அஜய் கௌசிக்
ஆன்லைன் வகுப்புகள் முடிந்து அறையினின்று களைப்பும், சற்று கவலையும் கூடிய முகத்தை சுமந்துக்கொண்டு வெளிவந்த தனது பேரன் சுரேனை குழப்பத்துடன் எதிர்கொண்ட ராஜசுப்ரமணியத்திற்கு தோராயமாக 70 வயது இருக்கலாம். உருவ தோற்றத்தில் நடிகர் டெல்லி கணேஷை நினைவுபடுத்தினார். வனத்துறையில் உயரிய பதவி வகித்து ஒய்வு பெற்றவர். தனது பணிநாட்களில் ஒய்வு கிடைக்காதா என்று ஏங்கிய அவருக்கு இந்த பத்து வருட ஒய்வு சலிப்பையே தந்திருந்தது. தனது முதல் மாத சம்பளத்தில் வாங்கிய ட்ரான்ஸிஸ்டரில் யாரோ ஒரு தொகுப்பாளர், ஒரு நிமிடத்தில் 1000 வார்த்தைகள் பேசி சாதனை படைக்க முயல்பவர் போல பேசிக்கொண்டிருந்ததை பொருட்படுத்தாமல் தனது பேரனை குழப்பத்துடன் பார்த்தார். கையில் வைத்திருந்த கோப்பையில் தேநீர் அருந்தியபடியே கேட்டார்,
“என்ன சுரேன்? எப்பவும் ஜாலியா சந்தோசமா சிரிச்சிட்டே வருவ. இன்னைக்கு உம்ம்ன்னு இருக்க? கணக்கு டீச்சர்கிட்ட திட்டு வாங்கினயா?”- கேட்டபடி நக்கலாக சிரித்தார் ராஜசுப்ரமணியன்.
எரிச்சல் அடைந்த சுரேன், “எனக்கென்ன உங்கள மாதிரி பொழுதுக்கும் ரேடியோ கேட்டுட்டும் புக்ஸ் படிச்சுடும் நேரத்தை போக்க முடியாம போக்கற நெலமையா? எனக்கு எவ்ளோ டென்ஷன் இருக்கு தெரியுமா?” என்றான்.
இது போன்ற வசனங்களை இவன் தனது தந்தையை பார்த்து தான் கற்றுக்கொண்டு இருக்கிறான் என்பது ராஜசுப்ரமணியத்திற்கு தெரியாமல் இல்லை.
“எலே பொடியா. உங்கப்பன் மாதிரி திமிரா பேசிட்டு இருந்தனா பல்ல பேத்துப்புடுவேன் பாத்துக்கோ” என்று உரிமையாக கோபித்துக்கொண்டார் ராஜசுப்ரமணியம்.
சற்றே பயந்த சிறுவன், “ஒன்னும் இல்ல தாத்தா. எங்க பள்ளிக்கூடத்துல ஒரு ஆன்லைன் கட்டுரை போட்டி நடக்குது. அதோட இறுதி சுற்றுக்கு நான் தேர்வாயிட்டேன்” என்றான் வருத்தத்துடன். அதை கேட்ட ராஜசுப்ரமணியம், “நீயும் உங்கப்பன் மாதிரி தான டா இருப்ப. உங்களுக்கு தான் என்ன கிடைச்சாலும் அத கொண்டாடற மனப்பான்மையே கிடையாதே. இறுதி போட்டிக்கு தேர்வாயிருக்கேன்னு சந்தோசமா சொல்லவேண்டியது தானே” என்றார்.
“அதெல்லாம் உங்களுக்கு புரியாது தாத்தா. இந்த இறுதி போட்டில நான் ஜெயிக்கணும். அப்பா வேற எப்போ வருவார்னு தெரில. அவர் உதவி இல்லாம கண்டிப்பா ஜெயிக்க முடியாது. குலுக்கல் முறையில தேர்வு பண்ணதுல ஒரு கஷ்டமான தலைப்பு வந்துருக்கு” என்று சலித்துக்கொண்டான். சிறிய இடைவெளி விட்டு அவனே தொடர்ந்தான். “பொழுதுபோக்கு சாதனங்கள்ல ஆளுக்கு ஒன்னு குடுத்துட்டாங்க. மத்த சாதனங்களை விட நமக்கு கொடுக்கப்பட்ட சாதனம் ஏன் சிறந்ததுனு கட்டுரை எழுதனும்” என்று அலுத்துக்கொண்டான்.
“சரி. உனக்கு என்ன சாதனம் குடுத்தாங்க?” முதல் முறையாக விளையாட்டை விடுத்து ஆர்வமானார் ராஜசுப்ரமணியம்.
“பண்பலை” என்று எங்கேயோ பார்த்துக்கொண்டே கூறினான் சுரேன்.
“ஓஹோ! பண்பலை பத்தி கட்டுரை எழுத உங்கப்பன் உனக்கு உதவ போறானா?” என்று நக்கலாக சிரித்த அந்த வினாடி, ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் தனது மகன் ரவியும் மருமகள் கயல்விழியும் பைக்கை பார்க் செய்து விட்டு வீட்டுக்குள் நுழைந்துக்கொண்டிருந்தார்கள்.
************************************************************************************
தனக்கு லாக்டவுன் போடாத திமிரில் சூரியன் ஓவர்டைம் டூட்டி பார்த்துக்கொண்டு இருந்தது. ஆர்வத்துடன் தனது போட்டியை பற்றி கூற முற்பட்ட சிறுவன் சுரேனை தடுத்து நிறுத்தினான் ரவி.
“தோ பாரு சுரேன், உன்ன மாதிரி ஜாலியா கம்ப்யூட்டர் முன்னாடி உக்கார வேலை இல்ல எனக்கு. ஆபீஸ்ல ஏகப்பட்ட டென்ஷன். இந்த கம்பெனில வேலைபாக்கற யாரையும் இவங்க மனுஷனா கூட மதிக்கறதில்ல. அது மட்டும் இல்லாம வீட்டு பிரச்சனைகள் ஏராளம். மாச கடைசி வர போகுது. எல்லாரும் ஒரு சீட்டை தூக்கிட்டு வந்துருவாங்க பணத்தை வாங்க. பத்தாததுக்கு EMI வேற. வீட்டுக்கு வந்த உடனே எதையாவது சொல்லி என்ன கோபப்படுத்தாத” என்று எச்சரித்தான். பின்பு “ஏய் கயல், சீக்கிரம் காபி குடு. தலைவலிக்குது ” என்று அதட்டினான்.
சில நிமிடங்களுக்கு முன் தன் பேரன் தன்னை பார்த்து கூறிய வார்த்தைகள் மீண்டும் அவனை நோக்கி பாய்ந்ததால் அவருக்குள் நொடிக்கும் குறைவான நேரத்தில் ஒரு அற்ப சந்தோஷம் தோன்றி மறைந்தது, ராஜசுப்ரமணியத்திற்கு. தனது மகனை பார்த்து, “பாவம். சின்ன கொழந்த அவன். உன்னோட மேனேஜர் மேல இருக்கற கோவத்தை எதுக்கு அவன் மேல கொட்டுற?” என்றார்.
‘உங்களுக்கும் திட்டு வேணுமா?’ என்பதை போல மூன்றாம் கண்களை அவன் திறந்தபோது, வீட்டுக்குள் இருந்த ரவியும் வீட்டுக்கு வெளியே இருந்த ரவியும் கிட்டத்தட்ட ஒரே சூட்டோடு இருப்பதை உணர்ந்தார் ராஜசுப்ரமணியன். ஒரு ரவியின் சூடாவது இரவில் குறைந்து விடும். ஆனால் இன்னொரு ரவியின் சூடு?
காதுக்கு தொல்லைதரக்கூடிய ஏதோ ஜவுளி கடையின் விளம்பரப்பாடல் பண்பலையில் பாடிக்கொண்டிருக்க, ஏதும் பேசாமல் தன் ட்ரான்சிஸ்டரை எடுத்துக்கொண்டு தனது அறைக்குள் நடந்தார், ராஜசுப்ரமணியன்.
“நாராசமா இருக்கு. அத மொதல்ல ஆப் பண்ணுங்க. ஒருநாள் இல்ல ஒருநாள் அந்த பொட்டிய தூக்கி கிணத்துல போடத்தான் போறேன். இருக்கற டென்ஷன் பத்தாதுனு இது வேற”, என்ற தனது மகனின் சலிப்புக்குரல் பின்னால் கேட்டுக்கொண்டிருந்தது. அவனது கூச்சல்களில் இருந்து தன்னை காப்பதினாலோ என்னவோ, அந்த விளம்பரப்பாடல் கூட அவர் காதுக்கு விருந்தாக அமைந்தது.
**************************************************************************************
“சாப்பாடு தயார். வாங்க எல்லாரும் சாப்பிடலாம்” என்று வீட்டில் உள்ள மற்ற மூவருக்கும் இரவு உணவிற்கான அறிவிப்பு விடுத்தாள் கயல்விழி. பணியாரம் ஒரு பாத்திரத்தில் வெந்தும் வேகாமலும் இருந்ததால் பற்பல நிறங்களிலும், வடிவங்களிலும் தென்பட்டது. எந்த நிறமிருந்தாலும் அவை யாவும் ஒரே தரம் அன்றோ! அது கூடவே தேங்காய் சட்னியும், “என்னை விரைவில் புசியுங்கள்” என்று ராஜசுப்ரமணியத்திற்கு அழைப்பு விடுத்தது.
“வாடா சாப்பிடலாம்”, முதலில் பேரனை அழைத்தார் ராஜசுப்ரமணியன். ஊர் குழாயில் நீருக்காகவும், பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காகவும் காத்திருக்கும் மக்களை போல, தனது கட்டுரைக்கான வார்த்தைகளை தனக்குள் இருந்து எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த சுரேன் எரிச்சல் ஆனான். “இப்போ அது ரொம்ப முக்கியமா? உங்களுக்கு பசிச்சா நீங்க போய் சாப்புடுங்க. எல்லாம் என் நேரம். குலுக்கல்ல எனக்கு டீவியோ இல்ல கம்ப்யூட்டரோ வந்திருந்தா இவ்ளோ பிரச்சினையே இல்ல. இந்த ரேடியோ அந்த காலத்து அயிட்டம். இதுல இருக்கற குறைகளை தீர்க்க தான் இன்னைக்கு நிறைய புது பொழுதுபோக்கு தளங்கள் வந்துட்டுயிருக்கு. புடிச்ச நேரத்துல புடிச்ச பாட்டை கூட அதுல கேக்க முடியாது. அவனுக்கு புடிச்சத அவன் போடுவான். நம்ம அத கேக்கணும். இதுல அப்டி என்ன தான் இருக்கோ?” என்று பொரிந்து தள்ளிவிட்டு மீண்டும் வார்த்தைக்காக காத்திருக்க தொடங்கினான்.
‘தனது இயலாமையை விளக்க இவ்வளவு சரளமாக வரும் வார்த்தைகள் தேவையான நேரத்திலும் இடங்களிலும் ஏன் தான் வருவதில்லையோ’ என்று தனது பேரனுக்காக வருந்தினார் ராஜசுப்ரமணியன்.
“வாடா சாப்பிடலாம்”, இம்முறை ஏதோ கணக்குபார்த்துக்கொண்டிருந்த தனது மகனை அழைக்க முயற்சி செய்தார் ராஜசுப்ரமணியன். வெடிகுண்டு நிபுணர் வெடிகுண்டை கையாள்வதுபோல அவனை கையாள வேண்டும். அவனிடம் ‘வாடா சாப்பிடலாம்’ என்று கூறுவது கூட விஷப்பரீட்சை. ஆனால் என்ன செய்வது? பணியாரம் அழைக்கிறதே.
எதிர்பார்த்ததை போல வெடித்தான் ரவி. “அப்பா. உங்கள சாப்பிட வேண்டாம்னு என்னைக்காவது நான் சொல்லிருக்கேனா? சந்தோஷமா சாப்பிடுங்க. என்ன வேணுமோ சாப்பிடுங்க. எவ்ளோ வேணுமோ சாப்பிடுங்க. ஆனா என்ன தொந்தரவு பண்ணாதீங்க. நான் என்னோட வேலைய முடிச்சுட்டு சாப்பிடறேன். போன ஜூலை மாசமே காரோட EMIஐ கட்டி முடிக்கணும்னு நினச்சேன். ஏகப்பட்ட செலவு. இப்போ நா நெனச்சிதைவிட ஏழு மாசம் கடந்து போயாச்சு. அது பத்தாம இவனோட ஸ்கூல் பீஸ் வேற. நான் பிளான் பண்ணின மாதிரி ஒன்னு கூட நடக்கல. எல்லாமே இந்த கொரோனா வந்ததுனால தான். ஆபீஸ்ல பாதி சம்பளம். நான் நினைச்ச மாதிரி எதுவுமே நடக்க மாட்டேங்குது” என்று சலித்துக்கொண்டான். பின்பு, “நீங்க சாப்பிடுங்க. நான் அப்புறம் சாப்பிட்டுக்கறேன்” என்று சொல்லி தனது வேலையை தொடர்ந்தான்.
