ரவி அல்லது
சகதியின்
சேறு வாடையில்
அய்யாவின்
கால் தடங்களில்
மூழ்கிய மனம்
உழுவதற்கு
விலா கோலியது.
முற்புதர்கள் மண்டி
முகடுகளாக
வானம் பார்த்த
தரிசு நிலத்தில்
நின்றாடும்
தண்ணீரின்
நித்தியங்கள்
யாவும்
அய்யாவின்
இளமையைக் கரைத்தது.
நிலச் சமன்களில்
நின்ற நீர்
ஒப்படியாகவே
அமைந்து
நெகிழ்வில்
நாற்றுகளைப் பற்ற
இஞ்சாமல்
தயாராக இருந்தது.
இயந்திர இத்யாதிகளற்ற நாளில்
வாரங்களைக் கடந்து
வாழ்க்கையே சகதியாக
தோல் இறுக்கி
இன்று போலல்லாமல்
தாளடி நடவு
சாகுபடிகள்
தாங்கொணா
துயரங்கள்
தந்தது.
அந்தி சாயும்
நேரத்திற்குள்
வயல்கள்
யாவும்
பச்சையாடை போர்த்திய
பாங்கில்
கழித்துச் செதுக்கிய
வரப்புகளில்
நடக்கும் பொழுது
உள்ளம் மகிழ்வில்
உருமாறி திளைத்தது.
புல்லொன்றில்
கிடந்த
சோற்றுப் பருக்கையை
பொறுக்கி எடுத்து
விழுங்கிய பொழுதின்
வியாபித்த பதறலில்
எனக்குள் ஒலித்த
‘ஒற்றைப் பருக்கையிலும்
உழவனின்
உயிர் இருக்கிறது’என்ற
அய்யாவின் குரல்
அறுவடைகள் செய்ய முடியாத
நெற்பயிராக
நெஞ்சுக்குள்
நெடு நாட்கள்
கடந்த பொழுதும்
வாழிப்பாக
வளர்கிறது.
***
–ரவி அல்லது.
பிகு:
கண்டு முதல்: லாபம்.
விலா கோலுதல்:
ஏர் ஓட்டும் பொழுது சிறிய சிறிய நீள் வட்டத்தில் உழுவது.
ஒப்படியாக: சமமாக.
இஞ்சாமல்: மண் இறுகாமல்.
தாளடி: நீண்ட கால நெல் சாகுபடி.
- தெறிப்பு
- ஆய்ச்சியர் குரவை – பாகம் நான்கு
- கனடாவில் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு.
- அறுவடைக்கு ஆட்படாத அய்யாவின் கண்டுமுதல்