வெங்கடேசன் நாராயணஸ்வாமி
பெர்த், மேற்கு ஆஸ்திரேலியா
யமுனா தீரத்தில், ஆங்கோர் தோப்பிலோர் மரத்தடியில்
யமுனைத்துறைவன் தன்
காதலியைத் தேடிக் களைத்த முகத்துடன்
தன் நெஞ்சமதில் பொங்கியெழும் காதலைத் தன் கண்களில் தேக்கி பேசவொண்ணாது அமர்ந்திருக்க, அதைக் கண்ட ராதையின் தோழி அவனருகில் சென்று பின்வருமாறு கூறலானாள்:
(1)
“மாறனின் கூர் மலர்க்கணைகள் மருட்டும் மங்கையவளை
மாறகோடி ஈஶனாம் நீயே காக்கவல்லாய்.
உன்னையே உள்கி உருகி உன் நினைவாய் எப்போதும் உணர்ச்சிகளால் உவகையுற்று
புறவுலகில் உன்னைக் காண ஏங்கியுன்
பிரிவாலுழலும் உன் பிரியை
வெறிகமழ் சந்தன மணம் நொந்தாள்,
வெண்மதியமுத ஒளியொடு
நறுமணங்கமழ் வீசு தென்றலாம் மலையமாருதந்தனை
நச்சுப் பாம்பின் மூச்சுக்காற்றென அஞ்சினாள்.
காதலால் உன் கரந்தொட்ட கன்னியவளை
கைவிடுத்து கணாதிருப்பதழகோ? கருமணியே!
உன்னால் கைவிடப்பட்டும்
என்றென்றுமுன் பிரிவால் வாடுமுன் பிரியை…
(2)
ராதையின் மென்மலருள்ளம் அறியாதவனா நீ?
காமனின் கூர்கணைகள் நித்தம் நித்தமவள் இதயம் துளைக்க
புறமுதுகிட்டோடாத போர் வீரனைப் போல்
தன் இதயக் குகையில் உன்னையிட்டுக் காக்கின்றாள்
கமலப்பூ மற்றும் நீரால் நனைந்த இலைக்கேடயம் கொண்டு.
பரந்த பூவின் இதழ்களால் உன்னைப் போர்த்தி
ஈரம் தோய்ந்த இலைகளால் உன்னைக் குளிரச் செய்து
காமன் கணைகளின் வெப்பம் தகிக்காவண்ணம்
தன் இதயக் கோயிலுள் வைத்துப் பூஜிக்கின்றாள் உன்னை.
ஈரந்தோய்ந்த அக்கவசத்தில் அவள்
கண்ணீரும் கலந்திருப்பதை அறிவாயோ நீ?
காதலால் உன் கரந்தொட்ட கன்னியவளை
கைவிடுத்து கணாதிருப்பதழகோ? கருமணியே!
உன்னால் கைவிடப்பட்டும்
என்றென்றுமுன் பிரிவால் வாடுமுன் பிரியை….
(3)
தன் மேனியில் பட்டுத் தெறித்த மன்மத பாணங்களால்
மலர் மஞ்சம் வேய்ந்து
மானஸீகமாயதில் உன்னைக் கிடத்தி
எத்தனை போதும் எழவொட்டாதிறுகத் தழுவுவாள்
தன் விரஹ வேட்கை தீர.
ஒவ்வோரிரவும் தொடரும் இச்சடங்கிலுன்
ஒண்மலர்ச்சேவடி நினைந்து நைந்துருகி
தன்னையே தனக்கு நேர்ந்து
ஓயாது தவமிருப்பாள்.
காதலால் உன் கரந்தொட்ட கன்னியவளை
கைவிடுத்து கணாதிருப்பதழகோ? கருமணியே!
உன்னால் கைவிடப்பட்டும்
என்றென்றுமுன் பிரிவால் வாடுமுன் பிரியை….
(4)
அன்றே அலர்ந்த அல்லிபோல்
அழகிய முகத்தினள் ராதை! ஹே கிருஷ்ணா!
அவளழகிய கண்மலர்களில் மல்கும் கண்ணீர்த் துளிகள்
கதிர்மதி மறைத்த கருமஞ்சுத் திரள்கள்.
கருமணி வெருட்டி உனைக் காணாது ஏங்கியே
காதல் கசியும் கண்களால் தேடியே
ராகு கவ்விய இந்துவைப் போல்
சிறிதேனும் அமுதம் சிந்தியே
கவலையோடு காத்திருப்பாள் ஒவ்வோர் கணமும்.
காலவலையில் சிக்கிய ராகுவும் இந்துவும் பாவிகளென்றால்
காதல் தேவனின் கருமவலையில் சிக்கிய
உன்னையும் அவளையும் என்னவென்பது?
காதலால் உன் கரந்தொட்ட கன்னியவளை
கைவிடுத்து கணாதிருப்பதழகோ? கருமணியே!
உன்னால் கைவிடப்பட்டும்
என்றென்றுமுன் பிரிவால் வாடுமுன் பிரியை….
(5)
அரூப மதனுக்கு உன்னுருவம் தருவாள்
வேறு எவ்விதக் காதலையும் அறியாத வெகுளியவள்.
தனிமையில் கலைமான் கஸ்தூரி வண்ணம் குழைத்து
ஓவியமாய் உன்னைத் தீட்டி,
காதலால் குழம்பி உனக்கு மகர வாஹனமீந்து
உன் கொடியிலதை வரைய மறந்தும் போனாள்.
குழம்பாது உன் கரந்தனில் மாவிலைக்கணை தீட்டி மலர்க்கணை தவிர்த்தாள், பேதையவளை அக்கூரிய மலர்க்கணைகள்
நித்தம் நித்தம் துளைத்த போதிலும்.
அவளெழுதிய உனோவியமதை உயரிய மேடையில் வைத்து,
“கடவுளே காப்பீர் எம் உடலையும் ஆன்மாவையும்” என்றிறைஞ்சி
ஒரே முனைப்பாய் மனங்குவித்து
வணங்குவாள் உன்னை அனுதினமும்.
காதலால் உன் கரந்தொட்ட கன்னியவளை
கைவிடுத்து கணாதிருப்பதழகோ? கருமணியே!
உன்னால் கைவிடப்பட்டும்
என்றென்றுமுன் பிரிவால் வாடுமுன் பிரியை….
(6)
ஹே மாதவா! எவராலும் அணுக
முடியாதவன் நீயென அறிவாளவள்.
உன்னைப் போலவே அவளுன்னைத் தனக்கே ஸொந்தமான
பிரத்யேக சொத்தென எண்ணுகின்றாள்.
அவளுன்னை தன்னுள் வைத்தாள்,
தன்னையே உனக்கீந்தாள்.
ஒருவிதத்தில், அவள் தன்னையே தனக்கு நல்கி
உன்னையே உனக்கும் ஈந்தாள்.
உன் கஸ்தூரி ஓவியமதை நீயாகவே எண்ணி
உன் தியானத்தில் ஆழ்வாள்.
உன் ஓவியத்தை நீயாகவே எண்ணி சினந்து கொள்வாள்.
உன்னை அக்கோபியரிடமே சென்றுவிடு என கடிந்தும் கொள்வாள்.
உன்னை ஏமாற்றுப் பேர்வழி என ஏசவும் செய்வாள்.
ஓவியத்திலுறைந்த உன்னை தன் சலங்கைகள் சிலம்ப ஆடிப்பாடி
மகிழ்விக்க இயலாதென்று ஏளனம் செய்வாள்.
நீ பின் தொடர்வாய் என்று நம்பி
அவ்விடத்தை விட்டு அகல்வாள் சிறிது நேரம்.
உன் ஓவியத்தைப் பற்றிக் கொண்டழுவாள் பல நேரம்.
காதல் மடந்தையர்க்கு கண்ணீர்தானே இறுதி ஆயுதம்!
தானே தனக்காறுதலாய் ‘அவர் என்னுடன், நானென்றென்றும் அவருடன், கவலையேனினி’ என தேற்றிக் கொள்வாள்.
உன்னையே தியானித்துக் கொந்தளிக்கும் அவள் மனதை
பலவாறு ஆற்றிக்கொள்வாள் ஆறுதல்கள் பல கூறி.
காதலால் உன் கரந்தொட்ட கன்னியவளை
கைவிடுத்து கணாதிருப்பதழகோ? கருமணியே!
உன்னால் கைவிடப்பட்டும்
என்றென்றுமுன் பிரிவால் வாடுமுன் பிரியை….
(7)
ஹே மதுஸூதனா! அவளெடுத்து வைக்கும் ஒவ்வோரடியிலும்,
உன் திருவடிகளில் வீழ்ந்து இறைஞ்சுகின்றாள் இவ்வாறு:
“ஹே மாயவா! நீ இங்கில்லாத இரவுகளில்
இந்துவின் அமுதக் கிரணங்கள் தகிக்கின்றன என்னை!
அவன் ஸோதரியின் துரோகி நானென நம்புகின்றான்!
விரைவில் வந்துவிடு! இல்லையேல் என்னையும் இன்னுமொரு ஸகோதரியாய் எண்ணான் இக்குமுதன்!”
காதலால் உன் கரந்தொட்ட கன்னியவளை
கைவிடுத்து கணாதிருப்பதழகோ? கருமணியே!
உன்னால் கைவிடப்பட்டும்
என்றென்றுமுன் பிரிவால் வாடுமுன் பிரியை….”
(8)
ஹே ஶ்ரீ ஹரியின் காதலர்காள்! பெற்றம் மேய்த்துண்ணும் பெருந்தேவி ராதைதன் தோழி உரைத்த
இத்தெய்வீக விரஹ காதலைத்
தித்திக்கும் இன்னிசையோடு கலந்தளித்த
ஶ்ரீ ஜெயதேவனின் மங்கள மொழியினை
பத்தியுடன் பணிந்து கேட்கும் அனைவரும்
இப்பூவுலகில் அழியாப் புகழுடன்
முத்திதரும் முகுந்தனின் பரமபதமெய்துவர், இது திண்ணமே!
காதலால் உன் கரந்தொட்ட கன்னியெமை
கைவிடுத்து கணாதிருப்பதழகோ? அரியே! கருமணியே!
உன்னால் கைவிடப்பட்டும்
என்றென்றுமுன் பிரிவால் வாடுமுன் பிரியை….
- பாவனை.
- வேலிகளற்றலும் பூக்கும்.
- பெருந்திணை மெய்யழகா?
- ஒரு காதலின் நன்னம்பிக்கை முனை
- மோனச் சிதைவு.