விலாசமில்லா கடிதங்கள் விலகி போன மேகங்கள்.
——–‐———————————
தர்மராஜா கோவில்
மைதானத்தின்
வடக்கு ஒரத்தில்
கூத்துக்கொட்டகை எப்போதும்
நிற்கும், சித்திரை மாதத்தில்.
மணி மாமா திரெளபதி
ஆட, வர்ண புடவைகளை
வெய்யிலில் உலர்த்துவார்
வாயில் கறீம் பீடியோடு .
கட்டியங்காரனுக்கு
பிஸ்மில்லா பிரியாணி
வாழை இலையோடு
காத்திருக்கும்.
காளி மார்க் கோலி சோடா
பெட்டியில் நிற்கும் வரிசையாக.
வாலை ஆட்டும்
பேட்டை நாய்கள்
எப்போதும் நிற்கும் அவரோடு.
குத்தாலம் நல்லக்கண்ணு
ஆர்மோனியத்தை
ஸ்ருதி பார்ப்பார்.
மிருதங்கம் சோமு
கர்ணத்தை சூடேற்றுவார்.
வாலாஜா வரதராஜன்
தவிலுக்கு வார் பிடிப்பார்.
பீமனுக்கும்
துரியனுக்கும்
மீசைக்கு
சாயம் போடுவார்
சண்முகம் மாமா.
அலி ஆறுமுகம் தான்
குலுங்கி ஆடும் மேனகா
கூட்டத்தை சேர்க்க
வைர மெட்டில் ஆடுவாள் .
பாவாடை தூக்க
ஓடி வருவான்
கட்டியங்காரன்.
ஊர் மக்கள்
சிரிப்பலையில்
குலுங்கி நிற்கும்
மைதானம்.
பாயும், கிழிந்து போன
பாவாடைகளும்
ஆறு மணிக்கே
இடத்தை பிடிக்கும்.
பட்டாணி , பலூன் கடைகளும்
கலைக்கட்டி விளையாடும்.
ஆரணி வளையல் கடையில்
ருக்மணிகள் எப்போதும்.
கிருஷ்ண லீலா செய்வதற்கு
வட்டமிடும் வயசு கோளாறுகள்.
நேற்று
நடந்தது போல் இருந்தது
விலகி போன ஆகாசத்திற்கு.
அடித்து சென்ற
ஆண்டுகள் வாலை
பிடித்துப்பார்த்தால்
மைதானத்தில்
நட்சத்திர பங்களா
இன்று.
– ஜெயானந்தன்.
- சொந்தம்
- உதவாத மற்றொன்றுகள்
- அலுத்திடாத அன்றாடங்கள்
- தளை இல்லாத வெண்பாவா…
- விலாசமில்லா கடிதங்கள் விலகி போன மேகங்கள்