மகனிடம் ஏதும் பேசாமல் சுரேனுக்கு குரல் கொடுத்தார் ராஜசுப்ரமணியன், “உன்னோட லேப்டாப்ப இங்க கொண்டு வா”. அடுத்த நொடி அதை எடுத்துக்கொண்டு வந்தான் சுரேன். மீண்டும் சுரேனிடம் அவனை தொந்தரவு செய்ததற்காக திட்டு வாங்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் என்ன தோன்றியதோ, கேட்ட குரலுக்கு லேப்டாபுடன் வந்தான் சுரேன். திட்டு வாங்காததால் ஒரு ‘பாக்கெட்-சைஸ்’ நிம்மதி உடம்பெங்கும் பரவியது ராஜசுப்ரமணியத்திற்கு
“சுரேன், உனக்காக இன்னைக்கு நான் என்னோட ரேடியோவ ஆப் பண்றேன். பதிலுக்கு நீ உனக்கு புடிச்ச பாட்ட உன்னோட லாப்டாப்ல போடு. நாம சேந்து பாட்டு கேப்போம்” என்றார்.
அதற்கான காரணம் விளங்கவில்லை என்றாலும், இந்த வாய்ப்பு மீண்டும் வராது என்பதால் தனக்கு மிகவும் பிடித்தமான ஒரு பாடலை யூடூப்பில் ப்ளே செய்தான் சுரேன். நான்கு நிமித்தில் அந்த பாட்டு முடிந்து போயிற்று. அதை முழுவதுமாக கேட்டு முடித்த ராஜசுப்ரமணியன், “சரி, அடுத்த பாட்டை போடு” என்றார்.
இவ்வாறாக தனக்கு பிடித்த 9-10 பாடல்களை தொடர்ந்து பிளே செய்தான் சுரேன். தனக்கு எதுவும் பெரிதாக புரியவில்லை என்றாலும் அவையனைத்தையும் கூர்ந்து கவனித்தார் ராஜசுப்ரமணியன். பத்தாவது பாட்டு முடிந்திருக்க, “ம்ம்ம், அடுத்தது” என்று கட்டளையிட்டார் ராஜசுப்ரமணியன். எதை பிளே செய்வது என்று குழம்பிய சுரேன் யூடூபின் பரிந்துரைகளில் உதவியை நாட தொடங்கினான். பின் சலிப்புடன் “போதும் தாத்தா” என்றான்.
மெலிதாக சிரித்தார் ராஜசுப்ரமணியன். பண்பலையை ஆன் செய்தார். சற்று குரலை உயர்த்தி தன் மகனுக்கும் கேட்கும்படி சொன்னார், “உனக்கு ஒன்னு புரிஞ்சுதா? உனக்கு நான் முழு சுதந்திரம் குடுத்தேன். எந்த பாட்ட வேணா போட்டுக்கனு சொன்னேன். நீ என்ன பண்ணின? உனக்கு புடிச்ச பாட்டெல்லாம் வரிசையா போட்ட. எவ்ளோ சீக்கிரம் போர் அடிச்சுருச்சு பாத்தியா?” அவன் குழம்புவதை பார்த்து ரசித்துவிட்டு தொடர்ந்தார், ” ஆனா பண்பலை அப்படி இல்லை. நிறைய பிடிக்காத பாடல்கள் வரும். நிறைய அபத்தமான விளம்பரங்கள் வரும். சிலசமயம் உங்கப்பன் சொன்னமாதிரி இதை தூக்கி கிணத்துக்குள்ள போட்டுடலாம்னு கூட தோணும். ஆனா இத்தனையும் தாண்டி, நமக்கு புடிச்ச அந்த ஒரு பாட்டு ரேடியோல வரும்போது எப்படி இருக்கும் தெரியுமா? என்னதான் உன்னோட லேப்டாப்ல உன்னோட இஷ்டப்பட்ட நேரத்துல இதை கேட்டாலும், அதுவா பாடும்போது இருக்கற பீலே தனி. அதுனாலதான் பண்பலை எனக்கு என்னைக்குமே போர் அடிச்சதில்ல “, என்றார் கர்வமாக. அவர் சொல்லச்சொல்ல சற்றுமுன் சுரேன் பிளே செய்த பாடல்களில் ஒன்று பண்பலையில் ஒலிக்கத்தொடங்கியது. “
தன்னை மறந்த சுரேன், “ஆமா தாத்தா. சூப்பரா இருக்கு” என்றான்.
