வெங்கடேசன் ராஜமோகன்
” பயணிகளின் கனிவான கவனத்திற்கு” என்ற அறிவிப்பின் மத்தியில் , ஓயாத இறைச்சலோடு , இயங்கி கொண்டு இருந்த எழும்பூர் ரயில் நிலையம் அன்று காலை அங்கு வந்து இறங்கிய பயணிகளை வெளியே அனுப்ப , திணரிக்கொண்டு இருந்தது.
” எங்க சார் போகனும் ” ?
அந்த குரலை கேட்டதும் தான் , கதிர் தன் அருகே உரசிடாமல் நிற்கும் ஆட்டோவையும், அதனுள்ளிருந்து அந்த கேள்வியை கேட்டவரையும் கண்டான்.
“வடபழனி ” அண்ணன்….
” ஏறுப்பா போகலாம் “….
” எவ்வளவு அண்ணன்” , ஆகும் ?
மீட்டர் போட்டுத்தான் பா ஓட்டுறோம். அது எவ்வளவு காட்டுதோ , அத குடு
சற்று தயக்கத்துடன் கதிர் , ஆட்டோவில் ஏறி அமர்ந்தான்.
ஆட்டோவினுள் தொங்கிய சிறிய காலண்டர் ஒன்று , வருடம் 1991 மே மாதம் 6 ம் தேதி என்று கதிருக்கு காட்டியது. மெட்ராஸ் நகருக்கே உரிய அந்த டப்படப்ப சத்தத்துடன் ஆட்டோ வேகம் எடுக்க ஆரம்பித்தது…
கதிருக்கு இது புது அனுபவம்.
அவன் சொந்த ஊர் காரைக்குடி. மிகவும் ஏழ்மையான குடும்பம். இவன் தந்தை ஒரு வாட்ச்மென் வேலைக்கு சென்று கொண்டு இருந்தார். கதிருக்கு ஒரு தங்கை வேறு. குடும்ப சூழ்நிலை காரணமாக , பட்டப்படிப்பை ஒரு அரசு கல்லூரியில் முடித்தவுடன் , வேலை தேடி ஒரு தனியார் கம்பெனியில் விண்ணப்பித்து இருந்தான். அதன் இன்டர்வியூவில் கலந்து கொள்ளவே , இந்த மெட்ராஸ் பயணம்.
சீறிக்கொண்டு சென்ற ஆட்டோ , ஒரு சிக்னலில் நின்றது. கதிர் சாலையை பார்த்தான். வலது இடது என இரு பக்கமாக சாலை பிரிந்தது. இடது பக்கமாக வடபழனி , போரூர் என பெயர் பலகை ஒன்று செல்லும் வழியை சொல்லாமல் சொன்னது. சிக்னல் பச்சை விளக்கு எரிய ஆட்டோ வலது பக்கத்தில் திரும்ப கதிர் குழம்பினான்.
அண்ணன் , “என்ன இந்த பக்கம் போறீங்க” என்று தனக்கு எல்லாம் தெரிந்தது போல் கேள்வி எழுப்பினான்.
” அந்த சைடுல ரோடு ஒர்க்கு நடக்குது பா ” , சித்த கம்முனு வா பா ….
கதிர் மீட்டரை பார்த்தான். அது அதற்குள் 45 ரூபாயை தாண்டி ஒடி கொண்டு இருந்தது. அவனிடம் மொத்தமே ஒரு இருநூறு ரூபாய் தான் இருக்கும்.
” அண்ணன், இன்னும் எவ்வளவு தூரம் அண்ணன் போகனும் “
” பக்கம் தான் பா “
அம்மா ,
” நான் மெட்ராஸுக்கு போகனும் ”
” எதுக்குப்பா “
“ஒரு வேலை விஷயமா “, போறேன் மா.
ஒரு முன்னூறு ரூபாய் தேவைப்படும்.
இருக்குமா
மா உங்கிட்ட….
என்று கதிர் கேட்டவுடன் , எதுவுமே சொல்லாமல் தன் சேமிப்பு உண்டியலை உடைத்து , கேட்ட பணத்தை கொடுத்து வழி அனுப்பி இருந்தாள், அவன் தாய்.
” எதுக்கு இப்ப நீ உண்டியல உடைச்ச “
ஆமாம் , ” பின்ன ஏங்கிட்ட வேற ஏது பணம் “. எப்படியாவது உனக்கு வேலை கிடைச்சா , எனக்கு அதுவே போதும்.
கதிருக்கு அவன் தாயின் செயல், வியப்பளித்தது. பாவம் ஆறு மாதமாய் அவள் சிறுக , சிறுக சேமித்து வைத்த பணம்….
அதில் ஒரு நூறு ரூபாய் ரயிலில் சென்று வர டிக்கெட் எடுத்தாகி விட்டது. மீத பணத்தை கொண்டு அவன் ஊர் திரும்ப வேண்டும்.
ஆட்டோ அடுத்தடுத்த சிக்னலில் நிற்கவும் , கிளம்புவதுமாக தன் பயணத்தை கூட்டிக்கொண்டே சென்றது.
கதிர் , மீட்டரை பார்த்தான். அது நூறு ரூபாயைய் தொட்டு இருந்தது. அவன் சுதாரித்து கொண்டான்.
அண்ணன் , ” இங்கே தான். இங்கேயே தான் …
நிறுத்துங்க அண்ணன் “. என்று உரக்க சொன்னான்.
“ஏம்ப்பா வடபழனிக்கு போகனும்னு சொன்ன ” …
சொன்னேன்.. ஆனால் இங்கே தான் அண்ணன் , எனக்கு வேலை. நிறுத்திக்குங்க. நான் எறங்கிக்கிறேன்.
ஒரு வழியாக ஆட்டோ நின்றது.
” மீட்டர்க்கு மேல ஏதாவது போட்டு கொடுப்பா ” .
இல்ல அண்ணன் , நூறு ரூபாய் தான் அண்ணன் இருக்கு , என்று கூறியபடி அதை எடுத்து கொடுத்து விட்டு , திரும்பி பார்க்காமல் நடக்க
“சாவு கிராக்கி , காலையிலே வருது பாரு கஸ்மாலம் ” என்று ஆட்டோ டிரைவர் உதிர்த்த சொற்கள் , கதிரை காயப்படுத்தியது.
தன்னை ஏமாற்றியதோடு நில்லாமல் , ஏசிவிட்டும் சென்ற அந்த நபர் மீது , ஆத்திரம் வந்தது.
” முதல் முதல்ல மெட்ராஸுக்கு போற ” …
” அங்க எல்லாம் நம்ம ஊரு மாதிரி கிடையாது ” , பார்த்து போயிட்டு வா என்று அவன் தந்தை சொன்னது , நியாபகம் வந்தது.
சாலையில் விறுவிறுவென நடக்க தொடங்கி , ஆங்காங்கே வழி கேட்டு , ஒரு வழியாக வடபழனி வந்து சேர்ந்த போது மணி காலை 8.30 ஆகி இருந்தது. பசி வாட்டியது. தன் கண் முன்னே தென் பட்ட ஒரு உணவகத்தில் நுழைந்து , அமர்ந்தான்.
” சார், என்ன சாப்பிடறீங்க “
இரண்டு இட்லி , ஒரு தோசை மட்டும் தாங்க
சற்று நேரத்தில் அவன் கேட்டதுடன் இரண்டு மெதுவடையும் சேர்த்து பறிமாறபட்டது.
கதிருக்கு இருந்த பசியில் , மெதுவடை தான் முதலில் காலியானது.
சாப்பிட்டபடியே விலைப்பட்டியல் பலகையை பார்த்தான்.
மெதுவடை ஒன்று ரூ. 4 என்று எழுதி இருந்தது. அப்படி என்றால் அது ஒன்றும் இலவச இணைப்பு இல்லை என்று தெரிய வர , நேரம் பிடித்தது . மொத்தம் 30 ரூபாய்க்கு பில் வந்தது.
அதனை கொடுத்து விட்டு , வெளியே வந்தான். தான் செல்ல வேண்டிய முகவரியை விசாரித்தபடி , ஒரு ஏழு கிலோ மீட்டர் நடந்தபடியே , அங்கு சென்றடைந்தான்.
அவனுக்கான தேர்வு நேரம் , மதியம் ஒரு மணி என்று சொன்னார்கள்.
