராணி ஜோசப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கணேஷ் இல்லத்தில் முதல்நாள் இரவு தங்கியிருந்தோம். அன்று நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தார். மறுநாள் புறப்படும்தருவாயில் அவரிடமிருந்த பாரதி பற்றிய பெறுமதியான ஆவண நூல்கள் இரண்டை தனது ஞாபகார்த்தமாக எனக்குத் தந்தார்.
அதனை அவர் என்னிடம்தரும்போது, “ பூபதி… இனி இது என்னிடமிருந்து பயன் இல்லை. நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன். உங்களிடம் இருக்கட்டும். உங்களுக்குப்பயன்படும்” என்று நா தழுதழுக்கச்சொன்னார். நான் கலங்கிவிட்டேன்.
நானும் மனைவியும் விடைபெறும்போது அவரது காலில் விழுந்து ஆசி பெற்றுக்கொண்டோம். இப்படி நான் காலில் விழுந்து ஆசிபெறுவது குறிப்பிட்ட சிலரிடமிருந்துதான்.
அவரிடம் ஒரு தந்தையின் பரிவைக்கண்டிருக்கிறேன். நண்பர் ராஜஸ்ரீகாந்தன் மறைந்தபின்னர் நான்எழுதிய நூலை கே.கணேஷ் அவர்களுக்கே சமர்ப்பணம் செய்துள்ளேன்.
கொழும்பில் இந்நூலின் வெளியீட்டுவிழா முடிந்த மறுநாள் நண்பர் உடுவை தில்லை நடராஜாவுடன் சென்று திருமதி கணேஷ் அவர்களை, அவர்களின் கொழும்பு இல்லத்தில் சந்தித்து அவர் கையில் அந்தநூலின் பிரதியை வழங்கினேன். அந்த அம்மா குறிப்பிட்ட நூலில் கணவரின் படத்தைப்பார்த்துவிட்டு கண்களில் ஒற்றிக்கொண்டார்.
எனக்கும் கணேஷ் அவர்களுக்குமிடையே உணர்வுபூர்வமான வாஞ்சை நீண்டகாலம் தொடர்ந்திருக்கிறது. .
இந்திய எழுத்தாளர்களான முல்க்ராஜ் ஆனந்த், கே.ஏ. அப்பாஸ் முதலானோருடனும் இலக்கிய உறவைப்பேணிய கணேஷ், 1947 இல் இலங்கை எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பை தோற்றுவித்தார். இந்த அமைப்பின் தலைவராக இருந்தவர் சுவாமி விபுலானந்தர். பிரபல சிங்கள எழுத்தாளர்கள் மார்டின் விக்கிரமசிங்கா, எதிரிவீர சரச்சந்திரா, பத்திரிகையாளர் கே. இராமநாதன் ஆகியோர் அங்கம்வகித்த குறிப்பிட்ட அமைப்பில் இணைச்செயலாளராக இயங்கியவர் கணேஷ்.
இந்த அமைப்பின் பரிணாம வளர்ச்சியாக 1954 இல் தோற்றம்பெற்றதே இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம். இலங்கையில் முதல் முற்போக்கு இதழ் எனக்கருதப்படும் பாரதி இதழை கே.இராமநாதனுடன் இணைந்து வெளியிட்ட பெருமையும் இவரைச்சாரும். சில இதழ்கள் வெளியானபோதிலும் இன்றுவரையில் இதழியல் ஆய்வாளர்களினால் விதந்து குறிப்பிட்டுப்பேசப்படும், ஆய்வுக்குட்படுத்தப்படும் இதழ்தான் பாரதி.
கணேஷ் ஆக்கஇலக்கியத்தில் பல்துறை ஆற்றல்மிக்கவர்.
மொழிபெயர்ப்பில் கடுமையாக உழைத்திருக்கிறார். சீன, வியட்நாமிய, சோவியத், ஹங்கேரிய, இந்திய (இந்தி) படைப்புகள் பலவற்றை உயிர்சிதையாமல் தமிழுக்குவழங்கிய வீரியமிக்க மொழிபெயர்ப்பாளராகவே இலக்கிய உலகில் போற்றப்பட்டவர்.
வியட்நாம் இலக்கிய மேதை ஹோஷிமின், சோவியத் கவிஞர் குப்ரியானோவ், உக்ரேனிய மகாகவி தராஸ் ஷெவ்சென்கோவ், ஹங்கேரிய கவிஞர் பெட்டோஃபி ஆகியோரின் படைப்புகளையும் சில பல்கேரிய கவிதைகளையும் முல்க்ராஜ் ஆனந்த், கே.ஏ. அப்பாஸ் ஆகியோரின் சில படைப்புகளையும் தமிழுக்குத் தந்தவர் கணேஷ்.
பல உலகக்கவிதை விழாக்களில் பங்கேற்று இலங்கை தமிழ் இலக்கிய உலகிற்குப் பெருமை சேர்த்தவர். ஜப்பானிய சக்கரவர்த்தி ஹீரோஹட்டோவின் விருதும் பெற்றவர்.
உலக தமிழ் கலாசாரப்பேரவையின் நிறைவேற்றுக்குழு (1954-1963) உறுப்பினராகவும் இலங்கை கலாசார அமைச்சின் தமிழ் இலக்கிய ஆலோசனைச்சபையின் (1975-1977 ) உறுப்பினராகவும் இயங்கியவர். இவரது மொழிபெயர்ப்பில் சுமார் 22 நூல்கள் வெளியாகியிருப்பதாக தெரியவருகிறது. பலரும் வற்புறுதியதையடுத்து தனது 84 ஆவது வயதில் தனது சுயசரிதையை எழுதத்தொடங்கினார். ஆனால், அந்த நூலை நிறைவுசெய்யாமலேயே விடைபெற்றுவிட்டார்.
பிறமொழிப்படைப்பொன்றை மொழிபெயர்க்கும் முன்னர் குறிப்பிட்ட படைப்பை எழுதியவர் பற்றிய பூரண தகவல்களை நூலகங்களுக்கு அலைந்தும், நூல்களை விலைகொடுத்து வாங்கியும் படித்து சேகரித்துக்கொள்ளுவார். இந்தக்காலம்போன்று கூகுளில் தேடி எடுக்கும் எளிதான முறை அன்றிருக்கவில்லை.
வீரகேசரி வாரவெளியீட்டிற்காக ஒரு பிறமொழி குறுநாவலை அவர் மொழிபெயர்த்துக்கொடுத்தார். கொழும்பு இல்லத்தில் அவரை நானே நேரில் சந்தித்து அதனைப் பெற்றுவந்து வாரவெளியீட்டுக்குப் பொறுப்பான ஆசிரியர் பொன். ராஜகோபாலிடம் கொடுத்தேன். சில வாரங்கள் அந்த மொழிபெயர்ப்பு வெளியாகி முற்றுப்பெற்றது.
ஒரு அத்தியாயத்திற்கு பதினைந்து ரூபாய் வீதம் சொற்பதொகையை காசோலையாக நிருவாகம் கணேஷிற்கு தபாலில் அனுப்பியிருந்தது. அவர் அதனைப்பார்த்துவிட்டு விசனமுற்று என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கவலை தெரிவித்தார்.
அந்தக்குறுநாவலை மொழிபெயர்க்க (தகவல்களுக்காக) அவர் செலவிட்ட தொகையைவிட குறைந்த தொகையையே சன்மானமாக நிருவாகம் அனுப்பியிருந்தது.
அதனைவிட அந்தமொழிபெயர்ப்புப்பணிக்காக அவர் செலவிட்ட நேரம், உழைப்புக்குரிய மரியாதையை நிருவாகம் தரவில்லை என்று வருத்தப்பட்டதுடன் நில்லாமல், அந்த சொற்பத்தொகை காசோலையுடன் புறப்பட்டுவந்து ஆசிரியபீடத்தில் வாரவெளியீட்டுக்குப் பொறுப்பான ஆசிரியருடன் நீண்டநேரம் வாதிட்டார்.
அவர் பெரிய செல்வந்தர் இல்லையென்றாலும் வசதியான வாழ்க்கை வாழ்ந்தவர். தலாத்து ஓயாவில் மிளகு பயிர்ச்செய்கையில் ஈடுபட்டவர். கொழும்பில் வீடும் வர்த்தக ஸ்தாபனமும் இருந்தன. எனினும் ஒரு படைப்பாளிக்குரிய, மொழிபெயர்ப்பாளருக்குரிய மரியாதையை நிருவாகம் தரவில்லை என்று கோபப்பட்டார். அதில் நியாயம் இருந்தது. முழுப்பக்க விளம்பரத்திற்கு பத்திரிகை நிருவாகம் அறவிடும் ஆயிரக்கணக்கான ரூபாயுடன் ஒரு படைப்பாளியின் உழைப்புக்கு தரப்படும் சொற்ப சன்மானத்தை ஒப்பிட்டுப்பார்க்குமாறு அவர் வாதிட்டார்.
அந்த வாதத்தில் தர்மாவேசம் இழையோடியிருந்தது. அவர் தனக்காக வாதிடவில்லை. பத்திரிகைகளில் எழுதும் ஏனைய எழுத்தாளர்களுக்காகவே குரல்கொடுத்தார்.
தனக்கு வழங்கப்பட்ட அந்தக்காசோலையை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு திருப்பிக்கொடுத்தார்.
வீரகேசரி வாரவெளியீட்டுஆசிரியர், இதுபற்றி நிருவாகத்துடன் பேசுவதாக அவரை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார். அந்தச் சம்பவத்தை மிகுந்த கவலையுடன் அவதானித்துக்கொண்டிருந்த நான், அவரை அலுவலக வாசல்வரையில் வந்து வழியனுப்பிவைத்தேன். இதுகுறித்து அலுவலகத்தில் நாம் – சக பத்திரிகையாளர்கள் பேசிக்கொண்டோம். ஆனால், நிருவாகத்திடம் இதுபற்றி பேசமுடியாத இயலாமை குற்ற உணர்வாகவே எம்மைத்தொடர்ந்தது.
கணேஷ் அவர்களை நான் சந்தித்த காலப்பகுதியில் அவர் எழுதிக்கொண்டிருந்தபோதிலும் இலக்கிய அமைப்புகள், கூட்டங்கள், எழுத்தாளர் சந்திப்புகளில் ஒதுங்கியே இருந்தது எனக்கு சற்றுவியப்பாகவிருந்தது. அவரிடத்தில் எம்மால் புரிந்துகொள்ள முடியாத “அந்நியமாதல் ” இயல்பும் குடியிருந்தது.
“ஏன் ஐயா அப்படி?”என்று பலதடவை கேட்டிருக்கின்றேன். மௌனமான புன்னகையே அவரது பதிலாக அமைந்திருந்தது. எழுத்தாளர்களைக்கண்டால் எட்டத்தில் நிற்கவேண்டும் என்ற தீர்மானத்துக்கு அவர் வந்திருக்கவேண்டும். ஆனால், தன்னைத் தேடிவரும் எழுத்தாளர்களை அவர் இன்முகத்துடன் வரவேற்கத் தவறுவதில்லை. ஒரு எழுத்தாளரைப்பற்றி மற்றுமொரு எழுத்தாளரிடம் புறம்கூறும் பண்பும் அவரிடமிருந்ததில்லை. கிட்டத்தட்ட வானப்பிரஸ்த வாழ்வையே அவர் தொடர்ந்தார். அதனை அஞ்சாத வாசம் எனவும் அழைக்கலாம்.
1983 ஆரம்பத்தில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நாடளாவிய ரீதியில் பாரதி நூற்றாண்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தமிழகத்திலிருந்து பாரதி இயல் ஆய்வாளர்கள் பேராசிரியர் எஸ். ராமகிருஷ்ணன், சிதம்பர ரகுநாதன், படைப்பாளி ராஜம் கிருஷ்ணன் ஆகியோரை அழைத்திருந்தது.
பாரதி நூற்றாண்டை முன்னிட்டு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் தொடக்க நிகழ்வாக ஆய்வரங்கும் பாரதி நூல், இதழ் கண்காட்சியும் இலங்கை எழுத்தாளர் கலைஞர் ஒளிப்படக்கண்காட்சியும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
நான் சில நாட்கள் அலுவலகத்தில் லீவு அனுமதி பெற்றுக்கொண்டு இரவுபகலாக நண்பர்களுடன் இணைந்து நூற்றாண்டு வேலைகளை கவனித்தேன்.
மண்டபத்தில் தொடக்க நிகழ்வு காலையிலிருந்து நடந்துகொண்டிருக்கிறது. அக்காலப்பகுதியில் நாடாளுமன்ற சபாநாயகராக பதவியிலிருந்த பாக்கீர் மாக்கார் வருகைதந்து கண்காட்சியை திறந்துவைத்து உரையாற்றிவிட்டுப்போய்விட்டார். நிகழ்ச்சிகள் மாலைவரை தொடர்ந்து இளங்கிரன் எழுதி அந்தனிஜீவா இயக்கிய பாரதி நாடகத்தின் இரண்டாவது மேடையேற்றத்துடன் அன்றைய நிகழ்ச்சி முடிவடைந்தது.
மாலைநேரம். மேடையிலிருந்த பேச்சாளர்கள் சற்று சோர்வடைந்திருப்பதை அவதானித்தேன். சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன் என்னை அருகே அழைத்து பம்பலப்பிட்டி சந்தியிலிருக்கும் சைவஹோட்டலில் பால்கோப்பி வாங்கிவருமாறு அனுப்பிவைத்தார்.
ஒரு ஃபிளாஸ்கை எடுத்துக்கொண்டு கோப்பி வாங்கச் சென்றேன். பம்பலப்பிட்டி லோரன்ஸ் வீதி சந்தியில் அமைந்திருந்த அந்த ஹோட்டலில் கணேஷ் வடை சாப்பிட்டுவிட்டு கோப்பி அருந்திக்கொண்டிருந்தார்.
நான் சற்று திகைத்துவிட்டேன்.
அருகே சென்று, “ என்ன ஐயா, இங்கே இருக்கிறீர்கள்? அங்கே பாரதி நூற்றாண்டு நிகழ்வுகள் நடக்கின்றன. உங்கள் நண்பர்கள் வந்திருக்கிறார்கள். வரவில்லையா?” என்று கேட்டேன்.
“ உட்காருங்கள். ஏதும் சாப்பிடுகிறீர்களா?” என்று என்னை அமரச்செய்துவிட்டு, ஒரு சர்வரை அழைத்து, “ தம்பி… இவருக்கும் ஒரு கோப்பி கொண்டுவாருங்கள்.” என்றார்.
நான் கேட்டகேள்விக்கும் எனது அழைப்பிற்கும் அவரது பதில் அவரது உபசரிப்பாகத்தான் இருந்ததேயன்றி, தான் ஏன் அந்த நிகழ்வை புறக்கணித்தேன் என்பதாக அமையாதது எனக்கு வியப்பாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது.
“ ஐயா,.. நான் பேச்சாளர்களுக்கு கோப்பி வாங்க வந்தேன். சொல்லுங்கள். பாரதிநூற்றாண்டு நிகழ்வுக்கான அழைப்பிதழ் உங்களுக்கு வரவில்லையா?” என்று கேட்டேன்.
சிரித்துக்கொண்டு “நன்றாக நடத்துங்கள்” என்று மாத்திரமே சொன்னார்.
நான் அவுஸ்திரேலியாவுக்கு புறப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் கண்டியில் அந்தனிஜீவா ஒழுங்குசெய்திருந்த அவரது மலையக கலை இலக்கியப்பேரவையின் மாநாட்டுக்குச்சென்றிருந்தேன்.
கண்டியிலிருந்து சில மைல்தூரமே இருந்த தலாத்து ஓயாவில் வசித்துவந்த கணேஷ் அந்த மாநாட்டிற்கும் வரவில்லை.
