ச.சிவபிரகாஷ்
ஏழரை சனி வந்து,
எழுச்சி மிக காட்டவே,
உக்கிரம் தணிக்க,
உத்தேசமாக பரிகாரம் சொன்னார்.,
ஊரறிந்த சோதிடர்.
சனிக்கிழமைகளில்,
காகத்துக்கு…
எள்ளு சாதமும்,
சதா…நாட்களில்,
சாதமும் வைக்க…
சுயநல சூழ்ச்சியறிந்து
காகம் – அதை
மன்றாடியும்,
மனதிறங்கி,
வரவே இல்லை.
கரிசனம் காட்டுமா?
கடவுளான கிரகமும்,
தொண்டை கமறிய,
காரியும்.
வெட்டப்பட்ட மரத்தில் – முன்
கூடுகட்டி வாழ்ந்த,
காகத்தையும்,
கடைசி வரை,
காணவே இல்லை.
காய வைத்த,
வத்தல்,வடாமை
வாயில் கவ்வ,
வட்டமடித்து வந்த காகத்தை,
விரட்டி,விரட்டி,துரத்தியதால்,
விரும்பி வந்து,
இங்கு சேரவே இல்லை.
இருக்கும் வரை,
இகழ்ச்சிகள் செய்தாய்,
அமாவாசை பந்திக்கு மட்டும்,
அன்பொழுக,
அழைப்பதென்ன?
முரண்டுப்பிடித்த,
முன்னோர் ஆன காகம்,
முடிவாக வரவே இல்லை.
பல வீட்டு,
படையல் ருசித்து,
பறந்து நின்று,
இளைப்பாறிய காகம்,
இப்போதைக்கு,
வேண்டாமென,
இறுமாப்போடு,
சென்றது.
தெளித்து நின்ற
சிறுதானியமும்,
காகம் அது…
எனது கொல்லைப்புறத்தில்,
என்றோ கொத்தி உதிர்த்த,
சோற்று பருக்கையும்,
கழிந்து இட்ட எச்சத்தால்,
உரமாக மாறி,
அங்கே…
செடியும் முளைக்கிறது,
மீண்டு(ம்)
மரமும்,
தவமென நான்
தேடிய காகமும்.
ச.சிவபிரகாஷ்
- அங்காடி வண்டி
- கவிதைகள்
- கரை திரும்புமா காகம் ?…