ஆனால் பாவம் , அவனுக்கு மாலை 3.30 மணிக்கு தான் அழைப்பு வந்தது. கதிர் மதியம் சாப்பிடவில்லை. கையில் இருக்கும் பணம் அவனை அப்படி இருக்க செய்தது.
” எப்படியாவது வேலை கிடைச்சடனும் ” என்று அவ்வப்போது , தன் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டான் .
தேர்வர்கள் இவனை கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் , சரியாக பதில் அளித்தான். ஆனாலும் தேர்வானோர் பட்டியலில் , இவன் பெயர் இல்லை .
கதிர் நொந்து போனான் . பசி ஒரு புறம் , வேலை கிடைக்காத வருத்தம் ஒரு புறம் என்று சோர்ந்தே போனான்.
சரி , இரவு 8.30 மணிக்கு தான் செல்ல வேண்டிய இரயிலையாவது, பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில், வடபழனியில் இருந்து எழும்பூர் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தான்.
பேருந்து புறப்பட்டு வெகு நேரமாகியும் நடத்துனர் இவன் பக்கம் வரவேயில்லை. கூட்டம் நிரம்பி வழிந்தது.
” எழும்பூர் எவ்வளவு சார் டிக்கெட் ? “
2.50 ரூபாய் தம்பி , என்று அருகில் இருந்தவர் சொன்னார்
சரியாக 2 ரூ 50 காசுகள் எடுத்து வைத்து கொண்டான்…
பேருந்து சில நிறுத்தங்களுக்கு பின் சென்று கொண்டு இருந்த போது , திடிரென டிக்கெட் பரிசோதகர் ஏறி , சோதனை செய்ய , கதிர் மட்டும் இறக்கிவிடபட்டுஅவனுக்கு , ஐம்பது ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
சார் ,
” சத்தியமா எனக்கு ஏமாத்த வராது சார் “….
நடத்துனர் வரல சார். அதான் சார் நான் டிக்கெட் எடுக்கல …
” ஆமாம் நீ பெரிய ஜில்லா கலெக்டரு…. உன்னை தேடி மசுரு, அவரு வருவாராக்கும்”
” ஐம்பது ரூபாய் ஃபைன் கட்டுறியா , இல்லை உள்ள போறீயா “
ஐம்பது ரூபாய் அபராதம் கட்டி , இந்த மாநகர பேருந்து விதிகளை அவன் தெரிந்து கொள்ள நேர்ந்தது.
பிறகு எப்படியோ தட்டு தடுமாறி , எழும்பூர் வந்தடைந்தான். இரவு மணி ஏழு ஆகி இருந்தது . தன்னிடம் இருக்கும் பணம் வெறும் இருபது மட்டுமே. இதனை வைத்துக்கொண்டு என்ன சாப்பிட முடியும் என்ற கேள்வி அவனுள் எழுந்தது. ஆனால் வாலிப வயதுக்கே உரிய பசி அவனை இம்சித்தது.
அங்கே இரயில் நிலையம் எதிரே உள்ள, ஒரு நடைபாதை டீ கடையை கண்டு , அங்கு சென்றான்.
காலையில் மெதுவடை விசயத்தில் அவன் கற்றுக்கொண்ட பாடம் , அவனை எச்சரித்தது.
அண்ணன் ,
” டீ ” எவ்வளவு ?
2 ரூபாய்
” பன்னு பாக்கெட் ”
5 ரூபாய்
” காப்பி எவ்வளவு ” அண்ணன் ?
ஏன்டா , “பார்த்தா படிச்சவனா இருக்க., இப்படி ஏழு கேள்வி கேக்குற…
வாங்க காசு இல்லைனா எதுக்குடா இங்க வந்து என் உசுர எடுக்குறீங்க “
அந்த அனல் கக்கும் தடித்த வார்த்தைகள் விழவும் , அங்கு கூடி இருந்தவர்கள் , கதிரை பாவமாக பார்க்கவும் , சரியாக இருந்தது.
அப்படியே தொண்டையை அடைத்தது அவனுக்கு. வந்த அழுகையை அடக்கிக் கொண்டான்.
சட்டென சாலையை கடந்து , இரயில் நிலையத்திற்குள் பிரவேசித்தான்.
அங்கு இருந்த ஒரு தண்ணீர் குழாயை திறந்து , தன் பசி போக்க முயற்சித்தான். தன் பயண நேரம் நெருங்க , இரயிலில் தன் பயண இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
நல்ல வேளையாக பயண சீட்டு முன்பதிவு செய்து இருந்தான். இரயில் புறப்பட்டது. அன்றைய சம்பவங்களை அசை போட்டான். மறக்க முடியாத அனுபவம் அவை.
காலையில் வீடு வந்து சேர்ந்தான்.
அம்மா ஆவலாக ஓடி வந்து கேட்டாள்.
” கதிரு வேலை கிடச்சிடுச்சா ” ?
” இல்லம்மா “
” இந்தா நீ குடுத்த பணத்துல பாக்கி “
என்று ஒரு இருபது ரூபாய் தாளை நீட்டினான்.
” அத நீயே வச்சுக்க ” என்று சலிப்புடன் பதில் வந்தது….
ஒரு வாரம் சென்றது….
அதற்குள் அவன் அம்மா , அவன் ஜாதகத்தை எடுத்து அலசி பார்த்தாள். கடல் தாண்டும் யோகம் இருக்கு, உன் மகனுக்கு , என்று சொல்லி வைத்தார் ஒரு ஜோதிடர்…
ஆனால் கதிரோ ,
கடலும் தாண்டவில்லை , குட்டையும தாண்டவில்லை
இனி வெளியூருக்கு வேலை தேடி செல்லக்கூடாது என்ற முடிவுக்கு வந்தான்.
அப்படி என்றால் உள்ளூரிலேயே ஒரு வேலை வேண்டும். சம்பாத்தியம் சிறிதளவே என்றாலும் , நமக்கு படித்த வேலையாகவும் , அதில் ஒரு மன நிறைவும் இருக்க வேண்டும் என்று எண்ணினான்.
கதிருக்கு சிறு வயதிலிருந்தே , ஓவியம் வரைவதில் அலாதி பிரியம்.
அவனுக்கு தான் வரைந்த ஓவியங்களுக்கு , வண்ணம் தீட்டி ரசிப்பதில், ஒரு தனி சுகம்.
அதையே ஏன் ஒரு தொழிலாக செய்ய கூடாது , என்று தோன்றியது. அவன் எடுக்கும் அந்த முடிவு , சரி என்றே அவனுக்கு பட்டது.
முதல் முயற்சியாக , அவன் சொந்த ஊரிலேயே , ஒரு பெயிண்டரிடம் , வேலைக்கு சேர்ந்தான்.
வார சம்பளம், லீவு போட கூடாது என்று ஏகப்பட்ட நிபந்தனைகளுடன்.
அதில் வந்த வருமானம் , ஏதோ தான் ஒரு தண்டசோறு இல்லை , என்பதற்கு மட்டும் உதவியது.
ஆனால் இருந்த ஆர்வம் காரணமாக , இரண்டு வருடத்திற்குள் தொழில் முழுவதுமாக கற்றுக்கொண்டடான்.
தன் சொந்த செலவில் , அவன் தெருவில் இருந்த பிள்ளையார் கோயில் ஒன்றுக்கு, வண்ணம் தீட்டினான். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் கதிருக்கு மெல்ல மெல்ல , இங்கொன்றும் அங்கொன்றுமாக வேலை தந்தனர்…
கிடைக்கும் வேலைகளை சரியாக செய்து முடிக்க , அந்த ஊர் பெரியவர் மூலம் ஒரு ஆச்சரியம் அவனுக்கு காத்திருந்தது.
” பெரிய அய்யா இருக்காங்களா”
வர சொல்லி இருந்தாக.
“வாய்யா கதிரு “
” உங்கிட்ட ஒரு முக்கியமான சேதி சொல்லத்தேன் ” வர சொல்லி இருந்தேன்.
” சொல்லுங்க ஐயா “
” நம்ம காணாடுகாத்தான் ஜமீன் அய்யா நேத்திக்கு வந்துருந்தாக “
“அவுக வீட்டுக்கு வண்ணம் வைக்கனுமாம். ஒரு நல்ல ஆள அனுப்பி விட சொன்னாக. நானும் சட்டுன்னு உம்பேர சொல்லிப் புட்டேன். “
” நாளைக்கு போய் பாரு “
” சரிங்க அய்யா.
இந்த உதவிக்கு ரொம்ப நன்றிங்க அய்யா ” .
” ம் இருக்கட்டும் பா “
கதிருக்கு சந்தோசமும் , பயமும் சேர்ந்து அப்பிக் கொண்டது.
ஒரு வழியாக அந்த ஜமீன் வீட்டை , இரண்டு மாத காலம் செலவிட்டு , ராப்பகலாய் வேலை பார்த்து , அதன் அசல் பொழிவு மாறாமல் வண்ணங்களால் பன்மடங்கு மெருகு கூட்டிருந்தான் .
வேலையின் நடுவே வந்து பார்த்த அதன் உரிமையாளர் , கதிரை அவனுடைய விருப்பத்திற்கு ஒரு ஓவியம் வரைந்து கொடுக்க சம்மதித்தார்.
அதுவே அவன் வாழ்வில் திருப்புமுனை என்று அவனுக்கு அப்போது தெரியாது.
அந்த வீட்டில் நல்ல சூரிய ஒளி படக்கூடிய , ஒரு முற்றத்தின் பெருஞ்சுவர் ஒன்றில் , தன் ஓவியத்தை வரைந்தான் கதிர்…
சகுந்தலையும் , துக்ஷ்யந்தனும் முதன்முறை பார்த்த்க்கொண்ட போது , பரவசப்பட்டு, ஒருவரை ஒருவர், மெய்மறந்து நிற்கும் காட்சி அது.
தன் மனதில் புதைந்து கிடந்த அத்தனை எண்ணங்களையும் , வண்ணங்களால் தீட்டினான். ஓவியம் உயிரோட்டம் பெற்று நின்றது .
காண்போர் எல்லாம் கிரங்கித்தான் போனார்கள். ஜமீன் வீடு பேசுபொருள் ஆனது. மெல்ல மெல்ல அது “அதான் அந்த சகுந்தலை வீடு” என்னும் அளவுக்கு பிரசித்தி பெற்றது அவன் ஓவியம்.
கதிருக்கு பாராட்டும் கூடவே புதிய ஒப்பந்தங்களும் குவிந்தன. தன் சம்பாத்தியத்தை தானே தீர்மானித்தான்.
அந்த நகரத்தில் உள்ள அரண்மனை வீடுகள் தொடங்கி , நகரத்தார் வீடுகள் வரை கதிரின் கைபட்டு சிலிர்த்து , சிரித்தன. அதில் அந்த ஆயிரம் ஜன்னல் வீடும் , அடக்கம் .
வருடங்கள் விரைந்தன.
” ஏப்பா கதிரு “
” சொல்லுமா …”
” நான் , கேள்விப்பட்டது எல்லாம் உண்மையா “
” என்ன கேள்விபட்ட “
“அது , ஏதோ கமலஹாசன் படத்துல வர ஒரு பாட்டுக்கு , நீ தான் படம் வரஞ்சியான்” நெசமாவா ….
” ம்ம் ஆமாம்மா “
இவன் இங்கு பேசி கொண்டிருந்த அதே நேரம் , அங்கு சென்னையில்…
” வர்ரே வாவ்….
பியூட்டிஃபுல் …
சோ நைஸ் “
” எங்…க…, சுந்தர் சி எங்க “
” சொல்லுங்க , கமல் சார் ….”
” என்னங்க இப்படி அசத்தி வச்சிருக்கீங்க…
எனக்கு , இப்பவே டேக் போகனும் போல இருக்கு…
ஆமாம் யாருங்க ஆர்டிஸ்ட் ? “
” புது ஆளு சார்.
காரைக்குடி கதிர் “
” சூப்பர். இனிமேல் , அவரையே போடுங்க…. நம்ம டேக் போகலாம் ” என்று கமல் சொல்ல ..
” பூவாசம் புறப்படும் பெண்ணே , நான் பூ வரைந்தால் ” என்ற பாடலுக்கு , கமல் ஒரு தூரிகையை கிரனிடம் நீட்ட , இங்கு தன் சொந்த ஊருக்கு புகழ் தேடித் தந்துவிட்டு , அமைதியாய் தூங்கி கொண்டு இருந்தான் காரைக்குடி கதிர்.
வெங்கடேசன் ராஜமோகன்
- செடி
- தொட்டால் பூ மலரும்
- புறப்பட்டது முழுநிலா