“இதுக்கான காரணம் என்ன தெரியுமா சுரேன்? உனக்கு புடிச்ச விஷயங்கள், நீ நினைக்கறது மட்டுமே தொடர்ந்து நடந்தா எல்லாமே போர் அடிச்சுரும். உன்னோட லேப்டாப் போல. ஆனா ரேடியோ அப்படி கிடையாது. நான் சொன்ன மாதிரி பிடிக்காத, ஒவ்வாத பல விஷயங்களுக்கு அதுல இருக்கு. அவைகளுக்கு மத்தில ஒனக்கு ஒரு நல்லது கிடைக்கறதுனாலதான் அதோட சுவை அதிகமா இருக்கு.”
வியப்புடன் தாத்தாவை பார்த்தான் சுரேன். அவர் தொடர்ந்தார். தன் மகனுக்கும் கேட்குமாறு கத்தி சொன்னார். “வாழ்க்கையும் அப்படிதான். நாம நெனச்சது தான் எப்பவுமே நடக்கணும்னு நினச்சு, அது நடக்காதபோது வருத்தப்பட்டு தளர்ந்தரக்கூடாது. நம்ம நினச்சதுக்கு எதிர்மறையான விஷயங்கள் பல நடக்கும். அது எல்லாத்தையும் முறியடிக்கும்போது தான் அந்த வெற்றி சுவைக்கும். அப்போ தான் வாழ்க்கையும் சுவாரசியமாய் இருக்கும். தண்ணிக்கு சுவைனு ஒன்னு இல்ல. ஆனா மொட்டை வெயில்ல, தொண்டை வறண்டு போற அளவு தாகம் இருக்கும்போது அதே தண்ணிதான் அமிர்தம்னு தோணும். “
கண்ணிமைக்க மறந்திருந்தான் சுரேன். “என்னடா அப்படி பாக்கற. இதெல்லாம் நான் வேற யாருக்கும் சொல்லல. உன்னோட கட்டுரை போட்டிக்கு தான் சொன்னேன். உன்னோட கட்டுரையை இந்த கோணத்துல எழுதி பாரு. ரேடியோல ஒரு பிலாசப்பியே இருக்குனு எழுது. நிச்சயம் பரிசு உனக்கு தான்”, என்று தனது உரையை முடித்தார்.
தன்னுடய கட்டுரையில் என்ன எழுத வேண்டும் என்பது அவனுக்கு தெரிந்துவிட்டது. ஏனோ போட்டியில் வெல்லப்போகிறோம் என்ற உள்ளுணர்வு தோன்றி குதித்தோடினான், சுரேன். அவனின் வெற்றி தன் கண்களுக்கும் தெரிய அவனை பெருமையாக பார்த்துக்கொண்டிருந்தார் ராஜசுப்ரமணியன். ‘இதுக்கு மேல அவன் எழுதிருவான்’ என்று நம்பிக்கைக்கொண்டார்.
“சூப்பர் ஸ்பீச் மாமா” என்றாள், கயல்விழி.
அந்த நொடி அவரோ கயல்விழியோ நினைத்துக்கூட பார்க்காத அந்த சம்பவம் நடந்தது. கனவா இல்லை நினைவா என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு பெரிய புன்னகை ஒன்றை சுமந்து வந்து அவர்களுக்கு முன்னாள் நின்றான் ரவி. ‘ரவி குளிர்ந்துவிட்டதா?’ கேட்டால் மீண்டும் சூடாகிவிடுவான் என்று தெரிந்திருந்தும் அதை கேட்க நினைத்தார். நல்லவேளையாக அவர் ஏதும் பேசுவதற்கு முன்பே ரவி, “அப்பா பணியாரம் ஆறி போகுது. வாங்க சாப்பிடலாம்” என்றான். ” டேய். இது நீ தானா?” என்று வியந்தார் ராஜசுப்ரமணியன்.
உதயத்தை மேற்கே கண்டது போல திகைப்பை உள்வாங்கி அசையாமல் நின்றிருந்தாள் கயல்விழி. மலர் கண்காட்சியை காண கோடையில் ஊட்டிக்கு விரையும் சுற்றுலா பயணியின் உற்சாகத்தோடு டைனிங் டேபிளை வந்தடைந்தான் சுரேன்.
அனைவரும் சிரித்திருக்க, தான் தான் இந்த மாற்றத்திற்கு காரணம் என்பதை உணராத டிரான்சிஸ்டர் “இனியெல்லாம் சுகமே….” என்ற யேசுதாஸின் குரல் வழியே தேனை பாய்ச்சி அந்த தருணத்தின் அழகை மேலும் கூட்டிக்கொண்டிருந்தது.
***முற்றும்***