எழுத்தாளனின் முகவரி

This entry is part 8 of 11 in the series 1 டிசம்பர் 2024

முகவரி கேட்டு 

அலைந்துக்

கொண்டிருந்தார் 

தபால்காரர். 

அவரா

என்று எளனமாக பார்த்தான் 

சந்தைக்காரன். 

அதோ மூலையிலுள்ள 

புத்தகக் கடையில் தேடுங்கள்

என்றான் மார்வாடி

பெண்ணின் மூக்குத்தியை 

எடைப்போட்டுக் கொண்டே. 

அவரா 

நேத்து தான் 

அந்த மூலை பழைய 

புத்தகக்கட்டை தேடிக்கொண்டிருந்தார். 

நாலு 

பழைய எழுத்தாளன் கிறுக்கல்களை 

வாங்கி சென்றார் 

நாலு ரூபா பாக்கியுடன். 

அவரா 

ஜிப்பாவோடு 

அலைவரே

தோளில் ஜோல்னாப்பையோடு. 

அவரா 

முனைத்தெரு 

டீக்கடையில் 

பேசீக்கொண்டே இருப்பாரே. 

அவரா 

வேல வெட்டி இல்லாம 

எழுதிக்கொண்டிருப்பரே.

அவரா 

லைப்ரரில 

கடைசி 

ஆளா 

வெளிய போவரே. 

ஓ!

அவரா. . ,

ஆமாம் 

அவர் என்ன 

கட்சி தலைவரா,

வட்டமா  

மாவட்டமா 

கொ.ப.செ..ரா..

சிரித்தார்கள் 

ஏளனமாக .

தபால்காரர் 

இலக்கிய இதழை 

பூட்டிய வீட்டின் 

திண்ணையில் வைத்து சென்றார். 

பசியோடு வந்த பசு 

நக்கித் தின்றது பசி தீர.

தூரத்தில் 

வந்தான் எழுத்தாளன் 

பசியோடு. 

  – ஜெயானந்தன்.

Series Navigationசுகமான வலிகள்களவு போன அணுக்கப்பை
author

இரா. ஜெயானந்தன்

Similar Posts

4 Comments

  1. Avatar
    அ.எபநேசர் அருள் ராஜன் says:

    ஒரு எழுத்தாளன் தனது சமகாலத்திய மனிதர்களால் எப்படி எப்படியோ அடையாளம் காணப்படுகின்றான் . புதிய புதிய சொற்களை அவர்கள் அவனுக்காகவே படைக்கிறார்கள். அவர்களது கட் புலனுக்கு ஏற்ற வாகுவில் அவனைப் படித்து வைத்துக் கொள்கிறார்கள். அந்தப் பசுவின் தீவனத்தைப் போலவே அவர்கள் அவனை மென்று போடுகிறார்கள். அவனோ சமூகத்தின் மீதான தீராத பசியோடு அலைந்து திரிகின்றான்….

  2. Avatar
    Kalaivanan Ganesan says:

    தமிழ் நாட்டில் இன்று இப்படி நடப்பதில்லை. இந்தி இலக்கிய படைப்பாளிகள் வெற்றிலை பாக்கு கடை வைக்கிறார்கள். கடைக்காரர் ஓர் எழுத்தாளர் என்று எவருக்கும் தெரியாது. அவர்களை யாரும் கண்டு கொள்வதில்லை. இந்தியை பற்றி பெரிதாகப் பேசும் அவர்கள் எழுத்தாளர்களை பிரபலம் ஆக்குவதில்லை. தில்லியில் சாஹித்ய அகாடமி விருது நடைபெறும்போது விருது பெற்ற தமிழ், மலையாள, தெலுங்கு எழுத்தாளர் இவர்களை சுற்றி கூட்டம் நிற்கும். இந்தி எழுத்தாளரை சுற்றி அவர்கள் உறவினர் மட்டுமே நிற்பார்கள்.

    மலையாளத்தில் சினிமா ஹீரோக்களுக்கு வராத கூட்டம் பிரபல எழுத்தாளர்களுக்கு வரும்., தமிழ் அதற்கடுத்தபடி. பல எழுத்தாளர்களுக்கு ரசிகர் பட்டாளம் இங்கு உண்டு. தில்லியிலோ, லக்னோவிலோ, கடையில் நீங்கள் ஒரு பொருளை வாங்கிக்கொண்டிருந்தால் பக்கத்தில் நிறபது ஓர் இந்தி எழுத்தாளர் என்று நண்பர்கள் சொன்னால்தான் எனக்கு தெரிந்தது. மக்கள் சீண்டுவதே இல்லை.

    ஜோல்னா பையை மாட்டிக்கொண்டு பிச்சைக்காரனைப் போல் அலையும் எழுத்தாளர்கள்; இரு தலைமுறைகளைக்கு முன் தமிழ் நாட்டில் இருந்தார்கள். கம்பதாசன் மவுண்ட்ரோடில் ஒரு கடை வாசலில் செத்துக்கிடந்த போது போலீஸ் அவரை வெறும் பிணமாகத்தான் பார்த்தது. மக்களும் எவனோ ஒருவன் பசியால் செத்துவிட்டான் என்று நினைத்தார்கள். மாலை செய்தித்தாள் அது கம்பதாசன் என்று சொன்னது.

    அது ஒரு காலம்.

    ஆனால் கவிஞர் அக்காலத்தில்தான் வாழ்கிறார். அவர்கள் இன்று வாழ்கிறார்கள் என கற்பனை பண்ணிக்கொண்டு இக்கவிதை புனைந்திருக்கிறார்.

  3. Avatar
    R.jayanandan says:

    மிக்க நன்றி நண்பரே.
    எங்கோ மூலைக்கு போன எழுத்தாளனின் முகவரியை கண்டு பிடித்ததற்கு.
    வாருங்கள் பயணிப்போம்.
    அன்புடன்,
    ஜெயானந்தன்.

  4. Avatar
    R.jayanandan says:

    எழுத்தையே முழுநேர பணியாகக்கொண்ட,
    நவீன எழுத்தாளர்கள் இன்றும், துயரின் பெருநதியில்தான் படகை ஓட்டுகின்றனர்.
    சமீபத்தில், பிரபஞ்சன் இறப்பதற்கு முன்னால்
    நடந்த, பணமுடிப்பு விழாவில், அவர் மனமுருகி சொன்னது, ” எனக்கு இரண்டு வேளை, உணவுக்கு யாராவது உத்திரவாதம் அளித்யிருந்தால் நான் இன்னும் கொஞ்சம்
    சிறப்பாக செயல்பட முடிந்திருக்கும் ” என்றார்.

    ஒரு நட்சத்திர எழுத்தாளனின் ஆதங்கம் இதுவே.
    இன்றைக்கு நிலமை ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை நண்பரே, தமிழ்நாட்டில்.

    வணிக எழுத்தாளர்களைப்பற்றி கவலைப்படவில்லை.

    ஜெயானந்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *