ஊடகவியலாளர் பாரதி இராசநாயகம் எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார்

This entry is part 4 of 11 in the series 16 பிப்ரவரி 2025

குரு அரவிந்தன்

சிரேஸ்ட ஊடகவியலாளரான, பலராலும் அறியப்பட்ட பாரதி இராசநாயகம் அவர்கள் தனது 62 ஆவது வயதில் திடீரென எம்மைவிட்டு நேற்றுப் பிரிந்த செய்தி (9-2-25) அதிர்ச்சி தரக்கூடியதாகவே இருக்கின்றது. ஊடக தர்மத்தை கடைசிவரை கடைப்பிடித்த இவர், போர்ச் சூழலில் பல இன்னல்களைச் சந்தித்தது மட்டுமல்ல பலதடவை உயிராபத்தையும் எதிர் கொண்டிருந்தார். பழகுவதற்கு இனிமையான இவர், ஞாயிறு தினக்குரல் ஆசிரியராக இருந்த போதுதான் என்னுடன் முதலில் தொடர்பு கொண்டிருந்தார். அப்போது தினக்குரல் பத்திரிகையின் உரிமையாளராக எனது மனைவி மாலினியின் உறவினரான திரு. எஸ்.பி. சாமி அவர்கள் இருந்தார்கள். இலங்கையில் வெள்ளவத்தை தமிழ்ச் சங்கத்தில் இரண்டு தடவைகள் எனது நூல்களை வெளியிட்ட போது, திரு. எஸ்.பி. சாமி அவர்கள் ஒருமுறையும், ஞானம் ஆசிரியர் திரு. ஞானம் அவர்கள் ஒருமுறையும் தலைமை தாங்கியிருந்தார்கள். திரு. பாரதி இராசநாயகம் அவர்களும் இந்த இரண்டு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.

கனடாவில் 2019 ஆம் ஆண்டு கனடிய தமிழ்ப் பெண்களின் முதலாவது சிறுகதைத் தொகுப்பான ‘நீங்காத நினைவுகள்’ என்ற தொகுப்பைத் தொகுத்து வெளியிட்ட போது, எனது 50 ஆண்டுகால இலக்கிய பணியைப் பாராட்டும் முகமாக என்னை நேர்காணல் ஒன்று செய்து தினக்குரலில் வெளியிட்டிருந்தார். அதன் பின் எனது கட்டுரைகள், சிறுகதைகள் என்று பலவற்றைத் தினக்குரலில் வெளியிட்டு இலங்கையில் வாசகர்கள் பலரை எனக்கு ஏற்படுத்தித் தந்தார். சுமார் 40 ஆண்டுகால ஊடகத்துறை அனுபவம் கொண்ட இவர் தமிழர் தகவல் விருது பெறுவதற்காகக் கனடா வந்த போதும் அவரைச் சந்தித்துப் பாராட்டி உரையாடியிருந்தேன்.

அதன் பின் ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியராகக் கடமையாற்றிய போதும் என்னுடைய சிறுகதைகள், கட்டுரைகளுக்கு முன்னுரிமை தந்து பிரசுரித்திருந்தார். கடைசியாக இவர் வீரகேசரி யாழ்பாண பிராந்தியப் பதிப்பாசிரியராகப் பணியாற்றி இருந்தார். இரு வாரங்களுக்கு முன்பும் தொலைபேசியில் வீரகேசரி முன்னாள் ஆசிரியர்களைக் கௌரவிக்க இருப்பதாகவும், அவர்களில் ஒருவரான கனடாவில் வதியும் மகாஜனக்கல்லூரி நண்பர் சிவநேசச்செல்வன் பற்றியும் விபரங்களைப் பெற்று என்னுடன் உரையாடியிருந்தார். அப்போது என்னை யாழ்ப்பாணம் வரும்படியும், வரும்போது எனக்கு ஒரு பாராட்டு விழா அங்கே எடுக்க வேண்டும் என்ற நீண்டநாள் ஆசை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். என்ன செய்வது, சில ஆசைகள் நிறைவேறாமலே போய்விடுவதுமுண்டு.

ஈழமுரசு, முரசொலி ஆகிய பத்திரிகைகளிலும் ஆசிரிய பீடத்தில் பணியாற்றி இருக்கின்றார். புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரின் ஆக்கங்களைத் தான் பணியாற்றிய பத்திரிகைகளில் வெளியிட்டு, அவர்களைக் கௌரவித்திருக்கின்றார். யாழ்ப்பாணம் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் முன்னாள் தினக்குரல் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய தேவகியின் கணவராவார். இவர்களுக்கு ஒரு ஆண்மகன் இருக்கின்றார். 

ஆர். பாரதி, அபிமன்யு, பார்த்திபன் போன்ற பெயர்களிலும் இவரது அக்கங்கள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன. அமரர் பாரதி இராசநாயகம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய, கனடியத் தமிழ் ஆர்வலர்களான நாங்கள் அவரது குடும்பத்தினருடன் இணைந்து இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

Series Navigation`பறவைகள்’ நூல் அறிமுகம்சூரியக் குடும்பக் கிரகங்களின் அணிவகுப்பு
author

குரு அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *