ரவி அல்லது
கரைதலின் மீட்சி
சற்றேனும் பிடித்து
நிறுத்திட முடியாத
இம்மனம்தான்
சிலரை கோவிக்கிறது.
சிலரை
வெறுக்கிறது.
சிலரை
துதிக்கிறது
தலைக்கேறிய
கௌரவ தொனியில்.
அந்தியின் மோனத்தில்
யாவும்
கூடடைய.
இதன்
தொண தொணப்புதான்
நின்றபடியாக இல்லை
மேவும் கலைப்பில்.
சொல் கேளா
அதனுடன்
இனியொரு பொழுதும்
துயருறுவதாக இல்லை
குடை பிடிப்பதான
அக்கரை அழைப்பில்.
சிறுமையின்
செருப்பெனக்
கொண்டாலும்
கருணையினால்
கரைவதைத் தவிர
யாதொரு
சுகமுமில்லை
முன்கணம் வரை.
***
புரை தீர்க்காதப் புண்.
அன்று
நான் சொன்னதையெல்லாம்
நம்பிக் கொண்டிருந்த
மகன்.
இன்று
அவன் சொல்வதையெல்லாம்
நம்பிக் கொண்டிருக்கிறேன்
நான்.
அன்று
விடியலை நோக்கியதாக
இருந்தது
யாவும்.
இன்று
அஸ்தமனத்தை
நோக்கியதாக
உள்ளது
யாவும்
பிறராசைகள்
போர்த்தி.
***