என்னுடன் வந்திருந்த நண்பர் ராஜஸ்ரீகாந்தனை அழைத்துக்கொண்டு, அன்று மாலை கணேஷைப் பார்க்கச்சென்றேன்.
எமது முற்போக்கு இலக்கிய முகாமிடமிருந்து அந்நியப்பட்டிருந்தார். அதற்கான காரணத்தையும் அவர் என்னிடம் சொல்லவில்லை. பொதுவாகவே இலக்கியக்கூட்டங்களை அவர் புறக்கணித்தார். யாழ்ப்பாணத்தில் எழுத்தாளர் தம்பையா அண்ணரின் கடலில் கலந்தது கண்ணீர் சிறுகதைத்தொகுப்பு வெளியீட்டில் அவரும் பேசுவதாக அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் வரவில்லை.
சிலர் சில தீர்மானங்களுக்கு தீர்க்கமாக வந்துவிட்டால் மரணிக்கும் வரையில் தீர்மானத்தை மாற்றமாட்டார்கள். கணேஷ் அவர்களும் அப்படித்தான்.
இலங்கையில் மல்லிகை, கொழுந்து, ஞானம், கனடாவில் காலம் ஆகிய இதழ்கள் கணேஷ் அவர்களை அட்டைப்பட அதிதியாக கௌரவித்துள்ளன. ஏற்கனவே இலக்கிய மற்றும் மொழிபெயர்ப்புப்பணிகளுக்காக விருதுகளும் பட்டங்களும் பெற்றவர், மறைவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் கனடா தமிழ் இலக்கியத்தோட்டத்தின் இயல்விருதும் பெற்றார்.
கணேஷ் ஒரு காலத்தில் தீவிர இடதுசாரியாக வாழ்ந்தவர். இலங்கையிலும் தமிழகத்திலும் பல மேலைத்தேய நாடுகளிலும் இடதுசாரிச்சிந்தனைகொண்ட ஏராளமான படைப்பாளிகள், பத்திரிகையாளர்களுடன் தொடர்ச்சியாக தோழமையையும் கடிதத்தொடர்புகளையும் கொண்டிருந்தவர்.
நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்பு அவருக்கும் எனக்கும் தங்குதடையின்றி கடிதத்தொடர்புகள் நீடித்தன. அவர் எனக்கு எழுதிய கடிதங்களை பொக்கிஷம்போன்று இன்றுவரையில் காத்துவருகின்றேன். அவற்றைத் தொகுத்து தனிநூலாக்கவேண்டும் என்ற விருப்பம்தான் இன்னமும் நிறைவேறவில்லை.
எனக்கு எழுதும் ஒவ்வொரு கடிதமும் இப்படித்தான் ஆரம்பமாகும்:-
“அன்புசால் அன்பர் பூபதிக்கு அரங்கநாதன் திருவருள் என்றும் காப்பதாக….”
நான் இன்னமும் அந்த அரங்கநாதனை தரிசித்ததில்லை. ஆனால், கணேஷ் என்ற கர்மயோகியுடன் அவர் மறையும்வரையில் தொடர்பிலிருந்தேன் என்பதே எனக்குள்ள மனநிறைவு.
கே. கணேஷ் மொழிபெயர்த்த நூல்கள்:
தீண்டத்தகாதவன் ( முல்க்ராஜின் ஆங்கிலப் புதினம் )
குங்குமப்பூ, அஜந்தா ( கே. ஏ. அப்பாசின் புதினங்கள் )
ஹோசிமின் கவிதைகள்
லூசுன் சிறுகதைகள்
உக்ரேனிய அறிஞர் இ்வன்ஃபிராங்கோ கவிதைகள்
பாரதி பக்தன் பார்பரா கவிதைகள்.
எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய் நாடே
( ஹங்கேரிய கவிஞர் சாந்தோர் பெட்டோஃபி )
—0—
- கண்ணீர் மறைத்தார்
- தலாத்து ஓயா கே. கணேஷ் (1920 – 2004 )
- வாழ்க்கை
- யுகள கீதம்
- குடும்பம்